இந்தியாவில் சிறுதானியங்களுக்கென்று செயல்படும் ஆராய்ச்சி நிலையங்களில் ஹைதராபாத்தில் செயல்படும் இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழகம் (Indian Institute of Millets Research) முக்கியமானது. 50,000-க்கும் மேற்பட்ட சிறுதானிய ரகங்கள், சிறுதானிய ஆராய்ச்சி, சிறுதானிய மதிப்புக்கூட்டல், அதற்கான பயிற்சி, சிறுதானியம் சம்பந்தமான தொழிலில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டுவது என்று இயங்கி வருகிறது இந்தக் கழகம்.
இந்த ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் `நியூட்ரி செரல்ஸ் மல்ட்டி ஸ்டேக் ஹோல்டர்ஸ் மெகா கன்வென்ஷன் 3.0’ (Nutri-Cereals Multi-stakeholders Mega Convention 3.0) என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நேற்று (17.9.21) நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தொடக்க விழாவில் பேசிய மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ``சிறுதானிய உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. இந்தியா முதன்முதலில் சிறுதானியத்துக்கென 2018-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக கொண்டாடியது. அதன் காரணமாகவே 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
சிறுதானிய உணவு பொருள்களின் உற்பத்தி மேலும் பெருக வேண்டுமென்றால் இளைஞர்கள் தங்கள் உணவில் ஒருவேளையாவது சிறுதானியத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து பாதுகாப்பு என்பது சிறுதானியங்களில்தான் இருக்கின்றன. இந்திய வேளாண்மையின் உட்கட்டமைப்புக்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சம் கோடியை ஒதுக்கி வருகிறது .

அதேசமயம் எண்ணெய் பனை உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க முனைந்துள்ளோம். தெலுங்கனாவிலும் அதற்கு ஏற்ற காலநிலை உள்ளது. எனவே விவசாயிகள் இதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும்." என்றார். மேலும் பேசிய அவர், `` மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால், இது அடுத்த தலைமுறை விவசாயத்தில் முதலீடு செய்வதற்கும், விவசாயத்தில் ஈடுபடுவதற்கும் இந்தச் சட்டங்கள் உதவியாக இருக்கும். அதேசமயம் அதிக மகசூல் எடுக்கவும் இந்தச் சட்டங்கள் உதவியாக இருக்கும்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசியவுடன் சிறுதானிய உணவுப்பொருள்கள் இடம்பெற்ற அரங்குகளை பார்வையிட்டார். மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் விலாஸ் ஏ தொனபி (Vilasa A Tonapi) நன்றியுரை ஆற்றினார். முதன்மை விஞ்ஞானி எம்.இளங்கோவன், ஆராய்ச்சிக் கழகத்தில் சேகரித்து வைக்கப்பட்ட சிறுதானிய ரகங்களை காண்பித்தார். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளும் வழங்கப்பட்டன. நாடு முழுவதும் சிறுதானிய உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சிறுதானியங்கள் பற்றிய வெவ்வேறு தலைப்புகளில் வல்லுர்கள், விஞ்ஞானிகள் உரையாற்றுகின்றனர்.