சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்

துயரக்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
News
துயரக்களஞ்சியம்

விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருக்கக்கூடிய, சிறு, குறு ஏழை விவசாயிகள் அனைவரும் தங்களது நெல்லோடு, சாலைகளிலும் கொள்முதல் நிலையங்களிலும் காத்துக்கிடக்கிறார்கள்.

டெல்டா என்ற சொல்லை உச்சரித்தாலே, பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளும், பாய்ந்தோடும் ஆறுகளும்தான் நினைவுக்கு வரும். அது ஒரு காலம். ஆனால் இன்று இதே டெல்டாவில் விரியும் துயரக் காட்சிகள், நம் மனதை ரணமாக்குகின்றன.

நடு இரவில், கொட்டும் மழையில், சுட்டெரிக்கும் வெயிலில் சாலையோரங்களில் தங்களது நெல்மணிகளோடு நாள் கணக்கில் உழவர்கள் காத்துக்கிடக்கிறார்கள். இங்கு குவிந்து கிடப்பது நெல்மணிகள் மட்டுமல்ல. விவசயிகளின் உள்ளக் குமுறலும்தான். தமிழகத்தின் நெற்களஞ்சியம், விவசாயிகளின் துயரக் களஞ்சியமாக மாறிப்போன அவலத்தை என்னவென்று சொல்வது. முறையாக, நேர்மையாகச் செயல்படாத அரசு கொள்முதல் நிலையங்கள்... இங்கு நெல்லுக்கு பதிலாக, விவசாயிகளின் சாபத்தையும் வேதனையையுமே கொள்முதல் செய்துகொண்டிருக்கின்றன.

துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்
துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்

``நானும் என் வூட்டுக்காரரும், பூண்டி பைபாஸ் ரோட்டுல எங்களோட நெல்லைப் போட்டு வச்சிக்கிட்டு, பதினஞ்சி நாளா ராப்பகலா காத்துக்கிடந்தோம். பக்கத்துலயே சுடுகாடு. பொணம் எரியுற புகைச்சல் தாங்க முடியலை. பன்னி, குரங்கு, நாய்த் தொல்லைங்களை சமாளிக்குறதுக்குள்ள படாத பாடு பட்டுட்டோம். தஞ்சாவூர்ல இருந்து திருவாரூர், நாகப்பட்டினம் போற மெயின் ரோடு அது. சர சரட்டுனு லாரி, பஸ் போறப்ப, உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டுக் கிடந்தோம். எது வேணும்னாலும் நடக்கலாம். சில வருசங்களுக்கு முன்னாடி, இப்படித்தான் ரோட்டோரத்துல, நெல்லைப் போட்டு வச்சிக்கிட்டு காத்துக்கிடந்த வடிவேல்ங்கறவரு, லாரி மோதி செத்துக்கிடந்தாரு. உயிர் பயம் ஒரு பக்கம்னா, மழை பெய்யறப்ப எல்லாம் மனசு பதறுது. மழையில நெல்லு நனையுறதும், காய வக்கிறதுமாவே பொழப்பு போயிக்கிட்டு இருக்கு. வெயில் தாங்க முடியலை. தக தகன்னு கொதிக்குது. ரோட்ல காய வச்ச நெல்ல, கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு. இன்னும் விக்க முடியலை. நெல்லோடயே ராப்பகலா கிடந்ததால, மூச்சுல சுணை ஏறி, எனக்கு இருமல், காய்ச்சல் வந்து உடம்பு முடியாமப்போயிடுச்சு. நானும் என் வூட்டுக்காரரும் கூலி வேலைக்குப் போயிருந்தா தெனமும் எண்ணூறு ரூவா சம்பாதிச்சிருப்போம். இந்த நெல்லால, எங்களோட இருபது நாள் பொழப்பும் போச்சு. இந்த வருசம் நாங்க வெள்ளாமை செஞ்ச, எட்டு மா நிலத்துல... நாலு மா குத்தகை நிலம். குத்தகை கொடுத்தாகணும். நாலு மாச சொந்த உழைப்புல பத்தாயிரம் ரூவா லாபம் கிடைச்சாலே பெருசு. மழைல நனைஞ்சி, காய வச்சி, நாள் கணக்குல காத்துக்கிடந்ததால, நெல்லோட எடை குறைஞ்சிக்கிட்டே இருக்கு. கொள்முதல் நிலையத்துல உள்ளவங்களுக்கு வேற செலவு செஞ்சாகணும். இந்த வருசம் நயா பைசாகூட லாபம் தேறாது. முதலுக்கு மோசம் வந்துடக்கூடாதேனுதான் பதறிக்கிடக்குறேன்” வலி நிறைந்த வார்த்தைகளோடு பேசும் சரோஜா, தஞ்சாவூர் அருகே உள்ள கோவிலூர் கொள்முதல் நிலையத்தில் பரிதவித்து நிற்கிறார். இதுபோல் இன்னும் பல விவசாயிகளின் நிலை பரிதாபகரமாக உள்ளது. இது வெறும் விவசாயப் பிரச்னையாக மட்டுமல்லாமல், பெரும் மன உளைச்சலாலும், பொருளாதார நெருக்கடியாலும் குடும்பங்களுக்குள் சண்டையாகவும் மாறுகிறது.

துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்
துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்

``எனக்கு ஒரு ஏக்கர்தான் நிலம் இருக்கு. வட்டிக்குக் கடன் வாங்கித்தான், குறுவை பயிர் பண்ணினோம். செலவை மிச்சப்படுத்தி, கொஞ்சமாவது லாபம் பார்க்கலாம்னு நான், என் பொண்டாட்டி, பிள்ளைங்க எல்லாரும் உழைச்சி, நெல்லை உற்பத்தி செஞ்சோம். நெல்லை விக்க முடியாம, மூணு வாரமா காத்துக்கிடக்குறேன். மழையில வேற நனைஞ்சிடுச்சி. இன்னும் நாலஞ்சி நாள் போனா, நெல்லு முளைக்க ஆரம்பிச்சிடும். எப்படி சமாளிச்சி, இதுல இருந்து மீண்டு வரப் போறேன்னு தெரியலை. எப்படி கடனை அடைக்கப் போறேனோ’’ புலம்பித் தீர்க்கிறார் மேலமாகானத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி தர்மராஜ். சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்ல, பத்து ஏக்கர், இருபது ஏக்கர் என நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயிகளும் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். நெல்லைக் காய வைக்க இடமில்லை. கொள்முதல் நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் குவித்து வைத்திருக்கிறார்கள். நாள் முழுவதும் நெல்லைப் பாதுகாக்கவும், மழையில் நனைந்த நெல்லை வெயிலில் காய வைக்கவும் தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதில் என்ன கொடுமை என்றால், இதற்கு ஆள் கிடைப்பது பெரும் தட்டுப்பாடாக உள்ளது. அடுத்த போகமான, சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ளவும் ஆள் கிடைக்கவில்லை. காரணம், விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருக்கக்கூடிய, சிறு, குறு ஏழை விவசாயிகள் அனைவரும் தங்களது நெல்லோடு, சாலைகளிலும் கொள்முதல் நிலையங்களிலும் காத்துக்கிடக்கிறார்கள்.

துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்
துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்

‘`எங்க கொள்முதல் நிலையத்துல மட்டுமே நூத்துக்கணக்கான விவசாயிங்க, பல வாரங்களா காத்துக்கிடக்குறாங்க. பத்து பதினஞ்சி கிராமங்களுக்கு ஒரு கொள்முதல் நிலையங்கற கணக்குலதான் வச்சிருக்காங்க. டெல்டா மாவட்டங்கள் முழுக்கவே இதுதான் நிலைமை. டாஸ்மாக்ல, கூட்டம் அதிகமா வந்துட்டா, உடனடியா, கூடுதலா ஒரு கவுன்டர் திறக்குற அரசாங்கம், ஏன் கொள்முதல் நிலையத்துலயும் அதுமாதிரி செய்ய மாட்டேங்குது” எனக் கேள்வி எழுப்புகிறார் விவசாயி குமார். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை படிப்படியாகக் கைவிட்டு, ஆதரவற்றவர்களாக மாற்றுகிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், விரக்தியின் உச்சத்திற்குச் சென்று, விவசாயத்தை விட்டே வெளியேறும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.

துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்
துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்

‘`30 வருசத்துக்கு முன்னாடி, டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர்ல நெல் சாகுபடி நடந்துக்கிட்டு இருந்துச்சு. தண்ணீர்ப் பிரச்னை, கட்டுப்படியான விலை கிடைக்காதது, வேலையாள்கள் பற்றாக்குறைன்னு பல காரணங்களால் நிறைய விவசாயிங்க தங்களோட நிலங்களை தரிசாகவே போட்டு வச்சிட்டாங்க. ஏக்கப்பட்ட நிலங்கள் வீட்டுமனைகளாகவும் மாறிடுச்சி. படிப்படியா சாகுபடிப் பரப்பு குறைஞ்சிக்கிட்டே வந்து இப்ப பத்து லட்சம் ஏக்கர்லதான் விவசாயம் நடந்துக்கிட்டு இருக்கு. விவசாயிங்களோட நிலைமை இப்ப இன்னும் மோசமா இருக்கு. தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் எங்கயுமே விவசாயிகளுக்குக் கடன் கிடைக்குறதில்லை. ஒரு ஏக்கர் நெல் உற்பத்தி செய்ய முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல மூலதனம் போட்டாகணும். கடனுக்கு விதைநெல், உரம் வாங்குறதனால அது தரமா இருக்குறதில்லை. வெளியில வட்டிக்குக் கடன் வாங்கிதான், உழவு, நடவு, களையெடுக்குற செலவுகளை எல்லாம் சமாளிச்சாகணும். இதுக்கு இடையில அதிகமா மழை பேஞ்சாலும் ஆபத்து, வறட்சி வந்தாலும் ஆபத்து. பூச்சி, நோய்த்தாக்குதலை சமாளிச்சாகணும். பல சமயங்களில் முதலுக்கே மோசம் வந்துருக்கு. இதையெல்லாம் சமாளிச்சி, பயிரை விளைவிச்சாலுமேகூட, விவசாயிங்க நிம்மதியா இருக்க முடியுறதில்லை. நெல்லை அறுத்துட்டோம்னு தெரிஞ்சாலே கடன்காரங்க விவசாயிங்களை நெருக்க ஆரம்பிச்சிடுறாங்க. அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிங்க காத்துக்கிடக்க வேண்டியதா இருக்கு. சாக்கு இல்லை, சணல் இல்லை, நெல் மூட்டைகளைச் சேமிச்சு வைக்க இடம் இல்லைன்னு பல காரணங்களைச் சொல்றாங்க. கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு நிரந்தர ஊதியம் கிடையாது. மேலதிகாரிகளுக்கும் அவங்க நிறைய லஞ்சம் கொடுக்கவேண்டியதா இருக்கு. அதனால் விவசாயிகள்கிட்ட இருந்து, மூட்டைக்கு 30-40 ரூபாய் பணம் வாங்குறாங்க. நெல்லும் கூடுதலா எடை வச்சி பிடிக்குறாங்க. ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை நெல்லு விளைஞ்சா, 35,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவுகள் போக, இதுல ஐந்தாயிரம் ரூபாய் லாபம் கிடைக்குறதே பெரிய பாடா இருக்கு. விவசாயிங்க எப்படி குடும்பம் நடத்துறது, பிள்ளைங்களை எப்படி படிக்க வைக்கிறது. இதுக்கு இடையில தீபாவளி, பொங்கல், கல்யாணம், காரியம்னு நல்லது கெட்டதுகளை சமாளிச்சாகணும். பாடுபட்டு விளைவிச்ச நெல்லை, விக்க முடியாமல் நடு ரோட்டுல கிடக்குறது, பெருங்கொடுமை. விவசாயத்தை விட்டு ஓடுறதைத் தவிர விவசாயிங்களுக்கு வேற வழியே இல்லைங்கற நிலையை உருவாக்கிட்டாங்க” எனக் கொந்தளிக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பக்கிரிசாமி.

துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்
துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்
துயரக்களஞ்சியம்! - விரக்தியில் விவசாயிகள்

அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை [60 கிலோ] நெல்லுக்கு 1,150 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்கும். கொள்முதல் நிலைய தாமதத்தால், பல விவசாயிகள் தங்களது நெல்லை வியாபாரிகளிடம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவலமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் வியாபாரிகளோடு கைகோத்துக்கொண்டு, வேண்டுமென்றே தங்களைக் காக்க வைப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். டெல்டாவில்தான் நெல் சாகுபடி அதிகம். வெளி மாவட்டங்களில் மிகவும் குறைவு. அங்கு பெரும்பாலும் கொள்முதல் நிலையங்கள் கிடையாது. அங்குள்ள விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கும் வியாபாரிகள், டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்றுவிடுவதாகவும், இதனால்தான் தங்களது நெல் புறக்கணிக்கப்படுவதாகவும் டெல்டா விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

தர்மராஜ், குமார், பக்கிரிசாமி
தர்மராஜ், குமார், பக்கிரிசாமி

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை இப்படித் துயரக்களஞ்சியமாக மாற்றுவது சரியல்ல.