
எந்த மண்ணில் எந்த வகை மரங்கள் வளரும் என்பதைத் தெரிந்துகொள்ள அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. இப்படி செய்யுங்கள்...
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் விக்னேஷ் தங்கச்சாமி என்ற வாசகர், "விவசாய நிலங்களில் வளர்க்கக்கூடாத மரங்கள் எவை" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். அவருக்கான பதில் இதோ..!

இதுகுறித்து, ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் ‘வனதாசன்’ ராஜசேகரன் பதில் சொல்கிறார்.
"எந்த மண்ணில் எந்த வகை மரங்கள் வளரும் என்பதைத் தெரிந்துகொள்ள அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. நீங்கள் மரம் வளர்க்க நினைக்கும் நிலத்தைச் சுற்றிப்பாருங்கள். அங்கு என்ன விதமான மரங்கள் நன்றாக வளர்ந்திருக்கிறதோ அதை நடலாம். உதாரணமாக, நிலத்தைச் சுற்றி வேம்பு நன்றாக வளர்ந்திருந்தால் அதை நடுங்கள். அத்துடன், அந்த மண்ணுக்கு ஏற்ற மரங்களையும் சேர்த்து நடுங்கள்.
சில மரங்கள், குறைந்த வெப்பநிலையில்தான் வளரும். சில மரங்கள் மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும். அத்தகைய மரங்களைச் சமதளப்பகுதியில் நடக்கூடாது. அதேபோல், 'அகர் மரம் வளருங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்' போன்ற விளம்பரங்களை நம்பி, மரங்களை நடக்கூடாது. மண்ணுக்கு ஏற்ற மரங்களைத் தேர்வுசெய்வதுபோல் நமது பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப மரங்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.

குறுகிய கால மரங்கள், நீண்டகால மரங்கள் எனத் தேவைக்கு ஏற்ற மரங்களை நடவுசெய்ய வேண்டும். தேக்கு, வாகை, சந்தனம், கடம்பு, தடசு, ஆச்சா, செஞ்சந்தனம் போன்ற மரங்கள்மூலம் வருமானம் பார்க்க 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். அப்படிக் காத்திருந்தாலும் நல்ல வருமானம் கிடைக்கும். மலைவேம்பு, சவுக்கு போன்ற மரங்கள் 4 முதல் 6 ஆண்டில் அறுவடைசெய்து வருமானம் பார்த்துவிடலாம். ஊடுபயிராக பப்பாளி, முருங்கை, கொய்யா, எலுமிச்சை மரங்களை நட்டு அதன் மூலமும் வருமானம் பார்க்கலாம்.
நீர் தேங்கும் பகுதிகளில் மூங்கில், நாவல், வெள்ளை மருது, இலுப்பை, கருவேல மரங்களை நடலாம். களிமண் நிலங்களில் புங்கன், நெல்லி, கருவேல், வாகை, மருது, சவுண்டல் மரங்களை நடலாம். சதுப்புநிலங்களில் மருதம், புங்கன், இலுப்பை, நாவல் மரங்களை நடலாம். உவர் மண் நிலங்களில் புளி, வேம்பு, இலவம், சவுக்கு மரங்களை நட்டு வளர்க்கலாம்.


வீட்டில் சில மரங்களை வளர்த்தால், அது வீட்டுக்கு ஆகாது என்று கூறுகிறார்களே அது உண்மையா? அந்த மரங்கள் யாவை?

சில மரங்களை வீட்டில் வளர்த்தால் வீட்டுக்கு ஆகாது என்பதில் சில மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. சில அறிவியல் உண்மைகளும் இருக்கின்றன. நாம் அறிவியல் உண்மைகளை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நீளமான, கனமான வேருள்ள மரங்களை வீட்டில் வளர்க்கக்கூடாது. அது, சுவரைப் பாதிக்கும். அதனால் ஆல், அரசு போன்ற மரங்களை நடக் கூடாது. புளியும் நீளமான வேருள்ள மரம், அதிக அளவு கார்பன் -டை - ஆக்சைடை வெளியிடும் என்பதால், அதையும் தவிர்க்க வேண்டும். பனை, இலவம், கள்ளி போன்ற மரங்களையும் வீடுகளில் வளர்க்கக்கூடாது. ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் புங்கன், முள்ளில்லா மூங்கில், மருத்துவ குணமுள்ள வேம்பு, அழகுக்கான மஞ்சள், கொன்றை போன்ற மரங்களை வளர்க்கலாம்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்கள்!
