Published:Updated:

``கால்வாய்கள் வேண்டாம்; கான்கிரீட் குழாய்களே சரி!" - மூத்த பொறியாளரின் நீர் மேலாண்மை ஐடியா

Concrete Pipe
Concrete Pipe

``கான்கிரீட் குழாய் முறைக்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களை உதாரணமாகச் சொல்லலாம். சாலையோரங்களில் கூட இந்தக் குழாய்களைப் பதித்துக் கொண்டு செல்ல முடியும்."

பொறிஞர் அ.வீரப்பன், தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் சிறப்புத் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருக்கும் இவர், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் நீர்வளங்களில் மேற்கொள்ள வேண்டிய நீர் மேலாண்மை குறித்து அரசுக்கு வழிகாட்டல் நெறிமுறைகளையும் பொறியியல் ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார். முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரி நதிநீர்ப் பிரச்னை, மீத்தேன் எதிர்ப்பு, அவினாசி அத்திக்கடவு திட்டம் எனப் பலவற்றுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

வீரப்பன்
வீரப்பன்

தமிழகத்தில் `தண்ணீர் தன்னிறைவு சாத்தியமே’ என்று மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் நீர் மேலாண்மை குறித்து ஆக்கபூர்வமான கருத்துகளைக் கூறி வருகிறார். திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த இவர், நீர் மேலாண்மையில் முனைவர் (பிஹெச்.டி) பட்டம் பெற்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு நீர் மேலாண்மையில் மேற்கொண்ட ஆய்வுகுறித்து கேட்டோம்.

அதுகுறித்து பேசிய வீரப்பன், ``இந்த ஆய்வு முக்கியமான ஒன்று. தமிழ்நாடு, இந்திய அளவில் மேற்கொள்ளப்படும் குடிநீர்த் திட்டம், பாசனத் திட்டங்களில் மிகவும் பயன்படும்.

காலிங்கராயன் கால்வாய்
காலிங்கராயன் கால்வாய்

தமிழ்நாட்டில் ஒரு அணையிலிருந்தோ, ஆற்றிலிருந்தோ, பெரிய ஏரியிலிருந்தோ தண்ணீர் கொண்டு செல்ல வேண்டுமென்றால் மண் கால்வாய்களை வெட்டிதான் பெரும்பாலும் கொண்டு செல்லப்படுகிறது. அது பாசனத்துக்கும் சரி, குடிநீருக்கும் சரி. இந்த வழிகள்தான் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிறது. இப்படிக் கால்வாய் வெட்டி கொண்டு செல்வதற்கு முதலில் அதிகளவு நிலம் தேவைப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் எப்படிப்பட்ட நல்ல திட்டமாக இருந்தாலும் விவசாயிகள் நிலம் கொடுக்க மறுத்து வருகின்றனர்.

அதேசமயம் திறந்தவெளி கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு செல்லும்போது சூரிய ஒளியால் தண்ணீர் ஆவியாகி வீணாகிறது. மண்ணால் தண்ணீர் அதிகளவு உறிஞ்சப்படுகிறது. கால்வாய் செல்லும் பகுதியில் தண்ணீர் திருட்டும் நடைபெறுகிறது. கால்வாய் வழியில் புல், பூண்டுகள் முளைவித்துவிட்டால் தண்ணீர் செல்வது பெரும் சிரமமாகிவிடுகிறது. இந்தப் பிரச்னைகளால் தண்ணீர் வீணாகிவிடுகிறது.

கிருஷ்ணா கால்வாய்
கிருஷ்ணா கால்வாய்

இதற்கு உதாரணமான சென்னைக்குக் குடிநீர் வழங்கும் கிருஷ்ணா கால்வாயைச் சொல்லலாம். அந்தக் கால்வாயில் 2,000 கியூசெக்ஸ் தண்ணீர் திறந்துவிடப்பட்டால் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வருவதற்குள் 800 கியூசெக்ஸ்ஸாகக் குறைந்து விடுகிறது. கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு முழுவதுமாக கிடைக்காமல் போவதற்கு இதுவும் காரணம். இன்னொன்று மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதியை நோக்கி கால்வாய் செல்கிறது என்றால் எளிதாகத் தண்ணீர் செல்லும். அதே சற்று பள்ளமான இடத்திலிருந்து மேடான பகுதியை நோக்கிச் செல்ல வேண்டுமென்றால் கால்வாய் வெட்டுவதில் பெரிய பலன் இல்லை. அதனால் அந்தத் திட்டமே நின்றுவிடும் அளவுக்கு சென்றுவிடுகிறது. பல திட்டங்கள் இதனாலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இதற்கு மாற்று முயற்சியாக கான்கிரீட் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் முறை குறித்துதான் ஆய்வு செய்தேன். இந்த கான்கிரீட் குழாய்களைக் கொண்டு செல்வதற்கு பெரிய அளவில் நிலம் தேவையில்லை. தண்ணீரைக் கொண்டு செல்லும் திட்டத்துக்கான செலவும் குறைவு. சீக்கிரத்தில் திட்டப் பணிகளை முடித்துக்கொள்ளவும் முடியும். இதன்மூலம் அனுப்பப்படும் தண்ணீர் ஆவியாதல், திருட்டு, வீணாதல் போன்றவை நடைபெற வாய்ப்பில்லை. தண்ணீர் கொண்டு செல்லும் வழியில் சாலை, ஆறு வந்துவிட்டால் குழாய் திட்டத்தில் எளிதாக நடைமுறைப்படுத்திவிட முடியும். ஆனால், மண் கால்வாய் என்றால் பாலம் கட்டுவது, சாலையை வெட்டுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

கான்கிரீட் குழாய் முறைக்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களை உதாரணமாகச் சொல்லலாம். சாலையோரங்களில் கூட இந்தக் குழாய்களைப் பதித்துக் கொண்டு செல்ல முடியும். பாலங்கள், மேடான பகுதிகள் என்று எல்லா இடங்களிலும் எளிதாக இந்தக் குழாய்களை அமைக்க முடியும். இதற்கு விவசாய நிலங்கள் பெரியளவில் தேவைப்படாது. இதனால் விலைமதிப்பில்லாத விளைநிலங்கள் காப்பாற்றப்படும்.

அரசுக்கும் பல பாசன, குடிநீர் திட்டங்களில் இந்த முறையையே பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். தற்போது அத்திக்கடவு /அவினாசி திட்டத்தில்கூட சாலையோரங்களில் குழாய் பதித்து கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எனக்குப் பின்பு, ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த ஆய்வு ஏதோ ஒரு விதத்தில் பலனளித்தால் அதுவே மகிழ்ச்சி” என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு