Published:Updated:

வயலுக்கே வந்து நெல்லைக் கூடுதல் விலைக்கு வாங்கி வேப்பங்குளம் இளைஞர்கள் என்னதான் செய்கிறார்கள்?

வேப்பங்குளம் நெல் கொள்முதல்
வேப்பங்குளம் நெல் கொள்முதல்

`சந்தைப்படுத்துதலைச் சரியாகச் செய்தால் விவசாயத்தில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்பதை எங்கள் கிராம இளைஞர்கள் முடிவு செய்தனர்.

நெல் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி... இதற்குத் தீர்வாகப் புதிய வழியைச் சொல்கிறது வேப்பங்குளம் கிராமம்.

கடந்த சில ஆண்டுகளாக வறட்சியைச் சந்தித்த தமிழகத்தில் அரிசியின் விலை அதிகமாக இருந்தது. இந்தாண்டு நல்ல மழை பொழிந்தும் கூடுதல் விளைச்சல் இருந்தும் அரிசியின் விலை குறைந்தபாடில்லை. கூடுதல் மழை பொழிவும் விளைச்சலும் இருந்தும்கூட விவசாயிகள் மனதில் மகிழ்ச்சி இல்லை. காரணம் நெல் அதிக வரத்தால் நெல் மூட்டைகள் சரியான விலைக்குப் போகவில்லை என்பதே.

அரசு நேரிடையாக நெல்லைக் கொள்முதல் செய்தாலும் அங்கு விற்பனை செய்வதில் இப்பகுதி விவசாயிகளுக்கு மூன்று பிரச்னைகள் உள்ளன. ஒன்று, வயலிலிருந்து கொள்முதல் நிலையம் எடுத்துச் செல்ல ஆகும் செலவு. அடுத்து, அங்கு கேட்கப்படும் ஆவணங்களை விவசாயிகள் முறையாக வைத்திருப்பதில்லை. மூன்றாவதாக, சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் எல்லோரும் அங்கு வருவதால், பணம் கிடைக்க காத்திருக்க வேண்டும். அதனால், பல விவசாயிகளும் தனியாரிடம் நெல்லை விற்க முனைகிறார்கள்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

அப்படி, தனியாரிடம் விற்கையில் விலை ஏற்றம் இறக்கமாவது இயல்பாகிவிடுகிறது. இந்நிலையில் புது யுக்தியைக் கையாண்டு விலை வீழ்ச்சியைத் தடுத்து விவசாயிகளின் நிலையைக் காப்பாற்றியுள்ளனர் வேப்பங்குளம் கிராம இளைஞர்கள்.

அது என்ன புதிய யுக்தி என்று வேப்பங்குளத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் திருச்செல்வத்திடம் கேட்டோம், `எங்கள் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீர் மேலாண்மை மற்றும் பயிர் மேலாண்மையைக் கடைப்பிடித்ததால் மற்ற இடங்களைவிட அதிக மகசூல் பெற முடிந்தது. ஆனால், விளைவித்த பொருள்களுக்கு முறையான விலை கிடைக்கவில்லை என்றால், முழுமையான வெற்றி கிடைக்காது.

திருச்செல்வம்
திருச்செல்வம்

விரக்தியில் தொடர்ந்து விவசாயம் செய்ய விவசாயிகள் முன்வரவும் மாட்டார்கள். மேலும், விவசாயம் நலிவடைந்து கொண்டே செல்லும். உழைத்த விவசாயிகளே அதன் பலனை முழுமையாக அனுபவிக்க வேண்டும்.

எனவே, சந்தைப்படுத்துதலைச் சரியாகச் செய்தால் விவசாயத்தில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்பதை எங்கள் கிராம இளைஞர்கள் முடிவு செய்தனர். வரத்து அதிகரிக்கும்போதுதான் விலை, வீழ்ச்சி அடைகிறது.

ஆனால், கடைகளில் அரிசியின் விலை எப்போதும் குறைந்தபாடில்லை. அதனால் வேப்பங்குளத்தில் அவசர தேவைக்காக விற்பனை செய்யப்பட உள்ள 300 நெல் மூட்டைகளை இளைஞர்கள் நேரடியாக விவசாய நிலத்துக்கே சென்று நல்ல விலை கொடுத்து வாங்கினர். விவசாயிகளிடம் வாங்கிய நெல்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதால் நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும் என அந்தப் பணிகளை முன்னெடுத்தனர்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

விளை நிலத்திலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியாத விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளைப் பெற்றால் சிறு குறு விவசாயிகள் ஊக்கம் அடைவார்கள். அதே போல் வாங்கிய நெல்லை பாலிஷ் செய்யாது ஆரோக்கியமான அரிசியாக விற்பனை செய்தால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியாக வாங்கிக்கொள்வார்கள்.

விவசாயிகளிடம் வாங்கிய நெல்லை அரிசியாக விற்பனை செய்யும்போது சரியான விலை கிடைக்கும். இதனால் இளைஞர் அமைப்பு முதலீடு செய்த பணம் கிடைத்துவிடும். இதனால் யாரும் நஷ்டம் அடைய மாட்டார்கள். இந்த அணுகுமுறையைக் கையாண்டு மூட்டை ரூ.1,100 என்று 300 மூட்டை வாங்கி விலையை சரியவிடாமல் பாதுகாத்தோம்.

விற்பனை செய்த நெல் `வேப்பங்குளம்’ பிராண்ட் என்று பெயரிட்டோம். இப்படி விவசாயிகள் வாழ்வாதாரத்தில் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்ததால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பல்வேறு உதவிகளை எங்கள் கிராமத்துக்குச் செய்துவருகிறார். தற்போது வேப்பங்குளம் கிராமத்தைச் சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளார். இதனால் கூடுதலாக மூட்டைக்கு 200 ரூபாய் கிடைக்கிறது.

இலவச ஜூஸ்
இலவச ஜூஸ்

மூட்டைக்கு ரூ.200 என்றால் 10,000 மூட்டைக்கு 20 லட்சம் வரை கிடைக்கிறது. இந்த லாபத்தை 400 விவசாயிகள் பங்கிடும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், இது இடைத்தரகர்களிடம் சென்றால் அவர்கள் மட்டும் இந்த மொத்த லாபத்தையும் அடைகின்றனர். எனவே, வேப்பங்குளம் கிராமத்தைப்போல ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சேகரித்து வைத்துள்ள பணத்தை விவசாயிகளிடமிருந்து பொருள்களை வாங்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் அந்தப் பணம் மீண்டும் தங்களுக்கு கிடைத்துவிடும். தங்கள் கிராம வளர்ச்சிக்குப் பணமும் கிடைக்கும். தங்கள் கிராம விவசாயிகளும் பாதுகாக்கப்படுவார்கள்.

இது சாத்தியமா... என்பவர்களுக்கு வேப்பங்குளம் கிராமமே உதாரணம். விவசாயிகள் தடுமாறும்போது அரசுதான் கைகொடுக்க வேண்டும் என்று இல்லை. கிராம இளைஞர்களும் நல்ல முயற்சி எடுக்கலாம். நல்ல விலை கொடுத்து வாங்கிய பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதால் இதில் கிராம இளைஞர்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. கிராமப் புற முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.

நாட்டுச் சர்க்கரை கலந்த நார்த்தம் பழம் ஜூஸ்
நாட்டுச் சர்க்கரை கலந்த நார்த்தம் பழம் ஜூஸ்

இந்த முறையால் நாட்டில் விவசாயமும் பாதுகாக்கப்படும். முறையாகச் சந்தைப்படுத்துதல் விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இதைத்தான் வேப்பங்குளம் கிராமம் முன்னெடுத்து வருகிறது. விவசாயம் என்பது தொழில் மட்டும் அல்ல அது ஒரு வாழ்வியல் முறை. அதனால் வேப்பங்குளம் கிராமத்தில் நெல் கொள் முதல் செய்ய வரும் விவசாயிகளுக்கு பாரம்பர்ய களத்து தோசையைக் குறைந்த விலைக்கு வழங்கிறோம்.

மேலும் இலவசமாக நாட்டுச் சர்க்கரை கலந்த நார்த்தம் பழம் ஜூஸும் வழங்குகிறோம். வெயிலில் களைப்பாக வரும் விவசாயிகளுக்கு இவ்வாறு உணவு வழங்குவது கிராமத்தின்மீது மதிப்பை அதிகப்படுத்துகிறது.

அதே போல் டிஜிட்டலையும் விவசாயத்தில் முழுமையாகக் கொண்டு வர வேண்டும் எனச் செயல்படுகிறோம். விவசாயத் திட்டமிடுதலில் இருந்து விற்பனை செய்யும் வரை அனைத்தையும் பூர்த்தி செய்ய தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். தகவல் தொழில்நுட்பத்தால் கண்டிப்பாக விவசாயம் முன்னேறும்.

களத்து தோசை
களத்து தோசை

தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகப்படுத்துவது, குறைப்பது முதல் பொருள்களை விற்பனை செய்வதுவரை டிஜிட்டல் உதவி செய்யும் அதை நோக்கிய பயணத்தில்தான் தற்போது வேப்பங்குளம் சென்றுகொண்டிருக்கிறது" என்றார்.

இது குறித்து ஆலம்பட்டி விவசாயி மீனாட்சி, `நெல் விலை சரிவால் எனது 30 மூட்டையை வேம்பங்குளம் கொண்டுவந்தேன். அனைத்துச் செலவுகளும் போக 6,000 ரூபாய் கூடுதல் லாபம் கிடைத்தது. அனைத்துக் கிராமங்களில் கிராம இளைஞர்கள் சேகரிக்கும் பணத்தைப் பொருள்களை நேரடியாகச் சந்தைப்படுத்த உதவுவதால் விவசாயிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிராமும் பயனடையும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு