Published:Updated:

`ஐந்தாயிரம் ஏக்கர் விவசாயம் பாழாய்ப் போகிறது!’ - தூர்வாரப்படாத வாய்க்காலில் இறங்கிப் போராடிய மக்கள்

சி.ய.ஆனந்தகுமார்
தே.தீட்ஷித்

பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தால், காவிரியில் தண்ணீர் வந்தும் தங்கள் பகுதிக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள் திருச்சி விவசாயிகள்.

போராடும் விவசாயிகள்
போராடும் விவசாயிகள்

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாகக் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார். அந்த வகையில் தற்போது, கரூர் மாயனூர், திருச்சி முக்கொம்பு மற்றும் கல்லணை உள்ளிட்ட அணைகளிலிருந்து திருச்சி தஞ்சை டெல்டா மாவட்டங்களுக்குத் தண்ணீர் பிரித்து பாசன வாய்க்கால்களில் விடப்படுகிறது.

வாய்க்கால்கள் தூர்வாராததால், தங்கள் பகுதிக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. 5 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாழாய்ப் போகிறது
திருச்சி விவசாயிகள்

பாசன வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வாய்க்கால்கள் தூர்வாராததால், தங்கள் பகுதிக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. 5 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாழாய்ப் போகிறது எனக் குற்றம் சாட்டிய விவசாயிகள் திருச்சி வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மணிகண்ட பகுதியில் உள்ளது புங்கனூர். இங்குள்ள இரண்டாம் நம்பர் வாய்க்காலுக்கு, வழக்கமாக அப்பகுதியிலுள்ள கட்டளை மேட்டு பெரிய வாய்க்காலிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அப்படிவரும் தண்ணீர் கள்ளிக்குடி, கொத்தமங்கலம் தாயனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வயல்களுக்குப் பயன்படும்.

விவசாய சங்கத் தலைவர் செல்வம்
விவசாய சங்கத் தலைவர் செல்வம்

ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தங்கள் பகுதிகளுக்குத் தண்ணீர் வராமல் பாசனம் பாதிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அப்பகுதி மக்கள், விவசாய சங்கத் தலைவர் செல்வம் தலைமையில், திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நவலூர் குட்டப்பட்டு அருகே உள்ள 2 -ம் நம்பர் வாய்க்காலுக்குள் இறங்கி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், வாய்க்காலைத் தூர்வாராத பொதுப்பணித் துறையைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

நம்மிடம் பேசிய செல்வம், ``கடந்த சில வருடங்களாகக் காவிரியில் தண்ணீர் வரவில்லை. அதனால் எங்கள் பகுதி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குடிக்கவே தண்ணீர் கிடைக்காத சூழல். அதனால் இனி அதிகாரிகளை நம்பி பலனில்லை என்று கடந்த வருடம் முடிவு செய்து, எங்கள் பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து சொந்தச் செலவில் இந்த வாய்க்காலைத் தூர்வாரினோம். எங்களால் வாய்க்காலை முழுமையாகத் தூர்வார இயலவில்லை. அதனால் கடந்த வருடம் காவிரியில் வெள்ளம் வந்தும் எங்கள் பகுதிக்கு முழுமையாகத் தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் தற்போது காவிரி தண்ணீர் வருகிறது. அதனால் எல்லா பகுதிகளுக்கும் பாசனத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

போராடும்  விவசாயிகள்
போராடும் விவசாயிகள்

ஆனால், எங்கள் பகுதி வாய்க்கால் மட்டும் தூர்வாரப்படவில்லை. இதனால் வாய்க்கால்களில் பல இடங்களில் புதர்மண்டி கிடக்கிறது. இதைச் சரி செய்யாமல், தண்ணீர் திறந்துவிட்டாலும், இந்த வருடமும் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் செல்லாது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், வாய்க்கால்களைத் தூர்வாரி, தண்ணீர் திறந்து விட்டு எங்கள் விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும்.

தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியம் காட்டினால், மக்களைத் திரட்டி திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்” என அறிவித்தார்.