நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஒன்றரை ஏக்கர் ரூ. 85,000... மதிப்புக்கூட்டலில் மகத்தான லாபம்!

சீரகச் சம்பா நெல் வயலில் தணிகைவேலன்
பிரீமியம் ஸ்டோரி
News
சீரகச் சம்பா நெல் வயலில் தணிகைவேலன்

மகசூல்

“நம்மாழ்வார் ஐயாவோட கூட்டத்துல கலந்துகொண்ட பிறகுதான் எனக்கு இயற்கை விவசாயம் பத்தின தெளிவு முழுமையாகக் கிடைச்சது. அதுலருந்து முழுமையா இயற்கை விவசாயம்தான் செஞ்சுகிட்டிருக்கேன். என்கிட்ட விளையுற பொருள்களை வாங்கிக்க வாடிக்கையாளர்கள் இருக்காங்க. நமக்கும் லாபம் கிடைக்கணும், மக்களுக்கும் ஆரோக்கியம் கிடைக்கணும்னுதான் இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டிருக்கேன்” என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் இயற்கை விவசாயி தணிகைவேலன்.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இருக்கிறது தணிகைவேலனின் பண்ணை.

நெல் வயல்
நெல் வயல்

அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயலின் வரப்பில் அமர்ந்து பேச்சைத் தொடர்ந்தார். “எனக்கு மொத்தமா 10 ஏக்கர் நிலமிருக்கு. நெல்லுதான் பிரதானப் பயிர். இங்கே மத்தவங்க நிலங்களுக்கு இடையிலதான் என்னோட நிலம் இருக்கு. அதனால எல்லாருமே நெல்லுதான் பயிர் செய்வோம்.

எனக்கு ஒரு கிணறு இருக்கு. அதைவெச்சுத்தான் விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். அப்பா ரசாயன முறையிலதான் விவசாயம் செஞ்சுகிட்டிருந்தார். நான் ஐ.டி.ஐ முடிச்சேன். அப்புறமா வேலைக்குப் போயிட்டு விவசாயத்தையும் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ திருவண்ணாமலையில நம்மாழ்வார் ஐயா பேசின கருத்தரங்கு நடந்தது. அதுல ஐயா பேச்சைக் கேட்ட பிறகுதான் எனக்கு முழுமையா இயற்கை விவசாயம் பத்தித் தெரிஞ்சது. அப்புறம் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல தொலைதூரக் கல்வி மூலமா இளங்கலைப் பண்ணையியல் தொழில்நுட்பப் படிப்பை முடிச்சேன்” என்ற தணிகைவேலன் தொடர்ந்தார்.

நம்மாழ்வார் ஐயா பேச்சு மூலம்தான் எனக்கு முழுமையா இயற்கை விவசாயம் பத்தித் தெரிஞ்சது. சீரகச் சம்பா மூலம் ஒன்றரை ஏக்கர்ல இருந்து 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

“ஆரம்பகாலங்கள்ல பாரம்பர்ய நெல் ரகங்களை விற்பனை செய்யறது கஷ்டமா இருந்தது. வழக்கமான நெல் கொள்முதல் நிலையங்கள்லதான் விற்பனை செஞ்சோம். விலை குறைவாகக் கிடைச்சது. அதுக்கப்புறம் நெல்லை அரிசியாக்கி, நேரடி விற்பனையை ஆரம்பிச்சிட்டேன். இப்போ வரைக்கும் விற்பனைக்குப் பிரச்னையில்லை. இந்த வருஷம் ஒன்றரை ஏக்கர்ல சீரகச் சம்பா சாகுபடி செஞ்சிருக்கேன். இன்னிக்கு அதை அறுவடை செய்ய ஆட்கள் வர்றதா சொல்லியிருந்தாங்க. இன்னும் வரலை” என்றவரிடம், “தூரத்தில் நெல் அறுவடை மெஷின் மூலமா அறுவடை நடந்து கொண்டிருக்கிறதே, அதைவைத்து அறுவடை செய்யலாமே” என்ற கேள்வியை முன்வைத்தோம்.

மாடுகளுடன்
மாடுகளுடன்

“நான் இயற்கை விவசாயம் செய்யறேன். ரசாயன உரங்கள் இல்லாத நெற்பயிரை வளர்த்து வெச்சிருக்கேன். ஆள் கூப்பிடப் போனேன். மொத்தமா 6,000 ரூபாய் கேக்குறாங்க. நீங்க சொன்ன மெஷினுக்கு 2,000 ரூபாய்தான் செலவாகும். எனக்கு 4,000 ரூபாய் மிச்சம்தான். ஆனா இது களிமண் நிலம். தண்ணி பாய்ச்சினாலே சொதசொதனு ஆகிடும். இதுல மெஷினை விட்டா நிலமும் பாழாகிடும்.

சீரகச் சம்பா நெல் வயலில் தணிகைவேலன்
சீரகச் சம்பா நெல் வயலில் தணிகைவேலன்

அதுவும்போக மெஷின்ல அறுவடை செய்யும் வைக்கோலை மாடுங்களுக்குக் கொடுக்க மனசு வரலை. அதனாலதான் பயிர்கள் சாய்ஞ்சாலும், கையால அறுக்கணும்னு காத்துக்கிட்டிருக்கேன். வழக்கமான நாற்று நடவு முறைதான் இந்த மண்ணுக்கு ஏற்றதா இருக்கு. அதனால எப்பவுமே கை நடவுதான். எனக்கும் ஒற்றை நாற்று நெல் நடவு செய்ய ஆசைதான். ஆனா, இங்கே ஆட்கள் பற்றாக்குறை. அதனால கொஞ்சம் இடைவெளிவிட்டு சாதாரண நடவு செஞ்சுகிட்டிருக்கேன். ஆரம்பத்துல ஒரு ஏக்கருக்கு 15 மூட்டை அளவுலதான் மகசூல் கிடைச்சது. போகப்போக மண் வளம் அதிகரிச்சு, மகசூலும் படிப்படியா அதிகரிக்க ஆரம்பிச்சது.

‘‘சீரகச் சம்பா ஒன்றரை ஏக்கருக்கு 30 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும். அதை அரைச்சா 1,200 கிலோ அரிசி கிடைக்கும்.’’
பாசனக் கிணறு
பாசனக் கிணறு

எரு தேவைக்காக ஆறு மாடுகளும், எட்டு கன்றுகளும் இருக்கு. வெளியில எரு வாங்கும் வேலை இல்லை. ஆரம்பத்துல ஒரு ஏக்கருக்கு அஞ்சு டன் எரு கொடுத்துட்டு இருந்தேன். இப்போ ஒரு ஏக்கருக்கு மூணு டன் எரு கொடுக்கிறேன். எருவோடு பல தானிய விதைப்பு செஞ்சு மண்ணுக்கு உரமாகக் கொடுத்துடுவோம். அதோடு உயிர் உரங்களையும் பயன்படுத்துறதால நல்ல மகசூல் கிடைக்குது. இப்போ பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு இடுபொருள்களின் தேவையும் ரொம்ப குறைஞ்சிடுச்சு. ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை அளவுல நெல் மகசூல் கிடைக்குது” என்ற தணிகைவேலன் சாகுபடி செய்யும் நெல் ரகங்களைப் பற்றிப் பேசினார்.

“இந்த முறை 60 சென்ட்ல கறுப்பு கவுனி, ஒன்றரை ஏக்கர்ல சீரகச் சம்பா, ஒரு ஏக்கர்ல கிச்சிலிச் சம்பாப் பயிர்களை நடவு செஞ்சேன். அதுல சீரகச் சம்பா மட்டும் அறுவடைக்குத் தயாரா நிக்குது. கறுப்பு கவுனி 160 நாளுங்கறதால அறுவடைக்கு வர தாமதமாகிடுச்சு. கிச்சிலிச் சம்பா தாமதமான நடவால பச்சைகட்டி நிக்குது. ரெண்டுலயுமே கதிர்கள் நல்லா செழிப்பா இருக்கு. போன தடவை ஒரு ஏக்கர்ல 18 மூட்டை சீரகச் சம்பா நெல் மகசூல் கிடைச்சது. இந்த முறை 20 மூட்டை கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்றவர் நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

“சீரகச் சம்பா ஒன்றரை ஏக்கருக்கு 30 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும். அதை அரிசியா மதிப்புக்கூட்டித்தான் விற்பனை செய்வேன். ஒரு மூட்டை (80 கிலோ) நெல்லை அரைச்சா 40 கிலோ அரிசி கிடைக்கும். 30 மூட்டை நெல் மூலமாக 1,200 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 100 ரூபாய்னு அரசு அதிகாரிகள், தெரிஞ்சவங்களுக்கு விற்பனை செய்யறேன். அந்த வகையில ஒன்றரை ஏக்கர்ல இருந்து 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல 35,000 ரூபாய் செலவு போக ஏக்கருக்கு 85,000 ரூபாய் லாபமாக நிக்கும்” என்கிறார் புன்னகையோடு.

தொடர்புக்கு, தணிகைவேலன், செல்போன்: 84898 18081.

ஒன்றரை ஏக்கர் ரூ. 85,000... மதிப்புக்கூட்டலில் மகத்தான லாபம்!

புகையானுக்குக் கரைசல்!

நெல்லில் புகையான் நோய் தாக்காமலிருக்க ஆடு, மாடு சாப்பிடாத 27 வகையான இலை தழைகளை தலா 200 கிராம் எடுத்து, 200 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 15 நாள்களுக்கு ஊறவைக்க வேண்டும். நன்றாக நொதிக்கவைத்து, தண்ணீரை வடிகட்டி எடுத்துப் பாசன நீருடன் கலந்துவிடலாம். பின்னர் அந்த நீரை முழுமையாக வயலிலிருந்து எடுத்துவிட வேண்டும். இதைச் செய்தால் புகையான் நோய் தாக்குதலே இருக்காது. அல்லது 3 சதவிகித வேப்பெண்ணெய்க் கரைசல் (10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வேப்பெண்ணெய்) தெளித்தும் புகையானைக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு ஏக்கர் விதைப்புக்கு 15 சென்ட் நாற்றங்கால்!

ரு ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்து தணிகைவேலன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு, 15 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்கால் நிலத்தில் 120 கிலோ செறிவூட்டப்பட்ட எரு மற்றும் 100 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு மூன்று முறை உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, விதைநேர்த்தி செய்யப்பட்ட 18 கிலோ விதைநெல்லை நாற்றங்காலில் பரவலாகத் தூவ வேண்டும். 15-ம் நாள் நான்கு லிட்டர் தண்ணீரில் 500 மி.லி அமுதக்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 27-ம் நாளில் ஓரடி உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.

நாற்று தயாராகும்போதே நடவு வயலையும் தயார் செய்ய வேண்டும். நடவு வயலில் முன்னரே பலதானியப் பயிரை விதைத்து, பூக்கும் நேரத்தில் மடக்கி உழவு செய்து வைத்திருக்க வேண்டும். பிறகு மூன்று டன் மாட்டு எரு கொட்டி, நான்கு சால் ஓட்ட வேண்டும். நான்காவது சால் ஓட்டும்போது நிலத்தைச் சமன் செய்ய வேண்டும். உழவு ஓட்டும்போது 100 கிலோ மண்புழு உரமும், ஐந்து கிலோ பாஸ்போ பாக்டீரியாவும் தூவினால் விளைச்சல் அதிகரிக்கும். பிறகு நாற்றுகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். சரியாக வாரம் இரு முறை அல்லது மூன்று முறை தண்ணீர் கொடுக்கலாம்.

நடவு செய்த 15-ம் நாள் பாசன நீருடன் ஜீவாமிர்தம் கலந்து கொடுக்க வேண்டும். மேலும், அடுத்த 35-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களையெடுத்த பிறகு பாசன நீருடன் பஞ்சகவ்யா கலந்துவிடலாம். இது பயிரின் வளர்ச்சியை அதிகரிக்கும். அதன் பின்னர் அசோஸ்பைரில்லம், வேப்பம் பிண்ணாக்கு, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை தலா இரண்டு கிலோ வீதம் அடியுரமாகக் கொடுக்கலாம்.

40 மற்றும் 55-ம் நாள்களில் தேவைப்பட்டால் ஜீவாமிர்தம் தெளிக்கலாம். தேவைப்பட்டால் இரண்டாம் களை எடுக்கலாம். நெற்கதிர் பால் பிடிக்கும் முன்பு, பூச்சிவிரட்டி தெளித்துவிட வேண்டும். கதிர் முற்றத் தொடங்கும்போது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். சரியான முறையில் இயற்கைத் தொழில்நுட்பங்களைக் கையாண்டால் 140-ம் நாள் பயிர் அறுவடைக்கு வந்துவிடும்.