Published:Updated:

நிரம்பிய வீடூர் அணை…திரளும் மக்கள்… மகிழும் விவசாயிகள்!

அணை மக்கள்
அணை மக்கள்

`மூன்றரை வருடம் கழித்து தண்ணீர் நிறைந்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இனி வரும் நாள்களில் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பிரச்னை இருக்காது’

நதி என்றதும் நமக்கு ஞாபகம் வருவது மலை உச்சியிலிருந்து கொட்டும் அருவியும் அணைகளும் ,படகு சவாரிகளும்தான். அதுவும், நீர்வரத்து ஏற்பட்டு பல வருடங்களான நதியின் அணையில் நீர்வரத்து ஏற்பட்டிருக்கிறது என்றால் நம் அனைவருக்கும் அந்த அணையை எப்படியாவது சென்று பார்க்க வேண்டும் என ஆசைப்படுவோம். அப்படித்தான் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, நிரம்பிய வீடூர் அணையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர் ஊராட்சிக்கும் மயிலம் ஊராட்சிக்கும் இடையில் அமைந்துள்ளது வீடூர் அணை. 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த அணை 1959-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறக்கப்பட்டது. இந்த அணை தொண்டியாறு, வராத நதிகள் இணையும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வீடூர் அணை
வீடூர் அணை

15,800 அடி நீளம் கொண்ட இந்த அணையில், மண் அணையின் உயரம் 37 அடி ஆகவும், கல் அணையின் உயரம் 32 அடியாகவும் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரியில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும் வகையில் இந்த அணை கட்டப்பட்டிருந்தாலும், பாசனத்துக்கு பயன்பட்டகாலத்தைவிட வறட்சிக்கு பயன்பட்ட காலமே அதிகமானது. கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் நீர்வரத்து பார்க்காமலிருந்தது இந்த அணை. அக்காலங்களில் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அடைந்து வந்த இன்னல்களும் ஏராளம்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் பெய்து வரும் மழையால் பயனடைந்த அணைகளுள் இந்த அணையும் ஒன்று. மூன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதுதான் அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியுள்ளது அணை. தொடர்ந்து விநாடிக்கு 1,200 கனஅடி நீர் தொண்டியாறு, வராக நதி மூலம் வந்துகொண்டிருக்கவே அணையின் நலன் கருதி உபரி நீரை திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை (தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்) உத்தரவின்பேரில் அணையின் கீழ், நதியையொட்டியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு `தண்டோரா’ மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 2.12.2019 அன்று அதிகாலை 12.30 மணியளவில் 12 மதகுகளில் 3 மதகுகள் வழியாக 0.6 அடி உயரம் கதவுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 1,200 கனஅடி நீர் பொதுப்பணித் துறையினரால் திறந்துவிடப்பட்டது.

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

அன்றைய தினமே தொடர்ந்து பொழிந்த மழையால் விநாடிக்கு 1,500 கனஅடி நீர் அணைக்கு வரத் தொடங்கியது. இதனால் மேலும் இரண்டு மதகுகளில் நீர் திறந்துவிடப்பட்டது. கடந்த மூன்றாம் தேதி முதல், அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியதால் இரண்டு மதகுகள் மூடப்பட்டு 3 மதகுகள் வழியாக மட்டுமே நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையையொட்டிய பூங்காவிலும் அலைமோதுகிறது மக்கள் கூட்டம். இளைஞர்கள் சிலர் ஓடைகள் மூலம் வெளியேற்றப்படும் நீரில் மீன்பிடித்து மகிழ்கின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி மைக் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விவசாயிகள்
விவசாயிகள்

அணையில் நீர் நிரம்பியது குறித்து அப்பகுதி சுற்றுவட்டார விவசாயிகள் சிலரிடம் பேசினோம்:

``மூன்றரை வருடம் கழித்து தண்ணீர் நிறைந்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இனி வரும் நாள்களில் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பிரச்னை இருக்காது என நினைக்கிறோம். கடந்த மூன்று வருஷமாக அணையில் நீர்வரத்து இல்லாததால் ஏற்பட்ட வறட்சியில் தைரியமாக விவசாயம் செய்வதென்பதே இல்லாமல் போச்சு. தண்ணீர் பிரச்னைக்கு பயந்துகிட்டு சிலர் பயிரிடாமல் தங்கள் நிலங்களை சவுக்குமரத் தோப்பாக மாத்திட்டாங்க. இங்க சுத்துபட்டில் எங்கேயும் கிணறு இல்லை. எல்லாம் போர்வெல்தான். ஆற்றில் தண்ணீர் வராததால் கோடைக்காலத்தில் போர்வெல்லிலும் தண்ணீர் மட்டம் குறைந்து போய்விடும். எப்போதாவது பொழியும் மழையில் சற்று நீர்வரத்து ஆற்றில் ஏற்பட்டாலும் இங்குள்ள பம்ப் ஹவுஸ் மூலமாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் சில நாள்களிலேயே அந்தத் தண்ணீரும் வற்றிவிடும்.

தற்போது முழு கொள்ளளவான 32 அடிவரை நீர் நிரம்பியுள்ளது. ஆனால், இந்த அணை இரு நதிகள் இணையும் பகுதியில் இருப்பதால், மண் சேர்ந்து அணையின் உயரம் தூர்ந்து போயுள்ளது. அவை முறையாகத் தூர்வாரப்பட வேண்டும் என விவசாயிகள் சார்பில் மனு கொடுத்தோம். ஆனால், தூர்வாரப்படவில்லை. நதி முழுதும் சீமைக்கருவேல மரங்கள் படர்ந்துவிட்டன. அவையும் அகற்றப்படாமல் உள்ளன. அவற்றையெல்லாம் சரியாகச் செய்திருந்தால் இன்னும் சில ஆண்டுகளுக்குத் தண்ணீர் பற்றிய கவலை இல்லாமல் இருந்திருக்கும்'' என்கிறார்கள் கிராம மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு