Published:Updated:

உலக தேங்காய் தினம்: ``இந்தியாவில்தான் உலகின் 34% தேங்காய் சாகுபடி நடக்கிறது!'' - அமைச்சர் பெருமிதம்

உலக தேங்காய் தினம்
உலக தேங்காய் தினம்

``தென்னை வளர்க்கும் மற்ற நாடுகளைவிட இந்தியாவின் தென்னை மர வளர்ப்பிற்கான பரப்பளவு குறைவே என்றாலும், தேங்காய் சாகுபடியில் நாம்தான் முன்னிலை வகித்துக்கொண்டிருக்கிறோம்." - வேளாண் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இன்று (செப்டம்பர் 2) உலக தேங்காய் தினம். உலகெங்கிலும் தென்னை சாகுபடி செய்யும் நாடுகள் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 2-ம் தேதியை உலக தேங்காய் தினமாக கடைபிடித்து வருகின்றன. தென்னை மரத்தின் பலன்கள், அதன் மூலம் விவசாயிகள் அடையக்கூடிய லாபம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே வருடந்தோறும் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

`கொரோனா பெருந்தொற்றுக்கிடையே பாதுகாப்பை உள்ளடக்கிய, நெகிழ்திறன் மற்றும் நிலையான தென்னை சமூகத்தை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை நடத்தியது. தவிர, இந்த வருடத்தின் உலக தென்னை தினத்தை, 75- வது சுதந்திர தின நினைவாக `ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்' திட்டத்துடன் இணைத்துள்ளனர்.

நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர்
``தென்னை மரத்திற்கான சிறந்த நீர் மேலாண்மை முறை இதுதான்!" - விளக்கும் வேளாண் அதிகாரி

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த வருடத்தின் தேங்காய் தின விழா, ஆன்லைனில் நடைபெற்றது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விழாவைத் துவக்கி வைத்துப் பேசுகையில், ``நம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் தேங்காய் செல்வாக்கான இடத்தில் இருக்கிறது. தென்னை வளர்க்கும் மற்ற நாடுகளைவிட இந்தியாவின் தென்னை மர வளர்ப்பிற்கான பரப்பளவு குறைவே என்றாலும், தேங்காய் சாகுபடியில் நாம்தான் முன்னிலை வகித்துக்கொண்டிருக்கிறோம். 2020-21 காலத்தில் இந்தியாவின் தேங்காய் உற்பத்தி 21,207 மில்லியன் கொப்பரைகள். இது உலகளாவிய உற்பத்தியில் 34%-க்கும் மேல் ஆகும். சந்தையில் எத்தனை புதிய பொருள்கள் விற்பனைக்கு வந்தாலும், தேங்காய் தொடர்பான தொழில்கள் எண்ணிக்கையில் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. தென்னை விவசாயிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது'' என்றார்.

இவரைத் தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை அமைச்சர்கள் ஷோபா கரண்லாஜே, கைலாஸ் செளத்திரி சிறப்புரையாற்ற, வேளாண், கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறையின் செயலாளர் சஞ்சய் அகர்வாலும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும் மாவட்ட ஆட்சியாளருமான ராஜ்பீர் சிங் உரையாற்றினார்கள். இந்தக் கருத்தரங்கில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் மூத்த அதிகாரிகள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், தென்னை சார்ந்த தொழில் முனைவோர்கள், நூற்றுக்கணக்கான தென்னை விவசாயிகளும் கலந்துகொண்டார்கள். கருத்தரங்கின் இறுதியில் தென்னையின் பூச்சி மேலாண்மையில் சமீபத்தில் நடந்த முன்னேற்றங்கள் பற்றியும் மதிப்புக்கூட்டப்பட்ட தேங்காய் நீர் பொருள்களுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

பாலசுதாகரி
பாலசுதாகரி

தேங்காய் தினம் குறித்து நம்மிடம் தென்னை வளர்ச்சி வாரியத்தின் தமிழ்நாடு மண்டல இயக்குநர் (பொறுப்பு) டி.பாலசுதாகரி பேசுகையில், ``தென்னை சாகுபடியில் முன்னோடியாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. தென்னை வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் செயல்படுத்தி வருகிறோம். இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் '' என்று கேட்டுக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு