Published:Updated:

பலவிதமான பாரம்பர்ய விதைகள் இலவசமாகக் கொடுக்கும் இளைஞர்!

பாரம்பர்ய விதைகள்

பிரீமியம் ஸ்டோரி
வ்வொரு காய்கறி ரகங்களும் அந்தந்த ஊரின் மண்ணைப் பொறுத்துச் சிறப்புப் பெற்று, தனிச்சுவையுடன் வலம் வருகிறது. அது அடுத்தடுத்த ஊர்களுக்கும் பரவலாகி, தற்போது விவசாயிகள் மீண்டும் இதை நோக்கித் திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் பாரம்பர்ய விதைகளின் சேமிப்பும் பரவலாக்கமும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் பாரம்பர்ய விதைகளைச் சேகரித்துத் தேவைப்படுவோருக்கு இலவசமாக அளித்துப் பரவலாக்கம் செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த சரவணக்குமார்.

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். 10 ஏக்கரில் இறவை, மானாவாரிச் சாகுபடியும் மீன் பண்ணையும் நடத்தி வரும் இவர், கடந்த 4 ஆண்டுகளில் காய்கறிகள், கீரை, சிறுதானியங்கள் என 74 பாரம்பர்ய ரக விதைகளை மீட்டெடுத்துள்ளார். காரியப் பட்டியிலுள்ள இல்லத்தில் அவரைச் சந்தித்தோம், “தலைமுறை, தலைமுறையா விவசாயம் செய்துட்டு வர்றோம். டிப்ளமோ மெக்கானிக் இன்ஜீனியரிங் முடிச்சுட்டு 11 வருஷம் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசரா வேலை பார்த்தேன். அதுக்கு பிறகு, விவசாயத்தையே முழுநேரமா செய்ய ஆரம்பிச்சேன். காய்கறிகளில் வீரியரக விதைகளையே பயன்படுத்திச் சாகுபடி செய்து வந்தோம். அடியுரமா தொழுவுரத்தைப் போட்டுட்டு, பூச்சி, நோய்த்தாக்குதலுக்கு மட்டும் ரசாயனப் பூச்சிக்கொல்லியைத் தெளிச்சோம். அஞ்சு வருஷத்துக்கு முன்னால, வீரியரக வெண்டை சாகுபடி செய்தபோது, நாட்டுரகத்தில் பச்சைநீள வெண்டை விதையை நண்பர் ஒருவர் கொடுத்தார்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

‘‘10 சென்டில் மட்டும் விதைச்சேன். அடியுரமாகப் போடப்பட்ட தொழுவுரத்திலேயே நல்லா செழுமையா வளர்ந்துச்சு. நோய்த்தாக்குதல் ஏதுமில்லை. பக்கத்து நிலத்து விவசாயிகளே ஆச்சர்யமாப் பார்த்துட்டு எங்கிட்ட விதை கேட்டாங்க. நாப்பது, ஐம்பது வருஷத்துக்கு முன்னால நாட்டு விதைகளோட கருவூலமாகக் கிராமங்கள்தான் இருந்துச்சு. ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றத்தால் விதைகள் பரவலாக்கம் ஆச்சு. பசுமைப் புரட்சியின் தாக்கம், உற்பத்திப் பெருக்கத்தால் விவசாயிகள் மத்தியில் நாட்டு விதைகளோட பயன்பாடு குறைஞ்சு போச்சு. அரசே வீரிய ஒட்டுரக விதைகள விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தது. அதன் பிறகு, தனக்கான விதைகளைப் பாதுகாப்பது, சேமிப்பது, பிற விவசாயிகள்கிட்ட பகிர்ந்துகொள்வது என்பதை மறந்து வீரிய ரகங்கள் பக்கம் திரும்பினாங்க விவசாயிகள்” என்று வருத்தப்பட்டவர் மேலும் பேசினார்.

‘‘ ‘கத்திரியில் மட்டும் 300 வகைகளுக்கு மேல இருந்துச்சு. திரும்பவும் பாரம்பர்ய விதைகள் பரவலாக்கமானால் மட்டுமே கைவசம் இருக்கிற விதைகளையாவது பாதுகாக்க முடியும்’னு எங்க அப்பா கவலையுடன் சொன்னார். அப்போதான் நாமளே நாட்டு ரக விதைகளைச் சேகரிச்சுப் பரவலாக்கம் செய்யலாம்னு முடிவு செஞ்சேன். முதலில் பச்சைநீள வெண்டை கிடைத்ததால் வெண்டை ரகச் சேகரிப்பைத் தொடங்கினேன். என்னோடு தொடர்பில் உள்ள வெளியூர் விவசாயிகள், நண்பர்கள்கிட்ட சொல்லி அவகவங்க பகுதியில நாட்டு விதைகள் மூலம் சாகுபடி செய்து வரும் விவசாயிகளையும் தேடிப் பிடிச்சேன். ஒரு விவசாயி மூலம் அடுத்த விவசாயியோட தொடர்பு கிடைச்சது. அவங்களோட சேமிப்பில் இருந்த விதைகளை வாங்கிச் சேகரிச்சேன். இதற்காக வாரத்துல ரெண்டு நாள் வெளியூர்களுக்குப் போயிட்டு வருவேன்.

பல கிளை வெண்டை, பச்சை வெண்டை, பச்சைக்குட்டை, பச்சைநீளம், சிவப்பு, பல கிளை வெள்ளை, பல கிளை சிவப்பு, கஸ்தூரி வெண்டை, காபி வெண்டை, மலைவெண்டை, மாட்டுக்கொம்பு வெண்டை, ஆனைத்தந்த வெண்டை என 12 வகை வெண்டை விதைகளைச் சேகரிச்சேன். தொடர்ந்து கத்திரி, தக்காளி, அவரை, பீர்க்கு, பாகல், பூசணி, சுரை, மொச்சை, முருங்கைனு காய்கறிகள், கீரைகள், சிறுதானியத்தில் பாரம்பர்யச் சோள ரகங்கள் என மொத்தம் 74 ரக விதைகளை மீட்டிருக்கேன். விதைச் சேகரிப்புக்காகத் தமிழகத்தின் பல மாவட்டங்களைத் தாண்டி மக்காச்சோள விதைக்காகப் பூனா, ‘சுரை’ விதைக்காக ஆந்திரா, ‘பீர்க்கு’ விதைக்காகக் கர்நாடகா, ‘பூசணி’ விதைக்காகக் கேரளானு பயணம் செஞ்சிருக்கேன்.

விதைகளோடு சரவணக்குமார்
விதைகளோடு சரவணக்குமார்
‘‘பாரம்பர்ய விதைகளைப் பரவலாக்கம் செய்யணும்னுங்கிற நோக்கத்தில தற்போது வரை இலவசமாகவே கொடுத்துட்டு வர்றேன்.’’

விதைகளைச் சேமிப்பது மட்டுமல்லாமல் பரவலாக்கமும் செய்ய ஆரம்பிச்சேன். முதலில் உள்ளூர் விவசாயிகளுக்குத் தேவைப்படும் விதைகளைக் கொடுத்தேன். தொடர்ந்து வெளியூர் நண்பர்களுக்கும் கொடுத்தேன். பாரம்பர்ய விதைகளைப் பரவலாக்கம் செய்யணும்னுங்கிற நோக்கத்தில தற்போது வரை இலவசமாகவே கொடுத்துட்டு வர்றேன். 4 வருஷத்துல இதுவரைக்கும் 12,656 பேருக்கு விதைகள அனுப்பியிருக்கேன். வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாமல் மாணவர் விடுதிகள், முதியோர் இல்லங்கள், கோயில்கள் சார்ந்த ஆசிரமங்கள்லயும் என்கிட்ட காய்கறி, கீரை விதைகளைப் பெற்று அவர்களாகவே சாகுபடி செய்து சமையலுக்குப் பயன்படுத்தி வர்றாங்க” என்று மகிழ்ச்சியுடன் கூறியவர் நிறைவாக,

பலவிதமான பாரம்பர்ய விதைகள் இலவசமாகக் கொடுக்கும் இளைஞர்!

‘‘பாரம்பர்ய ரக விதைகள்ல இன்னும் அதிகமான ரகங்களைச் சேகரிக்க வேண்டும். அந்த விதைகளைப் பரவலாக்கம் செய்ய வேணும்னுங்கிறத முக்கிய இலக்காகக் கொண்டுள்ளேன். சமீப காலமாக நாட்டு விதைகளுக்கான வரவேற்பு விவசாயிகள் மத்தியில் மட்டுமல்லாமல், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் வெச்சிருக்கிறவங்க மத்தியிலும் அதிகரிச்சிருக்கு. மீண்டும் இயற்கை விவசாயத்துக்குத் திரும்புபவர்கள், தொழுவுரம், இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், பாரம்பர்ய ரக விதைகளையே பயன்படுத்திச் சாகுபடி செய்ய வேண்டும். ‘விதைகளே பேராயுதம்’ என நம்மாழ்வார் ஐயா சொன்னதைப் போல மீண்டும் நாட்டு விதைகள் பரவினால் மட்டுமே ‘உணவே மருந்து’ என வாழ முடியும்” என்றார்.

தொடர்புக்கு, சரவணக்குமார், செல்போன்: 99949 64714.

விதைகளைப் பெறுவது எப்படி?


“வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், விவசாயம் எனத் தேவையைப் பொறுத்து 10 முதல் 20 ரக விதைகள அனுப்புறேன். விதைகள் தேவைப்படுவோர் எனது அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பேசலாம். அத்துடன், பெயர், முகவரி, தொடர்பு எண் குறிப்பிட்டு வாட்ஸ்அப் மூலமும் அனுப்பலாம். ‘விதை பெற்றதில் இருந்து 8 மாதங்கள் கழிச்சு வாங்குன விதைகளோடு இரண்டு மடங்கு எண்ணிக்கையுடன் மீண்டும் எனது முகவரிக்கு அனுப்ப வேண்டும்’ என்ற ஒரு நிபந்தனையுடன் விதைகள கொடுக்கிறேன்’’ என்கிறார் சரவணக்குமார்.

விதைகளைச் சேகரிப்பது எப்படி?செடியில் காய் காய்க்கத் தொடங்கியதிலிருந்து 10 நாள்களுக்குப் பிறகு, திரட்சியான காய்களை 30 முதல் 40 நாள்கள் வரை செடியிலேயே முற்றவிட வேண்டும். அதிலிருந்து விதைகளை எடுத்து சுரைக்குடுவை, மண் பாத்திரத்தில் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும். மாதம் ஒருமுறை மிதமான வெயிலில் காய வைத்துக்கொள்ளலாம். பூச்சிகள் தாக்குதலிலிருந்து பாதுகாக்க விதைகளின் மீது சிறிது நொச்சி, புங்கன், வேம்பு இலைகளைப் பரப்பிச் சிறிது அடுப்புச்சாம்பல் தூவலாம். தேவைப்பட்டால் பூண்டுபல் ஒன்றை லேசாகத் தட்டியும் விதைகள் மீது வைக்கலாம். சேகரித்த விதைகளை 3 மாதம் கழித்துதான் விதைக்கச் செய்ய வேண்டும். அதேபோல, ஒன்றரை ஆண்டுக்குள் விதைக்காவிட்டால், அதன் முளைப்புத்திறன் பாதியாகக் குறைந்துவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு