Published:Updated:

அழியும் நிலையில் இருந்த பாரம்பர்ய ரசதாளி கரும்பு... மீட்டு எடுத்த விவசாயி!

ரசதாளி கரும்பு
பிரீமியம் ஸ்டோரி
ரசதாளி கரும்பு

பாரம்பர்யம்

அழியும் நிலையில் இருந்த பாரம்பர்ய ரசதாளி கரும்பு... மீட்டு எடுத்த விவசாயி!

பாரம்பர்யம்

Published:Updated:
ரசதாளி கரும்பு
பிரீமியம் ஸ்டோரி
ரசதாளி கரும்பு

ழிந்து வரும் பாரம்பர்ய ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் ஒருவர்தான் கோயம் புத்தூரைச் சேர்ந்த தணிகாசலமூர்த்தி. அடிப்படையில் பொறியாளராக இருந்தாலும், இயற்கை விவசாயமும் செய்து வருகிறார். முக்கியமாக, அழிந்து வரும் பாரம்பர்ய ரசதாளி கரும்பு ரகத்தைச் சாகுபடி செய்து, அதை மதிப்புக்கூட்டி நாட்டுச் சர்க்கரையும் தயாரித்துள்ளார். மேலும், ரசதாளி கரும்பு ரகத்தை ஆயிரக்கணக்கான மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியையும் செய்து வருகிறார்.

ஒரு காலை நேரத்தில் தணிகாசலமூர்த்தியை சந்தித்துப் பேசினோம். “நாதேகவுண்டன்புதூர் கிராமம்தான் என் சொந்த ஊர். பொறியியல் முடிச்சுட்டு 20 வருஷமா ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். இது, 4.5 ஏக்கர். முதல்ல அப்பாதான் இங்க விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தார். 7 வருஷத்துக்கு முன்ன, நான் முழுசா கையில எடுத்தேன். ஆரம்பத்துல எங்க வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் போடலாம்னுதான் யோசிச்சேன். இங்க சின்ன அளவுல எதுவும் பண்ண முடியல. நிறைய நாட்டு ரக மரங்களை நட்டு, ஒரு குறுங்காடு அமைச்சிருக்கேன்’’ என்றவர், தனது விவசாய அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார்.

கரும்புடன் தணிகாசலமூர்த்தி
கரும்புடன் தணிகாசலமூர்த்தி

‘‘பலதானிய பயிர்லாம் போட்டு மண்ணைச் செழிப்பாக்குனோம். காலம் காலமா கரும்பும் நெல்லும் விளைஞ்ச பூமி. அதனால கருங்குறுவை ரக நெல் போட்டோம். அப்ப மழை வந்தனால, பாதிதான் மகசூல் கிடைச்சது. அதுல நிறைய பாடம் கத்துக்கிட்டேன். நீண்டகாலப் பயிர் போட்டாதான் சரியாகும்னு, மஞ்சள் போட்டோம். அதே மாதிரி கரும்பு போடலாம்னு யோசிச்சேன். ஆனா, அதுல நிறைய சவால்கள் இருக்கும்னு புரிஞ்சுது. வீரிய ரகக் கரும்பு போட்டா, பெரிய சர்க்கரை நிறுவனங்க என்ன சொல்லுதோ அதைக் கேட்டு நடக்கணும். அதனால பாரம்பர்ய கரும்பு போடலாம்னு யோசிச்சோம். அப்பதான் ரசதாளி கரும்பு பத்தி தெரிய வந்துச்சு’’ என்றவர் ரசதாளி கரும்பு சாகுபடி பற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

கரும்பு கரணைகள்
கரும்பு கரணைகள்

ரசதாளி

‘‘இங்க பன்றி, யானை, மயில்னு எல்லா பிரச்னையும் இருக்கு. நான் மின்வேலி எல்லாம் போடல. இப்பதான் உயிர்வேலி அமைச்சுட்டு இருக்கேன். தவிர, இங்க கிட்டத்தட்ட 20 வருஷமா யாருக்குமே கரும்பு விவசாயம் பண்ணுன அனுபவமில்ல. எல்லாத்தையும் மீறி அந்தக் கரும்பு இனம் அழிஞ்சுட்டு வர்றதால, நான் ரசதாளி சாகுபடியில துணிஞ்சு இறங்கினேன். சேலம் ஆட்டையாம்பட்டில குறிப்பிட்ட ஒரு கோயில் இடத்துல மட்டும்தான் அந்த ரகம் இருந்துச்சு. அங்கயும் கோயில் விசேஷ நேரத்துலதான் அதைப் பயன்படுத்திட்டு இருந்தாங்க.

வழிகாட்டிய பெரியவர்

சேலம் போய், அங்க இருந்த பெரியவர் கிட்ட பேசினோம். கரும்பு வெட்டி அனுப்பினார். நடவுல இருந்து அறுவடை வரை ஒவ்வொரு முறைக்கும், பெரியவர்கிட்ட ஆலோசனை கேட்டுப் பண்ணிணோம். அவங்ககிட்ட 150 கரணைங்க வாங்கி, 10 சென்ட்ல நட்டோம். பாத்தி கட்டி நேரா போடறது, வட்டக்குழிமுறைனு ரெண்டு முறையும் முயற்சி பண்ணிணோம். இந்தக் கரும்பு நட்ட நிலத்துல ஏற்கெனவே அங்க பலா மரக்கன்னு நிறையா வெச்சுருந் தோம். அதனால நிறைய இடைவெளி விட்டோம்.

கரும்பு அறுவடையான வயல்
கரும்பு அறுவடையான வயல்

வட்டக்குழி முறையில நடறப்ப, அதிக மகசூல் கிடைக்கும்னு சொன்னாங்க. ஆனா, எனக்கு அதுல குறைவான மகசூல்தான் கிடைச்சது. 2021, பிப்ரவரில நட்டோம். 6 மாசத்துல நல்ல மழை பெஞ்சது. இடையில ஒரே ஒரு தடவை சருகு (தோகை) உரிச்சோம். ஜீவாமிர்தம், மீன் அமிலம் மட்டும்தான் பயன்படுத்துனேன். வேற எதுவும் பண்ணல. சரியா ஒரு வருஷத்துல அறுவடைக்கு வந்துருச்சு. கரும்பு அதிகபட்சம் என்னோட கை அளவுக்குப் பெருசா வந்துச்சு. அதனால கரும்புல கொஞ்சம் வெடிப்பு வந்து, கறையான் வரத் தொடங்கிருச்சு. என்ன பண்றதுனு பெரியவர்கிட்ட கேட்டேன். வெட்டிச் சாப்பிடச் சொன்னார். அதோட சுவை ரொம்பவே அருமையா இருந்துச்சு. அப்பவே இதை நாட்டுச் சர்க்கரையாகத் தயாரிக்க ஆசை வந்துச்சு’’ என்றவர், கரும்பை மதிப்புக்கூட்ட, தான் சந்தித்த சவால்களைப் பற்றிப் பேசினார்.

கரும்பு
கரும்பு

2 டன் கரும்பு

‘‘சுத்து வட்டாரத்துல எங்கயுமே ஆலை இல்ல. அன்னூர்ல ஓர் இயற்கை விவசாயி, ஆலை போட்டிருக்கார்னு தகவல் தெரிஞ்சு போய்ப் பார்த்துப் பேசினேன். அவரும் சரினு சொல்லிட்டார். அறுவடை முடிவுல பார்த்தா கிட்டத்தட்ட 2 டன் கரும்பு கிடைச்சது. கரும்பைப் பார்த்துட்டு, ‘இதை ஆட்டுறது வீண், சாறு கெடைக்காது’னு சொன்னாங்க. ஆனாலும், நாங்க ஆட்டுற முடிவுல பின்வாங்கல. தொடர்ந்து முயற்சி பண்ணுனதுல, தங்க நிறத்துல சாறு வந்துச்சு.

180 கிலோ சர்க்கரை

அதைக் காய்ச்சினதுல 180 கிலோ நாட்டுச் சர்க்கரை கிடைச்சது. மத்த கரும்பைவிட, இந்த மகசூல் 20 சதவிகிதம் கம்மிதான். ஆனா, இது முதல் முயற்சி. இதுக்கு நான் பெருசா மெனக்கெடவும் இல்ல. இன்னிக்கு நாட்டுச்சர்க்கரை கிலோ 75 ரூபாய்க்கு கொடுக்குறாங்க’’ என்றவர், சர்க்கரையைக் கொஞ்சம் நம் கையில் கொடுத்துச் சுவைக்கச் சொன்னார்.

ரசதாளி கரும்பு
ரசதாளி கரும்பு


லாபம் கிடைக்கல...
ஆனா, திருப்தி கிடைச்சிருக்கு


‘‘இந்தக் கரும்புல இருந்து சுமார் 2,000 கரணை வந்துச்சு. 1,000 கரணை இலவசமா கொடுத்தேன். ஒரு கரணை 40 ரூபாய்னு 1,000 கரணையைக் காசுக்குக் கொடுத்தேன். மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரினு பல பகுதிகள்ல இருந்து இந்த ரகத்தைக் காப்பாத்துறோம்னு கரணை வாங்கிருக்காங்க. வீட்டுத் தோட்டத் துல வைக்கக்கூட வாங்கிட்டுப் போயிருக்காங்க. மொத்தமா சுமார் 2,000 பேர்கிட்ட ரசதாளி கரும்பைக் கொண்டு போயிருக்கேன். எனக்கு இதுல லாபம் எதுவும் கிடைக்கல. ஆனாலும், இத்தனை பேர்கிட்ட இந்த ரகத்தைக் கொண்டு போனதுல ஒரு திருப்தி இருக்கு.

ரசதாளி கரும்பு
ரசதாளி கரும்பு
காட்டுப்பன்றியைத் தடுக்க...
காட்டுப்பன்றியைத் தடுக்க...


இப்ப மறுபடியும் அதே ரசதாளி ரகத்தை வெச்சுருக்கேன். 10 சென்ட்ல இருந்து கொஞ்சம் விரிவு பண்ணி நட்டிருக்கோம். இப்பவும் 2,000 பேர் கரணை கேட்டிருக்காங்க. பொதுவா கரும்பு எங்க எல்லாம் வளருமோ, அங்க எல்லாம் இந்த ரகம் வளரும்’’ என்றவர் நிறைவாக,

‘‘நாட்டு அத்தி, மருதம், விளாம்பழம், புங்கன், கொன்றை, வாகை, பூவரசம்னு நிறைய நாட்டு ரக மரங்கள் இருக்கு. பலா, மாமரம், முள் சீத்தா மரங்கள் வெச்சுருக்கேன். இப்ப ஒரு நாட்டு மாடு வாங்கி யிருக்கேன். மண்ணுக்கு எது உகந்ததோ அதைத் தான் வெள்ளாமை பண்ணணும். மருந்து இல்லாம இயற்கையா பண்ணணும். இதுமட்டும்தான் என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கும். நிறைய பேர் விதைகளைச் சேகரிச்சு, அதைப் பெருக்க முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அந்த மாதிரி நல்ல உள்ளங்களுக்காக, என் தோட்டத்துல அரை ஏக்கர் ஒப்படைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்’’ என்றார்.

தொடர்புக்கு, தணிகாசலமூர்த்தி,

செல்போன்: 80150 15510.

மஞ்சளுடன்
மஞ்சளுடன்

பசுமஞ்சள் விற்பனை

மஞ்சளை வழக்கமாக வேக வைத்துத்தான் விற்பனை செய்வார்கள். பசு மஞ்சள் என்பது வேகவைக்காத மஞ்சள். இதில் கூடுதல் மருத்துவ குணம் உண்டு. ஆனால், அதிக நாள்கள் சேமித்து வைக்க முடியாது. இதனால், பெரும்பாலும் இந்த முறையை பின்பற்றுவதில்லை. ஆனால் தணிகாலமூர்த்தி இந்த பசுமஞ்சளை உற்பத்தி செய்து வருகிறார். அதுகுறித்துப் பேசியவர்,

‘‘கொரோனா நேரத்துல வீட்ல இருந்துதான் வேலை. அதனால, தோட்டத்துல நேரம் செலவு பண்ண முடிஞ்சுது. கரும்பு தவிர, மஞ்சளும் போட்டிருக்கேன். ஒன்றரை ஏக்கர்ல கேரளா நாட்டு ரக மஞ்சள், ஈரோடு ரக மஞ்சள் ரெண்டும் போட்டிருக்கேன். 2021 மே மாசம் நடவு பண்ணிணோம். இப்ப அறுவடைக்கு வந்தாச்சு. கேரளா ரகத்துல உணவு மட்டும் இல்லாம, நிறைய மருத்துவக் குணமும் இருக்கு. மஞ்சப் பொடி மட்டும் இல்லாம, பசுமஞ்சள் விக்கலாம்னு, அதைச் சந்தைப்படுத்த முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இப்பவரைக்கும் 250 கிலோ ஆர்டர் வந்துருக்கு’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism