Published:Updated:

மகரந்தச் சேர்க்கையால் செழிக்கும் செடிகள்... மனதை நிறைக்கும் மாடித்தோட்டம்! - உமா ஜெயராமன்

உமா ஜெயராமன்
பிரீமியம் ஸ்டோரி
உமா ஜெயராமன்

என் இல்லம் பசுமை இல்லம்

மகரந்தச் சேர்க்கையால் செழிக்கும் செடிகள்... மனதை நிறைக்கும் மாடித்தோட்டம்! - உமா ஜெயராமன்

என் இல்லம் பசுமை இல்லம்

Published:Updated:
உமா ஜெயராமன்
பிரீமியம் ஸ்டோரி
உமா ஜெயராமன்
காய்கறிகள், பூக்கள், மூலிகைகள், பழங்கள் என 300-க்கும் மேற்பட்ட தொட்டிகளுடன் நந்தவனமாக வரவேற்கிறது இல்லத்தரசி உமா ஜெயராமனின் வீடு. விருகம்பாக்கத்தில் உள்ள அவரது மாடித்தோட்டத்தில் ரம்மியமாகத் தொடங்கியது உரையாடல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இப்போ எனக்கு 58 வயசாகுது. ஆனா மனசளவில் இளமையா ஃபீல் பண்றேன்னா, இந்தச் செடிகள்தான் காரணம். 30 வருஷங்களா செடிகள் வளர்க்கறேன். ஆரம்பத்தில் நிறைய பூச்செடிகள் வளர்த்துட்டிருந்தேன். கடந்த எட்டு வருஷங்களாதான் காய்கறித் தோட்டம் போட்டு வர்றேன். என் பசங்க படிச்சு முடிச்சு வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டாங்க. சில நேரம் தனிமை உணர்வு மனசுக்குள்ள எட்டிப்பார்க்கும். அடுத்த நிமிஷமே நானும் என் கணவரும், எங்க தோட்டத்துக்கு வந்துருவோம். இங்க இருக்குற ஒவ்வொரு பூவும் எங்களைப் பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கும். எல்லாக் கவலையும் பறந்து போயிடும்.

தினமும் காலையில் ரெண்டு மணிநேரம், மாலையில் ரெண்டு மணிநேரம் தோட்டத்துக்காகச் செலவழிக்கிறேன். எங்க தேவைக்கான பெரும்பாலான காய்கள் எங்க தோட்டத்திலேயே கிடைக்கிறதால், மார்க்கெட்டுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. நிறைய பூச்செடிகள் இருப்பதால் மகரந்தச் சேர்க்கை எளிதாக நடக்குது. அதனால் எங்க தோட்டத்தில் எப்போதும் காய்கறி விளைச்சலுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. காய்கறிக் கழிவுகளில் உரம், இயற்கை உரம், பஞ்சகவ்யா, தேமோர் கரைசல் எல்லாம் வீட்டிலேயே தயாரிச்சுக்கிறேன். அதுக்கு நேரமில்லாதவர்கள் நர்சரிகளில் வாங்கிப் பயன்படுத்தலாம். ஆத்ம திருப்தியுடன், ஆரோக்கியமும் கிடைக்குது” - உற்சாகமாகப் பேசும் உமா ஜெயராமன் காய்கறி விளைச்சலை அதிகரிப்பது, பூச்சித் தாக்குதலில் இருந்து செடிகளைப் பாதுகாத்தல் போன்ற தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறார்.

மகரந்தச் சேர்க்கையால் செழிக்கும் செடிகள்... மனதை நிறைக்கும் மாடித்தோட்டம்! - உமா ஜெயராமன்

மண் தயாரிப்பு

செம்மண், காயவைத்த மாட்டுச்சாணம், தென்னங்கழிவு இவை அனைத்தையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இத்துடன், வேப்பம் பிண்ணாக்கு ஒரு கைப்பிடி அளவு, இயற்கை உரம் சிறிதளவு கலந்து தொட்டியில் நிரப்ப வேண்டும். மண்கலவை நிரப்பிய தொட்டியில் உடனடியாக விதைகள் நடவு செய்யக் கூடாது. மண் கலவை நிரப்பிய ஒரு வாரத்துக்கு தண்ணீர் மட்டும் தெளித்து வர வேண்டும். அதன்பின், விதையோ அல்லது நாற்றையோ விதைத்துக்கொள்ளலாம்.

விதைத்தேர்வு

ஏற்கெனவே தோட்டம் வைத்திருப்பவர்கள் எனில், உங்கள் வீட்டில் விளைந்த காய்கறியை முற்றவிட்டு அதிலிருந்தே விதைகளைச் சேகரித்துக்கொள்ளலாம். அவ்வாறு சேகரிக்கும் விதைகளைச் சுத்தம்செய்து சாம்பலில் புரட்டி எடுத்து, டிஷ்யூ பேப்பரில் சுற்றிவைத்துவிட்டால் அடுத்த நடவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதிதாக செடி வளர்ப்பவர்கள் எனில், உங்கள் அருகிலிருக்கும் விதைப்பண்ணைகள், நர்சரிகள், ஏற்கெனவே தோட்டம் வைத்துப் பராமரித்து வருபவர்களிடம் நாற்றாகவோ, விதைகளாகவோ வாங்கிப் பயன்படுத்தலாம்.

சீசனுக்கு பெஸ்ட்

இந்த சீசனில் எல்லா விதமான நாட்டுக்காய்களுக்கும் விதைகள் நடவு செய்யலாம். கொடி படரும் அளவு இடம் இருக்கிறது என்பவர்கள் இந்த சீசனுக்குப் பாகற்காயைத் தேர்வு செய்யலாம்.

கொடி வகைகள் வளர்க்க, நல்ல அகலமான பை அல்லது தொட்டியைத் தேர்வு செய்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்திருக்கும் மண் கலவையைக் குழித்தட்டுகள் அல்லது பேப்பர் கப்களில் நிரப்பி, ஒரு கப்புக்கு ஒரு விதை அல்லது ஒரு குழிக்கு ஒரு விதை என்ற கணக்கில் பாகற்காய் விதைகளை விதைக்க வேண்டும். இதில் தினமும் தண்ணீரை ஸ்பிரே செய்து வரணும்.

மூன்றிலிருந்து ஐந்து நாள்களுக்குள் செடி துளிர்விட ஆரம்பிக்கும். இந்தப் பருவத்தில் குழித்தட்டிலிருந்து நாற்றை எடுத்து மண்கலவை நிரப்பிய பெரிய தொட்டிக்கு மாற்றிவிட வேண்டும். பேப்பர் கப்பில் விதைத்தவர்கள், பேப்பர் கப்பின் அடிப்பகுதியைப் பிரித்துவிட்டு, மண்கலவை நிரப்பிய தொட்டிக்கு நாற்றை மாற்றிவிட வேண்டும். வாரம் ஒரு முறை செடிக்கு இயற்கை உரங்கள் இடுவது அவசியம்.

செடியிலிருந்து சுருள் சுருளாகக் கொடி படர ஆரம்பிக்கும் போது, பாகற்காய் கொடியைப் பந்தலில் ஏற்றிவிட வேண்டும். 40-ம் நாளில் செடியில் பூ பூக்கத் தொடங்கும். இந்த நேரத்தில் செடியை பூச்சித் தாக்காமல் இருக்க, தேமோர் கரைசல், ஜீவாமிர்தக் கரைசல் ஏதேனும் ஒன்றைத் தண்ணீரில் கலந்து செடிகளில் ஸ்பிரே செய்யலாம்.

60-வது நாளில் காய்கள் காய்க்கத் தொடங்கிவிடும். காய்கள் செழித்து வந்ததும் அறுவடை செய்துகொள்ளலாம். முறையாகப் பராமரித்து வந்தால் அடுத்த எட்டு மாதங்களுக்கு அறுவடை செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பசுமை செழிக்க

ஜீவாமிர்தக் கரைசல்

கோமியம் - ஒரு லிட்டர்

மாட்டுச்சாணம் - ஒரு கிலோ

கடலை மாவு - 200 கிராம்

நாட்டுச்சர்க்கரை - 200 கிராம்

தண்ணீர் - இரண்டு லிட்டர்

மண் - ஒரு கைப்பிடியளவு

சிறுதானியங்கள் - ஒரு கைப்பிடி அளவு (முளைகட்ட வைத்து அரைத்துப் பயன்படுத்த வேண்டும்.)

மகரந்தச் சேர்க்கையால் செழிக்கும் செடிகள்... மனதை நிறைக்கும் மாடித்தோட்டம்! - உமா ஜெயராமன்

தயாரிப்பு முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் ஒரு வாளியில் சேர்த்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். வாளியின் வாய்ப்பகுதியை ஒரு துணியால் மூடி முடிச்சிட்டுக் கொள்ள வும். தினமும் மூன்று முறை மூன்று நாள்களுக்கு, வாளியில் கட்டப்பட்ட துணியை நீக்கி ஒரு குச்சியால் கடிகாரச் சுற்று முறையில் கலக்கிவிடவும். மூன்று நாள்களுக்குள் இதில் நுண்ணுயிரி பெருகியிருக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லிகிராம் ஜீவாமிர்தம் கலந்து செடிகளுக்கு ஸ்பிரே செய்தால், செடிகள் செழித்து வளரும்.

டிப்ஸ்

ஆட்டுப்புழுக்கையைக் காயவைத்து அரைத்துப் பொடியாக்கிக்கொள்ளுங்கள். 15 நாள்களுக்கு ஒரு முறை, ஒரு செடிக்கு 25 கிராம் என்ற அளவில் உரமாக இட்டால் செடிகள் செழித்து வளரும். தண்ணீர் அதிகம் ஊற்றினால், செடிகளுக்கு வேர் அழுகல் நோய் ஏற்படலாம். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க, செடி வளர்க்கும் பை அல்லது தொட்டிகளில் சில துளைகள் இட்டுக்கொள்ளுங்கள்.

பூச்சித் தாக்குதலில் இருந்து செடிகளைக் காக்க

நன்கு புளித்த தயிர் - அரை லிட்டர்

மிளகாய்த்தூள் - 100 கிராம்

மஞ்சள்தூள் - 50 கிராம்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

தண்ணீர் - 5 லிட்டர்

இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து செடிகளில் வாரம் ஒரு முறை ஸ்பிரே செய்து வந்தால் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism