நாட்டு நடப்பு
Published:Updated:

“நாலு பேரு நிம்மதியா இளைப்பாறினா போதும்!” ஊரெங்கும் மரம் வளர்க்கும் காய்கறி வியாபாரி!

 மரக்குழந்தைகளுடன் ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
மரக்குழந்தைகளுடன் ராஜா

மரம் வளர்ப்பு

‘மரக்குழந்தைகள் விற்பனைக்கு இல்லை’ என்ற வாசகத்துடன் வரவேற்கிறது, புதுக்கோட்டை வடக்கு வீதியில் அமைந்துள்ள மரம் அறக்கட்டளை. பொது இடங்களில் நடுவதற்காக இங்கு ஏராளமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ‘மரக்குழந்தைகளைப் பூமித்தாயின் மடியமர்த்திக் கொடுப்போம்... புதுக்கோட்டையைப் பசுமை கோட்டையாக்குவோம்’ என இங்கு எழுதப்பட்டுள்ள வாசகம் நம் கவனம் ஈர்க்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான ராஜா தன்னுடைய சொந்த செலவில் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வருகிறார். அவற்றைப் பள்ளி மைதானம், அரசு அலுவலகங்கள், நீர்நிலைகள், சாலையோரம் எனப் பொது இடங்களில் நடவு செய்வதோடு மட்டுமல்லாமல், முறையாகக் கூண்டு அமைத்து, தண்ணீர் ஊற்றியும் பரமாரித்து வருகிறார். சமூக நோக்கத்தோடு செயல்படுகிறவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுத்தும் பசுமை சேவையாற்றி வருகிறார்.

மரக்கன்றுகள் உற்பத்தி
மரக்கன்றுகள் உற்பத்தி

இவருடைய செயல்பாடுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள, ஒரு பகல்பொழுதில் மரம் அறக்கட்டளையின் பண்ணைக்குச் சென்றோம். நாற்றங்காலில் உயிர் பிடித்து ஓரளவுக்கு வளர்ந்த நிலையில் இருந்த கன்றுகளைப் பாக்கெட்டுகளில் போடும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. வேம்பு, புளி, பலா, இலுப்பை, வன்னி, அத்தி, பூவரசு, வாதாம், வேங்கை, கொய்யா, ஆலம், அரசு, சொர்க்கம் உள்ளிட்ட இன்னும் பல வகையான மரக்கன்றுகள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. முக்கால் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த நாற்றுப் பண்ணையில் தினந்தோறும் 5 பேர் நிரந்தமாகப் பணியாற்றுகிறார்கள். கன்றுகள் உற்பத்தி, நடவு, பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்காக மாதத்திற்கு 30,000-40,000 ரூபாய் சொந்த பணத்தைச் செலவிடுகிறார் ராஜா.

கன்றுகள் உற்பத்தி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராஜா, நம்மை வரவேற்று மிகுந்த உற்சாகத்தோடு பேசத் தொடங்கினார். “நான் செஞ்சிக்கிட்டு இருக்குற இந்தப் பணியை ஒரு சேவையா நினைக்கலை. இந்தப் பூமியில நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். நான் வாழ்றதுக்கான எல்லாத்தையுமே இந்தப் பூமித்தாய் கொடுக்குது. அதுக்கான கடனை கொஞ்சம் கொஞ்சமா திருப்பி அடைச்சிக்கிட்டு இருக்கேன். காய்கறி வியாபாரத்துல எனக்குக் கிடைக்குற வருமானத்துல 60 சதவிகிதத்தை, மரக்குழந்தைகளை உற்பத்தி செய்றதுக்காகவும், அதை வளர்க்குறதுக்காகவும் செலவு செய்றேன்’’ என உணர்வுப்பூர்வமாகப் பேசும் இவர், மரக்கன்றுகளை, மரக்குழந்தைகள் என்றே அழைக்கிறார். தொடர்ந்த ராஜா, தன்னைப் பற்றிய தகவல்களையும், மரம் வளர்ப்பில் எப்படித் தனக்கு ஆர்வம் ஏற்பட்டது என்பது குறித்தும் விவரித்தார்.

 மரக்குழந்தைகளுடன் ராஜா
மரக்குழந்தைகளுடன் ராஜா

காய்கறி வியாபாரம்

‘‘புதுக்கோட்டைதான் எனக்குச் சொந்த ஊர். பன்னிரண்டாவது முடிச்சிட்டு, திருச்சியில உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில படிச்சேன். அப்ப திருச்சி காந்தி மார்க்கெட்டுல என்னோட அக்கா வீட்டுக்காரரு காய்கறிக்கடை நடத்திக்கிட்டு இருந்தாரு. கல்லூரி நேரம் போக, மீதியுள்ள நேரத்துல காய்கறி கடைக்குப் போனேன். அதுல எனக்கு ஆர்வம் அதிகமானதுனால, கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுட்டு, 1990-ம் வருஷம் புதுக்கோட்டையில காய்கறிக்கடையை ஆரம்பிச்சேன்’’ என்று சொன்னவர், மரம் வளர்ப்பில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதற்கான அந்தத் திருப்புமுனை தருணத்தை விவரித்தார்.

“இந்த கீழராஜ வீதி பகுதியில மிக குறைஞ்ச மரங்கள்தான் இருந்துச்சு. வெப்பமும் அதிகமா இருந்ததால மரங்களோட தேவையை அதிகமா என்னால உணர முடிஞ்சது. ‘நாமலும் இங்கதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இந்தப் பகுதியில வெயில் வாட்டி எடுக்குது. ஆனா நிழல் தரக்கூடிய மரங்களே இல்லை. இதை நாமலும் கண்டுக்காம இருந்திருக்கோம். உடனடியா, கீழ ராஜ வீதி முழுக்க மரங்களை நடணும்’னு முடிவு பண்ணேன். இதுக்காக, நண்பர்கள் சிலர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘மரம் நடுறது எல்லாம் சரி, ஆனா யார் அதுக்குத் தினமும் தண்ணீர் ஊத்துறது’னு கேள்வி எழுப்பினாங்க.

மரக்கன்றுகள் உற்பத்தி
மரக்கன்றுகள் உற்பத்தி

ஜீப்ல தண்ணீர் கொண்டு போனேன்

யார் வர்றாங்களோ இல்லையோ, நாம கண்டிப்பாக இதைச் செஞ்சாகணும்னு ஒரே முடிவா இருந்தேன். அடுத்த சில நாள்கள்லயே மரக்குழந்தைகளை (மரக்கன்றுகளை) விலைக்கு வாங்கி, அண்ணா சிலை தொடங்கி பிருந்தாவனம் வரைக்கும் ரெண்டு பக்கமும் நடவு செஞ்சேன். அப்ப கடுமையான வெயில் காலம். பெரிய டேங்க்ல தண்ணீர் நிரப்பி, அதை ஜீப்ல எடுத்துக்கிட்டு போயி, தினந்தோறும் அந்த மரக்குழந்தைகளுக்குத் தண்ணீர் ஊத்தினேன். அந்த குழந்தைங்கநல்லா உயரமா வளர்ந்து, நிறைய கிளைகள் பரப்பி இப்ப நிழல் கொடுத்துக்கிட்டு இருக்கு. வயசானவங்க, குழந்தைங்கள்னு பலரும் அந்த நிழல்ல இளைப்பாறிக்கிட்டு இருக்குறதை பார்க்குறப்ப மனசுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. அங்கவுள்ள மரக்குழந்தைகளோட நிழல்ல நிறையபேர் கடைபோட்டு பொழச்சிக்கிட்டு இருக்காங்க. பூமித்தாயோட மடியில நாம அமர்த்தின மரக்குழந்தைகள், நல்லா வளர்ந்து பெரிய புள்ளைகளாக நிக்கிறதைப் பார்க்குறப்ப ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. அதனால மரக்குழந்தைகள் வளர்ப்புல ஈடுபாடு அதிகமாச்சு. புதுக்கோட்டை நகரம் முழுக்கப் பரவலா, மரக்கன்றுளை நடவு செய்யணும்னு ஆசைப்பட்டேன். இங்க உள்ள பெரும்பாலான தெருக்கள்ல மரக்குழந்தைகளை நட்டேன். இதுக்கு என்னோட ஒரு சில நண்பர்கள், பொதுமக்களும் உறுதுணையா இருந்தாங்க.

அடுத்தக்கட்ட முயற்சியா... மரம் அறக்கட்டளையை ஆரம்பிச்சி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், குளம், கண்மாய் உள்ளிட்ட பொது இடங்கள்ல மரங்கள் வளர்க்க ஆரம்பிச்சேன். அரிமளம் பக்கத்துல கல்லுக்குடியிருப்புங்கற ஊர்ல இருந்துதான் மரக்குழந்தைகளை விலைக்கு வாங்கி நடவு செஞ்சிக்கிட்டு இருந்தேன்.

மரக்கன்றுகள் உற்பத்தி
மரக்கன்றுகள் உற்பத்தி

நாற்றுப் பண்ணைக்கு இடம் தந்த குடும்ப நண்பர்

பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில மொத்தமா வாங்கிக்கிட்டு வர்ற மரககுழந்தைகளை , என்னோட நண்பரோட வீட்ல வச்சிருந்து, பிறகு அங்க இருந்து எடுத்துக்கிட்டுப் போயி பொது இடங்கள்ல நடவு செஞ்சிக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் அவர், எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிடுங்கன்னு சொல்லிட்டாரு. அந்தச் சூழ்நிலையிலதான் எங்க குடும்ப நண்பர் ஜெயராம் மனமுவந்து இந்த இடத்தைக் கொடுத்தாரு. புதர் மண்டிக்கிடந்த இடத்தைச் சுத்தம் பண்ணி, கன்றுகளைப் பாதுகாப்பா வச்சிருந்தேன். அதுக்குப் பிறகு இங்கயே நாற்றுப்பண்ணை அமைச்சி, என்னோட சொந்த செலவுல கன்றுகள் உற்பத்தி செய்ய ஆரம்பிச்சேன். நாற்றங்கால்ல... மாட்டு எரு, மண்புழு உரம், மரத்தூள், ஆட்டு எரு, செம்மண் போட்டு, அதுல விதைகளை விதைச்சுக் கன்றுகள் உற்பத்தி செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

மரக்கன்றுகள் உற்பத்தி
மரக்கன்றுகள் உற்பத்தி

விதைகள் சேகரிக்க, வெளிமாநிலங்களுக்குப் பயணம்

நாளடைவுல தமிழ்நாட்டுல பல்வேறு மாவட்டங்கள்ல மரம் வளர்ப்புல ஈடுபடக்கூடிவங்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கிட்டேன். பல விதமான மரங்களோட விதைகளைச் சேகரிக்குறதுக்காக, ஆந்திரா, கேரளா, கர்நாடகானு வெளிமாநிலங்களுக்குப் பயணிக்க ஆரம்பிச்சேன். சேகரிச்ச விதைகளை நாற்றாங்கால்ல போட்டு மரக்கன்றுகளை உற்பத்தி செஞ்சிக்கிட்டு இருக்கேன். இப்போதைக்கு என்னோட நாற்றுப்பண்ணையில மா, பலா, புளி, வேம்பு, இலுப்பை, அத்தி, பாதாம், நாவல், மகிழம், கருங்காலி உள்பட இன்னும் பல விதமான மரக்குழந்தைகள் ஒரு லட்சத்துக்கு அதிகமான எண்ணிக்கையில இருக்கு.

மரக்கன்றுகள் உற்பத்தி
மரக்கன்றுகள் உற்பத்தி

இலுப்பை மரங்களைப் பரவலாக்குவோம்

சமீபகாலமா, தமிழ்நாட்டுல இலுப்பை மரங்களோட எண்ணிக்கை, ரொம்பவே குறைஞ்சிப் போயி, கவலைப்படக்கூடிய நிலையில இருக்குனு கேள்விப்பட்டேன். இலுப்பை மரங்களைப் பரவலாக்கம் செய்யணும்னு முடிவெடுத்து, பிரான்மலையில இருக்குற ரொம்பப் பழமையான இலுப்பை மரத்துல இருந்து விதைகளைச் சேகரிச்சி, எடுத்துக்கிட்டு வந்து, இந்த நாற்றுப்பண்ணையில விதைச்சு, 1 லட்சம் இலுப்பை மரக்கன்றுகளை உருவாக்கி, மாவட்டம் முழுக்கப் பரவலா நடவு செய்திருக்கேன். இதுக்கிடையில நம்மோட பாரம்பர்யமான மற்ற மரங்களையும் நடவு செஞ்சிருக்கேன்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7,000, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் 4000, புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள்ல ஆயிரக்கணக்கான மரக்குழந்தை களைஉருவாக்கி இருக்கேன். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகம், நீதிமன்ற வளாகம், மன்னர் கல்லூரி, மகளிர் கலை கல்லூரி... இப்படி இன்னும் பல இடங்கள்ல மரக்கன்றுகளை நடவு செஞ்சிருக்கேன். அதுல பெரும்பாலான கன்றுகள் நல்லா வளர்ந்து பெரிய மரங்களாகி, நிழல் கொடுத்துக்கிட்டு இருக்கு. இந்த 4 வருஷங்கள்ல, 3.80 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கியிருக்கேன். இதுல 50 சதவிகித கன்றுகளை நானே என்னோட சொந்த செலவுல நடவு செஞ்சி, கூண்டுகள் அமைச்சிருக்கேன். கோடை காலங்கள்ல தண்ணீரும் ஊத்திக்கிட்டு இருக்கேன். ஒரு சிலர் தங்களால் முடிஞ்ச உதவிகளைச் செய்றாங்க.

சாலையில் நட்ட மரங்களுடன்
சாலையில் நட்ட மரங்களுடன்
சாலையில் நட்ட மரங்களுடன்
சாலையில் நட்ட மரங்களுடன்

மாசத்துக்கு 30,000-40,000 ரூபாய் செலவு பண்றேன்.

எந்த ஒரு சூழ்நிலையிலயும் மரக்குழந்தைகளை விலைக்குக் கொடுக்குறதில்லை. சமூக நோக்கத்தோடு கேட்குறவங்களுக்கு இலவசமா கொடுக்குறேன். ஆனா கொடுக்குறதுக்கு முன்னாடி, அவங்க குழிகள் எடுத்து தயாரா வச்சிருக்கணும். அங்க போயி நேர்ல பார்ப்பேன். உண்மையான ஈடுபாட்டோடு பராமரிப்பாங்களானு விசாரிப்பேன். கூண்டுகளும் தயாரா வச்சிருக்கணும். அங்க தண்ணி வசதியும் இருந்தாகணும். இதையெல்லாம் உறுதி செஞ்ச பிறகுதான் மரக்குழந்தைகளைக் கொடுப்பேன். 25 வருஷத்துக்கு முன்னாடி நான் சின்ன அளவுல ஆரம்பிச்ச காய்கறி கடை, என்னோட கடுமையான உழைப்புனால, நாளடைவுல காய்கறிகள் மொத்த விற்பனை நிலையமா வளர்ச்சி அடைஞ்சிருக்கு. இதுல எனக்கு நிறைவான வருமானம் வருது. மரக்குழந்தைகளை வளர்க்கிறதுக்கு வேற யார்க்கிட்டயும் நன்கொடையோ, வேற உதவிகளையோ நான் கேக்குறதில்லை.

நாம வச்ச மரக்குழந்தைகளோடநிழல்ல நாலு பேரு நிம்மதியா இளைபாறினா போதும். அதுதான் எனக்கு ஆத்ம திருப்தி’’ என மனநிறைவுடன் தெரிவித்தார் ராஜா.