Published:Updated:

இனி ஒவ்வொரு பள்ளியிலும் காய்கறித்தோட்டம் கட்டாயம் - மத்திய அரசின் புதிய உத்தரவு!

`ஒவ்வொரு மாநிலத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டத்தை உருவாக்கிப் பராமரிக்க வேண்டும்’

காய்கறித் தோட்டம்
காய்கறித் தோட்டம் ( vikatan )

பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அக்டோபர் 15-ம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் அறிக்கை அனுப்பியிருக்கிறது. பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் போன்றவற்றின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காய்கறித் தோட்டம்
காய்கறித் தோட்டம்
vikatan

இந்தத் திட்டங்களின் ஒரு செயல்பாடாகப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது. இட வசதியுள்ள பள்ளிகளில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தோட்டம் அமைத்து வருகின்றனர். விவசாயம் மற்றும் இயற்கையின் முக்கியத்துவம், இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிப்பதன் நன்மைகளை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்வதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் குறைவான எண்ணிக்கையிலான பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. தற்போது பள்ளிகளில் மீண்டும் இத்திட்டம் புத்துயிர் பெறும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களிலும் அமைந்துள்ள அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டத்தை உருவாக்கிப் பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்களை மனித வள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளைக் கொண்டு பள்ளிகளில் மதிய உணவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காய்கறித் தோட்டம்
காய்கறித் தோட்டம்
vikatan

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் கல்விச் செயலாளர்களுக்குப் பள்ளி ஊட்டச்சத்துத் தோட்டங்களுக்கான வழிமுறைகளை அனுப்பியுள்ளதுடன், அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் அமைக்குமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, சமையலறைத் தோட்டம் அமைப்பதற்கான விதைகள், மரக்கன்றுகள், கரிம உரம், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெறலாம். அதற்காக ஒவ்வொரு மாவட்ட கே.வி.கே, வேளாண்மை / தோட்டக்கலைத் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வனத்துறை ஆகியோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவை தவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கான எல்லைச் சுவர்களைக் கட்டுவது, காய்கறித் தோட்டத்திற்கான நிலத்தைச் சமன் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் காய்கறித் தோட்டத்தை அமைப்பதற்கு இயற்கை விவசாய முறையைப் பின்பற்ற வேண்டும்.

காய்கறித் தோட்டம்
காய்கறித் தோட்டம்
vikatan

நகரமயமாக்கல் மற்றும் பெருகிவரும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் வேகமாக வளர்ந்துவரும் நேரத்தில், பள்ளிகளில் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவது, குழந்தைகளிடையே நல்ல பழக்கங்களை வளர்ப்பது உள்ளிட்ட நோக்கத்துடன் சமையலறை தோட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குழந்தைகள் பள்ளிகளிலும் வீடுகளிலும் சமையலறைத் தோட்டங்களை அமைப்பது, பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பதற்கான திறன்களையும் ஆர்வத்தையும் அதிகரிக்க உதவும்.

இந்தத் திட்டத்திற்கு நகரங்களில் இருக்கும் பள்ளிகள் சரிவர ஒத்துழைப்பு தருவதில்லை. போதிய இடமின்மைதான் அதற்குக் காரணமாகவும் சொல்லப்பட்டுள்ளது. இப்போது அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில், அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. காய்கறித் தோட்டம் அமைக்க நிலம் இல்லாத பள்ளிகள், தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். அதற்கு அதிகமான இடம் தேவைப்படாது. அதனால் தொட்டிகள், வாளிகள், பிளாஸ்டிக் பாத்திரங்களில் காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் எனப் பலவும் இடம்பெறும் வகையில் விரிவான தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டப்பட்டுள்ளது.

காய்கறித் தோட்டம்
காய்கறித் தோட்டம்
vikatan

நஞ்சில்லா உணவை, பள்ளிகளில் உற்பத்திசெய்து மதிய உணவில் பயன்படுத்துவதுதான் காய்கறித் தோட்ட திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த நேரத்தில் இதுபோல அறிவிப்பு வந்திருப்பது மாணவர்களுக்குக் காய்கறி பற்றிய விழிப்புணர்வையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் கூட்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பசுமை விகடன் இதழ் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே, வீட்டுக் காய்கறித் தோட்டம்பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. பசுமை விகடனைப் படித்த பள்ளி ஆசிரியர்களும் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்து மாணவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இதற்கான காய்கறித் தோட்ட திட்டத்துக்கான விதையைத் தூவியதில் பெருமை கொள்கிறது, பசுமை விகடன்.

Vikatan