Published:Updated:

உம்பளச்சேரி மாட்டின பரவலுக்கு வித்திட்ட பசுமை விகடன்! நெகிழும் உம்பளச்சேரி கிராம மக்கள்!

ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் உம்பளச்சேரி மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் உம்பளச்சேரி மாடுகள்

பாரம்பர்யம்

உம்பளச்சேரி மாட்டின பரவலுக்கு வித்திட்ட பசுமை விகடன்! நெகிழும் உம்பளச்சேரி கிராம மக்கள்!

பாரம்பர்யம்

Published:Updated:
ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் உம்பளச்சேரி மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் உம்பளச்சேரி மாடுகள்

யற்கை விவசாயிகள் மத்தியில் உம்பளச்சேரி மாடுகளுக்கு நாளுக்குநாள் மவுசு கூடிக்கொண்டே இருக்கிறது. காரணம், இந்தியாவில் உள்ள நாட்டின மாடுகளிலேயே உம்பளச்சேரி மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீரில்தான் வீரியமிக்க நுண்ணுயிர்கள் நிறைந்திருக்கின்றன. இதைக் கண்கூடாக உணர்வதால்தான், இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் இதை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.

உம்பளச்சேரி பசுக்களின் பாலில் சத்துகள் அதிகம். உம்பளச்சேரி காளைகள், உழவுக்கும் பாரம் இழுப்பதற்கும் சிறப்பானவை. இதுபோல் இன்னும் ஏராளமான சிறப்புகளைக் கொண்டவை. இத்தனை மகத்துவங்கள் நிறைந்திருந்தும் கூட, பசுமைப் புரட்சியின் வருகையால், காலப்போக்கில் நம் விவசாயிகள் சீமை மாடுகளின் மீது மோகம் கொண்டதால், உம்பளச்சேரி மாடுகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

நம்மாழ்வார் போன்றவர்கள் இதுகுறித்து மிகுந்த ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில்தான், இதனை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு, களத்தில் இறங்கியது பசுமை விகடன். இதன் பூர்வீக கிராமமான நாகப்பட்டினம் மாவட்டம், உம்பளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று, இம்மாடுகளின் மகத்துவங்களை விரிவாகப் பதிவு செய்தது.

உம்பளச்சேரி மாடுகள்
உம்பளச்சேரி மாடுகள்

10.06.2012 தேதியிட்ட இதழில் ‘உழவுக்கு ஏற்ற உம்பளச்சேரி மாடுகள்’என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து, இயற்கை விவசாயிகள் மத்தியில் உம்பளச்சேரி மாடுகளுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே இருக்கிறது. அக்கட்டுரை வெளியாகிப் பத்தாண்டுகள் உருண்டோடிய நிலையில், தற்போது 16-ம் ஆண்டுச் சிறப்பிதழுக்காக, மீண்டும் உம்பளச்சேரி, கொருக்கை, ஓரடி அம்பலம் உள்ளிட்ட கிராமங்களுக்குப் பயணித்தோம்.

நாகப்பட்டினம் - திருவாரூர் எல்லையோரங்களில் இக்கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் உம்பளச்சேரி மாடுகளைக் காண முடிந்தது. சாலையோரங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும் அதிக எண்ணிக்கையிலான உம்பளச்சேரி மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

வெட்டுக்குப் போன மாடுகள்

நம்மிடம் மிகுந்த நெகிழ்ச்சியோடு பேசிய, உம்பளச்சேரி மாடுகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஜானகிராமன், “உம்பளச்சேரி மாடுகளோட பூர்வீகம் இதுதான். ஆனால், பத்து வருஷத்துக்கு முன்னாடி, இந்த மாடுகளுக்கான மரியாதைங்கறது பரிதாப நிலையில தான் இருந்துச்சு. அதிக பாலுக்கு ஆசைப்பட்டு எங்க பகுதி விவசாயிகள்ல பெரும்பாலானவங்க, சீமை மாடுகள் வளர்க்க ஆசைப்பட்டாங்க. மற்ற பகுதி விவசாயிங்களும், இந்த மாடுகளை வாங்க ஆர்வம் காட்டல. இதனால் இங்க இருந்த மாடுங்க இறைச்சிக்காக வெட்டுக்கு போக ஆரம்பிச்சிது. திருச்சி, கரூர், மதுரை இதுமாதிரி இன்னும் பல ஊர்கள்ல இருந்தும் வியாபாரிகள் இந்த மாடுகளை அறுப்புக்கு வாங்கிக்கிட்டுப் போனாங்க. உம்பளச்சேரி மாடுகளோட மகத்துவங்களை அறிஞ்ச என்னை மாதிரியான சிலர், அதனால் மனசு நொந்துப் போயி கிடந்தோம்.

ஜானகிராமன்
ஜானகிராமன்

வாழ்வாதாரத்திற்குப் பெரும்துணை

இந்த நிலையிலதான் மிகப் பெரிய திருப்புமுனையா, 2012-ம் வருஷம் பசுமை விகடன்ல உம்பளச்சேரி மாடுகளைப் பத்தின கட்டுரை வெளியாச்சி. இந்த மாடுகளோட மகத்துவங்களைப் படிச்சிட்டு, பல மாவட்டங்கள்ல இருந்தும், நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டாங்க. இப்ப வரைக்கும்கூட அழைப்புகள் வந்துகிட்டே தான் இருக்கு. இயற்கை விவசாயத்துக்காகவும் ஜல்லிக்கட்டுக்காகவும் விரும்பி வாங்கிக்கிட்டு போறாங்க. இதனால் இங்கவுள்ள விவசாயிகளும் உம்பளச்சேரி மாடுகள் வளர்ப்புல ஆர்வமாயிட்டாங்க. அதிக விலை கிடைக்குறதுனால, இவங்களோட வாழ்வாதாரத்துக்கு இது பெருந்துணையா இருக்கு.

உழவு மாடு 70,000 ரூபாய்

கிடேரி கன்று 8,000 முதல் 15,000 ரூபாய், காளைக் கன்று 10,000 முதல் 20,000 ரூபாய்க்கு விலைப் போகுது. கன்றுடன் கூடிய பசு 30,000 ரூபாய்க்கு மேல விலைப் போகுது. பொலிக் காளை 25,000 ரூபாய் முதல் 55,000 ரூபாய், உழவு மாடு ஜோடி 55,000 முதல் 70,000 ரூபாய் வரை விலைப் போகுது. இந்தப் பகுதிகள்ல உள்ள விவசாயிகள்கிட்ட இருந்து நிறைய மாடுகள் விற்பனையாகுது. இதுமட்டுமல்லாம, கொருக்கை அரசு கால்நடை பண்ணையில இருந்தும் நிறைய உம்பளச்சேரி மாடுகள் விற்பனை ஆயிட்டு இருக்கு. சில நாள்களுக்கு முன்னாடி, இந்தப் பண்ணையில 6 காளைகள் ஏலம் விட்டாங்க. ஒவ்வொரு காளையும் 50,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை விலை போச்சு. இது மிகப்பெரிய மாற்றம். பசுமை விகடனால்தான் உம்பளச்சேரி மாடுகளோட மகிமை உலகம் முழுக்கப் பரவி, இதுக்கான மவுசு அதிகரிச்சிருக்கு. வெட்டுக்கு போயிக்கிட்டு இருந்த உம்பளச்சேரி மாடுகளுக்குப் பசுமை விகடனால்தான் மறுமலர்ச்சி ஏற்பட்டுருக்கு. இங்க இருந்து மாடுகளை வாங்கிக்கிட்டுப் போனவங்க, இதுங்களோட எண்ணிக்கையைப் பல மடங்கா பெருக்கி இருக்காங்க.

திண்டிவனத்துல ஒரு விவசாயி 5 வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு வந்து, 13 மாடுகள் வாங்கிட்டுப் போனாரு. இப்ப 60 மாடுகளாகப் பெருகியிருக்கு. மதுரையில இருந்து கணேசன்ங்கற விவசாயி, 15 பசு மாடுகளும், ஒரு காளையும் வாங்கிக்கிட்டு போனாரு. இதுமாதிரி இன்னும் ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லிக்கிட்டே போகலாம்’’ என்றார் உற்சாகமாக.

இந்திரா
இந்திரா

பாசமான மாடுகள்

அதிக எண்ணிக்கையில் உம்பளச்சேரி மாடுகள் வளர்த்து வரும் இந்திரா, “இப்ப, எங்க குடும்பத்துக்கு இதுதான் வாழ்வாதாரம். மாடுகளும் கன்னுக்குட்டிகளுமா சேர்த்து எங்கக்கிட்ட 32 இருக்கு. மாடுகள் விற்பனை மூலமா கிடைக்கக்கூடிய வருமானத்துல தான் எங்க ஜீவனம் நடக்குது. ஒரு வீடும் கட்டியிருக்கோம். உம்பளச்சேரி பசுவோட பால் ரொம்பவே சத்தானது. நல்லா சுவையாவும் இருக்கும். ஆனாலும் கூடக் கன்றுக்குட்டிகள் குடிச்சது போக, மீதி பாலைத்தான், எங்க வீட்டுத்தேவைக்குக் கறந்துக்குவோம். வெளியில விற்பனை செய்றதில்ல. தாய்ப்பால் குடிச்சி வளர்றதுனால தான் எங்களோட மாடுகள் நல்லா திடகாத்திரமா வளருது. நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் முடியுது. உம்பளச்சேரி மாடுகள் பொதுவாகவே மனிதர்கள்கிட்ட பாசமா இருக்கும். நல்லா அறிவாகவும் இருக்கும். எந்த இடத்துல நிக்க வைக்குறோமோ, அடுத்தடுத்த நாள்கள்ல, தன்னோட இடத்தை விட்டு நகராது. கயிறு போட்டுக் கூடக் கட்டி வைக்க வேண்டியதில்ல. பல கிலோமீட்டர் தூரம் மேய்ச்சலுக்குப் போனாலும்கூடத் தானாக வீடு தேடி வந்துடும். இந்த மாடுகளைப் பெண்கள்கூட எளிதா வளர்க்கலாம்’’ என்றார்.

தொடர்புக்கு, ஜானகிராமன், செல்போன்: 79044 25622.

ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் உம்பளச்சேரி மாடுகள்
ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் உம்பளச்சேரி மாடுகள்

வெள்ளை நிறம்தான் அடையாளம்

“உம்பளச்சேரி மாடுகளை மிக எளிதா அடையாளப்படுத்திக் கண்டுபிடிச்சிடலாம். நெத்தி வெள்ளை, நாலு கால் வெள்ளை, வால் வெள்ளை... இந்த மூணு அடையாளங்களும் கண்டிப்பா இருக்கும். அதாவது, நெத்தியில நட்சத்திர குறியீடு மாதிரி வெள்ளை நிறம் இருக்கும். நாலு கால்கள்லயும் குளம்பு பகுதிக்கு மேல வெள்ளை நிறத்துல வளையம் மாதிரி இருக்கும். வாலோட நுனிப்பகுதியில வெள்ளை நிறம் இருக்கும். உம்பளச்சேரி மாடுகளைத் தெற்கத்தி மாடு, மொட்டை மாடு, மோழை மாடு, தஞ்சாவூர் மாடுனு பல பெயர்கள்ல அழைப்பாங்க.

உம்பளச்சேரி மாடுகள்ல... வெண்ணா மாடு, ஆட்டுக்காரி மாடு, கணபதியான் மாடு, சூரியங்காட்டு மாடுனு பல உட்பிரிவுகள் உண்டு. எங்களோட முன்னோர்கள் இந்த உட்பிரிவுகளின் அடையாளங்களைத் துல்லியமா அடையாளபடுத்தியிருக்காங்க. ஆனால், இப்ப அந்தளவுக்கு அடையாளப்படுத்திச் சொல்லக்கூடியவர்கள் இங்க இல்ல. உம்பளச்சேரி கன்றுக்குட்டிகள் பிறக்கும்போது செம்பழுப்பு நிறத்துலதான் இருக்கும். அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு சாம்பல், வெள்ளை, கறுப்பு நிறமாக மாறிடும். சினையாக இருக்கும்போது, உடல் முழுவதுமே அடர் சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும். கன்று போட்டபிறகு தன்னோட இயல்பான நிறத்துக்கு வந்துடும். இதுமாதிரியான சிறப்புகள் வேற எந்த நாட்டுமாடுகளுக்கும் கிடையாது’’ எனப் பெருமிதப்படுகிறார் ஜானகிராமன்.

உம்பளச்சேரி மாடுகள்
உம்பளச்சேரி மாடுகள்

கிடைக்கு வரவேற்பு

கிடை சேர்ப்பாளர் வீரமணி, “உம்பளச்சேரி மாடுகள் வளர்க்கக்கூடியவங்க, மாசி மாசம் எங்ககிட்ட மாடுகளை ஒப்படைப்பாங்க. ஒரு மாட்டுக்கு 300 முதல் 500 ரூபாய் கொடுப்பாங்க. அடுத்த நாலஞ்சி மாசத்துக்கு இந்த மாடுகள் எங்க பொறுப்புல இருக்கும். நிறைய மாடுகளை ஒண்ணா சேர்த்து விவசாயிகளோட நிலத்துல கிடைப் போடுவோம். 400 மாடுகளை ஒருநாள் ராத்திரி முழுக்கக் கிடைப்போட, 2,000 ரூபாய் வாங்குவோம். கடந்த சில வருஷங்களா, மறுபடியும் கிடைக்கு வரவேற்பு அதிகரிச்சிக்கு. சீமை மாடுகள் வச்சிருக்குற விவசாயிகளும் உம்பளச்சேரி மாடுகளோட கிடையைத்தான் விரும்புறாங்க’’ என்றார்.

உம்பளச்சேரி காளை
உம்பளச்சேரி காளை

ஜல்லிக்கட்டுக் காளை

உம்பளச்சேரி உழவு மாடுகள், அதிக சேறு நிறைந்த நிலத்திலும் கூட நீண்ட நேரம் உழவு ஓட்டும். உம்பளச்சேரி காளைகள் வண்டி மாடுகளாகப் பழக்கப்படுத்தப்பட்டால், பல டன் பாரம் இழுக்கும். உம்பளச்சேரி மாடுகள், உருண்டு திரண்ட திமிலுடன் தோற்றமளிக்கின்றன. சமீபகாலமாக, ஜல்லிக்கட்டுக்கும் பழக்கப்படுத்தப்பட்டுப் போட்டிகளில் பங்கேற்பதால், வெளிமாவட்டங்களிலிருந்து பலர், இங்கு வந்து உம்பளச்சேரி காளைகளை வாங்கிச் செல்கிறார்கள்.

வீரமணி, கணேசன்
வீரமணி, கணேசன்

நூறு மாடுகளா பெருகிடுச்சி!

மதுரை மாவட்டம் உச்சிக்குளம் பகுதியில் உம்பளச்சேரி மாடுகள் வளர்த்து வரும் கணேசனிடம் பேசினோம், ‘‘அஞ்சி வருசத்துக்கு முன்னாடி, உம்பளாச்சேரிக்கு போயி, 16 கிடேரி, ஒரு பொலிக்காளை, ஒரு காளை கன்றுக்குட்டி வாங்கினேன். அடுத்து, உம்பளாச்சேரி நாட்டு மாட்டு பாலுக்கு ஆசைப்பட்டு, கன்றுடன் கூடிய, ரெண்டு கறவை மாடும் வாங்கிக்கிட்டு வந்தேன். இது நூறு மாடுகளா பெருகிடுச்சி. இதோட கழிவுகளை பயன்படுத்தி, 50 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன்’’ என்றார்.

தொடர்புக்கு- கணேசன்: 9626268377

உம்பளச்சேரி
உம்பளச்சேரி

உம்பளச்சேரி பெயர் காரணம்

“இந்தப் பகுதியில் இயற்கையாகவே ‘உப்பளப்புல்’ என்ற ஒரு வகையான புல் அதிகமாக வளர்ந்திருக்கும். இதுல அதிக உப்புத்தன்மையும் சத்துகளும் நிறைஞ்சிருக்கும். இதைச் சாப்பிடுறதுனாலதான் இந்த மாடுகள் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருக்கு. இந்தப் புல்லை ‘உப்பள் அருகு’னு சொல்வாங்க. இதுதான் உப்பளச் சேரி என்று மாறிக் கடைசியில் ‘உம்பளச்சேரி’ என மருவி வந்துடுச்சி. அதுவே எங்க ஊருக்கும், இந்தப் பகுதி மாட்டிற்கும் பெயராயிடுச்சி’’ என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism