Published:Updated:

எட்டுநாழி கத்திரி, மர வெண்டை... பாரம்பர்ய விதைகளை மீட்டெடுக்கும் பட்டதாரி இளைஞர்!

பாரம்பர்ய விதைகளுடன் சண்முகசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய விதைகளுடன் சண்முகசுந்தரம்

விதைகள்

எட்டுநாழி கத்திரி, மர வெண்டை... பாரம்பர்ய விதைகளை மீட்டெடுக்கும் பட்டதாரி இளைஞர்!

விதைகள்

Published:Updated:
பாரம்பர்ய விதைகளுடன் சண்முகசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய விதைகளுடன் சண்முகசுந்தரம்

டித்த பட்டதாரி இளைஞர்களின் வருகையால் சமீபகாலமாகப் புத்துயிர் பெற்று வருகிறது இயற்கை விவசாயம். அந்த வரிசையில் பாரம்பர்ய காய்கறி விதைகளைச் சேகரித்து, பரவலாக்கிக் கவனம் ஈர்த்து வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சண்முகசுந்தரம். விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு அது தொடர்பான பணிகளுக்குச் செல்லாமல், தமிழகம் முழுக்கப் பயணித்து வழக்கொழிந்து வரும் பாரம்பர்ய விதைகளைத் தேடிச் சேகரித்துப் பரவலாக்கி வருகிறார். தமது குழுவினருடன் இதுவரை நூற்றுக்கணக்கான பாரம்பர்ய காய்கறி விதைளை மீட்டெடுத் திருக்கும் இவர், ஆயிரக்கணக்கானோரிடம் விதைகளைப் பரவலாக்கியிருக்கிறார்.

மரபுசார் விவசாயத்தின் மீதுள்ள காதலால் முழு நேரமும் அதிலேயே இயங்கும் இவர், பொருளாதாரத் தேவைகளுக்காக அவ்வப்போது பெயின்ட் அடிக்கும் வேலைக்குச் செல்கிறார். தமிழகத்தில் புழக்கத்திலிருந்த பாரம்பர்ய காய்கறி விதைகள், அவற்றின் சாகுபடி முறைகள், சேமிப்பு முறைகள், சமையல் முறைகள் என அனைத்தையும் ஆய்வு செய்து ‘விதைகளின் கதை’ என்ற பெயரில் மரபுக் காய்கறிகள் தொடர்பான புத்தகமாக ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மரபுசார் விதைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக இந்த வருடம் ‘நெல் ஜெயராமன் விருதை’யும் பெற்றிருக்கிறார். இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய விதை தொடர்பான பயிற்சிகள் என மாதம் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்த அவரை ஒரு முன்மாலைப் பொழுதில் ஏம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

சண்முகசுந்தரம்
சண்முகசுந்தரம்

கற்றுக்கொடுத்த முன்னோடிகள்

‘‘புதுச்சேரி அரசு சமுதாயக் கல்லூரியில் ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ படிச்சேன். அப்ப என்னோட படிப்பு சம்பந்தமா (புராஜெக்ட்) ‘பாரம்பர்ய நெல் மற்றும் இயற்கை விவசாயம்’ குறித்த ஆவணப்படம் எடுக்க முடிவெடுத்தேன். அதுக்காக ‘நெல்’ ஜெயராமன், பாமயன், புதுச்சேரியைச் சேர்ந்த மறைந்த ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இயற்கை விவசாயிகளைச் சந்திச்சேன். நம்மாழ்வார் ஐயாவின் வீடியோக்களையும் யூடியூபில் பார்த்தேன். இயற்கை விவசாயத்தோட முக்கியத்துவம் அப்பதான் எனக்குப் புரிய ஆரம்பிச்சது. ஆவணப்படத்தை முடிச்சதும், விடுமுறை நாள்கள்ல இயற்கை விவசாயி களைத் தேடிப்போய் இயற்கை விவசாயம் பற்றியும், பாரம்பர்ய நெல் ரகங்கள் பற்றியும் மணிக்கணக்கா பேச ஆரம்பிச்சேன்.

கல்லூரிப் படிப்பை முடிச்சதும் நெல் கிருஷ்ணமூர்த்தி ஐயாகிட்டப் போனேன். பாரம்பர்ய நெல் ரகங்கள், இயற்கை விவசாயம் குறித்த பல நுணுக்கங்களை எனக்குச் சொல்லிக்கொடுத்தார். பிறகு, சந்தை புதுக்குப்பத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயி வெற்றிச்செல்வனிடம் வேலைக்குச் சேர்ந்தேன். ஜீரோ பட்ஜெட் விவசாயப் பண்ணைகளை அமைச்சு கொடுக்குறதுக் காக இந்தியா முழுக்க அவர்கூட பயணம் செஞ்சேன். விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பாண்டி யனைச் சந்திச்சு நிறைய விஷயங்கள கத்துக்கிட்டேன்’’ என்று முன்கதை சொன்னவர், தனது வீட்டுத்தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

மதுரை திருமங்கலத்தில் எட்டுநாழி கத்திரிக்காய்ச் சாகுபடி செய்றாங்க. அந்த ஊர் தண்ணியும் மண்ணும் உவர்ப்புச் சுவை உடையது.


ஆண்டு முழுவதும் காய்க்கும் மர வெண்டை

‘‘பாரம்பர்ய காய்கறிகளின் விதைகள் மேல ஏற்பட்ட ஆர்வத்துல விதைகளைத் தேடி அலைஞ்சேன். தமிழகம் முழுக்க யாரெல்லாம் நாட்டுக் காய்கறிகளைச் சாகுபடி செய்றாங்கன்னு தேடிப் போய்ப் பார்த்து, சில விதைகளை வாங்கிட்டு வந்தேன். வீட்டுக்குப் பின்னால இருக்குற 5 சென்ட் இடத்துல அதை விளையவெச்சு சாப்பிட்டுப் பார்த்தேன். நாம சந்தையில் வாங்கிச் சமைக்குற காய்கறிகளைவிடச் சுவையா இருந்துச்சு. இப்ப சந்தையில கிடைக்குற சாதாரண ஒட்டுரக வெண்டை 45 நாள்ல பூ எடுத்து 90 நாள்கள்ல செடியே செத்துப்போயிடும். ஆனால், மர வெண்டை உள்ளிட்ட நாட்டு வெண்டை ரகங்கள் வருஷ கணக்கா மகசூல் கொடுத்துட்டு இருக்குது. தண்ணி கொடுக்காதப்பவும் காய்ச்சுகிட்டே இருக்குது. ஒரு வெண்டைக்காய்ச் செடி ரெண்டு வருஷம் காய்க்குமானு ஆச்சர்யப்பட்டுப் போனேன்’’ என்றவர், மர வெண்டையைக் காட்டினார். அதைப் பார்த்த நமக்குள்ளும் ஆச்சர்யம் எட்டிப்பார்த்தது.

பாரம்பர்ய விதைப் பகிர்வு

‘‘போன வருஷம் சுமார் 30 பாரம்பர்ய ரகக் காய்கறி விதைகளைச் சேகரிச்சு, தோட்டத்தில விளையவெச்சு, அதோட விதைகளைப் பத்திரப்படுத்தினேன். தொடர்ந்து வந்த ஆடி மாசத்துல, ‘என்னிடம் 30 பாரம்பர்ய காய்கறி விதைகள் இருக்கின்றன. தேவைப்படுபவர்கள் பெற்றுக்கொள்ளலாம். விதைகளுக்குப் பணம் கொடுக்க தேவையில்லை. ஆனால், அடுத்த ஆடிப் பட்டத்துக்குள் மீண்டும் விதை எடுத்துக் கொடுத்தால் போதும்’னு சமூக வலைதளங்கள்ல பதிவிட்டேன். அதைப் பார்த்துட்டு நிறைய பேர் ஆர்வமா விதைகளை வாங்கிட்டுப் போனாங்க. அவங்களை ஒன்றிணைச்சு, ‘உழுது உண் - மரபு விதைகள் சேகரிப்புக் குழு’ என்ற வாட்ஸ்-அப் குழுவை உருவாக்குனேன். அவங்க எல்லோரும் அவங்கவங்க தேவைக்குத் தகுந்தபடி சாகுபடி பண்ணி பயன்படுத்திட்டு, மீதி விதைகளை மத்தவங்களுக்குக் கொடுக்குறாங்க. இப்ப என்கிட்ட மட்டும் 150 ரக விதைகள் இருக்குது. எங்க குழுவில் இருக்கவங்ககிட்ட இருக்குற ரகங்களையும் சேர்த்தா நூற்றுக்கணக்கான பாரம்பர்ய ரகக் காய்கறி விதைகள் இருக்கும். வருஷத்துக்குச் சுமார் 2,500 பேருக்கு விதைகளைப் பகிர்ந்துக்குவோம். இதுவரை யாருக்கும் விதைகளை நாங்க வித்தது இல்ல. இலவசமாத்தான் கொடுக்கிறோம்’’ என்றவர், தன்னிடமுள்ள ரகங்களின் பட்டியலைச் சொல்லத் தொடங்கினார்.

பாரம்பர்ய விதைகளுடன் சண்முகசுந்தரம்
பாரம்பர்ய விதைகளுடன் சண்முகசுந்தரம்


மண்ணுக்குள் இருக்கும் தங்கம்

‘‘கத்திரிக்காயில 70 ரகங்கள், அவரையில் 40 ரகங்கள், தக்காளியில் 13 ரகங்கள், சுரைக்காயில் 60 ரகங்கள், வெண்டைக்காயில் 32 ரகங்கள், கிழங்குல 17 ரகங்களை மீட்டெடுத்திருக்கிறோம். வறட்சி காலங்கள்ல நமக்குக் கைகொடுத்தது கிழங்கு வகைகள்தான். ரெண்டு வருஷம் வரைக்கும் கெட்டுப் போகாம மண்ணுக்குள்ளேயே இருக்குமாம். வறட்சி காலங்கள்ல தோண்டி எடுத்துச் சாப்பிடலாம். அதனாலதான் வெத்தலைவள்ளிக் கிழங்கை மண்ணுக்குள் இருக்கும் தங்கம்னு சொல்றாங்க.

மதுரை மாவட்டம், சென்னம்பட்டியில் சாகுபடி செய்யப்படுற பாகற்காய் சிறப்பு வாய்ந்தது. ஏக்கர் கணக்கிலதான் அதைச் சாகுபடி செய்வாங்க. தரையில் படரக்கூடிய மிதி பாகல் ரகம். அந்த ஊரின் சொத்து இந்தப் பாகற்காய்னு சொல்லலாம். நல்ல பாகற்காயை வித்துடுவாங்க. உடைஞ்சுப் போன சொத்தைக் காய்கள், பழங்களைத் தனியாக வெச்சு, அந்தப் பழத்திலிருந்து விதைகளை எடுத்துக்கிறாங்க. தோலை காய வெச்சு மருந்து தொழிற்சாலைக்கு அனுப்புறாங்க. அந்தக் கொடியையும் அறுத்து மருத்துவப் பயன்பாட்டுக்கு அனுப்பிடுறாங்க. ஒரு பயிரோட முழுமையான லாபத்தை அவங்க பார்த்திடுறாங்க.

பல வருஷமா அந்த ஊர்ல அந்தப் பயிரைச் சாகுபடி செய்றாங்க. நாங்க போய்ப் பார்க்கும்போது ஒவ்வொருத்தர் வீட்டிலயும் ரெண்டு மூட்டை அளவுக்கு அந்த விதைகளை வெச்சிருந்தாங்க’’ என்றவர் நிறைவாக, ‘‘ஒவ்வொரு விதைக்கும் ஒரு கதை இருக்குது. உதாரணமா, மதுரை திருமங்கலத்தில் எட்டுநாழி கத்திரிக்காய்ச் சாகுபடி செய்றாங்க. அந்த ஊர் தண்ணியும் மண்ணும் உவர்ப்புச் சுவை உடையது. அந்த நிலத்தில் சாகுபடி பண்ணி, அந்தத் தண்ணியில சமைச்சாதான் அந்தக் கத்திரிக்காய் சுவையாக இருக்கும். அதுதான் அதோட சிறப்பு. வேற ஊர்களுக்கு எடுத்துட்டுப் போய் அங்க கிடைக்குற தண்ணியில சமைச்சா அதன் சுவை மாறிடும்னு சொல்றாங்க. அந்த ஊர் சந்தையில மட்டும் தான் அந்தக் கத்திரிக்காய் கிடைக்குது. இப்ப அந்த ஊர்ல ரெண்டு பேர்கிட்ட இந்த விதை இருக்குது. அவங்ககிட்ட இருந்து அந்த விதைகளை வாங்கி அந்தப் பகுதியில் இருக்கும் இயற்கை விவசாய ஆர்வலர் ஒருத்தர்கிட்ட கொடுத்துப் பாதுகாக்கும்படி சொல்லியிருக்கோம்’’ என்றபடி விடை கொடுத்தார்.தொடர்புக்கு, சண்முக சுந்தரம்,

செல்போன்: 86808 38197

கத்திரிக்காய்
கத்திரிக்காய்

இலவம்பாடி கத்திரி

பாரம்பர்ய காய்கறி சமையல் பற்றிப் பேசிய சண்முகசுந்தரம், ‘‘ஒவ்வொரு காய்கறிகளையும் ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு முறையில சமைக்கிறாங்க. வேலூர் இலவம்பாடியில் சாகுபடி செய்யப்படுற முள் கத்திரிக்காய் ரொம்பச் சுவையானது. அந்த ஊர் மக்கள் விளக்கெண்ணெயிலதான் அதனை சமைக்கிறாங்க. கத்திரிக்காய் காம்பைக் கூடக் கிள்ளாம நாலாக் கீறி அப்படியே சமைச்சுக் கொடுப்பாங்க. அந்தக் கத்திரிக்காயை சாப்பிடும்போது அப்படியொரு சுவை. ஒரு கத்திரிக்காய் இப்படியொரு சுவையைத் தர முடியுமானு அசந்து போயிட்டேன்’’ என்றார்.