Published:Updated:

`தினமும் டன் கணக்கில் கீழே கொட்டப்படும் காய்கறிகள்!’ -திருமழிசை சந்தை வியாபாரிகள் வேதனை

திருமழிசை மார்க்கெட்
News
திருமழிசை மார்க்கெட் ( சே.பாலாஜி )

சென்னை திருமழிசை காய்கறிச் சந்தையில், காய்கறிகளை வாங்க ஆட்கள் இல்லாமல், தினமும் டன் கணக்கான காய்கறிகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

ஆசியாவின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. அதையடுத்து அரசு, கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிக்கொண்டிருந்த பூ, பழ சந்தைகளை மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கும், காய்கறிச் சந்தையை சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசைக்கும் மாற்றி அமைத்தது.

திருழிசையில் கீழே கொட்டப்படும் கீரைகள்
திருழிசையில் கீழே கொட்டப்படும் கீரைகள்

நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கோயம்பேட்டிலிருந்து திருமழிசை சாட்டிலைட் டவுன்ஷிப் பகுதியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் சில்லறை வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியவண்ணமாக இருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சீசன் நேரம் என்பதால், திருமழிசை சந்தைக்குக் காய்கறிகளின் வரத்து அதிகமாகியிருக்கிறது. ஆனால், வரத்திற்கேற்ப விற்பனை இல்லை. இதனால் காய்கறிச் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. முள்ளங்கி, கேரட் என அனைத்து காய்கறிகளின் விலையும் சந்தையில் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், வாங்க ஆள் இல்லை. திருவிழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதது, உணவகங்கள் அதிக அளவில் காய்கறிகளைக் கொள்முதல் செய்வதில்லை. இதனால் மொத்த வியாபாரிகளும் குறைந்த அளவில்தான் காய்கறிகளை வாங்குகிறார்கள். இதனால் அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள், டன் கணக்கான காய்கறிகளைத் தினமும் கீழே கொட்டிவிட்டுச் செல்கிறார்கள்.

கீழே கொட்டப்பட்ட முள்ளங்கி
கீழே கொட்டப்பட்ட முள்ளங்கி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமழிசை காய்கறிச் சந்தையின் விற்பனை நிலவரம்குறித்து அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பேசினோம், "கோயம்பேடு மார்க்கெட்டுல வழக்கமா நடக்குற வியாபாரத்துல, இங்க பாதிகூட ஆக மாட்டுது. அங்க விடியக் காலையில வந்துட்டு, காலைல பத்து பதினோரு மணிக்கெல்லாம் வீட்டுக்குத் திரும்பிடுவோம். ஆனா, திருமழிசைக்கு மாத்துனதுல இருந்து தினமும் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் வந்துட்டு விடிய விடிய முழிச்சிருந்து காலையில வியாபாரம் பாத்துட்டு, எடுக்குற சரக்குல பாதிய குப்பைல கொட்டிட்டு வீட்டுக்கு நஷ்டத்தோடதான் போய்ட்டு இருக்குறோம்.

கீழே கொட்டப்பட்ட காய்கறிகள்
கீழே கொட்டப்பட்ட காய்கறிகள்

இங்க, சந்தையில சில்லறை வியாபாரிங்களுக்கு அனுமதி இல்ல. அதனால அவங்களோட வியாபாரம் எங்களுக்கு சுத்தமா இல்லாம போயிடுச்சு. மொத்த வியாபாரிங்களும் பெரும்பாலானவங்க இங்க வர்றதில்ல. அப்படியே வந்தாலும் முன்ன மாதிரி வாங்குறதில்ல. அதே மாதிரி மக்கள் இவ்வளவு தூரம் வந்து பெரும்பாலும் காய்கறி வாங்க விரும்ப மாட்றாங்க. கோயம்பேடு மார்க்கெட்டுல ஆகுற வியாபாரத்துல பாதிகூட இங்க ஆகல. தினமும் முள்ளங்கி, கேரட், பீன்ஸ், வெண்டைக்காய்னு எல்லா காய்களையும் மூட்டை மூட்டையா குப்பையிலே கொட்டிட்டு இருக்கோம். சில்லறை வியாபாரிங்களை அனுமதிச்சாகூட போதும். கீழே கொட்டுற காயை அவங்க வாங்கிட்டுப் போயிடுவாங்க.

முள்ளங்கி மூட்ட 100 ரூபாய்க்கு வித்தும் இங்க வாங்க ஆள் இல்ல. வெண்டைக்காய் இன்னைக்கு மூட்ட 80 ரூபாய்க்கு வித்துட்டு இருக்கோம். இன்னிக்கு வந்த 120 மூட்டையில வெறும் 40 மூட்டை வெண்டைக்காய் தான் வித்துருக்கு. மீதம் 80 மூட்டைய குப்பையிலேதான் கொட்டிட்டு போகப்போறேன். வேற வழி இல்ல, இந்தச் சந்தையில ஒரு குளிர்பதனக் கிடங்குகூட இல்ல. அப்பறம் அடிக்குற வெயில்ல நாங்க எங்க வைக்கிறது.

தூக்கி வீசப்பட்ட காய்கறிகள்
தூக்கி வீசப்பட்ட காய்கறிகள்

இங்க மாத்துனதுனால ஒரு பயனும் இல்ல. சீசன் நேரத்துல விவசாயிங்க எங்கள மாதிரி ஆளுங்கள நம்பிதான் இருக்காங்க, அவங்களுக்காகத்தான் நாங்க தினமும் அளவு குறைக்காம ஏதோ ஒரு நம்பிக்கையில வாங்கி இங்க அல்லல் பட்டுட்டு இருக்குறோம். இங்க நடக்குற வியாபாரத்துல போட்ட அசல எடுக்கறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. அரசாங்கம் சந்தைய வேற இடத்துக்கு மாத்துனாதான் நாங்க இனி பிழைக்க முடியும்" என்றார்.

கீரைகளை எடுத்துச் செல்லும் பொதுமக்கள்
கீரைகளை எடுத்துச் செல்லும் பொதுமக்கள்

சந்தை முழுவதும் வியாபாரிகள் தங்கள் காய்கறிகளை வைத்துக் கொண்டு வாங்க ஆள் இல்லாமல், வருவோர் போவோர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். சந்தையில் விற்பனை இல்லாததால் டன் கணக்கில் காய்கறிகளைக் குப்பையில் கொட்டிவிட்டுச் சென்ற வண்ணமாக இருக்கின்றனர். அவர்கள் குப்பையில் கொட்டிவிட்டுச் செல்லும் காய்கறிகளை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பைகளில் அள்ளிச்செல்கிறார்கள்.

டன் கணக்கில் வீணாகும் காய்கறிகள்! திருமழிசை தற்காலிகக் காய்கறிச் சந்தையில் விற்பனை இல்லாததால் வியாபாரிகள் டன் கணக்கில்...

Posted by Vikatan EMagazine on Tuesday, May 26, 2020