Published:Updated:

`ஊரடங்கைப் பயன்படுத்தி விவசாயக் கிணறுல சாயக்கழிவை ஊத்திட்டாங்க!' - குமுறும் விவசாயிகள்

விவசாயக் கிணற்றில் சாயக்கழிவு
விவசாயக் கிணற்றில் சாயக்கழிவு

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான இரண்டு விவசாயக் கிணறுகளில் யாரோ மர்ம நபர்கள் சாயக்கழிவை கலந்துவிட, கிணற்றில் இருந்த தண்ணீரே சிவப்புக் கலருக்கு மாறிவிட்டது.

கரூர் மாவட்ட விவசாயிகளைப் பதற வைக்கும் விஷயம் சாயக்கழிவு பிரச்னை. கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு நானூறுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறை ஆலைகள் இயங்கி வந்தன. இதனால், கரூர் வழியாகப் பாயும் அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகளில் சாயக்கழிவுகளை ஆலைகள் திறந்துவிட்டன. இதனால், நிலத்தடி நீர் கெட்டுப்போனது. நிலமும் விஷமாக, பல இடங்களில் நீரின் உப்புத்தன்மை 18,000 டி.டி.எஸ் வரை போய் பயமுறுத்தியது.

விவசாயக் கிணற்றில் சாயக்கழிவு
விவசாயக் கிணற்றில் சாயக்கழிவு

இதனால் 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாழாக, கோர்ட்டு படியேறி அதற்குத் தடை வாங்கினார்கள் விவசாயிகள். இதனால், 300-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. இப்போது, 50-க்கும் குறைவான ஆலைகளே இயங்கி வருகின்றன. மறுசுழற்சி செய்து, கழிவை ஆலைகள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால், இந்தப் பிரச்னை கொஞ்சம் ஓய்ந்தது.

`அமைச்சருக்கு ஊரடங்கு உத்தரவு விதிவிலக்கா?!' - வெடிக்கும் சமூக ஆர்வலர்கள்!

ஆனால், மழைக்காலங்களில் சாயக்கழிவுகளை ஆறுகளில் கலந்துவிடும் கொடுமை தொடர்ந்து நடந்து வந்தது. இந்தச் சூழலில்தான், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்திலும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான இரண்டு விவசாயக் கிணறுகளில் யாரோ மர்ம நபர்கள் சாயக்கழிவை கலந்துவிட, கிணற்றில் இருந்த தண்ணீரே சிவப்புக் கலருக்கு மாறிவிட்டது.

விவசாயக் கிணற்றில் சாயக்கழிவு
விவசாயக் கிணற்றில் சாயக்கழிவு

கருர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சியில் வரும் மாங்காசோளிபாளையம் என்ற கிராமத்தில்தான், இப்படி கிணறுகளில் மர்ம நபர்கள் சாயக்கழிவைக் கலந்த சம்பவம் அரங்கேறி, சம்பந்தப்பட்ட விவசாயிகளைப் பதற வைத்திருக்கிறது.

இதுதொடர்பாக முத்துசாமி என்ற விவசாயிடம் பேசினோம். ``எங்க கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி, அம்மையப்பன், பழனியப்பன் வாரிசுதாரர்களுக்குச் சொந்தமான இரண்டு விவசாயக் கிணறுகளில், மர்ம நபர்கள் சாயக்கழிவு நீரை விவசாயப் பயன்பாட்டுக்குப் பயன்படும் கிணற்றில் கொட்டிச் சென்றுள்ளதால், சாயக் கழிவு நீராக காட்சியளிக்கிறது. இந்த இரண்டு கிணறுகளையும் நம்பி, 30 விவசாயிகள் பத்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செஞ்சுக்கிட்டு வர்றோம். இப்போ கோடைங்கிறதால, பெருசா நிலத்துல வெள்ளாமைப் போடலை. ஆனால், எங்க ஊர்ல நிலவும் குடிநீர் பஞ்சத்தால், அந்தக் கிணறுகளில் இருந்த நீர் குடிநீராகப் பயன்பட்டுச்சு.

முத்துசாமி (விவசாயி)
முத்துசாமி (விவசாயி)

ஆனால், கொரோனா பிரச்னையில் நாங்க எல்லோரும் ஊரடங்குல வீட்டுக்குள்ளேயே இருப்பதால், அதைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் யாரோ இப்படி கிணறுகளில் சாயக்கழிவை கலந்துட்டு போயிருக்காங்க. ஆத்தூர் கிராம நிர்வாக அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்பதால் சாயக்கழிவு நீரை அகற்றித் தர வேண்டும். சாயக்கழிவை இப்படி கிணறுகளில் கலந்தவர்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கணும். ஊரடங்கு காலத்திலும் சாயப்பட்டறையை இயக்கி, சாயக்கழிவை துணிச்சலாக இப்படி கிணறுகளில் கலந்தவர்களை சும்மா விடக் கூடாது தம்பி. விவசாயிகள் வயிற்றில் அடிப்பதே இவர்களுக்கு பொழப்பா போச்சு" என்றார், வேதனையோடு.

அடுத்த கட்டுரைக்கு