Published:Updated:

800 குடும்பங்களுக்குக் காய்கறிகள்... விவசாயிகளை உருவாக்கும் இளம்பெண்!

அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
அர்ச்சனா

படிச்சோம் விதைச்சோம்

800 குடும்பங்களுக்குக் காய்கறிகள்... விவசாயிகளை உருவாக்கும் இளம்பெண்!

படிச்சோம் விதைச்சோம்

Published:Updated:
அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
அர்ச்சனா

திருவள்ளூர் மாவட்டம், செம்பேட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அர்ச்சனாவின் ஒருங்கிணைந்த பண்ணை. பசுமையான காய்கறிகளையும் கீரைகளையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துக்கொண்டிருந்த அர்ச்சனாவிடம் பேசினோம்.

“எனக்குச் சொந்த ஊர் தேனி. காலேஜ் படிக்கும்போதே என் நண்பர்களோடு சேர்ந்து கிராமப்புறங்கள்ல ஒரு புராஜெக்ட் பண்ணிணோம். அந்த அனுபவத்த வெச்சு கணவரோடு சேர்ந்து வீட்டுல மாடித்தோட்டம் அமைச்சோம். இயற்கை உரங்களைப் போட்டுப் பயிர்கள வளர்க்கும் முறைகள பத்தி இயற்கை விவசாயி ஒருத்தர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டோம். பஞ்சகவ்யா, அடுப்புச்சாம்பல், பிண்ணாக்கு வெச்சு, மாடித்தோட்டத்துல விவசாயம் செய்தோம். அதுல விளைஞ்ச காய்கறிகள் தனிச்சுவையா இருந்துச்சு. எங்க தேவைப்போக மீதமான காய்கறிகளை அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களுக்குக் கொடுத்தோம். ஒரு கட்டத்துல காய்கறிகளை விலைக்குக் கேக்க ஆரம்பிச்சாங்க. அப்பத்தான் இயற்கை விவசாயக் காய்களுக்கு இருக்குற மதிப்பு தெரிஞ்சது. அதனால இதையே முழுநேர தொழிலா செய்யலாம்னு நானும் என் கணவரும் முடிவெடுத்தோம். திருவள்ளூர் மாவட்டத்துல ரெண்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தோம்” என்ற அர்ச்சனா கீரைகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

800 குடும்பங்களுக்குக் காய்கறிகள்... விவசாயிகளை உருவாக்கும் இளம்பெண்!

“விவசாயத்துக்கு வரணும்னு நினைச்சப்போ எங்களுக்கு உதவியா இருந்தது பசுமை விகடன்தான். அந்தப் புத்தகத்துல வந்த விவசாயிகளை நேர்ல சந்திச்சோம். அதனால எங்களுக்குக் கிடைச்ச புரிதல்கள் அதிகம். நிறைய பேரை அறிமுகம் செஞ்சு வெச்சு, பாதையைத் தெளிவாக்குனதுல பசுமை விகடனுக்கு முக்கியமான பங்கு இருக்கு. முதல்ல தர்பூசணிச் சாகுபடி செஞ்சோம். இயற்கை வழி விவசாயத்துல விளைஞ்சதால தர்பூசணி நல்ல சுவையோட இருந்துச்சு. நிறைய பேர் தேடி வந்து வாங்கிட்டுப் போனாங்க. அப்ப கிடைச்ச வரவேற்பு, எங்களுக்கு ஊக்கமா இருந்துச்சு. அடுத்தகட்டமா புடலை, பாகல், பூசணி, தக்காளி, கத்திரி, வெங்காயம்னு நடவு செஞ்சோம். மிளகாய், கீரைகள், முள்ளங்கியை ஊடுபயிரா நடவு செஞ்சோம்.

இயற்கை விவசாயக் காய்கறிகளோட சுவை, நிறைய பேரை எங்க வாடிக்கையாளர்களா மாத்திச்சு. திண்டிவனம் பக்கத்துல இன்னொரு 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தோம். நிறைய பேர் கீரைகள் வேணும்னு கேட்டதால 20 வகையான கீரைகளைத் தனியா பயிர் செய்துகிட்டு இருக்கோம்” என்றவர் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்.

“முதல்ல 20 வகைக் கீரைகள், 25 வகையான காய்கறிகளை வாடிக்கை யாளர்களுக்குக் கொடுத்தோம். இதுல இருந்து வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான காய்கறிகளைத் தேர்வு செஞ்சுகிட்டாங்க. தேர்வு செய்த காய்கறிகளை வாரம் 10 கிலோ வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே கொண்டு போய்க் கொடுத்திடுவோம். அதுக்கு அவங்க, மாசம் 3,000 ரூபாய் சந்தா கட்டணும்னு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துனோம். அந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. ஆனா, அதுல அதிகமான சிக்கல் இருந்தனால அந்தத் திட்டத்தைக் கொஞ்ச நாள்ல நிறுத்திட்டோம்.

வாடிக்கையாளர்கள்கிட்ட, ‘நீங்களே இயற்கை விவசாயம் பண்ணுங்க... நாங்க வழிகாட்டுறோம்னு சொன்னோம்’ நிறைய பேருக்கு ஆர்வம் இருந்துச்சு. ஆனா, விவசாயம் பண்ண இடம் இல்லை, நேரம் இல்லைனு தயங்குனாங்க. அப்போதான் விவசாயிகளையும் மக்களையும் ஒருங்கிணைச்சா என்னனு ஒரு எண்ணம் தோணுச்சு. நிறைய விவசாயிகள்கிட்ட பேசினோம். அவங்க நிலத்துல எங்க வாடிக்கையாளர்கள் கேட்குற காய்கறிகளை விளைய வெச்சு கொடுக்குறாங்க. இதன் மூலமாக 80 விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கோம். அதுமட்டுமல்ல, விவசாயம் செய்ய விரும்புற வாடிக்கையாளர்களுக்கு, விதைப்புல இருந்து அறுவடை வரைக்கும் விவசாயிகள் சொல்லிக்கொடுப்பாங்க” என்ற அர்ச்சனா இயற்கை விவசாயிகளை உருவாக்கி ஒருங்கிணைக்கும் திட்டத்தின் வெற்றி குறித்துப் பேசினார்.

“எங்களோட நிலத்தில் விளைந்த மொத்த காய்கறிகளை ஒருங்கிணைத்து வாரம் ஒருமுறை, காய்கறிகள், பழங்கள் பட்டியலை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்குறோம். அதிலிருந்து ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தேவையான அளவு காய்கறிகளைத் தேர்வு செய்து வாங்குறாங்க. இப்போ பாரம்பர்ய அரிசி வகைகள், விவசாயிகள் மதிப்புக் கூட்டல் செய்து தரும் பொருள்களையும் அறிமுகப்படுத்தியிருக்கோம். வெளியே தேடி அலையாம வீட்டுக்கே இயற்கையான காய்கறிகள் கிடைக்குறதால, இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. இதுவரை சென்னையில் 800 குடும்பங்களுக்குக் காய்கறிகள், கொடுத்துட்டு இருக்கோம். வாரவிடுமுறை நாட்கள்ல நிறைய வாடிக்கை யாளர்கள், அவங்க குழந்தைகளை அழைச்சுட்டு வந்து விவசாயம் கத்துக்க ஆரம்பிச்சுருக்காங்க. நம்முடைய பாரம்பர்யத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகும் சின்ன முயற்சிதான் இது. நிறைய விவசாயிகளை உருவாக்கணும்ங்கிற திட்டமும் இருக்கு. இன்னும் வரக்கூடிய காலங்கள்ல விவசாயம், பெருமைப்படக்கூடிய கெளரவமான தொழிலாக நிச்சயமா மாறும்” என்றபடி விடைகொடுத்தார் அர்ச்சனா.

தொடர்புக்கு, அர்ச்சனா,

செல்போன்: 82200 4350280

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism