Published:Updated:

தக்காளி கிலோ ₹120, வெண்டைக்காய் ₹100; உச்சத்தில் காய்கறி விலை; எப்போது குறையும்?

``தக்காளி, அவரைக்காய், கத்திரிக்காய் சாகுபடி செய்திருந்த வயல்களில் தண்ணீர் தேங்குகிறது. சில இடங்களில் வயல்களே மழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்குவதால் அறுவடை செய்ய முடியாத நிலை நீடிக்கிறது." - சௌந்தரராஜன்

சென்னையில் காய்கறி விலையானது பெட்ரோல், டீசல் விலையைவிட அதிகமாக இருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார்கள் சென்னை இல்லத்தரசிகள். தக்காளி விலையின் காரணமாக நிறைய வீடுகளில் தக்காளி இல்லாமலேயே சாம்பார் வைக்கப்படுகிறது. கொத்தமல்லி இல்லாமலேயே ரசம் வைக்கப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட சுவடு ஒருபக்கம், இன்னொரு பக்கம் காய்கறி விலையின் காரணமாக கவலையைக் கொண்டிருக்கிறார்கள் சென்னை மக்கள்.

இதுகுறித்து சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த இல்லத்தரசி விஜயாவிடம் பேசியபோது, ``போன சனிக்கிழமை பச்சை மிளகாய் கிலோ 200 ரூபாய்னு சொல்றாங்க. எனக்கு பகீர்னு ஆயிடுச்சு. இன்னைக்குத் தக்காளி கிலோ 120 ரூபாய்னு சொல்றாங்க. சரி வெண்டைக்காய் விலை கேட்டால் 100 ரூபாய்னு சொல்றாங்க இப்படி எந்த பொருளை எடுத்தாலும் விலை அதிகமாக சொல்றாங்க. சரி ரசம் வைக்கலாம்னு பார்த்தா கொத்தமல்லி கட்டு 40 ரூபாய்னு சொல்றாங்க.

காய்கறிகளின் விலை விவரம்
காய்கறிகளின் விலை விவரம்
`இவை அத்தனையையும் மீறித்தான் வென்றார்கள்!' - விவசாயிகளின் போராட்டம் தேசத்துக்கு சொல்வது என்ன?

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை காரணமாக காய்கறி விலை அதிகமாத்தான் இருக்கு. இப்போ மழை பெய்ஞ்சதால காய்கறி விலையெல்லாம் இன்னும் ஏறிப்போச்சு. தக்காளி இல்லாமதான் மூணு நாளா சாம்பார் வெச்சுகிட்டு இருக்கோம். வீடுகளுக்கே இந்த நிலைமை என்றால் ஹோட்டல்கள நினைச்சா இன்னும் பயமாத்தான் இருக்கு. அரசு இதுக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கணும்” என்றார் கண்ணீர் வராத குறையாக.

இதுகுறித்து சென்னை, கோயம்பேடு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க ஆலோசகரும், உருளைக்கிழங்கு மொத்த வியாபாரிகள் சங்க தலைவருமான சௌந்தரராஜனிடம் பேசியபோது, “சென்னைக்குக் காய்கறிகள் அனுப்பும் ஆந்திரா, கர்நாடகா, தமிழகப் பகுதிகளில் கடும் மழை காரணமாக காய்கறிச் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் லாரிகள் வரும் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் லாரிகளில் கோயம்பேடுக்கு லோடு வருவதே பெரும் பாடாக இருக்கிறது. அப்படியே வந்தாலும் குறைவாகத்தான் வருகிறது. சரி... பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து மற்ற பகுதிகளிலிருந்து காய்கறிகளை வரவைக்கலாம் என்று விசாரித்தாலும் அங்கேயும் நிலைமை இதுவாகத்தான் இருக்கிறது. சென்னை மட்டுமில்லை. தமிழகம் முழுக்க காய்கறிகளின் நிலைமை இதுதான்.

சௌந்தரராஜன்
சௌந்தரராஜன்

தக்காளி, அவரைக்காய், கத்திரிக்காய் சாகுபடி செய்திருந்த வயல்களில் தண்ணீர் தேங்குகிறது. சில இடங்களில் வயல்களே மழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்குவதால் அறுவடை செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இதுமட்டுமில்லாமல் இன்னும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதனால், இதெல்லாம் சீரடைய எப்படியும் ஒரு மாதம் ஆகிவிடும். அதுவரை இந்த விலையுயர்வு இப்படித்தான் இருக்கும். எனவே அதற்கேற்றவாறு மக்கள் தங்கள் வீடுகளில் சமைக்கும் முறைகளை மாற்றியமைத்துக் கொள்வது நல்லது.

Vikatan

வரும் காய்கறிகளில் ஒன்றிரண்டு விலை குறைவாக இருக்கும். அதை வைத்து சமாளித்துக் கொள்ளவும். ஆனால், எக்காரணம் கொண்டு காய்கறி சப்ளை தடைபடாது” என்றார்.

போர்க்கால அடிப்படையில் காய்கறி விலை உயர்வுக்கு அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு