Published:Updated:

தக்காளி, கத்திரி, வெண்டை... ஆடிப்பட்ட காய்கறிகள் விலை எப்படி இருக்கும்?

காய்கறிகள்
பிரீமியம் ஸ்டோரி
காய்கறிகள்

முன்னறிவிப்பு

தக்காளி, கத்திரி, வெண்டை... ஆடிப்பட்ட காய்கறிகள் விலை எப்படி இருக்கும்?

முன்னறிவிப்பு

Published:Updated:
காய்கறிகள்
பிரீமியம் ஸ்டோரி
காய்கறிகள்

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. தமிழகத்தைப் பொறுத்தவரை... தென்மேற்குப் பருவ மழையை எதிர்நோக்கி பெரும்பாலும் ஆடிப்பட்டத்தில்தான் தானியங்கள், எண்ணெய் வித்துகள் மற்றும் காய்கறிகள் அதிகள அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், இந்தப் பருவத்துக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் எந்தப் பயிரை சாகுபடி செய்தால் லாபகரமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானிப்பதற்கு இந்த முன்னறிவுப்பு வழிகாட்டுகிறது.

இந்தியாவில் தேசிய தோட்டக்கலை வாரியம் ஆண்டுதோறும், இந்திய அளவில் விவசாய உற்பத்தியைப் பற்றி கணித்துவருகிறது. அந்த வகையில், 2021-22-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், 2022-23-ம் ஆண்டில் விளைச்சல் எப்படி இருக்கும் என்கிற கணிப்பைக் கொடுத்துள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகியவற்றின் விளைச்சல் மற்றும் விலை நிலவரம் இந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எப்படி இருக்கும் என்று வேளாண் பல்கலைக்கழக ஆய்வு மையம் கணித்துள்ளது.

தக்காளி
தக்காளி

தக்காளி

இந்தியாவில் 8.31 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 203 லட்சம் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்தான் அதிகள‌வில் தக்காளியை உற்பத்தி செய்கின்றன. இந்தியாவின் மொத்த தக்காளி உற்பத்தியில், தமிழ்நாடு 7 சதவிகிதம் பங்களிக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆடி மாதத்தில்தான் தக்காளி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்ட சந்தைகளுக்கு உடுமலைப்பேட்டை, ஆலந்துறை, பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு, சேலம் மற்றும் சென்னிமலை ஆகிய பகுதிகளிலிருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. ஜூலை மாதத் தொடக்கத்தில் கர்நாடகாவிலிருந்தும் தக்காளி வரத்து இருக்கும். இவ்வரத்தானது ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கும்.

2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரை எடுக்கப்பட்ட சந்தை கள ஆய்வின்படி ஜூலை முதல் ஆகஸ்ட் வரை தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கத்திரி
கத்திரி

கத்திரி

இந்தியாவில் 7.44 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 7.44 லட்சம் டன் கத்திரி உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத், மேற்கு வங்கம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கத்திரி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் கத்திரி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். கோயம்புத்தூர் மாவட்ட சந்தைகளுக்குப் பொள்ளாச்சி, நாச்சிபாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளிலிருந்து கத்திரி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோயம்புத்தூர் மக்கள், பளபளப்பான அடர் ஊதா நிற கத்திரி ரகங்களையே விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான கத்திரிக்காயின் பண்ணை விலை கிலோவுக்கு 25 ரூபாய் முதல் 27 ரூபாய் வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

வெண்டைக்காய்
வெண்டைக்காய்

வெண்டை

இந்தியாவில் 5.23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 64.16 லட்சம் டன் வெண்டை உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத், மேற்கு வங்கம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் வெண்டை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்கள் வெண்டை உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்கள் ஆகும். கோயம்புத்தூர் மாவட்ட சந்தைகளுக்குப் பொள்ளாச்சி, நாச்சிபாளையம், உடுமலைப்பேட்டை மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து வெண்டை விற்பனைக்கு வருகிறது.

தரமான வெண்டையின் பண்ணை விலை கிலோவுக்கு 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு,

1.உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003.

தொலைபேசி: 0422 2431405.

2.இயக்குனர் மற்றும் முனை அதிகாரி, தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம், நீர் நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422 6611278.

தொழில்நுட்ப விவரங்களுக்கு:

3.பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறிப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422 6611374.