Published:Updated:

கைகளால் பெருக்கத் தேவையில்லை... வந்துவிட்டது நிலத்தில் கற்களை நீக்கும் கருவி!

கற்களை நீக்கும் கருவி
பிரீமியம் ஸ்டோரி
கற்களை நீக்கும் கருவி

கருவி

கைகளால் பெருக்கத் தேவையில்லை... வந்துவிட்டது நிலத்தில் கற்களை நீக்கும் கருவி!

கருவி

Published:Updated:
கற்களை நீக்கும் கருவி
பிரீமியம் ஸ்டோரி
கற்களை நீக்கும் கருவி

விவசாயத்தில் முக்கியமான ஓர் வேலை என்றால் அது உழவுதான். உழவு செய்யாமல் நிலத்தில் உணவு உற்பத்தி என்பது மிகவும் கடினம். முன்பெல்லாம் மழை பெய்துவிட்டால் மாடுகளைப் பூட்டி ஏர் கலப்பை மூலம் உழவு ஓட்டி விடுவார்கள். டிராக்டர்களின் வருகைக்குப் பிறகு உழவு இன்னும் எளிதாகிவிட்டது. டிராக்டர் உழவிலும் சில நிலங்களில் டிராக்டர் ஓட்ட வருவதற்கே மிகவும் தயங்குவார்கள். அது என்னமாதிரி நிலம் என்றால் கற்கள், பாறைகள் நிறைந்த நிலங்கள்தான். குறிப்பாக, தரிசு நிலங்களில், மலைப்பாங்கான பகுதிகளில் கற்கள் அதிகமாக இருக்கும்.

டிராக்டருடன் இணைக்கப்பட்ட கற்களை நீக்கும் கருவி
டிராக்டருடன் இணைக்கப்பட்ட கற்களை நீக்கும் கருவி

இதுபோன்ற நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டுமா என்று நினைத்து சும்மா போட்டு வைத்திருப்பவர்கள் நிறைய பேர். இந்தக் கற்களை அப்புறப் படுத்தினால் அந்த மாதிரி நிலத்திலும் எளிதாக விவசாயம் செய்யலாம். பலர் ஆட்களை வைத்து நிலங்களிலிருந்து இந்தக் கற்களை நீக்குகிறார்கள். ஆனால், ஆட்கள் கிடைப்பது தற்போது பெரிய சவாலாக உள்ளது. இந்தக் கற்களை அப்புறப்படுத்துவதற்கென்றே பிரத்யேக கருவி உண்டு. இதற்குப் பெயர் கல் நீக்கும் கருவி (Stone Remover Machine). இதை டிராக்டரில் இணைத்து உழவு ஓட்டுவது போன்றே நிலத்தில் ஓட்ட வேண்டும். இப்படி ஓட்டும்போதே நிலத்திலுள்ள கற்களைத் தனியாகப் பிரித்து எடுத்துவிடும்.

நிலத்தில் கருவி செயல்படும் விதம்
நிலத்தில் கருவி செயல்படும் விதம்


இக்கருவியை நிலத்தில் பயன்படுத்துவதற்கு முன் நிலத்தை உழுது காய விட்டுவிட வேண்டும். மண் நன்கு உலர்ந்த பின் டிராக்டரில் இணைத்து இக்கருவியை இயக்க வேண்டும். இந்தக் கருவியை இயக்குவதற்கு 40-50 ஹெச்.பி (HP) உள்ள டிராக்டரைத்தான் பயன்படுத்த வேண்டும். டிராக்டரில் இரண்டு வால்வு கட்டாயம் இருக்க வேண்டும். இக்கருவியில் நிமிடத்துக்கு 12-16 முறை சுழலும் வகையில் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது (Conveyer Chain). இது கீழிருந்து மேல்நோக்கி சுழல்கிறது. அப்படி செல்லும்போது இடைப்பட்ட சந்தின் வழியாக மண் கீழே விழுந்துவிடுகிறது. கற்கள் மட்டும் மேலே சேகரிப்புத் தொட்டியில் விழுகின்றன.

நிலத்தில் கருவி செயல்படும் விதம்
நிலத்தில் கருவி செயல்படும் விதம்

இதன் மூலம் 1 இன்ச் முதல் 5 இன்ச் அளவு வரையுள்ள கற்கள் எடுக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 1 அடி ஆழத்தில் (25 செ.மீ) இருக்கும் கற்களையும் எடுக்க முடியும். இவ்வாறு சேகரிக்கப்படும் கற்கள் தொட்டியில் சேகரமாகும். தொட்டி நிறைந்தவுடன் ஒவ்வொரு முறையும் வேறோர் இடத்தில் கொண்டு சென்று கொட்டுவதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஹைட்ராலிக் பம்ப் உதவியுடன் லிப்ட் போன்று கற்களை மேலே கொண்டு சென்று மற்றொரு டிராக்டரின் டிரைலரில் கொட்டி வெளியே அனுப்ப முடியும். இதன் மூலமாக ஏக்கருக்கு 3 மணி முதல் 5 மணி நேரத்தில் நிலத்திலுள்ள கற்களை எளிதாக எடுத்துவிட முடியும். இதனால் வேலை ஆட்கள் தேவை மற்றும் பணச்செலவு 80 சதவிகிதம் குறையும். இந்தக் கருவியைக் கண்டுபிடித்தவர் ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த நந்தகுமார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.

 நந்தகுமார்
நந்தகுமார்

“மஞ்சள் அறுவடை செய்யும் கருவியிலிருந்துதான் இந்தக் கருவியை வடிமைச்சோம். மஞ்சளுக்கு வருஷம் ஒருமுறைதான் அறுவடை வேலை. மத்த நேரங்கள்ல சும்மா தான் இருக்கும். இதையே ஏன் மத்த வேலை களுக்குப் பயன்படுத்தக் கூடாதுன்னு ஒரு விவசாயி சொன்ன யோசனைதான் இந்தக் கருவி. அதுலயே சில பல மாற்றங்களைச் செய்து இந்தக் கருவியை உருவாக்கியிருக்கோம். இதிலுள்ள சுழலும் அமைப்பு (Conveyer Chain) 250 மணி நேரம் ஓடும் திறன் கொண்டது. அதுவரை தேய்மானம் இருக்காது. நன்கு பராமரித்தால் 300 மணி நேரத்துக்கு மேல் ஓடும். இந்தக் கருவியின் சிறப்பம்சமே சேகரிக்கப்படும் கற்களை ஹைட்ராலிக் முறையில் எளிதாக அப்புறப்படுத்த முடியும் என்பதுதான். இதை உழவு ஓட்டிய நிலத்தில் பயன்படுத்துவதால் சுலபமாக இயங்கும். உழவு ஓட்டிய நிலத்தில் உள்ள கற்கள், களைகளை எளிதாக அப்புறப்படுத்த முடியும். இதன் விலை 3,50,000 ரூபாய். விவசாயிகள் குழுவாக இணைந்து இதை வாங்கிப் பயன் படுத்தலாம். வேளாண்துறை சார்பில் உள்ள குழுவில் இணைந்தும் விவசாயிகள் பயன்பெறலாம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நிலத்தில் கருவி செயல்படும் விதம்
நிலத்தில் கருவி செயல்படும் விதம்
கற்களை நீக்கும் கருவி
கற்களை நீக்கும் கருவி

இதுவரை பசுமை விகடனில் 11 இதழ்களில் கருவிகள் பற்றி எழுதியிருக்கிறேன். ஆங்கிலம் படிக்கும் வாசகர்கள் மட்டுமே அறிந்திருந்த என்னைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பசுமை விகடனையே சேரும். இதன்மூலம் எண்ணற்ற விவசாயிகள், கருவிகள் பற்றித் தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பின் மூலம் தெரிந்து கொண்டேன். விவசாயத்தின் எதிர்காலம் கருவிகளின் கைகளில்தான் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு விவசாயிகள் அதற்கேற்றவாறு கருவிகளைப் பயன்படுத்தவும், அதைப் பராமரிக்கவும் தெரிந்துகொள்வது அவசியம்.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு

இந்தத் தொடரை பசுமை விகடனில் எழுதுவதற்கு வாய்ப்பளித்த ஆசிரியர் குழுவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன், மைராடா அழகேசன், சேவா விவேகானந்தன் ஆகியோருக்கும் நன்றி. இன்னொரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்...

முற்றும்.