Published:Updated:

விளைபொருட்களை சந்தைப்படுத்தி விவசாயிகளின் வெற்றிக்கு வித்திடும் வேப்பங்குளம்! #MyVikatan

veppankulam
News
veppankulam

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கொண்டு கணினி மற்றும் இணையதள உதவியுடன் நாம் ஏன் விவசாயத்தை மேம்படுத்தக் கூடாது?

விவசாயிகள்தான் இந்தத் தேசத்தின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் நம் நாட்டில் வேளாண்மைத் தொழில் செய்யும் மக்கள் அடைந்து வரும் சிரமங்களைப் பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது. விவசாயம் செய்யப் போதிய மழையோ அல்லது இயற்கைச் சீற்றங்கள் பாதிப்பில்லாமலோ ஒத்துழைப்புக் கிடைப்பது என்பது வெகு அபூர்வம். அதிர்ஷடவசமாய் அப்படி கிடைத்து விவசாயத்தில் ஓரளவு மகசூல் கிடைத்தாலும், விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியாமல் குப்பைகளில் கொட்டி வரும் அவலமும் நம் நாட்டில்தான் அரங்கேறி வருகிறது. இதற்கு விடிவே கிடைக்காதா என்ற பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு அசத்தலான திட்டத்தை அமல்படுத்தி வெற்றிக்கு வித்திட்டுள்ளார்கள் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ள வேப்பங்குளம் கிராம விவசாயிகள். அக்கிராமத்திற்கு அண்மையில் சென்று வந்தேன். அங்குள்ள விவசாயிகளால் செயல்படுத்தப்படும் திட்டம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

விவசாய விளைபொருள்களை சந்தைப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் ‘மிஷன் ஐடி ரூரல்’ எனும் தகவல் தொழில்நுட்ப நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரான அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் திருச்செல்வம் ராமு இத்திட்டம் பற்றி என்னிடம் விரிவாகப் பேசினார்.

“ நான் மற்றும் எனது நண்பர்கள் சிலர் எம்.சி.ஏ படித்துவிட்டு 2000 ஆண்டு காலகட்டத்தில் ஆந்திர மாநிலத்தின் ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரிந்தோம். நாங்கள் அனைவரும் விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். விவசாயிகள் பலரும் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யமுடியாமல் சாலைகளில் கொட்டிப் புலம்புவதை ஊடகங்களில் பார்த்து கவலைப்பட்டோம். எனவே இதற்கு தீர்வு காணும் விதமாக விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கொண்டு கணினி மற்றும் இணையதள உதவியுடன் நாம் ஏன் விவசாயத்தை மேம்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில்தான் ‘ஐடி ரூரல் மிஷன்’ என்ற அமைப்பை உருவாக்கினோம். ஆந்திராவில் விளைந்த சில பழங்களை இந்தத் தொழில்நுட்ப மூலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தோம்.

இந்நிலையியில்தான் கடந்த மூன்று ஆண்டுகளுக்குமுன்பு வறண்ட பூமியான எங்கள் வேப்பங்குளம் கிராமத்து விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன்.அப்போது எங்கள் வட்டார வயல்கள் எல்லாம் பாலைவனமாகக் காட்சியளித்தன. கண்மாய், ஏரி, குளங்கள், ஊரணிகள் என நிறைய இருந்தும் போதிய தண்ணீர் இல்லாமல் அனைத்தும் வறண்டு கிடந்தன.. காரணம் அவை பல வருடங்களாகத் தூர்வாரப்படவில்லை. மணல் மேடுகளுடன் வேலிக்கருவைகளும், புதர்ச் செடிகளும்தான். முளைத்துக் கிடந்தன. அரசாங்கத்திற்கு பல மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. பிறகு கிராம மக்களே ஒன்று சேர்ந்து நிதி திரட்டினோம். அனைத்து நீர்நிலைகளையும் நாங்களே எமது சொந்த நிதியிலிருந்து ஓரளவிற்கு தூர் வாரினோம். நீர்மேலாண்மையில் முழுக்கவனம் செலுத்தினோம். வேலிக்கருவை மண்டிக்கிடந்த வயல்களை எல்லாம் மீண்டும் விளைநிலங்களாக்கினோம். விவசாயம் செய்தோம். எங்கள் மாவட்டமே வறட்சியின் பிடியில் தவித்தபோது எங்கள் கிராமத்தில் மட்டும் விவசாயம் நல்ல விளைச்சல் கண்டது.

 திருச்செல்வம் ராமு
திருச்செல்வம் ராமு

எங்கள் கிராமத்தின் நீர் மேலாண்மையைப் பாராட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சுதந்திர தின விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி எங்கள் கிராம மக்களைக் கவுரவித்தார். அது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. அடுத்து இயற்கை முறையில் நெல் விவசாயம் செய்தோம். அதனை நாங்களே அவித்து, அரைத்து, அரிசியாக்கி, மதிப்புக்கூட்டி நேரடி விற்பனை செய்தோம். விவசாயிகளுக்கு சந்தை மதிப்பைவிட பல மடங்கு கூடுதல் விலை கிடைத்தது. இதனால் எங்கள் கிராமத்து விவசாயிகளுக்கு விவசாயத்தின்மீது நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது.

இச்சூழலில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது எங்கள் கிராமத்தில் உழவர் உதவி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினைக் கொடுத்தோம். முதல்வராகப் பதவியேற்ற 50 ஆவது நாளில் எங்கள் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது. பின்னர் வேளாண்துறை இணை இயக்குநரும் இதனை நிறைவேற்றித் தருவதாகத் தகவல் அனுப்பி இருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இந்த உழவர் உதவி மையத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் விவசாயிகளின் அனைத்துத் தேவைகளுக்காகவும் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கூடுதல் வசதியுடன் அதற்கான சிறப்பு இணையதளத்தை எங்கள் கிராம மக்களின் பங்களிப்புடன் வடிவமைத்து வருகிறோம்.

அதாவது உழவர் உதவி மையம் என்பது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் விதைப்பது முதல் அறுவடை செய்து விற்பனை செய்யும் வரையிலான அனைத்து விவசாயச் சேவைகளையும் கிராமத்திலேயே விவசாயிகள் பெறுவதற்கான அரசின் முன்மாதிரி திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம்தான் இப்போது விவசாயிகளின் மிகச்சவாலான சந்தைப்படுத்தலை எளிமையாகச் செய்ய இருக்கிறோம்.

தமிழக அரசின் உதவியுடன் ஒரு தனி மையம் எங்கள் கிராமத்தில் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். மேலும் புரஜக்டர் ஒன்றும் வழங்கினார்கள். அத்துடன் வாரத்திற்கு நான்கு நாட்கள் இந்த அலுவலகத்திற்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஒரு கம்ப்யூட்டரும், பிரிண்டரும் மாவட்ட நிர்வாகத்திலிருந்து தர இருக்கிறார்கள். இந்த உழவர் உதவி மையத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்காகவும் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கூடுதல் வசதியுடன் அதற்கான சிறப்பு இணையதளத்தை மிகப்பெரும் செலவில் எங்கள் கிராம மக்களின் பங்களிப்புடன் வடிவமைத்து வருகிறோம். அதற்கான 75 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டன. இப்பணி முழுமை பெற்றவுடன் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதலும் மற்ற பணிகளும் மிக எளிமையாகவும் முழுவீச்சிலும் இருக்கும்.

இதற்கு முன்னோட்டமாக தற்போது விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்து சமூக ஊடகங்கள்மூலம் தற்போது சிறிய அளவில் பரிசோதனை முறையில் விற்பனை செய்து வருகிறோம். முதலில் அரிசி விற்பனையில் எங்களுக்கு இருந்த அனுபவம் இப்போது தொடர்புகளை எளிமையாக்கி உள்ளது.

தற்போது இதுபோன்று ஏராளமான விளைபொருட்களை வாங்கி, விற்பனை செய்யும் இணையதளங்கள் நிறைய உள்ளன. ஆனால் அவற்றின் நடைமுறையும், வணிக நோக்கமும் வேறுவிதமானது. அதாவது விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கும் தொழிலாக அது இருந்து வருகிறது.. ஆனால் அரசின் உதவியுடனும் விவசாயிகளின் பங்களிப்புடனும் நடைபெறும் இந்த மையத்தின் கொள்முதல் விலையும், விற்பனை விலையும் விவசாயிகளுக்கு கட்டாயம் தெரியும். இதில் எவ்வித ஒளிவும் மறைவும் கிடையாது.. எனவே விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க பெரும் வாய்ப்பு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் உண்ணும் உணவுப்பொருள் எந்த ஊரில், யார் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தது என்பதைக்கூட அதை வாங்கும் வாடிக்கையாளர்களால் தெரிந்துகொள்ள முடியும். இது உளவியல் ரீதியாக ஒரு கூடுதல் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்றாகும்.

அடுத்து இன்றைய சூழலில் நகரங்களில் சிறுசிறு குடும்பங்களாகத்தான் தனித்தனியே குடித்தனம் நடத்தி வருகின்றனர்.அவர்களுக்குத் தேவையான மிகக்குறைந்த அளவிலான பொருட்களைக்கூட வெளிமார்க்கெட் விலையைவிட குறைவாக கூரியர் மூலமே பெற்றுக்கொள்ளலாம். அடுத்து விளைநிலங்களிலிருந்து அறுவடை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு இந்தப் பொருட்கள் சென்று சேர்ந்துவிடும். எனவே பொருட்களின் தரமும் சிறப்பாகவே இருக்கும்.

தற்போது கோவை, சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு எமது கிராமத்து விளைபொருட்களை அனுப்பி வருகிறோம். இத்திட்டம் பிரத்யேக இணையதளம் மூலம் ஆரம்பிக்கப்படும்போது மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு கிடைக்கும். இப்போது சோதனை முயற்சியாக முதலில் எங்கள் வேப்பங்குளம் வட்டார விவசாயிகளின் தகவல்களை உள்ளீடு செய்து சந்தைப்படுத்தலை சிறப்பாகத் தொடங்க இருக்கிறோம். நாம் உண்ணும் உணவுப்பொருள் எந்த ஊரில், யார் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தது என்பதைக்கூட அதை வாங்கும் வாடிக்கையாளர்களால் தெரிந்துகொள்ள முடியும். இது உளவியல் ரீதியாக ஒரு கூடுதல் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்றாகும்.

சிறு குறு விவசாயிகளும் தங்களது சிறிய அளவிலான விளைபொருள்களை நல்ல விலைக்கு, சரியான எடையில் இந்த மையத்திலேயே விற்று உடனடியாக பணம் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது வெளிமார்க்கெட்டுகளில் கிடைக்கும் விலையிலிருந்து நிச்சயம் குறைந்தது முப்பது சதவிகிதத்திற்கு மேல் அதிகமான விலை கிடைக்கும் வாய்ப்பு இதில் இருக்கிறது. இதில் எவ்வித ஒளிவு மறைவுக்கும் இடமிருக்காது. அனைத்தும் வெளிப்படையாக விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்படும்.

விவசாயிகளின் நலனுக்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மத்திய, மாநில அரசுகள் செலவு செய்துவருகின்றன. அதைவிட குறைந்த செலவில் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தினால் விவசாயிகளின் கண்ணீர் கட்டாயம் துடைக்கப்படும்.

இந்த உழவர் உதவி மையத்தின் நிர்வாகச் செலவிற்காக மட்டும் (கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் ஊதியம் மற்றும் அலுவலக செலவுகள்) விற்பனைத் தொகையில் 5 சதவீதம் மட்டும் சேவைக் கட்டணமாகப் பெறப்படும். அதேபோல் சில விவசாயிகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை தனிப்பிரிவாக்கி, நம்பகத்தன்மையுடன் விற்பனை செய்யும் வாய்ப்பும் உள்ளது. இத்துடன் இங்கு கொண்டுவரப்படும் விளைபொருட்களை சுத்தம் செய்தல், தரம் பிரித்தல், பேக்கிங் செய்தல், வாகனங்களில் ஏற்றுதல் போன்ற பணிகளால் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். விளைபொருள்களின் தரம் குறைவாகவோ அல்லது போக்குவரத்தின்போது பாதிக்கப்பட்டிருந்தாலோ ஆர்டர் செய்பவர்களின் முழுப் பணமும் திருப்பித் தரப்படும் என்ற உறுதிமொழியுடன் இதனை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது இந்தப்பகுதியில் விளையும் நார்த்தம் பழம், எலுமிச்சம் பழம், இளநீர், நிலக்கடலை, புளியம்பழம் (விதை நீக்கப்பட்டது), பனங்கிழங்கு ஆகியவையும் இன்னும் சில வாரங்களிலிருந்து கொய்யா, சப்போட்டா, மா போன்ற பழங்களும் கிடைக்க ஆரம்பிக்கும். இவற்றை சோதனை முயற்சியாக விற்பனை செய்து வருகிறோம். நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. நடப்பதற்கு சிரமப்படும் மூத்த விவசாயிகளின் விளைபொருட்களை அவர்களின் தோட்டத்திற்கே சென்று வாங்கி வருகிறோம்.

விளைபொருள்கள் கிடைக்கும் தேதி, அளவு மற்றும் விலை ஆகியவை பற்றி குறைந்தது இரு தினங்களுக்கு முன்பே இந்த உழவர் உதவி மையத்துக்கு விவசாயிகள் தெரியப்படுத்திவிடுவார்கள். அறுவடைக்கு முன்பே அதனை படம்பிடித்து இணையதளத்தில் பதிவிட இருக்கிறோம். அதனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர் கிடைத்தபின்னர்தான் விளைபொருள்கள் அறுவடை செய்யப்படும்.

இத்திட்டத்தை இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் அரசு உதவியுடன் செயல்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகளின் வாழ்க்கை நிச்சயமாக வளம் பெறும். விவசாயிகளின் நலனுக்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மத்திய, மாநில அரசுகள் செலவு செய்துவருகின்றன. அதைவிட குறைந்த செலவில் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தினால் விவசாயிகளின் கண்ணீர் கட்டாயம் துடைக்கப்படும்.

எங்கள் வேப்பங்குளம் கிராமத்தில் செயல்பட உள்ள இந்த முன்மாதிரித் திட்டத்தைப் பார்த்துவிட்டு நம் தமிழக அரசு உடனடியாக மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எங்கள் வேப்பங்குளம் கிராமத்தில் செயல்பட உள்ள இந்த முன்மாதிரித் திட்டத்தைப் பார்த்துவிட்டு நம் தமிழக அரசு உடனடியாக மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நலிவுற்று வரும் நம் விவசாயிகளை இத்திட்டம் கட்டாயம் காப்பாற்றி கைகொடுக்கும். அரசின் இந்த உதவிக்கு விவசாயிகள் எப்போதும் நன்றிக் கடன்பட்டவர்களாக இருப்பார்கள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் திருச்செல்வம் ராமு.

உண்மையில் இத்திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்வில் நிச்சயம் ஒளி விளக்கேற்றப்படும் என்பது உண்மை!

-பழ.அசோக்குமார்