Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 8 | ‘காட்டு விவசாய’த்தின் முன்னோடி அமரதன்! இவர் செய்த சாதனை என்ன?

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் | அமரதன்
திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் | அமரதன்

தன் நிலத்தில் காட்டு வேளாண்மை மூலம் கிடைக்கும் கரும்பை சர்க்கரையாக்கி விற்பனை செய்கிறார். பழங்கள், காய்கறிகள், நெல் என பல்வகை சாகுபடி செய்யும் அமரதன், எல்லா பயிர்களுக்குள்ளும் ஊடுபயிராக கரும்பை சாகுபடி செய்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகத்தின் சக்கரம் வேளாண்மையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு, நகரத்தில் பிழைத்த பலரும் பிள்ளைகளை கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட்டுவிட்டு வேளாண்மை செய்ய சென்றிருக்கிறார்கள்.

உலகிலிருக்கும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும். என்றால், உலகின் ஆகப்பெரிய தொழில் உணவு உற்பத்திதான். ஆனால் பல்லாயிரம் கோடி வணிக வாய்ப்புள்ள இந்தத் தொழிலைச் செய்யும் விவசாயி வறுமையின் பிடியில் கிடக்கிறார். இதற்கு அரசியல், பொருளாதார, கொள்கை சார்ந்த காரணங்கள் நிறைய உண்டு.

வேளாண்மை
வேளாண்மை

காட்டு விலங்குகளை வேட்டையாடிப் புசித்த மனிதனின் அடுத்தக்கட்ட நாகரீக நகர்வுதான் வேளாண்மை. காடுகளில் விளைந்து கிடந்த பழங்களையும் காய்களையும் கிழங்குகளையும் தானியங்களையும் பறித்துச் சாப்பிட்டுப் பழகிய மனிதன், அறிவு மேம்பட்டு தான்வாழும் சூழலிலேயே அவற்றைப் பயிரிட்டு சாகுபடி செய்ய ஆரம்பித்தான். செயற்கையாக தானியங்களை விதைத்து, தான் பயன்படுத்திய கழிவுகளை ஊக்கிகளாக செலுத்தி விளைச்சலை அறுவடை செய்தான். இப்படி தொடங்கி உணவுக்கானதாக இருந்த விவசாயம், ஒரு கட்டத்தில் பணமீட்டும் தொழிலாக மாறிநின்றது.

விளைச்சலை அதிகரிக்க, ரசாயன ஊக்கிகளை கொட்டத் தொடங்கினார்கள். விளைச்சலை தின்றழிக்கும் பூச்சிகளைக் கொல்ல விஷங்களை நேரடியாகவே பயிர்களில் தெளிக்கத் தொடங்கினார்கள். பசுமை புரட்சி வேளாண்மையை வேறொரு திசைக்கு நகர்த்தியது. விவசாயிகள், இடுபொருள்களுக்கு பெரும் தொகை செலவிட நேரிட்டது. நிலம் தன்மையிழந்தது. வேளாண்மைக்குப் பயன்பட்ட நல்ல பூச்சிகளும் செத்தொழிந்தன. இது ஏற்படுத்திய இன்னொரு விளைவு, பல்வேறு தொற்றா நோய்களில் வீழ்ந்தார்கள் மனிதர்கள்.

இன்று இயற்கை வேளாண்மை என்ற பதத்தை எல்லோரும் உச்சரிக்கிறார்கள். இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள்களுக்கு மிகப்பெரும் சந்தை வாய்ப்பு உருவாகியிருக்கிறது. பாலேக்கர், நம்மாழ்வார் போன்றோரின் தாக்கம் இன்று இளம் தலைமுறையின் மத்தியில் பரவலாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி, மனம் ஈர்க்கப்பட்டு வேளாண்மைக்குள் வந்தவர்தான் அமரதன். நம்மாழ்வார், பாலேக்கரை கற்றதோடு சுயமாக செயலறிவும் பெற்று 'காட்டு விவசாயம்' என்ற புதிய தொழில்நுட்பத்தை வேளாண்மையில் செயல்படுத்தி முன்னோடியாகியிருக்கிறார் அமரதன்.
அமரதன்
அமரதன்

தன் நிலத்தில் காட்டு வேளாண்மை மூலம் கிடைக்கும் கரும்பை சர்க்கரையாக்கி விற்பனை செய்கிறார். பழங்கள், காய்கறிகள், நெல் என பல்வகை சாகுபடி செய்யும் அமரதன், எல்லா பயிர்களுக்குள்ளும் ஊடுபயிராக கரும்பை சாகுபடி செய்கிறார். தன் வேளாண்மையையும் உற்பத்தியையும் ஒருங்கிணைத்து 'மேஸிவ் அக்ரோ வெண்ட்சர்' என்ற நிறுவனத்தையும் நடத்துகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காட்டு விவசாயம் என்ற எல்லையில் வந்து நிற்பதற்கு முன்பு அமரதன் எல்லா வேளாண் முறைகளையும் முறைப்படி பரிட்சித்துப் பார்த்திருக்கிறார். பாலேக்கர் அமரதனை வெகுவாகக் கவர்ந்தார். பாலேக்கர் பரிந்துரைக்கும் ஜீவாமிர்தம் செய்வதற்கான கட்டமைப்புகளையும் தன் தோட்டத்தில் உருவாக்கிவிட்டார். நூறு நாட்டு மாடுகள் தோட்டத்தில் இருந்தன. அமரதனின் அப்பாவுக்கு நாட்டு மாடுகளை வளர்ப்பதில் அலாதி ஆர்வம். தமிழகம் முழுவதும் நடக்கும் சந்தைகளுக்குச் சென்று வெட்டுக்குப் போகும் மாடுகளை வாங்கி வந்து வளர்ப்பார். அமரதன் முதலில் கரும்பிலிருந்துதான் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

அமரதன்
அமரதன்

பூனேயில் பாலேக்கர் அமைத்திருந்த மாதிரி பண்ணையைப் போய் பார்த்தார். "எட்டடிக்கு எட்டடி கரும்பு போடுங்கள்... சூரிய வெளிச்சம் நன்றாக அதன்மேல் படும். பயிரின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம், சூரிய வெளிச்சம்தான்..." என்றார் பாலேக்கர். அதன்படியே போட்டு ஊடுபயிராக கடலையையும் மஞ்சளையும் விதைத்தார் அமரதன்.

திருச்சி ருசி: "எம்.சி.ஏ படிச்ச மனைவி சொன்ன மெஸ் ஐடியா!"- அசைவத் தொக்குகளில் அசத்தும் சேதுராம் மெஸ்!

"ரொம்பவே எதிர்பார்ப்போடு விவசாயத்தில் இறங்கினேன். ஆனால் சில மாதங்களிலேயே சோதனை வந்தது. கரும்பில் வண்டு துளைப்பான் பூச்சி ஏறிவிட்டது. அப்பா ரொம்பவே வருத்தப்பட்டார். 'தேவையில்லாத வேலை' என்றார். ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை அமரதன். பண்ணையில் வேலை செய்தவர்களெல்லாம் 'கண்டிப்பாக வண்டு துளைப்பானுக்கு மருந்து அடிக்க வேண்டும்' என்றார்கள். ஆனால் நான் உறுதியாக மறுத்துவிட்டேன். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்றேன். எல்லாரும் என்னை ஒருமாதிரி பார்த்தார்கள்.

அமரதன்
அமரதன்

'அனுபவமே இல்லாமல் விவசாயம் செய்யவந்து 2 ஏக்கரை வீணடித்துவிட்டாய்' என்றார்கள். நான் முரட்டுத் தைரியத்தில் இருந்துவிட்டேன். நான் எதிர்பார்த்தது மாதிரியே ஒரு நல்லவிஷயம் நடந்தது. தண்டுதுளைப்பான் அரித்தபிறகு, கரும்பில் அதிக கிளைகள் உருவாக ஆரம்பித்தன. பல்லுயிர் சேதாரம் ஏற்படுத்தும்போது பயிர் தானாகவே தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது என்ற உண்மை புரிந்தது. இனிமேல் பூச்சிகளை நினைத்துப் பயம் கொள்ளத் தேவையில்லை என்ற படிப்பினை கிடைத்தது..." என்கிறார் அமரதன்.

அடுத்து கத்தரியில் அவர் பரிசோதனை முயற்சிகளைத் தொடங்கினார். அதுபற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு