Published:Updated:

அரிசி, அவல்... மதிப்புக்கூட்டினால் மகத்தான வருமானம்!

ஸ்ரீகிருஷ்ண பெருமாளுடன் குழு விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீகிருஷ்ண பெருமாளுடன் குழு விவசாயிகள்

மதிப்புக்கூட்டல்

யற்கை விவசாயம் மூலம் விளைந்த நெல்லுக்கு அதிக விலை கிடைக்கிறது. இருந்தாலும் நெல்லை அப்படியே விற்பனை செய்வதைவிட மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் இரட்டிப்பு லாபம் ஈட்டலாம் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீகிருஷ்ண பெருமாள்.

இவர் தன்னுடன் ஒன்பது விவசாயிகளை இணைத்துக்கொண்டு ‘வளங்குன்றா அங்கக நெல் வேளாண்மைக் குழு’ என்ற பெயரில் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளார். அந்தக் குழு மூலமாக 25 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் பாரம்பர்ய நெல் உற்பத்தி செய்து அதை அரிசி மற்றும் அவலாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

அரிசி, அவல்... மதிப்புக்கூட்டினால் மகத்தான வருமானம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓர் அதிகாலை நேரத்தில் புத்தளத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ண பெருமாளை அவரது வயலில் சந்தித்தோம். நெல் அறுவடை முடிந்த வயலில் உளுந்து பயிர் இருந்தது. “எங்கள் பகுதியில ஒரு காலத்துல சம்பா நெல் வகைகள்தான் அதிகமாகச் சாகுபடி செய்வாங்க. புதிய நெல் ரகங்கள், ரசாயன உரங்கள் வந்தபிறகு சம்பா சாகுபடி குறைஞ்சு போச்சு. எனக்கு ரெண்டரை ஏக்கர் வயல் இருக்குது. அதுல ரெண்டு ஏக்கர்ல புது ரகத்தை நடவு செய்வேன். வீட்டுச் சாப்பாட்டுக்கு மட்டும் அரை ஏக்கர்ல பாரம்பர்ய கட்டிச் சம்பா நெல்லை இயற்கை முறையில சாகுபடி செய்வேன். பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் இப்போ என்கிட்ட இருக்குது. ஆடு, நாட்டுக்கோழிகளும் வளர்க்குறேன். மாட்டுச் சாணம், மாட்டுச் சிறுநீரை வெச்சுப் பஞ்சகவ்யா தயாரிச்சு பயன்படுத்துறேன்’’ என்றவர் வேளாண்மைக்குழு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அரிசி, அவல்... மதிப்புக்கூட்டினால் மகத்தான வருமானம்!

‘‘இயற்கையில விளைஞ்ச விளைபொருள்கள் மேல மக்களுக்கு ஆர்வம் திரும்பியிருக்குது. விவசாயிகளும் பாரம்பர்ய ரகங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. 2015-16-ம் வருஷம், திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலையம், குமரி மாவட்டத்துல பல விவசாயிகளுக்கு சம்பா நெல் விதைகளைக் கொடுத்தேன். ரசாயன உரம்போட்டு விளைவிக்கிற நெல், ஒரு கோட்டைக்கு (87 கிலோ) 1,250 ரூபாய் விலை கிடைக்கும். இயற்கை முறையில விளையுற நெல் ஒரு கோட்டைக்கு 2,500 ரூபாய் விலை கிடைக்கும். 2017-ம் வருஷத்துல இருந்து என் வயல்ல இயற்கை முறையில விளையிற பாரம்பர்ய நெல்லை அப்படியே விற்பனை செய்யாம, அரிசி, அவல்னு மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். இதைத் தனியாகச் செய்யாமல், மற்ற விவசாயிகளையும் சேர்த்துக் கூட்டுப் பண்ணையமாகச் செய்யுங்கன்னு திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி மைய அதிகாரி ஔவை மீனாட்சிங்கறவங்க ஆலோசனை சொன்னாங்க. என்னோடு 9 விவசாயிகளைச் சேர்த்துகிட்டு, ‘வளங்குன்றா அங்கக நெல் வேளாண்மைக் குழு’ங்கிற பேர்ல செயல்படுறோம். நாங்க 10 பேரும் சேர்ந்து 25 ஏக்கர்ல பாரம்பர்ய நெல் வகைகளை இயற்கை முறையில விளையவெச்சு, அரிசி மற்றும் அவலாக மாத்தி விற்பனை செய்றோம். நாங்க தயாரிக்கிற அவல் மற்றும் அரிசியை விற்பனை செய்வதற்காக வடசேரி உழவர் சந்தையில் ஒரு கடையை ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க” என்றவர், அவர்கள் இயற்கை விவசாயம் செய்யும் முறையை விளக்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஸ்ரீகிருஷ்ண பெருமாளுடன் குழு விவசாயிகள்
ஸ்ரீகிருஷ்ண பெருமாளுடன் குழு விவசாயிகள்

“ஒரு ஏக்கர் வயலுக்கு அடி உரமாக ரெண்டு டெம்போ பசுஞ்சாணம் போடுறோம். நடவு நேரத்துல வேற எந்த உரமும் போடுறதில்லை. அப்படி ஏதாவது உரம் போட்டா கதிர் வர்றதுக்குள்ள பயிர் கீழே விழுந்துடும். அறுவடைக்குப் பிறகு, மண்ணை வளப்படுத்துறதுக்காக உளுந்து விதைப்போம். உளுந்து அறுவடை காலத்துல மழை வந்தா அதை அப்படியே உழுதுடுவோம். இதனால பசுஞ்சாணம் போடுறது மிச்சப்படும். பூச்சி விரட்டியா பஞ்சகவ்யா தயாரிச்சு பயன்படுத்துறோம். நாற்று நட்டு 25-ம் நாள், கதிர் வர்ற சமயம்னு ரெண்டு தடவைதான் பஞ்சகவ்யா தெளிப்போம். களைக்கொல்லி பயன்படுத்தமாட்டோம். அதனால களைகள் அதிகமா வளரும். ஆள்கள் மூலமாதான் களையெடுப்போம். அறுவடை நேரத்துல மழை பெய்ஞ்சா, நெல்லை அறுவடை செய்ய முடியாது. அதனால, மேட்டு நிலத்திலதான் சம்பா வகை நெல் வகைகளைப் பயிரிடுறோம்.

பாரம்பர்ய அரிசி மற்றும் நெல் வகைகள்
பாரம்பர்ய அரிசி மற்றும் நெல் வகைகள்

கன்னிப்பூ, கும்பப்பூன்னு வருஷத்துக்கு ரெண்டு முறை நெல் பயிர் செய்றோம். ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு முறை நெல் உற்பத்தி செய்ய 20,000 ரூபாய் செலவாகும். 20 கோட்டை நெல் விளையும். ஒரு கோட்டைக்கு 2,500 ரூபாய் விலை கிடைக்கும். அது மூலமா 50,000 ரூபாய் கிடைக்கும். செலவு 20,000 ரூபாய் போக, 30,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். அதே நெல்லை மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சா ஒரு மடங்கு அதிகம் லாபம் கிடைக்கும்’’ என்றவர், மதிப்புக்கூட்டி விற்கும் யுக்தியை விவரித்தார்.

அரிசி, அவல்... மதிப்புக்கூட்டினால் மகத்தான வருமானம்!

“ஒரு ஏக்கர்ல விளையும் 20 கோட்டை நெல்லை அரிசியாக மாற்றினால் 1,188 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 95,000 ரூபாய்க்கு விற்கலாம். நெல்லை மில்லில் கொண்டுபோய் அரிசியாக மாற்ற 11,500 ரூபாய் செலவு ஆகும். 95,000 ரூபாயில் சாகுபடி செலவு 20,000, அரவை செலவு 11,500 ரூபாய் ஆக மொத்தம் 31,500 ரூபாய் போக 63,500 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். கறுப்பு கவுனி அரிசி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். கருங்குறுவை அரிசி கிலோ 130 ரூபாய். நெல்லாக விற்பனை செய்வதைவிட, அரிசியாக மாற்றி விற்பனை செய்தால் ஒரு மடங்கு அதிகமாக லாபம் கிடைக்குது. நெல்லிலிருந்து அரிசி தயாரிச்சு விற்பனை செய்வதைவிட அவல் தயாரித்து விற்பனை செய்தால் மேலும் லாபம் அதிகரிக்கும்” என்றவர் நெல்லிலிருந்து அவல் தயாரிக்கும் முறையை விவரித்தார்.

அரிசி, அவல்... மதிப்புக்கூட்டினால் மகத்தான வருமானம்!

“என்கிட்ட இப்ப, சம்பா, கீரைச்சம்பா, கொச்சிச் சம்பா, கறுப்பு கவுனி, துள்ளு நாடன், கருங்குறுவை, கொட்டாரன் சம்பா, அறுபதாங்குறுவை ரக விதைகள் இருக்குது. கட்டிச்சம்பா, கீரைச்சம்பால கருங்குறுவை, துள்ளுநாடன், கொட்டாரச் சம்பா ஆகிய சிவப்பரிசி ரகங்கள் எங்கள் கூட்டுப் பண்ணையம் மூலம் சாகுபடி செய்றோம். வேளாண் அதிகாரிகளும் உதவி செய்றாங்க. திருப்பதிசாரம் வேளாண் ஆய்வு மையத்திலிருந்து வேம்பைப் பயன்படுத்தித் தயாரித்த இயற்கை உரம் கொடுத்தாங்க. 2017-ம் வருஷம் திருத்துறைப்பூண்டி நெல் திருவிழாவுல எனக்கு நம்மாழ்வார் விருது கொடுத்தாங்க. திருப்பதிசாரம் வேளாண் ஆய்வு மையத்தில் இருந்தும் எனக்கு விருது கொடுத்திருக்காங்க’’ என்றபடி விடைகொடுத்தார்.

சாணம் கொடுக்கும் மாடுகள்
சாணம் கொடுக்கும் மாடுகள்

தொடர்புக்கு, ஸ்ரீகிருஷ்ண பெருமாள் செல்போன்: 99946 57670.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவல் தயாரிக்கும் முறை!

வல் தயாரிக்கும் விதம் பற்றிப் பேசிய ஸ்ரீகிருஷ்ண பெருமாள், “விதைநெல்லை முளைக் கட்டுவது போன்று பச்சைத் தண்ணீரில் ஒரு நாள் பகல் முழுவதும் ஊறவைப்போம். மாலை நேரத்தில் தண்ணீரிலிருந்து நெல்லை எடுத்துத் தண்ணீரை வடிய வைப்போம். மறுநாள் காலையில் மில்லுக்குக் கொண்டு செல்வோம். மெல்லிசாக இல்லாமல் சற்று தடிமனாக மில்லிலிருந்து அவலைத் தயாரிக்கிறோம். மில்லிலிருந்து வந்ததும் அவலை வெயிலில் காய வைக்கிறோம். இதனால் நீண்ட நாள்கள் அவல் கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால், வியாபாரிகள் வெந்நீரில் நெல்லை ஊற வைக்கிறார்கள். அவலை மிக மெல்லியதாக வரும்படி மிஷினில் கொடுத்து இடிப்பார்கள். இதனால் சத்து குறைந்துவிடுவதுடன் குறைந்த நாள்களிலேயே அவல் கெட்டுப்போய்விடும்.

நாங்கள் பச்சைத்தண்ணீரில் நெல்லை ஊறவைப்பதால் நெல்லின் சத்து குறையாது. 30 கிலோ நெல்லுக்கு 20 கிலோ அவல் கிடைக்கும். அவல் தயாரிக்கும் மில்லில் ஒரு கிலோ நெல்லுக்கு 10 ரூபாய் கூலியாக வாங்குகிறார்கள். சம்பா நெல்லில் தயாரித்த அவல் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். கறுப்பு கவுனி நெல்லில் தயாரித்த அவல் கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்” என்றார்.