Published:Updated:

திருவாரூர்: நள்ளிரவில் சோதனை, 155 நெல் மூட்டைகள் பறிமுதல்... அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு துறை!

ஆய்வில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்
ஆய்வில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பல முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீரென நேற்று நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ 87,000 மற்றும் 155 நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி அருகே உள்ள கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வந்தனர்.கொள்முதல் நிலையத்திற்குள் இருந்த விவசாயிகள், லாரி டிரைவர்கள் உள்ளிடோரை வெளியே அனுப்பினர்.

தி.மு.க ஆர்ப்பாட்டம்
தி.மு.க ஆர்ப்பாட்டம்

பின்னர் கதவை மூடிகொண்டு பணியிலிருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.87,000 பணம் மற்றும் லாரிகளில் 155 மூட்டை நெல் ஆகியவை இருப்பதைக் கண்டுபிடித்ததுடன் அவற்றைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஊழியர்களிடம் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் திணறினர். தற்போது வரை விசாரணை தொடர்வதாக கூறப்படுகிறது.

நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வெளியே தெரிந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருவாரூர் தி.மு.க எம்.எல்.ஏ கலைவாணன் தலைமையில் குறிப்பிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகம் முழுவதும் உள்ள கொள்முதல் நிலையங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கிறது. இதற்கு காரணமான உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதவி விலகவேண்டும் என கோஷமிட்டனர்.

இது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம், "திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை பல இடங்களில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர்.

 நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு
நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

அத்துடன் கொள்முதல் நிலையங்களில் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தமிழகம் முழுவதுமே புகார் எழுந்த வண்ணம் இருந்தன. ஊழியர்கள் நெல் கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து ஒரு மூட்டைக்கு ரூ.40 கமிஷன் பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. இதன்மூலம் விவசாயிகளுக்கு ஆயிரகணக்கான ரூபாய் விரயமானது. வேறு வழியில்லாமல் விவசாயிகளும் நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் கேட்கும் கமிஷனை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில்,கண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பல முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூ.87,000 இருந்துள்ளது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் 155 நெல் மூட்டைகளுடன் லாரிகள் நின்று கொண்டிருந்தது. அந்த நெல் யாருடையது, விவசாயி யார் என அதிகாரிகள் பணியிலிருந்த ஊழியர்களிடம் கேட்டனர். யாரும் முறையான பதில் சொல்லவில்லை. இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை செய்துள்ளனர்.

கொள்முதல் செய்யப்படும் நெல் இலக்கணம் பேட்டையில் உள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படும். ஆனால் அந்த கிடங்கிலிருந்து லாரிகளில் நெல்லை ஏற்றி கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.1,50,000 என சொல்லப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

அந்த நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக கணக்கு காட்டி பெரிய அளவிலான முறைகேட்டிலும் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணம் மற்றும் நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். நெல் மூட்டைகளுடன் நின்ற லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் இன்னும் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு