Published:Updated:

சர்க்கரை நோயாளிகளுக்கான வாழைப்பழம்...! தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் கண்டுபிடிப்பு!

வாழை
பிரீமியம் ஸ்டோரி
வாழை

அறிமுகம்

சர்க்கரை நோயாளிகளுக்கான வாழைப்பழம்...! தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் கண்டுபிடிப்பு!

அறிமுகம்

Published:Updated:
வாழை
பிரீமியம் ஸ்டோரி
வாழை

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பி உண்பது வாழைப்பழம். ஆனால், அதிக சுவை மற்றும் சத்துடனும் இருக்கக்கூடிய இந்த வாழைப்பழங்களை, சர்க்கரை (நீரிழிவு) நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில், ‘மருத்துவர்கள் சொல்வதால் விட்டுவிட முடியாது! நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடக்கூடிய வகையில் வாழைப்பழம் இருக்கிறது. அதை நாங்கள் விரைவில் வெளியிட இருக்கிறோம். அதைத் தாராளமாக நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்’ என்கிறார் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் உமா.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் திருச்சியில் அமைந்துள்ளது. இங்கு, இந்தியா, வெளிநாடுகள் எனச் சர்வதேச அளவில் இருக்கும், பாரம்பர்ய வாழை ரகங்கள், புதுமையான வாழை ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள் இங்கு நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ரகத்தின் இயற்கைத் தன்மை, குணாதிசயம், மருத்துவப் பயன்கள் எனப் பல விதங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அரிய வகை வாழை ரகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மருத்துவரீதியாக வாழைப்பழத்தின் சர்க்கரைத் தன்மை குறித்த ஆராய்ச்சியை முன்னெடுத்துள்ள வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், ‘பிசாங் லிலின்’ என்ற ‘கிளைசெமிக் இண்டெக்ஸ்’ இயல்பிலேயே குறைவாக இருக்கும் வாழை ரகத்தையும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

பிசாங் லிலின் வாழை
பிசாங் லிலின் வாழை


அதுகுறித்துப் பேசிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் உமா, ‘‘இந்த ஆராய்ச்சி முடியும் தறுவாயில் இருக்கிறது. வணிக ரீதியாக இந்த வாழை விற்பனைக்கு வரும்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். ‘நீரிழிவு நோயாளிகள், வாழைப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படித் தவிர்க்கச் சொல்லும் பழத்தை, நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றிக் கொடுக்கலாம் என்ற நோக்கத்தில்தான் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம்.

நீரிழிவு நோயாளிகள், வாழைப்பழத்தைச் சாப்பிடும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பழத்தை எப்போது சாப்பிடலாம், பழத்தின் எந்த நிலையில் சாப்பிடலாம் என்பது முக்கியம். நன்றாகக் கனிந்த வாழைப்பழத்தைச் சாப்பிடக் கூடாது. காம்பும் நுனியும் பச்சை நிறத்திலும், இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறத்திலும் இருக்கும்போதுதான் சாப்பிட வேண்டும். நாங்கள், இயல்பிலேயே சர்க்கரைத் தன்மை குறைவாக உள்ள ‘சபா’, ‘பிசாங் லிலின்’ என்ற வாழை ரகங்களில் ஆராய்ச்சியை மேற்கொண்டோம். மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ‘பிசாங் லிலின்’ ரகம், ‘டையபடிக் பனானா’ என்ற பெயரில் அங்கு சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

உமா
உமா
DIXITH

அதைத் தொடர்ந்து, அந்த விஷயத்தை நாமும் ஏன் செய்யக் கூடாது? என்று தோன்றியது. அதற்காக ‘பிசாங் லிலின்’ தாய் வாழைகளைக் கொண்டு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆராய்ச்சி முடிவில் சர்க்கரை சத்துக் குறைவாக உள்ள, அதிக மகசூல் கொடுக்கும் வாழை ரகம் அறிமுகப்படுத்தப்படும். அதன் மூலம் விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். மக்களும் பயன்பெறுவர். ‘பிசாங் லிலின்’ வெளிநாட்டு ரகம் என்றாலும், நம் நாட்டிலும் சர்க்கரைத் தன்மை குறைந்த பல ரகங்கள் இருக்கின்றன. இதைப் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றவர், பிசாங் லிலின் ரகத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வாழை
வாழை
DIXITH


‘‘பிசாங் லிலின், மற்ற வாழை ரகத்தைப் போல் உயரமாக வளராது. குட்டை ரகம். இதன் அதிகபட்ச உயரமே 2 மீட்டர்தான். பொதுவாக, மற்ற ரகங்களில் கலப்பு செய்வதற்கு இதைப் பயன்படுத்துவார்கள். பழங்களும், பெரிதாக இருக்காது. சன்னமாக இருக்கும். அதனால் ‘பென்சில் பழம்’ என்றும் சொல்வார்கள். கொஞ்சம் புளிப்புச் சுவை கலந்த இனிப்புடன் வித்தியாசமான சுவையுடையது. தனி மணம் உடையது. வாழை இனங்களிலேயே மிகக்குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடிய ரகம் இதுதான். 8 மாதங்களில் அறுவடை செய்து விடலாம். இயற்கையாக வாழையில் ஏற்படக்கூடிய வாடல் நோய், இலைப்புள்ளி, தண்டு துளைப்பான் போன்ற நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி கொண்ட ரகம். இதன் ஒரு பழம் 80 முதல் 90 கிராம் வரை எடை இருக்கும்’’ என்று சொல்லிமுடித்தார்.

தொடர்புக்கு,

இயக்குநர்,

தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தாயனூர், திருச்சி.
தொலைபேசி: 0431 2618125

மதிப்புக்கூட்டல் சம்பந்தமான தகவல்களுக்கு
செல்போன்: 96262 57154

வாழை மதிப்புக்கூட்டல்!

வாழை மரத்தைப் பொறுத்தவரை அதன் மொத்த பகுதியும் பயன்படும் வகையில் உள்ளது. தண்டு, இலை, பழம், பூ என அனைத்தையும் அப்படியே பயன்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் அதிகம் பயிரிடப்படும் வாழையில் மதிப்புக் கூட்டுவதன் மூலம் அதிக லாபம் பார்க்கலாம். அதற்கு வழிகாட்டுகிறது தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ள வாழை மதிப்புக்கூட்டுக் குழு.

வாழை மரத்திலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றி வருகிறார்கள் இந்தக் குழுவினர். குறிப்பாக, வாழைப்பழ மாவு, சிப்ஸ், குளிர்பானங்கள், பிஸ்கட், கேக், சூப், ஆரோக்கியப் பானங்கள் எனப் பலவற்றையும் தயாரிக்கக் கற்றுக்கொடுக்கிறார்கள். வாழைப்பழம், வாழைப் பூ, தண்டு, காய் என அனைத்தையும் பயனுள்ள பொருளாக மாற்றும் மந்திரத்தைச் சொல்லித்தருகிறார்கள். வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தி ஊறுகாய், வாழைத் தண்டு நாரில் சேலை, செருப்பு, வீட்டு அலங்காரப் பொருள்கள் எனப் பலவற்றையும் தயாரித்து வருகிறார்கள். புதுப் புது உணவுகள், புதிய பொருள்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

வாழைத்தோட்டம்
வாழைத்தோட்டம்
DIXITH

வாழை மதிப்புக்கூட்டல் குறித்துப் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும் இங்கு வந்து பயிற்சி பெற்று வருகிறார்கள்.

மதிப்புக்கூட்டல் பயிற்சி குறித்துப் பேசிய தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை விஞ்ஞானி முனைவர் சுரேஷ் குமார், ‘‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வாழை, மிக முக்கியமான பயிர். வாழைப் பழங்கள் விற்பனையோடு நின்றுவிடாமல், மதிப்புக்கூட்டுவதன் மூலம் வருமானத்தை அதிகமாக்க முடியும். இதன் மூலம் புதிய தொழில்முனைவோர்கள் உருவாக வாய்ப்புள்ளது.

வாழையில் மதிப்புக்கூட்டுவதை மூன்றாகப் பிரிக்கிறோம், வாழைக்காய், வாழைப்பழம் மற்றும் வாழையின் மற்ற பகுதிகள். வாழைக்காயிலிருந்து, மாவு தயாரிக்கலாம். பிரதமர் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில்கூட இதைப் பற்றிக் கூறியுள்ளார். இந்த மாவை, பிஸ்கட், ரொட்டி, சப்பாத்தி, பிரெட், நூடுல்ஸ், பாஸ்தா எனப் பல பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தலாம். இதில் ‘கிளைசெமிக் இண்டெக்ஸ்’ சற்றுக் குறைவாகவே உள்ளது. அதனால் அனைவரும் உண்ணலாம். நாம் குப்பையாக வீசி எறியும் வாழைப்பழத் தோலில் ஊறுகாய் தயாரிக்கலாம்.

சுரேஷ் குமார்
சுரேஷ் குமார்
DIXITH

வாழைப்பழத்தைப் பொறுத்தவரை உலர் அத்திப்போல, வாழைப் பழத்தையும் பயன்படுத்தலாம். ஜூஸ், பேக்கரி உணவுகள், வினிகர் எனப் பலவற்றையும் தயாரிக்க முடியும். வாழையைக் ‘கற்பகத் தரு’ என்று சொல்கிறோமே தவிர, அதன் அனைத்துப் பகுதியையும் நாம் பயன்படுத்துவதில்லை. வாழைத்தண்டில் ஜூஸ், அதன் நார் மூலம் கைவினைப் பொருள்கள், துணிகள் செய்யலாம். நாப்கின், டயபர் போன்றவற்றைத் தயாரிக்கலாம். எங்களிடம் நூற்றுக்கணக்கானவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் பலர், தொழில் முனைவோர்களாக மாறியிருக்கிறார்கள். சந்தைப்படுத்துதலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். வாழை மதிப்புக்கூட்டல் மூலம் விவசாயிகள் லாபம் பெறுவதுடன், ஆரோக்கியமான பொருள்கள் மக்களைச் சென்றடையும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism