Published:Updated:

சான்றிதழ் கேட்கும் விவசாயிகளிடம் ₹100 கேட்ட வி.ஏ.ஓ; வைரலாகும் லஞ்சம் பெறும் வீடியோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லாட்ஜ் அறையில் வைத்து அடங்கல் வழங்கிய வி.ஏ.ஓ
லாட்ஜ் அறையில் வைத்து அடங்கல் வழங்கிய வி.ஏ.ஓ

தூத்துக்குடியில் விவசாய பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க அடங்கல் சான்று வழங்கிட கிராம நிர்வாக அலுவலர்கள் 100 ரூபாய் கட்டாயமாக வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் ஆகிய தாலுகாக்களில் உளுந்து, பாசி, கம்பு, சோளம், மக்காச்சோளம், பருத்தி, மிளகாய் ஆகியவை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பயிர்க் காப்பீடு செய்திட விவசாயிகளுக்கு கடந்த 9-ம் தேதி அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்ததற்காக இ-சேவை மையங்களில் விவசாயிகள் அதிகளவில் நாடி வருகின்றனர். பயிர் காப்பீடு செய்வதற்கு பட்டா அடங்கல் தேவை என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் விவசாயிகள் பயிர் அடங்கல் பெற குவிந்தனர்.

லாட்ஜில் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
லாட்ஜில் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்; தரமற்ற விதைகளை விற்பனை செய்கிறதா வேளாண் பல்கலைக்கழகம்?

இதனால், அங்கு இரவு பகலாக அடங்கல் வழங்கும் பணி நடந்து வந்தது. இதில் உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய 15-ம் தேதி, திங்கட்கிழமையான நேற்றே கடைசி நாளாகும். அதிலும் குறிப்பாக விளாத்திகுளம் பகுதிகளில் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு செல்லாமல் விளாத்திகுளத்தில் உள்ள லாட்ஜில் வைத்து விவசாயிகளுக்கு பட்டா அடங்கல் வழங்கி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டபட்டி ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர் வினோத், விவசாய பயிர்க் காப்பீடு அடங்கல் சான்று வழங்க விவசாயிகளை அலைகழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு அடங்கல் வழங்க விவசாயிகளிடம் ரூ.100 வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் விவசாயிகள் கொடுப்பதால், தான் வாங்கிக் கொள்வதாக அவர் ஒப்புக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பதிவு செய்தவர் கேள்விகளை கேட்க, விவசாயி ஒருவர் பதில் அளிக்கிறார்.

லாட்ஜ் அறை முன்பு காத்துக்கிடக்கும் விவசாயி
லாட்ஜ் அறை முன்பு காத்துக்கிடக்கும் விவசாயி

வீடியோவில், ``நான் 4 நாட்களாக இங்க வந்துகிட்டிருக்கேன். ஆனால், புளியங்குளம் மாலுக்கு அடங்கல் வழங்குகின்றனர். வராத ஆளுக்கு அடங்கல் போட்டுக் கொடுக்கின்றனர். அடங்கல் வழங்க 100 ரூபாய் வாங்குகின்றனர்” என விவசாயி கூறுகிறார். பின்னர் வீடியோ எடுத்தவர், அப்படியே கிராம நிர்வாக அலுவலரிடம், ``ஏகப்பட்ட புகார்கள் வருகிறது. வீடியோ எடுத்துள்ளேன். அடங்கலுக்கு 100 ரூபாய் காசு வாங்குகிறீர்களாமே? 100 ரூபாய் வாங்க சொல்லி உள்ளனரா?” எனக் கேட்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு, ``அவர்கள் கொடுத்துவிட்டு செல்கின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் யாரிடமும் கட்டாயப்படுத்தி கேட்கவில்லை” என்கிறார் வி.ஏ.ஓ. அதற்கு அந்த நபர், ``அவர்களாக கொடுக்கின்றனரா?” எனக் கேட்டதற்கு, ``ஆமாம் கொடுக்கின்றனர்” என வி.ஏ.ஓ. கூறுகிறார். ``இப்படி பணம் வாங்கலாமா?” எனக் கேட்க, ``யார்ட்ட வேணாலும் போயிச் சொல்லுங்க. ஒன்னும் பிரச்னை இல்லை” என்கிறார் அந்த வி.ஏ.ஓ. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ``பெரும்பாலான வி.ஏ.ஓக்கள் கிராமங்களுக்கே வருவதில்லை. ஏதாவது ஒரு இடத்திற்கு வரச் சொல்கிறார்கள். இந்த வி.ஏ.ஓ., வினோத், விளாத்திகுளத்தில் உள்ள ஒரு லாட்ஜூக்கு வரச் சொல்லியிருக்கிறார். ஒரு அடங்கலைப் பெற 20 கி.மீ தூரம் வரை வர வேண்டியுள்ளது” எனப் புலம்புகின்றனர் விவசாயிகள்.

காத்துக் கிடக்கும் விவசாயிகள்
காத்துக் கிடக்கும் விவசாயிகள்
நடவு முதல் அரிசி வரை; தஞ்சாவூரில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்!

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரித்தோம். ``அந்த வீடியோவில் இருந்தது மார்த்தாண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வினோத்தான். மார்த்தாண்டம்பட்டியுடன் சேர்த்து புளியங்குளம் கிராமத்தை கூடுதலாக கவனித்து வருகிறார்” என்றனர். இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் பேசினோம். ``அந்த வீடியோவை நானும் பார்த்தேன். என்ன நடந்தது என விசாரணை செய்து அறிக்கை அனுப்பிடுமாறு கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கர நாராயணனுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன் அடிப்படையில் வி.ஏ.ஓ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு