Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 10 | காட்டு விவசாயத்துக்கு நிலத்தைத் தயார்படுத்துவது எப்படி?

அமரதன்
அமரதன்

அமரதனுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது நிலம். இந்த சோதனை முயற்சியில் ஏராளமான இழப்புகள்... எல்லா இழப்புகளையும் பயிற்சிக்கான கட்டணமாக கருதிக்கொள்கிறார்.

காட்டு விவசாயம் முறைக்கு மாறுவதற்கு முன் 80 நாட்டு மாடுகள், 100க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்திருந்தார் அமரதன். இப்போது அவற்றையெல்லாம் பாதியாக குறைத்துவிட்டார். "வேளாண்மையை சுருக்கமாகச் செய்யவேண்டும். யூஸர் ப்ரண்ட்லியாக செய்ய வேண்டும்" என்கிறார் அமரதன்.
அமரதன்
அமரதன்

பயிர் வளர நீர், நெருப்பு, காற்று ஆகிய மூன்று சக்திகள் அவசியம். மண்ணைப்பிரட்டி காற்றோட்டத்தையும் சூரிய வெளிச்சத்தையும் நீரையும் வழங்கினால் விளைச்சல் அதிகமாகும். இதுதான் அடிப்படையான விஷயம். இது மூன்றையும் பல்லுரியிகள் இயற்கையாகவே செய்கின்றன. உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் கொட்டி பல்லுரியிகளை அழித்துவிட்டு, அவர்கள் செய்யவேண்டிய வேலையை எந்திரங்களை வைத்தோ ஆள்களை வைத்தோ செய்துகொண்டிருக்கிறோம். பல்லுரியிகள் மண்ணைப் புரட்டிப்போட்டு காற்றோட்டம் படச்செய்யும். தண்ணீர் நிலத்தில் தேங்கக்கூடாது. பல்லுயிர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தண்ணீர் வடிந்துவிடும்.

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 8 | ‘காட்டு விவசாய’த்தின் முன்னோடி அமரதன்! இவர் செய்த சாதனை என்ன?

"பல்லுரியிகள் பெருக, அவற்றுக்கான உணவை அதிகம் தரவேண்டும். அதற்காக நான் கண்டடைந்த வழிதான் கரும்பு. எல்லா நிலங்களிலும் எல்லாவகைப் பயிர்களிலும் கரும்பை ஊடுபயிராக பயிரிடுகிறோம். எழுமிச்சை, கொய்யா, வாழைக்கு நடுவிலும் கரும்பு போட்டிருக்கிறோம். மிகச்சிறந்த மூடாக்கு, கரும்பு.

கரும்புக்கு அதிகப்படியான மூடாக்கு கொடுக்கக்கூடிய தன்மை இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு நாம் அறுவடை செய்து முடித்துவிட்டால் கரும்புத் தோகையை மொத்த நிலத்திலும் பரப்பிவிடலாம். அடுத்து கரும்பை ஒருமுறை நடவு செய்துவிட்டால் பிறகு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அறுவடை செய்துகொண்டேயிருக்கலாம். அறுவடை செய்ய செய்ய தோகை நிலத்துக்கு மூடாக்கிவிடும். அது மக்கி பல்லுயிரிகளுக்கான தீனியாகிவிடும். இன்னொரு பலன், நிலத்தில் களையும் வராது. அடுத்தமுறை உழவு ஓட்டத் தேவையிருக்காது.

அமரதன்
அமரதன்

பயிருக்கு வேர் ஊடுருவிச்செல்ல தண்ணீர் தேவை. மண் காய்ந்துபோனால் வேர் ஊடுருவ சிரமமாகும். கரும்புத்தோகை மூடாக்கு, தண்ணீர் பதத்தையும் நிலத்தில் தக்க வைக்கும். கரும்பை ஊடுபயிராக்கி இஞ்சியும் நெல்லும்கூட சோதனை முறையில் சாகுபடி செய்து பார்த்திருக்கிறேன். ஒருமுறை கரும்பு போட்டால் போதும். அது அடித்தளம் மாதிரி. ஒரு ஏக்கருக்கு 700 கரும்பு ஊன்றுவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழக்கமாக கரும்பு சாகுபடியைப் பொறுத்தவரை ஒரு தூறில் 30 கரும்பு என்பது பெரியவிளைச்சல் என்பார்கள். ஆனால் இங்கே 100 தூர் கூட எடுத்திருக்கிறேன். சராசரியாக 70 தூர் வரை வரும். ஒரு ஏக்கரில் 70 முதல் 100 டன் வரை அறுவடை எடுக்கலாம்.

கரும்பின் ஊடுபயிராக காய்கறிகள், கிழங்குகள் பயிரிடலாம். நான் கத்தரி, தக்காளி, வெங்காயம் போட்டிருக்கிறேன். மரப்பயிர்கள்கூட செய்யலாம். எல்லாவற்றையும் நான் செய்து பார்த்திருக்கிறேன்...." என்கிறார் அமரதன்.

காட்டு விவசாயம்
காட்டு விவசாயம்

காட்டு விவசாயத்திற்கென்று நிலத்தை வடிவமைக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. நிலத்தைச் சுற்றிலும் ஒரு அகழி வெட்டுகிறார்கள். எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் வெளியே போகாது. அகழியில் சேர்ந்துவிடும். தண்ணீரை நம் நிலத்திலேயே தக்க வைத்துக்கொள்ளலாம். இன்னொன்று, பயிர்களில் தண்ணீர் நின்று பயிர்கள் சேதாரம் ஆகாமல் காக்கவும் அகழி உதவும். ஆறடி அகலம், ஐந்தடி ஆழத்துக்கு எல்லா விவசாயிகளுமே இந்த அகழியை வெட்டிக்கொள்ளலாம். வேளாண்மைக்கு மிகவும் முக்கியமானது இது.

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 9 | பல்லுயிர் ஓம்பும் அமரதனின் `காட்டு விவசாயம்’!
"நிலத்தில் வேளாண் கழிவுகளைப் போடுவதன் மூலம் பல்லுரியிகளுக்கு போதுமான உணவு கிடைக்கும். அவற்றைச் சாப்பிட்டு மண்புழு ஆறடிக்கு பொந்து போடும். கரையான், கட்டெறும்பெல்லாம் 25 அடிக்கு வரைக்கும் பொந்து போடும். நாம் தீனி போடப்போட நிலத்தில் பொந்துகள் அதிகமாகும். மழை பெய்யும்போது மழைநீர் இந்தப் பொந்துகள் வழி எளிதாக நிலத்துக்குள் செல்லும். பல்லுரியிரிகள் நிலத்தில் மழைநீரை சேமிக்கும் வேலையையும் செய்கின்றன.
காட்டு விவசாயம்
காட்டு விவசாயம்

இந்தப்பயிருக்கு இவ்வளவு ஊட்டச்சத்து தேவை, பூச்சிக்கொல்லி தேவை என எதுபற்றியும் கவலைப்படத்தேவையில்லை. களை வந்தால் இன்னும் மகிழ்ச்சி. பல்லுரியிகளுக்கு அதிக தீனி. பிடுங்கி நிலத்திலேயே போட்டுவிடுவோம். வாழை, தென்னை, மா, கொய்யா, கடலை, இஞ்சி என எல்லாமும் காட்டு விவசாயம் செய்யும் நிலத்தில் வரும். என் நிலத்தில் ஏலக்காய்கூட போட்டிருக்கிறேன். மிளகு போட்டிருக்கிறேன். நிலத்தின் கட்டமைப்பை மட்டும் மாற்றினால் போதும்.

பூச்சிகளைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதே இல்லை. பூச்சிகள் தாக்கினால் சந்தோஷப்படுவோம். அதனால் விளைச்சல் அதிகமாகும். பலவகையான பூச்சிகள் இருக்கின்றன. புழுக்கள் இருக்கின்றன. எறும்பு வகைகள் இருக்கின்றன. எல்லாமும் ஒரு வலைப்பின்னலில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த பின்னலிலிருந்து ஒரு இழையை எடுத்துவிட்டீர்கள் என்றால் மொத்த தொடர்பும் வீணாகிவிடும். அதில் கைவைக்கவே கூடாது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யவே தேவையில்லை. ஒரு உயிர் பயிரை அழிக்கி்றதென்றால் அதை அழிக்க இன்னொரு பல்லுயிர் வந்துவிடும்." என்கிறார் அமரதன்.

திருச்சி கோயில்கள் - 11 - திருவாசி: நோயை நாகமாக மாற்றி அதன் மீது ஈசன் நின்று ஆடிய தலம்!

அமரதனுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது நிலம். இந்த சோதனை முயற்சியில் ஏராளமான இழப்புகள்... எல்லா இழப்புகளையும் பயிற்சிக்கான கட்டணமாக கருதிக்கொள்கிறார். எல்லா பயிர்களுக்குள்ளும் ஊடுபயிராக கரும்பு விளைவதால் அந்தக்கரும்பை அவரது நிலத்தின் ஒரு பகுதியில் மதிப்பூட்டி வெல்லம், சர்க்கரையாக மாற்றுகிறார். கடலை, எள் போன்றவற்றை எண்ணெயாக மாற்றுகிறார். செவ்வாழை, நேந்திரம் பழங்கள் விளைகின்றன. மஞ்சள் விளைகிறது. இஞ்சி, தட்டப்பயிறு, காய்கறிகள் ஒரு பக்கம் விளைகின்றன. ஏலக்காய், மிளகும் கொஞ்சம் போட்டிருக்கிறார்.

காட்டு விவசாயம்
காட்டு விவசாயம்
வேளாண்மைதான் உயிர். ஆனால் அதற்கு அதிக செலவு செய்யக்கூடாது. கிடைத்த எல்லாமும் லாபமாக இ்ருக்கவேண்டும். இருப்பதை அப்படியே பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். விளையும் பொருள்களை அப்படியே விற்காமல் மதிப்பூட்டி விற்கவேண்டும். அப்படிச் செய்தால் விவசாயி வாழ்க்கை வளமாகும்... அமரதன் அதைத்தான் செய்து வருகிறார்.
அடுத்த கட்டுரைக்கு