Published:Updated:

`பொய்யான காரணங்களைச் சொல்றாங்க... பனை மரங்களை கழுத்தோட வெட்றாங்க!’ -சமூக ஆர்வலர்கள் வேதனை

வெட்டப்படும் பனைமரம்
வெட்டப்படும் பனைமரம்

பனை மரங்களை கழுத்தோடு வெட்டுவது, மிஷின்களை வைத்து வேரோடு சாய்ப்பது என சுற்றுச்சூழலுக்கு எதிரான செயலில் ஈடுபடுகிறார். எனவே, இதில் அரசு தலையிட்டு மரங்களைக் காப்பாற்ற வேண்டும்.

சிவகங்கை மாவட்டம் பி.நெற்புகப்பட்டி, பாகனேரி கிராமங்களில் உள்ள பனைமரங்கள் மற்றும் பாரம்பர்ய மரக்கன்றுகளைச் சிலர், பொய்யான காரணங்களைக் கூறி வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து 'விருச்சம்' இயற்கை மற்றும் சமூக தன்னார்வலர் குழுவினர் நம்மிடம் பேசுகையில், "எங்கள் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் நெற்புகப்பட்டி, பாகனேரி, நகரம்பட்டி ஆகிய பகுதிகளில் மரங்களை நட்டு பாதுகாத்து வளர்த்துவருகின்றனர். மேலும், ஏற்கெனவே இருக்கும் பாரம்பர்ய மரங்களைப் பாதுகாக்கின்றனர்.

வேரோடு சாய்க்கப்பட்ட மரங்கள்
வேரோடு சாய்க்கப்பட்ட மரங்கள்

1000 பனை விதைகளை நட்டால், குறைந்த பட்சம் 100 கன்றுகளையாவது முழுமையாகக் கொண்டு வரவேண்டும் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாம் பணி செய்கின்றனர். குளங்களைச் சீரமைப்பது, ஏரிகளைத் தூர்வாருவது, உசிலை, புங்கை போன்ற நாட்டு மரக்கன்றுகளை வளர்ப்பது என எங்களால் முடிந்த முன்னேற்றங்களைச் செய்கிறோம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக நெற்புகப்பட்டி - பாகனேரி பகுதியில் நாங்கள் வைத்த பனைமரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டுவருகின்றன.

ஆரம்பத்தில், நாங்கள் வைக்கும் மரங்களை சமூக விரோதிகள் தொடர்ந்து சேதப்படுத்தினர். பின்னர், முள்வேலிகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி பாதுகாத்தோம். ஒரு பக்கம், பந்தய மாடு வளர்க்கும் உரிமையாளர்கள், கிழங்குகளை எடுக்க பனைமரங்களைத் தோண்டுகின்றனர். இப்படி சிரமத்தில் மரங்களைப் பாதுகாத்துவரும் சமயத்தில், நெற்புகப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர், ஈ.பி லைனை காரணம் காட்டி 7 பனைமரங்கள் மற்றும் பல்வேறு நாட்டு மரக்கன்றுகளை அழித்துவிட்டார். பனை மரங்களை கழுத்தோடு வெட்டுவது, மிஷின்களை வைத்து வேரோடு சாய்ப்பதும் என சுற்றுச்சூழலுக்கு எதிரான செயலில் ஈடுபடுகிறார். எனவே, இதில் அரசு தலையிட்டு மரங்களைக் காப்பாற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டனர்.

வேரோடு சாய்க்கப்பட்ட மரங்கள்
வேரோடு சாய்க்கப்பட்ட மரங்கள்

இது தொடர்பாக பி.நெற்புகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திராவிட மணி, "எங்கள் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் மின் கம்பங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது என, மின்வாரியத்தில் இருந்து சில மரங்களை வெட்டினார்கள். அவர்களுக்கு வேலை ஆட்கள் குறைவாக உள்ளதாகக் கேட்டதால் மரம் வெட்ட பணியாளர்களை அனுப்பிவைத்தேன். மத்தபடி நான் எந்த மரங்களையும் வெட்டச் சொல்லவில்லை. மரங்களை வெட்ட வேண்டும் என்பது நோக்கம் இல்லை. வேறு சில காரணங்களுக்காக என்மீது சிலர் குற்றம் சாட்டலாம்" என்று தெரிவித்தார்.

மேலும், கல்லல் மின்வாரிய ஏ.இ கணேஷ்குமார், " தொடர்ந்து டிரான்ஸ்பார்மர்களில் இருந்து லோ ஓல்டேஜ், ஹை ஓல்டேஜ் என பிரச்னைகள் ஏற்பட்டதால், ஊருக்கு வெளியில் உள்ள 2 பனைமரங்களை வெட்டினோம். அதேபோல் குடியிருப்புப் பகுதியில் ஈ.பி லைன்களுக்குத் தொந்தரவாக இருக்கும் வேறு சில மரங்களையும் வெட்டினோம். தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் தான் மரங்களை வெட்டியுள்ளோம். தவறுதலாக எந்த மரத்தையும் நாங்கள் வெட்டவில்லை. மற்றபடி வேறு மரங்கள் வெட்டுவது தொடர்பாக எங்களுக்குத் தெரியாது” என்றார்.

வேரோடு சாய்க்கப்படும் மரங்கள்
வேரோடு சாய்க்கப்படும் மரங்கள்

காரைக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம், " நெற்புகப்பட்டியில் ஈ.பி பராமரிப்பிற்கு முன்பாகவே சில மரங்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதில் ஊராட்சி மன்றத் தலைவர் தரப்பில் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எங்கள் மீது குற்றம் சாட்டப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் நேரில் ஆய்வுசெய்து, மரங்களைக் காப்பாற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு