Published:Updated:

காளான், பனீர், பால்கோவா, நாட்டுக்கோழி... மாதம் ரூ. 1,58,000

மதிப்புக்கூட்டல்

பிரீமியம் ஸ்டோரி
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ளது கோவிந்த நகரம் கிராமம். இங்கு 6 ஏக்கர் பரப்பளவில் காளான் உற்பத்தி, பால்கோவா தயாரிப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த பண்ணையம் இருக்கிறது. இதில் மாத வருமானம் எடுத்து நல்ல லாபம் பார்த்து வருகிறார் சௌமியா.

“நாலு வருஷத்துக்கு முன்னாடி, காளான் பண்ணை ஆரம்பிக்க ஆசைப்பட்டு, அதுக்கான பயிற்சி எடுத்துக்கிட்டேன். பயிற்சிக்குப் பிறகு, எங்களுக்குச் சொந்தமான 3 சென்ட் இடத்துல கூரை செட் அமைச்சுச் சிப்பிக் காளான் பண்ணை ஆரம்பிச்சேன். இப்ப காளான் மட்டுமல்லாம பால்கோவா, பனீர், நாட்டுக்கோழினு ஒருங்கிணைந்த பண்ணை யமா மாத்தியிருக்கேன். வெளிநாட்டுல ஹோட்டல் வெச்சிருந்த என் கணவர், ஹோட்டலை நண்பர் பராமரிப்புல விட்டுட்டு, எனக்காக ஊருக்கு வந்து, பண்ணையில உற்பத்தி செய்ற பொருள்களை மார்க்கெட்டிங் பண்ணிகிட்டு இருக்குறார்’’ எனப் பேச ஆரம்பித்தார் செளமியா.

காளான் பெட்கள்
காளான் பெட்கள்

‘‘காளான் பண்ணை ஆரம்பிக்குறப்ப நிறைய சவால்கள் இருந்துச்சு. உதவிக்கு யாரும் இருக்க மாட்டாங்க. நானே எல்லாத்தையும் பார்த்துக்குவேன். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும், போகப் போகப் பழக்கமாகிடுச்சு. இப்ப 3 ஷெட் அமைச்சுச் சிப்பிக் காளான் உற்பத்தி செய்றேன். காளான் வளரக்கூடிய வைக்கோல் நிறைத்த பையை ‘பெட்’னு சொல்வாங்க. அதை 3 அடுக்குகளா அமைச் சிருக்கேன். முதல் ஷெட்ல 1,500 பெட்கள், 2-வது ஷெட்ல 350 பெட்கள், 3-வது ஷெட்ல 600 பெட்கள் இருக்குது. ஒரு பெட்ல இருந்து 1 கிலோ காளான் எடுக்க முடியும். தேனி மாவட்டத்துல விவசாய நிலங்கள் அதிகம். அதனால வைக்கோல் தட்டுப்பாடு இல்லாம கிடைக்குது. காளான் விதைகளை ஈரோட்டுல இருந்து வாங்குறேன். 300 கிராம் பாக்கெட் 40 ரூபாய். 2 பெட்டுக்கு ஒரு பாக்கெட் விதை போதும். தினமும் ரெண்டு வேளை பெட்மேல தண்ணி தெளிக்கணும். கூரை ஷெட்டை எப்பவும் குளிர்ச்சி யாகவும் இருட்டாகவும் இருக்கிற மாதிரி பராமரிக்கணும். அப்பத்தான் காளான் வெள்ளை யாக் கிடைக்கும்.

நாட்டுக்கோழிகளுக்குத் தீவனம்
நாட்டுக்கோழிகளுக்குத் தீவனம்

பெட் அமைச்சு 21-வது நாள்ல இருந்து அடுத்த 20 நாள்கள் வரை 3 தடவை ஒரு பெட்ல காளான் எடுக்க முடியும். நான் சுழற்சி முறையில எல்லா பெட்கள்ல இருந்தும் தினமும் 30 கிலோ காளான் எடுக்குறேன். மாதம் 900 கிலோ கிடைக்குது. 150 கிராம் பாக்கெட் போட்டு விற்பனை செய்றேன். மொத்தமா வாங்குற கடைகளுக்கு ஒரு பாக்கெட் 30 ரூபாய்க்குக் கொடுக்குறோம். அந்த விலையில கிலோவுக்கு 195 ரூபாய் கிடைக்கும். நாங்க சில்லறை விற்பனை செய்யும்போது பாக்கெட் 40 ரூபாய்னு விற்பனை செய்றோம். எங்க பண்ணையில வந்து வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு 35 ரூபாய்க்குக் கொடுக்குறோம். மொத்தத்துல சராசரியா ஒரு கிலோ காளானுக்கு 200 ரூபாய் கிடைக்குது. வைக்கோல், விதை, பெட் அமைக்கத் தேவையான பிளாஸ்டிக் பை, தண்ணீர், ஆள்கூலி, காளான் பாக்கெட்னு மொத்தம் 100 ரூபாய் செலவானாலும், 100 ரூபாய் நம்ம கையில லாபமா நிற்கும். ஆக, மாசம் 900 கிலோவுக்குச் செலவுப் போக 90,000 ரூபாய் லாபமா கிடைக்குது” என்றவர் நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிப் பேசத் தொடங்கினார்.

காளானுடன் சௌமியா-சதீஸ் தம்பதி
காளானுடன் சௌமியா-சதீஸ் தம்பதி

“10 கோழிகள் எப்பவும் எங்க பண்ணையில இருக்கும். காளான் வாங்க வர்றவங்க முட்டைகளையும் கேட்க ஆரம்பிச்சாங்க. ‘அட இதையும் தொழிலா பண்ணலாமே’னு ஐடியா வந்துச்சு. அது விஷயமா விசாரிக்க ஆரம்பிச்சோம். அப்பதான், நாட்டுக்கோழி முட்டைகளைவிட, குஞ்சுகளுக்கு டிமாண்டு இருக்குறது தெரிஞ்சது. உடனே, சந்தையில நாட்டுக்கோழிகளை வாங்கினேன். இப்ப 5 நாட்டுச் சேவல்கள், 80 நாட்டுக்கோழிகள் இருக்கு. பண்ணை முழுக்கச் சுத்தித் திரியுற கோழிக, எங்கயாவது முட்டைகளை வெச்சிடும். அதைத் தேடி கண்டுபிடிச்சு எடுக்கணும். முட்டைகளைப் பொரிக்க வெக்க, குடும்ப நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்த இன்குபேட்டரை 60,000 ரூபாய் கொடுத்து வாங்குனேன். அதுல 500 முட்டைகள் வரைக்கும் பொரிக்க வைக்க முடியும். பொரிச்சு ஒருநாளே ஆன கோழிக்குஞ்சு 80 ரூபாய்க்கும், ஒரு மாசம் வளர்ந்த கோழிக்குஞ்சு 140 ரூபாய்க்கும் விற்பனை செய்றேன். கோழிகளுக்கான தீவனம் கடைகள்ல வாங்கிக்குவேன். 50 கிலோ மூட்டை 1,400 ரூபாய். மாசம் ரெண்டு மூட்டைத் தீவனம் தேவைப்படும். ஒருநாள், ஒரு மாசம் ஆன 300 குஞ்சுகளை விற்பனை செய்றது மூலமா மாசத்துக்கு 24,000 ரூபாய் கிடைக்குது. இதுல தீவனத்துக்கு 2,800 ரூபாய், மத்த செலவுக்கு 1,200 ரூபாய்னு வெச்சுகிட்டாலும் 4,000 ரூபாய் செலவு. 20,000 ரூபாய் லாபமா நிக்கும்’’ என்ற செளமியா, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பால்கோவா, பனீர் உற்பத்தி பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கறவை மாடுகள்
கறவை மாடுகள்

டிரிங்கிங் சிஸ்டம்!

“சின்ன வயசுல இருந்தே மாடுக மேல பிரியமா இருப்பேன். ஆனா, ‘மாடு வாங்கினா அதைப் பராமரிக்குறது ரொம்பக் கஷ்டம். பால் மூலமாக லாபமும் கிடைக்காது’னு பலரும் என்னைப் பயமுறுத்திக்கிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல அதையெல்லாம் பொருட்படுத்தாம, ரெண்டு பால் மாடு வாங்குனேன். பிறகுதான் எல்லோரும் சொன்னது உண்மைனு தெரிஞ்சது. மாட்டை மேய்ச்சலுக்குக் கொண்டு போறது, தண்ணீர் காட்டுறது’னு மாட்டைக் கவனிக்கத் தனியாக ஒரு ஆள் தேவைப்பட்டுச்சு. அப்பதான், ‘டிரிங்கிங் சிஸ்டம்’ பத்தித் தெரிஞ்சது. அதை அமைச்சோம். இப்ப, தொட்டியில இருந்து பைப் மூலமா, மாட்டுக் கொட்டகைக்குத் தண்ணி வந்திடும். மாடு எவ்வளவுதான் தண்ணீர் குடிச்சாலும் தீராது. தொட்டியில தண்ணி இருந்துகிட்டே இருக்கும். இந்த ‘டிரிங்கிங் சிஸ்டம்’ எங்களுக்குப் பயனுள்ளதா இருக்குது. அதை அமைக்க 30,000 ரூபாய் செலவாச்சு.

கோழிக்குஞ்சுகள், இன்குபேட்டர்
கோழிக்குஞ்சுகள், இன்குபேட்டர்

தீவனத்துக்காக, ‘தாய்லாந்து சூப்பர் நேப்பியர்’ புல்லை 3 ஏக்கர் நிலத்தில நடவு பண்ணினோம். வாரம் ரெண்டு தண்ணீர் கொடுத்தா போதும். 70 நாள்ல அறுவடை செய்யலாம். சுழற்சி முறையில புல்லை அறுத்து மாடுகளுக்குக் கொடுப்பேன். கூடவே, கரும்பு மாதிரி இருக்குற அதோட கரணையை ஒண்ணு 80 காசுனு விற்பனையும் செய்றோம். இப்படி ஒருவழியா தண்ணீர், தீவனப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, இன்னும் கொஞ்சம் மாடுகளை வாங்குனோம். இப்போ எங்ககிட்ட 14 பால் மாடுக இருக்குது. அதுங்க மூலமா தினமும் சராசரியா 70 லிட்டர் பால் கிடைக்குது. ஊர் மக்கள் பண்ணைக்கே வந்து பால் வாங்கிட்டுப் போவாங்க” என்றவர் பால்கோவா பற்றிப் பேசினார்.

குழந்தையுடன்
குழந்தையுடன்

ஊரடங்கு நேரத்தில் உதித்த யோசனை

“கொரோனா ஊரடங்கு ஆரம்பிச்ச நேரத்துல பால் விற்பனையாகாம தேங்கிடுச்சு. அப்பதான் ‘பால்கோவா செய்யலாம்’ங்கிற யோசனை வந்துச்சு. பால்கோவா செஞ்சு எங்க ஊர்ல இருக்கச் சின்ன பெட்டிக் கடைகளுக்குக் கொடுத்தேன். கடைகள்ல இருந்து ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. இப்ப பெரும்பாலும் பாலை விக்கிறதில்ல. பால்கோவா செய்ய 65,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு மிஷினை வாங்கியிருக்கோம். கூடவே, பனீரும் தயார் பண்றோம். ஒரு கிலோ பால்கோவா தயாரிக்க 4 லிட்டர் பால் வேண்டும். ஒரு கிலோ பால்கோவா 300 ரூபாய். அதைத் தயாரிக்கப் பால், சர்க்கரை, நெய், மின்சாரம், கேஸ் செலவு 180 ரூபாய் ஆகும். அதுபோக கிலோவுக்கு 120 ரூபாய் லாபமா கிடைக்கும். தினமும் 40 லிட்டர் பாலை பால்கோவா தயாரிக்கப் பயன் படுத்துறோம். தினமும் 10 கிலோ வீதம் மாசம் 300 கிலோ பால்கோவா கிடைக்குது. அதுமூலமா 36,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது.

தீவனப்புல்
தீவனப்புல்

அதே மாதிரி ஒரு லிட்டர் பாலிலிருந்து 200 கிராம் பனீர் தயாரிக்கலாம். தினமும் 30 லிட்டர் பாலை பனீர் தயாரிப்புக்குப் பயன்படுத்துறோம். அதனால தினமும் நாலு கிலோ பனீர் கிடைக்குது. ஒரு கிலோ பனீர் 350 ரூபாய். இதைத் தயாரிக்கப் பால், வினிகர், கேஸ் செலவு 250 ரூபாய் ஆகிடும். அதுபோக கிலோவுக்கு 100 ரூபாய் லாபமாக் கிடைக்கும். மாசம் 120 கிலோ பனீர் மூலமா 12,000 ரூபாய் வருமானமாக் கிடைக்குது. காளான், பால்கோவா, பனீர் இவற்றாஇத் தயாரிக்குறது என்னோட பொறுப்பு. அதைக் கடைகளுக்கு எடுத்துட்டுப் போய் விற்பனை செய்ய வேண்டியது என் கணவர் பொறுப்பு’’ என்ற செளமியாவைத் தொடர்ந்து அவர் கணவர் சதீஸ் பேசத் தொடங்கினார்.

காளான் கொட்டகை
காளான் கொட்டகை

தரமே தாரக மந்திரம்

‘‘ ‘காளான், பால்கோவா, பனீர் ஏற்கெனவே கடைகள்ல இருக்கக்கூடிய பொருள்கள்தான். சிறியது முதல் பெரியது வரை பல நிறுவனங்கள் பல வருஷமா விற்பனை சந்தையில இருக்காங்க. அவங்களுக்கு மத்தியில நாம எப்படி ஜெயிக்கப்போறோம்’னு ஆரம்பத்துல பயமா இருந்துச்சு. ஆனா, தரமான பொருள்களை மக்கள் எப்பவும் விரும்புவாங்க. அந்த நம்பிக்கையிலதான் இறங்குனோம். அதேபோல, எங்க பண்ணையில தயாரிக்கிற பொருள்களுக்குத் தேனி மக்கள் நல்ல வரவேற்பைக் கொடுக்குறாங்க. பக்கத்துல இருக்கக் கிராம மக்கள், நேரடியா பண்ணைக்கே வந்து பொருள்களை வாங்கிட்டுப் போறாங்க. நாங்க சிறிய அளவுலதான் உற்பத்தி செய்றோம். ஆனா, எந்தச் சூழலிலும் தரத்தை விட்டுக்கொடுக்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கோம். அது மட்டுமே எங்க வெற்றிக்குக் காரணம்” என்றவர் நிறைவாக,

பால்கோவா தயாரிப்பு
பால்கோவா தயாரிப்பு

உழைப்புக்கான பரிசு

‘‘தனி ஆளா நின்னு காளான், நாட்டுக்கோழி, மாடுகள், பனீர், பால்கோவானு எல்லாத்தையும் செளமியாதான் கவனிச்சுகிட்டு வர்றாங்க. வெளிப்படையா சொல்லணும்னா என்னால இத்தனை வேலைகளையும் செய்ய முடியாது. மாதம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல இன்னிக்கு லாபம் வருதுன்னா, அதுக்குப் பின்னாடி எங்க கடினமான உழைப்பு இருக்குது. இது 4 வருஷ உழைப்பு. கடன் வாங்கித்தான் எல்லாம் பண்ணினோம். இப்ப நல்ல லாபம் கிடைக்குது. அடுத்தகட்டமாக, பெரிய அளவுல நாட்டுக்கோழிப் பண்ணை ஆரம்பிக்கப் போறோம். அதுவும் நல்லபடியாக நடக்கும்னு நம்புறோம்” என்று விடை கொடுத்தார் புன்னகையோடு.

தொடர்புக்கு, சதீஸ்,செல்போன்: 63807 76758/63790 10819

காளான், பனீர், பால்கோவா, நாட்டுக்கோழி... மாதம் ரூ. 1,58,000

அனுபவமே சிறந்த ஆசான்!

‘‘பொதுவா பத்திரிகையில கட்டுரையைப் படிச்சவுடனே இதுல சொல்ற லாபம் நமக்கும் கிடைக்கும்னு பெரும்பாலும் நினைக்குறாங்க. ஆனா, அது ஒரே நாள்ல கிடைச்சிடாது. காளான் பண்ணை வெச்சுட்டு 3 வருஷம் ரொம்பக் கஷ்டப்பட்டோம். பல பிரச்னை. 50 பண்ணைக்கு மேல போய்ப் பார்த்துட்டு வந்தோம். ஆனா, அங்க என்னதான் கத்துகிட்டாலும் அதுக்குப் பிறகு, நாம செயல்படுத்தும்போது கிடைக்குற அனுபவம்தான் அதிகம் கத்துக்கொடுக்குது. காளான் பண்ணையை மூடிடலாமானு கூட ஒரு கட்டத்துல நினைச்சேன். ஆனா, இன்னிக்கு அதுதான் மாசம் 90,000 ரூபாய் லாபம் கொடுக்குது. அதுக்கு 3 வருஷம் ஆச்சு. விவசாயமோ, விவசாயம் சார்ந்த தொழிலோ எதுவா இருந்தாலும் பொறுமையும் உழைப்பும் முக்கியம். அதுக்குப் பிறகுதான் லாபம் கிடைக்கும்ங்கிறதை மனசுல வெச்சுக்கணும்’’ என்கிறார் செளமியா.

காளான், பனீர், பால்கோவா, நாட்டுக்கோழி... மாதம் ரூ. 1,58,000

அன்பார்ந்த வாசகர்களே...

‘காளான், பனீர், பால்கோவா, நாட்டுக்கோழி... மாதம் ரூ.1,58,000 என்ற கட்டுரை இந்த இதழில் அட்டைப்பட கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. அந்தப் பண்ணையை வாசகர்கள் நேரலையில் பார்வையிடலாம். 6.12.2020 அன்று காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை பண்ணையிலிருந்து நேரலை நிகழ்ச்சி நடைபெறும். அதில் கலந்துகொண்டு உங்கள் சந்தேகங்களைச் சம்பந்தப்பட்ட பண்ணையாளரிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

இந்த லிங்க் மூலமும் கட்டணம் செலுத்தலாம் : https://bit.ly/2ULAoJU மேலும் விவரங்களுக்கு வாட்ஸ் அப் எண் : 97909 90404

காளான், பனீர், பால்கோவா, நாட்டுக்கோழி... மாதம் ரூ. 1,58,000

கட்டணம் செலுத்த இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு