Published:Updated:

அரை ஏக்கர், ரூ.1 லட்சம்... நினைத்தாலே ருசிக்கும்... 'இலவம்பாடி முள் கத்திரிக்காய்!'

ரமேஷ்&இலவம்பாடி முள் கத்திரிக்காய்
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ்&இலவம்பாடி முள் கத்திரிக்காய்

வேலூரின் பாரம்பர்யம்!

அரை ஏக்கர், ரூ.1 லட்சம்... நினைத்தாலே ருசிக்கும்... 'இலவம்பாடி முள் கத்திரிக்காய்!'

வேலூரின் பாரம்பர்யம்!

Published:Updated:
ரமேஷ்&இலவம்பாடி முள் கத்திரிக்காய்
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ்&இலவம்பாடி முள் கத்திரிக்காய்

வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டது இலவம்பாடி முள்கத்திரிக்காய். முன்பு இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த இந்தக் கத்திரிக்காய்க்குத் தமிழகம் முழுவதுமே வரவேற்பு அதிகம். குறிப்பாக, வட தமிழக மக்களின் அன்றாடச் சமையலிலும் விருந்துகளிலும் இலவம்பாடி முள்கத்திரிக்காய் கட்டாயம் இடம்பெறும். சுவை விரும்பிகள், இக்கத்திரிக்காயை ரசித்து ருசித்துச் சாப்பிடுவது வழக்கம். அந்தளவுக்கு இதன் சுவையானது தனித்துவம் மிக்கது. ஆனால், காலப்போக்கில் வீரிய ரகக் கத்திரிக்காயின் மீதான மோகத்தினாலும், வேறு சில காரணங்களாலும் பாரம்பர்ய ரகமான இலவம்பாடி முள்கத்திரிக்காய் சாகுபடி செய்வதை இப்பகுதி விவசாயிகளில் பெரும்பாலானோர் படிப்படியாகக் கைவிடத் தொடங்கினார்கள். இந்நிலையில்தான், இதன் மகத்துவத்தை உணர்ந்த சிலர், இதை மீட்டெடுத்து பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கத்திரி வயல்
கத்திரி வயல்

கல்யாணமாகிப் போன பெண்ணுக்கு...

கூடை நிறையக் கத்திரிக்காய்!


இலவம்பாடி முள்கத்திரிக்காயைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள இலவம்பாடி கிராமத்துக்குச் சென்றோம். இந்த ரகத்தைப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டு வரும், விவசாயி ரமேஷ் என்பவரை சந்தித்துப் பேசினோம். ‘‘இலவம்பாடிங்கறது ஒரு சின்ன கிராமம். ஆனா, எங்க ஊர் முள்கத்திரிக்காயால, கிராமத்தோட பேரு நாடு முழுக்கப் பிரபலமாயிடுச்சு. பல தலைமுறைகளா எங்க ஊர் விவசாயிங்க இதைச் சாகுபடி செஞ்சிக்கிட்டு வந்தாங்க. பிறகு, மற்ற கிராமங்கள்லயும் இது அதிக அளவுல சாகுபடி செய்யப்பட்டுச்சு. இன்னும் சொல்லப்போனா, முன்னாடியெல்லாம் இந்தப் பகுதிகள்ல கத்திரிச் சாகுபடினு சொன்னாலே அது இலவம்பாடி முள் கத்திரிக்காயாதான் இருக்கும். கல்யாணமாகிப் போன பொண்ணு, மாப்பிள்ளையோடு தாய் வீட்டுக்கு வந்துட்டு போறப்ப, கூடை நிறையக் கத்திரிக்காயைக் கொடுத்து அனுப்புறதை வேலூர் மக்கள் வழக்கமாகவே வச்சிருந்தாங்க.

வெளியூர்வாசிகளும்கூட வேலூர் வரும் போதெல்லாம், இலவம்பாடி முள் கத்திரிக் காயை ஆசையா கேட்டு வாங்கிக்கிட்டுப் போவாங்க. இதனால சந்தைகள்ல வியாபாரிங்க எப்பவும் இதைக் குவிச்சு வச்சிருப்பாங்க. ஆனா, காலப்போக்குல விவசாயிகள் இதைச் சாகுபடி செய்றதை படிப்படியா கைவிட்டதுனால, சந்தைகள்ல இது கிடைக்குறதே அரிதாயிடுச்சு. வீரிய ரகக் கத்திரிக்காய்க்கு மக்கள்கிட்ட மவுசு அதிகரிச்சதுனால, இலவம்பாடி முள்கத்திரிக்காய்க்கு லாபகரமான விலை கிடைக்கல. அதுமட்டுமல்லாம, இந்தச் செடிகள்ல முள் இருக்குறதுனால, பரமாரிப்புப் பணிகள் செய்றப்ப, கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தாகணும். செடிகள்ல காய்கள் நல்ல உறுதியான பிடிப்புத்தன்மையோடு இருக்குறதுனால, இதைக் கொஞ்சம் சிரமப்பட்டுதான் பறிச்சாகணும். இதைப் பறிக்க வேலையாள்கள் கிடைக்குறதும் தட்டுப்பாடா ஆயிடுச்சு.

இதுமாதிரியான காரணங்களால வேலூர் பகுதி விவசாயிங்க, முள் இல்லாத மற்ற ரகக் கத்திரிக்காய் களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சாட்டங்க. ஆனா, எது எப்படியோ... இதுக்கு என்ன வேணும்னாலும் காரணம் சொல்லலாம். ஆனா, வேலூர் மாவட்டத்தோட பாரம்பர்ய அடையாளமா இருந்துகிட்டு இருந்த இந்தக் கத்திரிக்காய் பெருமளவு கைவிடப்பட்டதுங்கறது எங்களோட மண்ணுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு.

இலவம்பாடி கத்திரிக்காய்
இலவம்பாடி கத்திரிக்காய்

இது சுண்ணாம்புச் சத்து நிறைஞ்ச பூமி. எங்க மண்ணுக்குனு இருந்த தனித்துவமான வளத்துனாலதான், இங்க சாகுபடி செஞ்ச இலவம்பாடி முள்கத்திரிக்காய் தனி ருசியோடு இருந்திருக்கு. அப்பெல்லாம் இந்தப் பகுதி விவசாயிங்க ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி யெல்லாம் பயன்படுத்த மாட்டாங்க. விதைப்புக்கு முன்னால வெள்ளாடுகளை நிலத்துல மேய்ச்சலுக்கு விட்டு, மாடுகளை ஏர் பூட்டி உழவு ஓட்டி இலவம்பாடி முள் கத்திரி விதையை விதைப்பு செய்வாங்க. செடிகள் வளர ஆரம்பிச்ச பிறகு, பன்றி சாணத்துல நெருப்பு மூட்டி புகை போடுறதை யும் வழக்கமாக வச்சிருந்திருக்காங்க. இதனால் பூச்சி, நோய்த்தாக்குதல்கள் கட்டுப்படுத்தப் பட்டுச்சு.

இதன் தனித்துவ அடையாளம்

மற்ற ரக முள் கத்திரிக்காய்களுக்கும் இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கும் உள்ள வேறுபாட்டை ரொம்ப எளிதா கண்டு பிடிச்சுடலாம். இலவம்பாடி ரகக் கத்திரிச் செடியில அனைத்து பாகங்கள்லயும் முள் இருக்கும். இலையோட மேல் பகுதி, அடிப்பகுதி, அடித்தண்டு, காயின் காம்புப் பகுதினு எல்லாத்துலயும் முள் இருக்கும். மற்ற ரக முள் கத்திரிச் செடிகள்ல பெரும்பாலும் இலையோட மேல் பகுதியில மட்டும்தான் முள் இருக்கும்.

நிறம் மாறும் காய்கள்

இலவம்பாடி கத்திரி பிஞ்சுகளா இருக்கும் போது அடர் ஊதா நிறத்துல இருக்கும். காய்களா முதிர்ச்சி அடைஞ்சு விற்பனைக்கு வரும்போது, வெளிர் ஊதா நிறத்துக்கு மாறிடும். காய்களோட தோல் பகுதி நல்ல தடிப்பா இருக்கும்... இவையெல்லாம்தான் இலவம்பாடி முள்கத்திரியோட தனித்தன்மை.

எச்சில் ஊற வைக்கும் எண்ணெய் கத்திரி

இந்தக் கத்திரிக்காய்ல கத்தியால நாலஞ்சு கோடுகளைக் கீறி, இரும்புச் சட்டியில போட்டு எண்ணெய் கத்திரிக்காயா வதக்கு வாங்க பாருங்க... அப்பவே நாக்குல எச்சில் ஊறும். எண்ணெய்க் கத்திரிக்காய்னு சொன்னாலே அது இலவம்பாடி கத்திரிக் காய்தான். அந்தக் காலத்துல, ஆமணக்கு விதைகளோட மேல் தோலை நீக்கிட்டு, அது உள்ளார இருக்குற வெள்ளைப் பகுதியை நசுக்கி, இரும்பு கரன்டியில போட்டு அடுப்புல காட்டுவாங்க. அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி கொதிக்க வெச்ச உடனே எண்ணெய் வரும். அந்த எண்ணெயில உப்பு, மிளகாய்த் தூள் எல்லாம் போட்டு அதுல இலவம்பாடி கத்திரிக்காயை வதக்கி சாப்பிடுவாங்க. அது செம ருசியா இருக்கும். சாம்பார், கூட்டு, பொரியலுக்கும் இந்தக் கத்திரிக்காய் ரொம்ப அருமையா இருக்கும்.

இலவம்பாடி கத்திரிக்காய்கள்
இலவம்பாடி கத்திரிக்காய்கள்

ஜூஸ் போட்டும் குடிப்போம்

இதுல மருத்துவக் குணமும் இருக்கிறதுனால ஜூஸ் போட்டும் குடிக்கிறோம். கொதிக்க வெச்ச தண்ணிய மிக்ஸியில ஊத்தி, அதுல இந்தக் கத்திரிக்காயை வெட்டிப் போட்டு, அரைச்சு வடிகட்டி காலை நேரத்துல வெறும் வயித்துல குடிப்போம். உடம்பு நல்லா சுறுசுறுப்படைஞ்சு ஆரோக்கியமா இருக்கும். பச்சையாகவும் கடிச்சு சாப்பிடுவோம். இந்தக் கத்திரிக்காய்களை நாலஞ்சு துண்டுகளா வெட்டிப் போட்டு, வெயில்ல காய வெச்சு வத்தாலக்கி, எண்ணெய்ல போட்டு வறுத்து சிப்ஸாவும் சாப்பிடுவோம். முன்னாடி யெல்லாம் இந்தப் பகுதிகள்ல வீட்டு விசேஷங்கள், படையல்கள்லயும் இந்தக் கத்திரிக்காய் ஏதோ ஒரு வகையில நிச்சயம் இடம்பெறும். ஆனா, இப்பெல்லாம் அப்படியில்ல. இதைப் பயன்படுத்துறதும் அரிதாயிடுச்சு. விவசாயிங்க இதைப் பயிர் பண்றதும் அரிதாயிடுச்சு. இது நம்மூரோட பாரம்பர்யம்... இதைக் கைவிட்டுடக்கூடாதுனு ஒரு சில விவசாயிங்க, ஆர்வமா இதைப் பயிர் பண்ணிகிட்டு இருக்காங்க.

அதிக நாள்கள் வயசுடைய நாற்றுகள் சிறப்பானவை

அதிக நாள்கள் வயசுடைய நாற்றுகளா நட்டோம்னா, பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கும். நான் இள நாற்றுகளும் நட்டேன். அதிக நாள்கள் ஆன முத்தின நாற்றுகளையும் நட்டேன். இள நாற்றுகள்ல உருவான செடிகளைவிட முத்தின நாற்றுகள்ல உருவான செடிகள் நல்லா செழிப்பாவும் திடகாத்திரமாவும் வளர்ந்து அதிக விளைச்சல் கொடுத்துச்சு.

நர்சரியில் நாற்றுகள் வாங்கினால் செலவு அதிகம்

நர்சரியில் நாற்றுகள் வாங்கினோம்னா, அதுக்கே ஏக்கருக்கு 5,000 ரூபாய் செலவு பண்ணியாகணும். நாற்றுகளை விவசாயிகளே உற்பத்தி செஞ்சிகிட்டா, செலவும் குறையும். நாற்றுகள் நல்லா தரமானதாவும் இருக்கும்.

இயற்கை முறை சாகுபடியில்தான் இயல்பான சுவை

5 - 6 அடி உயரத்துக்குச் செடிகள் வளரும். ரசாயன முறையைவிட இயற்கை முறையே சிறந்தது. இதுலதான் செலவும் குறைவு. இலவம்பாடி முள்கத்திரிக்காய்க்குனு உள்ள இயல்பான சுவை, இயற்கை முறை சாகுபடி யிலதான் கிடைக்கும். ஆரோக்கியத்துக்கும் கைகொடுக்கும்.

உழைப்புக்கேற்ற விலை கிடைக்கணும்

நான் அரை ஏக்கர்ல இயற்கை முறையில இலவம்பாடி கத்திரிச் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன் ஒரு யதார்த்தத்தைச் சொல்லணும்னா, இதைச் சாகுபடி செய்றதுங்கறது சவாலான காரியம்தான். காரணம் செடி முழுக்கவே பரவலா முட்கள் இருக்கும். காய்கள் பறிக்குறப்ப முள்ளு கையைக் கிழிச்சிடும். மற்ற ரகக் கத்திரிக்காய்களைச் சும்மா பறிச்சாலே வந்துடும். இலவம்பாடி முள்கத்திரிக்காயை கொஞ்சம் அழுத்திப் பிடிச்சுதான் பறிக்கணும்.

இவ்வளவு கஷ்டப்பட்டுக் காய்களைப் பறிச்சு சந்தைக்குக் கொண்டு போனா, வியாபாரிகள் கிட்ட ஒரு கிலோவுக்கு 20 - 40 ரூபாய்தான் விலை கிடைக்கும். வீரிய ரகக் கத்திரிக்காய்களுக்கு என்ன விலை கிடைக்குதோ அதே விலைதான் இதுக்குக் கிடைக்குது. இது பாரம்பர்ய ரகம்ங்கறதுனாலயோ, இயற்கை முறையில விளைவிச்சதுங்கறதாலயோ, இதுக்கு வியபாரிங்க தனி முக்கியத்துவம் எல்லாம் கொடுக்குறதில்லை. மற்ற ரகக் கத்திரிக் காய்கள் மாதிரி இதை எளிதா பறிச்சிட முடியாது... கைகள்ல முட்கள் குத்தி கஷ்டப்படுத்தும். இதை விவசாயிங்க பறிச்சிக்கிட்டு வர்றாங்கனு வியாபாரிங்க நினைச்சு பார்க்க மாட்டாங்க. இதனால நானே நேரடியா சந்தைகள்ல கடை போட்டு விற்பனை செய்றேன். என்னோட தோட்டத்துக்கே தேடி வந்தும் மக்கள் வாங்கிக்கிட்டு போறாங்க. ரெண்டு நாள் களுக்கு ஒரு தடவை காய் பறிப்பேன். இயற்கை முறையில விளைவிச்சதுங் கறதுனால கிலோவுக்கு 40 - 60 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது.

அட்டவணை
அட்டவணை

வருமானம்

மற்ற நாட்டு ரகக் கத்திரியைவிட, இலவம்பாடி கத்திரியில் மகசூல் சற்றுக் குறைவாகதான் கிடைக்கும். அரை ஏக்கரில் இயற்கை முறையில் இதைச் சாகுபடி செய்தால், 3.5 - 4.5 டன் மகசூல் கிடைக்கும். எனக்குக் கடந்த முறை 4 டன் மகசூல் கிடைச்சது. ஒரு கிலோவுக்கு சராசரி விலையா 40 ரூபாய் வீதம் 1,60,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல எல்லா செலவும் போக 1,00,000 ரூபாய் லாபமா கிடைச்சது’’ என உற்சாகமாகத் தெரிவித்தார்.

தொடர்புக்கு: ரமேஷ்,

செல்போன்: 77080 76393

ஜனாதிபதி, முதல்வர், நம்மாழ்வார்... விரும்பிய இலவம்பாடி கத்திரி!

‘‘இந்திய ஜனாதிபதியாக இருந்த ஆர்.வெங்கட்ராமன் ஒருமுறை வேலூருக்கு வந்தார். அப்ப அவருக்கு வழங்கப்பட்ட உணவுல, இளவம்பாடி முள்கத்திரிக்காயை எண்ணெயில வதக்கி காரசாரமா கொடுத்திருத்தாங்க. அதைச் சாப்பிட்டுப் பார்த்து அசந்துப்போயிட்டாராம். அவரு, டெல்லி போன பின்னாடியும் இலவம்பாடி முள்கத்திரிக்காய் ருசி பத்தி சொல்லிக்கிட்டே இருந்தாராம். தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார். இங்க இருந்து துரைமுருகன்தான் கருணாநிதிக்கு அனுப்பி வைப்பார். ஒருமுறை கருணாநிதி உழவர் சந்தைக்கு வந்தப்ப, அவரே நேரடியா விவசாயிகிட்ட கேட்டு விலைக்கு வாங்கிக்கிட்டு போனாரு.

வெங்கட்ராமன், கருணாநிதி, நம்மாழ்வார், நந்தகுமார்
வெங்கட்ராமன், கருணாநிதி, நம்மாழ்வார், நந்தகுமார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வேலூர் பக்கம் வந்தா, இலவலம்பாடி கத்திரிக்காய் குழம்பு வேணும்ய்யானு விரும்பி சாப்பிடுவார். வாய்ப்பு கிடைக்கும் போதும், இலவம்பாடி கத்திரி பத்தி சுவையாவும் பேசுவார். பசுமை விகடன் இதழ்ல இந்த ரகத்தோட சிறப்பு சம்பந்தமா பல முறை கட்டுரை வந்திருக்கு. இந்த ரகம் மக்கள் மத்தியில மீண்டும் பரவலாக நம்மாழ்வாரும், பசுமை விகடனும் மூலக்காரணம். இப்போ பல விவசாயிங்க, இதை சாகுபடி செய்யத் தொடங்கிட்டாங்க’’ என்கிறார், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பாலகிருஷ்ணன்.

பிரியாணிக்கு ஏற்ற இலவம்பாடி கத்திக்காய் தொக்கு
நந்தகுமார்
``பிரியாணிக்கு புகழ்பெற்ற பகுதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம். முன்னாடியெல்லாம் இதுக்கு இலவம்பாடி கத்திரிக்காய்ல செஞ்ச தொக்கைதான் தொட்டுக்கயா வைப்பாங்க. இந்த ரெண்டும் சேர்ந்து சுவை தூக்கலாயிடும். ஆம்பூர் பிரியாணி புகழடைஞ்சதுக்கு இந்தக் கத்திரிக்காயும் ஒரு முக்கியக் காரணம்’’ என்கிறார்கள் இப்பகுதி சுவை விரும்பிகள்.

எட்டு நாழி கத்திரி, குலசை கத்திரி, தொப்பிக் கத்திரி...

விதை வாங்கிக்கொள்ளலாம்!


இலவம்பாடி கத்திரி உட்பட பாரம்பர்ய கத்திரி விதைகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியில் கிராமப்புற இளைஞர்கள் குழு ஒன்று இப்பகுதியில் வெற்றிக்கரமாகச் செயல்பட்டு வருகிறது. இக்குழுவைச் சேர்ந்த பிரதீப்குமார், “தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்புங்கற பெயர்ல விதைகளைச் சேகரிச்சு விற்பனை செய்றோம். எங்ககிட்ட இலவம்பாடி முள்கத்திரி, மானாவாரி வெள்ளக் கத்திரி, எட்டு நாழி கத்திரி, குலசை கத்திரி, கொட்டாம்பட்டி கத்திரி, தொப்பிக் கத்திரி, நீலமுள் கத்திரி, அத்த கத்திரி விதைகள் இருக்கு. விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள்ல ஸ்டால் போட்டு விதைகளைக் கொடுத்துக்கிட்டு வர்றோம். மாதம்தோறும், ரெண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கக்கூடிய காட்பாடி மக்கள் நலச்சந்தையிலேயும் ஸ்டால் போடுறோம். விதை தேவைப்படும் விவசாயிகள் அங்க வந்து வாங்கிக்கிலாம்’’ என்கிறார்.

கத்திரிக்காய் மற்றும் விதைகள்
கத்திரிக்காய் மற்றும் விதைகள்


ஆண்டு முழுவதும் பயிரிடலாம்!

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளரும் நந்தகுமார், ‘‘இது ஒரு வெப்ப மண்டலப் பயிர். பூர்வீகம் நம் நாடுதான். சுண்டைக்காய், கண்டங்கத்திரி ஆகியவையும் கத்திரி குடும்பத்தைச் சேர்ந்ததுதான். கண்டங்கத்திரியில் முள் அதிகமாக இருக்கும். அந்த வழியில் வந்ததுதான் இலவம்பாடி கத்திரி. இதில் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆண்டு முழுவதும் இதைப் பயிரிடலாம். மூன்று போகமும் விளையக்கூடியது. அனைத்து வகையான மண்ணிலும் நல்ல விளைச்சல் எடுக்கலாம். ஆனால், அதேசமயம் களிமண்ணாக இருந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கி நின்றால் வேர் அழுகிவிடும். பொதுவாக, எந்த வகை மண்ணாக இருந்தாலும் மேட்டுப்பாத்தி முறையில் நாற்றங்கால் அமைத்து இதைப் பயிர் செய்தால் வெற்றிகரமாக விளைவிக்கலாம்’’ எனத் தெரிவித்தார்.

இலவம்பாடி கத்திரிக்கு பெயர் பெற்ற கிராமங்கள்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட இலவம்பாடி, ஈச்சங்காடு, பொய்கை புதூர் மற்றும் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல தலைமுறைகளாக இலவம்பாடி கத்திரி சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. தற்போது சில விவசாயிகள் மட்டும் குறைந்த பரப்பில் இதைத் தொடர்கிறார்கள்.

இப்படித்தான் இலவம்பாடி கத்திரி சாகுபடி!

அரை ஏக்கரில் இலவம்பாடி கத்திரி பயிரிட ராமேஷ் சொல்லிய தொழில்நுட்பங்கள் பாடமாக இடம்பெறுகின்றன.

அரை ஏக்கரில் இலவம்பாடி கத்திரி சாகுபடி செய்ய, அரை சென்ட் பரப்பில் மேட்டுப்பாத்தி முறையில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 100 கிலோ மாட்டு எருவுடன் தலா 100 கிராம் சூடோமோனஸ், ட்ரைக்கோ டெர்மா விரிடி கலந்து அடியுரம் இட வேண்டும். பூவாளியால் தன்ணீர் தெளித்து மண்ணை ஈரப்படுத்தி, 75 கிராம் விதை தூவி தென்னங்கீற்றுகளால் மூடி விட வேண்டும். 7-ம் நாள் தென்னங்கீற்றுகளை அப்புறப்படுத்த வேண்டும். அப்போது முளைப்பு வரத் தொடங்கி இருக்கும். 8-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல் வாரம் ஒரு முறையில் சுழற்சி முறையில் கொடுக்க வேண்டும். 30 - 60 நாள்களில் நாற்றுகளைப் பறித்து நடவு செய்யலாம். செடிக்குச் செடி 2 அடி, வரிசைக்கு வரிசை 3 அடி இடைவெளி விட்டு ஒரு நாற்று வீதம் நடவு செய்யணும். ஏக்கருக்கு சுமார் 5,000 நாற்றுகள் தேவைப்படும்.

அறுவடை
அறுவடை

ஆடி பட்டம்தான் முள்கத்திரி நடவுக்கு ஏற்றது. வெயில் மிதமாக இருக்க வேண்டும். இயற்கை உரங்கள் கொடுத்து, இதைச் சாகுபடி செய்யும்போது நல்ல விளைச்சல் கொடுக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் 2 டன் எரு போட்டு ஒரு சால் உழவு ஓட்டி, தக்கைப்பூண்டு மற்றும் சணப்பு கலந்து 10 கிலோ தெளிக்க வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களை 45-ம் நாள் மடக்கி உழவு ஓட்ட வேண்டும். அரையடி உயரம், 3 அடி அகலம், 80 அடி நீளம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும். ஒரு பாத்திக்கும் மற்றொரு பாத்திக்கும் இடையே 1 அடி இடைவெளி இருக்க வேண்டும். மேட்டுப்பாத்தியில் 50 கிலோ வேப்பம்பிண்ணாக்கு தூவ வேண்டும். மண்ணை ஈரப்படுத்தி, பாத்தியின் இரு ஓரங்களில் தலா ஒரு நாற்று நட வேண்டும். ஒன்றின் பின் ஒன்றாக, நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். 10-ம் நாள் பாசனநீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விட வேண்டும். 25-ம் நாள் 200 லிட்டர் தண்ணீர்ல் 500 மி.லி பஞ்சகவ்யா கலந்து பாசனநீரில் விட வேண்டும். 40-ம் நாள் 200 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி மீன் அமிலம் கலந்து பாசனநீரில் விட வேண்டும். இதுபோல் 15 நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும்.

25-ம் நாள் 50 லிட்டர் தண்ணீரில் 250 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல் 10 நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும். பூ பூக்கத் தொடங்கிய பிறகு 50 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் புளித்த மோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால் 50 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் அக்னி அஸ்திரம் கலந்து தெளிக்க வேண்டும். நாற்று நடவு செய்த 45-வது நாள் பூக்கள் வர ஆரம்பிக்கும். 60-வது நாள் முதல் காய்ப்புக்கு வரும். 80-ம் நாளிலிருந்து மகசூல் அதிகரிக்கத் தொடங்கும். அடுத்த 5 - 9 மாதங்களுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். பிறகு படிபடியாக மகசூல் குறைய ஆரம்பிக்கும்.