Published:Updated:

ஏக்கருக்கு ரூ.15 லட்சம் கொடுக்கும் குமிழ் தேக்கு!

சந்திரசேகரன், ராஜேஷ் கோபாலன்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகரன், ராஜேஷ் கோபாலன்

பயிற்சி

ஏக்கருக்கு ரூ.15 லட்சம் கொடுக்கும் குமிழ் தேக்கு!

பயிற்சி

Published:Updated:
சந்திரசேகரன், ராஜேஷ் கோபாலன்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகரன், ராஜேஷ் கோபாலன்
சுமை விகடன் சார்பில் கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க ஆன்லைன் மூலம் நேரலைப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பசுமை விகடன் மற்றும் கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனமும் இணைந்து, ‘பணம் தரும் மரப்பயிர்கள் சாகுபடி’ என்ற தலைப்பில் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. கடந்த ஜூன் 12-ம் தேதி, ‘வருமானம் செழிக்கும் வேளாண் காடு வளர்ப்பு’ மற்றும் 19-ம் தேதி ‘குமிழ்மரச் சாகுபடியில் குறையில்லா வருமானம்’ என்ற தலைப்பில் பயிற்சிகள் நடைபெற்றன. இப்பயிற்சியில் பேசிய மரப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் சி.புவனேசுவரன், “2018-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 52 சதவிகிதம் விவசாய நிலங்கள் மானாவாரி நிலங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மானாவாரி நிலங்களில் மானாவாரிப் பயிர்களைத் தவிர வேறு பயிர்கள் பயிரிட முடியாது என்ற கருத்து நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறு. மானாவாரி நிலங்களில் வேளாண் காடுகளை வளர்த்துப் பயன்பெற முடியும். மழை பெய்தால் மட்டுமே பயிர் செய்ய முடியும் என்பது உண்மையல்ல. மழை இல்லாத காலங்களிலும் பயிர் செய்யும் வழக்கம் இங்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

பயிற்சி
பயிற்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேளாண் காடுகள் மானாவாரி நிலங்களில் அதிக லாபத்தைக் கொடுக்கும் என்பது என்னுடைய 20 வருட அனுபவங்கள் சொல்லும் உண்மை. காய்கறிப் பயிர்களை மட்டும் விதைத்தால் மண்ணில் இருக்கும் சத்துகளைவிட, மரங்களையும் கலந்து பயிரிடும்போது மண் அதிக வளமான மண்ணாக மாறுகிறது. மண்ணின் ஆழத்தில் இருக்கும் சத்துகளை மேல் மண்ணுக்குக் கொண்டு வருவது மரங்களால் மட்டுமே முடியும். விவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதி மரங்கள்தான். தன்னுடைய நிலத்தில் 10 சதவிகிதத்தை மரம் வளர்க்கப் பயன்படுத்தினாலே போதும். வேளாண் காடுகள் வளர்ப்பதால், வளம் குன்றாமல் நீடித்த விவசாயத்திற்கு உதவுகிறது. தழைச்சத்தை நிலை நிறுத்தல், மண் தன்மை நன்மை பயக்கும் விதமாக மாற்றுதல், கரிமச் சத்துகளை நிலை நிறுத்துதல் ஆகிய பணிகளை வேளாண் காடுகள் வளர்ப்பு மேற்கொள்கிறது.

பயிர்களைத் தாக்க வரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் கூட வேளாண் காடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. வேளாண் காடுகளில் 30 மர வகைகளைத் தேர்வு செய்திருக்கிறோம். அதில் முதலில் இருப்பது சவுக்கு மரம்தான். இது, பொருளாதாரம் மற்றும் மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தி மண்வளம் மேம்படுத்துதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சவுக்கு மரங்களைக் காடுகள்போல அல்லாமல், காற்றுத் தடுப்பானாக வயல் ஓரங்களில் நடவு செய்யலாம். வாழை மாதிரியான பயிர்கள் சாயாமல் இருக்கக் காற்றுத் தடுப்பானாகச் சவுக்கைப் பயன்படுத்தலாம். காற்றுத் தடுப்பான் மரங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும். மண்ணில் ஏற்படும் நீராவிப் போக்கைக் காற்றுத் தடுப்பான்கள் 16 சதவிகிதம் வரை குறைப்பதாக அளவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பயிர் சாகுபடியில் நீர் பயன்பாட்டுத் திறன் 64 சதவிகிதம் அதிகரிக்கிறது. அதிக வெப்பநிலையையும் குறைக்கும். காற்றிலும் ஈரப்பதம் நீடிப்பதால் மகரந்தம், சூலகம் ஆகியவை விரைவில் வறண்டுபோகாமல் காத்து, இனப்பெருக்கம் நடந்து, காய் பிடிப்புத் தன்மையை அதிகப்படுத்துகிறது.

எங்கள் நிறுவனம் இதற்காகவே 5 வீரிய மர ரகங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த மரங்களின் கீழ்ப்பகுதியில் கிளைகள் அடர்த்தியாக வளர்வதால் காற்றை எளிதில் தடுக்கிறது. காற்றுத் தடுப்பான் மரங்கள் பொருளாதார ரீதியாகவும் நல்ல வருமானத்தைக் கொடுக்கிறது. அடுத்ததாகத் தேக்கு. அதிகமான விவசாயிகள் தேக்குகளை வரப்பு ஓரங்களில் காற்றுத் தடுப்பானாக வளர்க்கின்றனர். மூன்றாவதாக மானாவாரி நிலங்களில் வயலோரங்களில் அதிகமாகப் பயிரிடுவது வேப்ப மரம்தான். வறட்சியைத் தாங்கக்கூடிய மர வகையும் கூட. நான்காவதாக ஐலாந்தஸ் என்று சொல்லக்கூடிய தீக்குச்சி மரத்தையும் வேளாண் காடுகளாக வளர்க்கலாம்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குமிழ்மரச் சாகுபடியில் அதிக மகசூல் தரும் ரகங்கள், நாற்றுகள் கிடைக்குமிடம், விற்பனை மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்துப் பேசிய மரம் வளர்ப்பு விஞ்ஞானி அ.மாயவேல், “நாட்டின் வளம், காடுகளின் தன்மையைப் பொறுத்தும், மரங்களின் தன்மையைப் பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. நாட்டில் தேவையைவிடக் குறைவான உற்பத்தியில்தான் மரச் சாகுபடி இருக்கிறது. வேளாண் பயிர்கள் போலவே மரப் பயிர்களுக்கும் தேவை இருக்கிறது. நம் நாட்டின் மரத் தேவை 153 மில்லியன் க்யூபிக் மீட்டர். ஆனால் தற்போதைய உற்பத்தி 60 முதல் 65 சதவிகிதம் வரையே இருக்கிறது. இந்த இடைவெளியைச் சரி செய்ய வேண்டும். அதனால் பெரும்பாலானோர் மரச் சாகுபடியைக் கையில் எடுக்க வேண்டும். மரப் பயிர்கள் மற்ற பயிர்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றன. அதில் முக்கியமானது குமிழ் மரச் சாகுபடி. குமிழ் மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. பாகிஸ்தான், வங்காள தேசம், மியன்மர், கம்போடியா, வியட்நாம், சீனா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. குமிழ் மரங்கள் அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் இயற்கையாகவே காணப்படும். இது 35 மீட்டர் உயரம் மற்றும் 3 மீட்டர் சுற்றளவு வரை வளரும். இம்மரங்கள் வேகமாகவும், மறுதாம்பிலும் வளரும் தன்மையுடையது. இவை பலவிதமான வேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1 வருடத்தில் 3 மீட்டர், 4 வருடத்தில் 12 மீட்டர், 8 வருடத்தில் 21 மீட்டர், 12 வருடத்தில் 29 மீட்டர் என்ற உயரங்களில் வளரும். நீர், மண் வளத்தைப் பொறுத்து இது மாறுபடலாம். இது தேக்கு மரக் குடும்பத்தைச் சார்ந்தது இது. அதனால் தேக்கு மரங்கள் எதற்கெல்லாம் பயன்படுமோ, அந்த வேலைகளுக்கு இந்த மரங்களைப் பயன்படுத்தலாம். இதனால்தான் இதை குமிழ்தேக்கு என விவசாயிகள் அழைக்கிறார்கள்.

நேரலையில் புவனேசுவரன்
நேரலையில் புவனேசுவரன்

வடிகால் வசதியுடைய ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். ஈரமில்லாத வளம் குன்றிய மண்ணில் இம்மரங்கள் வளராது. 20 முதல் 38 செல்சியஸ் தட்பவெப்பம் உள்ள இடங்களில் வளரும். கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் உயரமுள்ள இடங்களில் குமிழ் மரங்களைப் பயிரிடலாம். புதிதாக மரங்களை நடுவதற்கு அதன் தாய் மரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது மிக அவசியம். பிறகு, மரங்களை வாங்கி நடுவது நல்லது. எங்கள் நிறுவனங்களிலேயே மரங்களைக் கவனமாகத் தேர்வு செய்து கொடுக்கிறோம். நாமே நாற்றுகள் உருவாக்கும்போது, நன்கு முதிர்ந்த பழங்களாக இருப்பதைத் தேர்வு செய்ய வேண்டும். நன்றாக முதிர்ந்த பழங்கள், பச்சை நிறத்துடனோ அல்லது மஞ்சள் நிறத்துடனோ இருக்க வேண்டும். விதை இல்லாமல் தண்டுகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்து செடிகளை உருவாக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்று மாத வயதுடைய கன்றுகளையே நடவுக்குத் தேர்வு செய்ய வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் உழவு செய்ய வேண்டும். குழி அளவு 60*60*60 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அடியுரமாக 2 கிலோ தொழுஉரம், 10 கிராம் வேம், 10 கிராம் அசோஸ்பைரில்லம், 10 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். இடைவெளி 4*4 மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும். நடவு செய்யும்போது குழியில் 3 முதல் 5 அங்குலம் செடி உள்ளே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு 2 முதல் மூன்றுமுறை களையெடுக்க வேண்டும். தேவைக்கேற்ப தண்ணீர் கொடுத்துவர வேண்டும். மானாவாரியில் குமிழ் மரங்கள் வளராது.

பட விளக்கங்களுடன்
பட விளக்கங்களுடன்

தண்ணீர் வசதி இல்லாத இடத்தில் இந்த மரத்தைச் சாகுபடி செய்யக் கூடாது. குமிழ் வேகமாக வளர்வதால் கவாத்து முக்கியம். நான்காம் ஆண்டில் குறுக்கு வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை அறுவடை செய்ய வேண்டும். 8-ம் ஆண்டில், நேர்வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை அறுவடை செய்ய வேண்டும். 12-ம் ஆண்டில் மீதமுள்ள மரங்களை அறுவடை செய்யலாம். 4 ஆண்டுகளில் அறுவடை செய்யும் மரங்களைக் காகிதக் கூழுக்கும், 6 ஆண்டுகளில் அறுவடை செய்தால் ஒட்டுப் பலகைக்கும், 10 ஆண்டுகளான மரங்கள், மர வேலைப்பாடுகளுக்கும் விற்பனை செய்யலாம். குமிழ் மரங்களின் மீது மிளகு போன்ற கொடி வகைகளையும் ஏற்றிவிடலாம். குமிழுடன் ஊடுபயிராகச் சவுக்கு, எலுமிச்சை ஆகிய பயிர்களுடன் கலந்து நடலாம். குமிழ் மரங்களில் கண்ணாடி இறக்கைப் பூச்சித் தாக்குதல் இருக்கும். இது ஆகஸ்ட் மே-மாதங்களில் இருக்கும். இதற்கு வேப்பெண்ணெய்க் கரைசல் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு ஆகியவற்றைத் தெளிக்கலாம். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கூன் வண்டுத் தாக்குதல் இருக்கும். அதற்கும் வேப்பெண்ணெய்க் கரைசல் சரியான தீர்வாக இருக்கும். முறையாகச் சாகுபடி செய்தால், ஏறத்தாழ ஏக்கருக்கு 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். குமிழ் மரச்சாகுபடி சம்பந்தமாகக் கூடுதல் தகவல் தேவைப்பட்டால், எங்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்’’ என அழைப்புவிடுத்தார்.

ஏக்கருக்கு ரூ.15 லட்சம் கொடுக்கும் குமிழ் தேக்கு!

முன்னதாக பயிற்சி யின் நோக்கம் குறித்து வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவத்தின் உதவி தலைமை தொழில்நுட்ப அலுவலர் பழ.சந்திரசேகரன் ரத்தின சுருக்கமாக பேசினார். “மரம் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டவே, இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறோம். விவசாயிகள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்து வரும் வரவேற்பு எங்களை மேலும் சிறப்பாக பணியாற்ற உந்து சக்தியாக உள்ளது” என்று நிறைவுரை யாற்றினார் அந்நிறுவத்தின் வன விரிவாக்கத்துறை தலைவர் ராஜேஷ் கோபாலன் இ.வ.ப.

தொடர்புக்கு, வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், கோயம்புத்தூர். தொலைபேசி: 0422 2484100, 2484121.

கேள்வியும் பதிலும்!

“மியாவாக்கி முறை நம் சூழலுக்கு ஏற்றதா?”

நிகழ்ச்சியில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், விஞ்ஞானிகள் அதற்களித்த பதில்களும் இங்கே இடம் பிடிக்கின்றன.

“தைல மரங்களை அரசு ஊக்குவிக்கிப்பது சரியா?”

“எல்லா மரங்களைப் போலவும் தைல மரமும் ஒரு மர வகைதான். ஆனால், மற்ற மரங்களைவிட அதில் உள்ள சிறப்பு, அதிக வறட்சியான பகுதிகளிலும் தைல மரங்கள் வளரும்.”

“மியாவாக்கி தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்றதா?”

“மியாவாக்கிக்குத் தகுந்த மரங்களை மட்டும் நடலாம். மியாவாக்கி தமிழ்நாட்டுக்கு மிகவும் ஏற்றது. ஆனால் மரங்கள் நட அதிகமாக இடம் இருக்கும்போது நெருக்கி நட வேண்டிய தேவை இல்லை.”

“மரக்கன்றுகள் குறைந்த விலையில் எங்கே கிடைக்கும்?”

“மரக்கன்றுகள் பல ஆண்டுகளாக இருக்கப்போகின்றன. அவற்றைச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். விலையைப் பார்க்காமல், தாய் மரங்களைப் பார்த்து நல்ல விதைப் பண்ணையிலிருந்து மரக்கன்றுகள் வாங்கலாம். குறைந்தபட்சம் மர விதையை வாங்கி விதைகளிலிருந்தே வளர்க்கலாம்.”

“எந்தெந்த மர வகைகள் லாபகரமானது?”

“சந்தை வாய்ப்புகளுள்ள குறுகிய காலப் பயிர்களான சவுக்கு, தைல மரம், மலைவேம்பு ஆகியவை அதிக லாபகரமானது.”

“தரமான மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்?”

“வன மரபியல் நிறுவனம், வனத்துறையென யாரை வேண்டுமானாலும் அணுகலாம். எங்களிடம் முன்பதிவு செய்து கொண்டால் விரைவில் பெற வசதியாக இருக்கும்.”

“குமிழ் மரத்தை எப்போது கவாத்து செய்ய வேண்டும்?”

“கோடைக்காலங்களில் கவாத்துச் செய்யக் கூடாது. மழைக் காலங்களில் மட்டுமே கவாத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் மரத்தில் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்கும்.”

“குமிழ் மரத்தை மறுதாம்பின்போது எவ்வளவு உயரம் விட்டு மரத்தை வெட்ட வேண்டும்?”

“தரையிலிருந்து 15 செ.மீ. முதல் 30 செ.மீ. உயரம் வரை விட்டு வெட்டலாம். அதிலிருந்து 30 மறுதாம்பு குச்சிகள் வளர ஆரம்பிக்கும். அதில் 5 வளமான குச்சிகளை மட்டும் விட்டுவிட்டு மீதி குச்சிகளை அகற்றிவிட வேண்டும். ஆறு மாதம் கழித்து எந்த ஒரு குச்சியின் வளர்ச்சி சரியாக இருக்கிறது என்று பார்த்து, அதை விட்டுவிட்டு, மீதம் உள்ள குச்சிகளை மட்டும் வெட்டிவிட வேண்டும்.”

“ஊடுபயிராக இல்லாமல் தனிப்பயிராகச் சாகுபடி செய்யலாமா?”

“குமிழ் மரத்தை தனிப்பயிராகச் சாகுபடி செய்யலாம். தனிப்பயிர் நல்ல மகசூலும் கிடைக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism