Published:Updated:

வீட்டுத்தோட்டத்தில் கொத்துக்கொத்தாக கொத்தமல்லி வளர்க்கலாம்!

கொத்தமல்லி
பிரீமியம் ஸ்டோரி
News
கொத்தமல்லி

ஆரண்யா அல்லி, தோட்டக்கலை ஆர்வலர்

வீட்டுத்தோட்டத்தில் பழ மரங்கள் முதல் பனிப்பிரதேச செடிகள் வரை வளர்ப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், கொத்தமல்லி மட்டும் வளர்வதே இல்லை எனப் புலம்புவார்கள்.

கொத்தமல்லி வளர்ப்பதென்பது ராக்கெட் அறிவியல் எல்லாம் இல்லை, கொஞ்சம் மெனக்கெட்டால் அது சாத்தியமே. வீட்டுத்தோட்டத்தில் கொத்துக்கொத்தாக கொத்தமல்லி வளர்க்கும் டெக்னிக்கைக் கற்றுத் தருகிறேன்.

நம் சமையலில் கொத்தமல்லித்தழைக்கென்று தனி இடம் இருக்கிறது. கொத்தமல்லியைச் சிறிதளவாவது சேர்க்காமல் சமையல் முழுமையடைவதில்லை. ஆனால், பெரும்பாலான சமயங்களில் நாம் கடைகளில் வாங்கிவரும் கொத்தமல்லி சொல்லிக்கொள்ளும்படி இருப்பதில்லை. அதில் கொத்தமல்லிக்குரிய எந்தத் தன்மையும் வாசனையும் இருப்பதில்லை. இதற்கான தீர்வு நாமே நமக்கான கொத்த மல்லியை வளர்ப்பதுதான்.

வீட்டுத்தோட்டத்தில் கொத்துக்கொத்தாக கொத்தமல்லி வளர்க்கலாம்!
வீட்டுத்தோட்டத்தில் கொத்துக்கொத்தாக கொத்தமல்லி வளர்க்கலாம்!

வீட்டிலேயே கொத்தமல்லி வளர்ப்பது எப்படி?

முதலில் கொத்தமல்லியை வளர்ப்பதற்கான பாத்திரங் களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். கொத்தமல்லி செடியின் வேர்கள் மிகவும் சிறியவை. அதனால் இப்பாத்திரம் ஆறு இன்ச் உயரத்திலிருந்து ஒன்பது இன்ச் உயரம் வரை இருந்தாலே போதுமானது (அதற்கு மேலிருந்தாலும் தவறில்லை) அல்லது மண் தொட்டிகள் அல்லது புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்படாமல் இருக்க பூச்சு மேற்கொள்ளப் பட்ட, (U V Treated) செடி வளர்ப்பதற்காகவே இருக்கும் பிளாஸ்டிக் தொட்டிகள் மற்றும் பாலித்தீன் பைகள் அல்லது பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள் அல்லது கைப்பிடி உடைந்த கட்டைப் பைகள், அரிசி பைகள், கெட்டியான பாலித்தீன் பைகள், ஏன் பழைய ஜீன்ஸ் பேன்ட் என நமது வசதிப்படி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

கொட்டாங்குச்சியில்கூட கொத்தமல்லித்தழை வளர்க்க லாம். எந்தப் பாத்திரமானாலும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் அதிகப்படியான தண்ணீர் வடிவதற்கு கீழே துளைகள் இருக்கின்றனவா என்பது மட்டும்தான்.

மண்கலவை

கொத்தமல்லி செடிகள் வளர்வதற்கான மண் கலவை பொலபொலவென்றும், காற்றோட்டம் ஊடுருவக்கூடிய தாகவும் இருத்தல் அவசியம். அதற்கு செம்மண் ஒரு பங்கு, எரு ஒரு பங்கு, மணல் அரை பங்கு என்பது பாரம்பர்யமாக கடைப்பிடிக்கப்படுவது. ஆனால், இப்போது செம்மண், மணல் கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல், அதிக எடை காரணமாக நாம் தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம், கம்போஸ்ட் எனப்படும் மட்கிய காய்கறிக்கழிவு உரம் என எது கிடைத்தாலும் பயன்படுத்துகிறோம்.

வீட்டுத்தோட்டத்தில் கொத்துக்கொத்தாக கொத்தமல்லி வளர்க்கலாம்!

தேங்காய் நார்க்கழிவு

காயர் பித், கோகோ பித் எனக் குறிப்பிடப்படும் தேங்காய் நார்க்கழிவு செடி வளர்ப்பதற்கு நல்ல ஊடகமாகப் பயன் படுகிறது. தேங்காய் மட்டைகளில் இருந்து நாரைப் பிரிக்கும் போது உதிரும் கழிவுப் பொருளே தேங்காய் நார்க்கழிவு ஆகும்.

இது ஒரு கிலோ, இரண்டு கிலோ, ஐந்து கிலோ என பைண்டிங் செய்து பிஸ்கட் பிளாக் போல கட்டியாக விற்பனைக்கு வருகிறது. இது, நமக்கு அருகில் உள்ள நர்சரியிலும் அல்லது அமேசான் போன்ற தளங்களிலும் கிடைக்கும். இதை அப்படியே உபயோகிக்க இயலாது. ஏனென்றால் அதில் உள்ள துவர்ப்பு, செடிகளை வளரவிடாது. விதைகள் முளைத்து கொஞ்சம் வளர்ந்த பிறகு இந்தத் துவர்ப்பு பாதித்து செடிகள் பல சமயத்தில் இறந்துவிடும். எனவே இந்தத் தேங்காய் நார்க்கழிவை துவர்ப்பு நீக்கும் விதமாக ஊறவைத்து கழுவி எடுக்க வேண்டும்.

ஐந்து கிலோ பிளாக் என்பது ஒரு சதுர அடி அளவில் இருக்கும். இதை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் விடும்போது அது ஊறி, 20, 25 கிலோ அளவுக்கு மாறிவிடும்.

இதை 10-லிருந்து 15 நாள்கள் வரை தினசரி அலசி எடுக்க வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள துவர்ப்பு முழுமையாக நீங்கும்.

வீட்டுத்தோட்டத்தில் கொத்துக்கொத்தாக கொத்தமல்லி வளர்க்கலாம்!
வீட்டுத்தோட்டத்தில் கொத்துக்கொத்தாக கொத்தமல்லி வளர்க்கலாம்!
வீட்டுத்தோட்டத்தில் கொத்துக்கொத்தாக கொத்தமல்லி வளர்க்கலாம்!

15 நாள்கள் சென்ற பிறகு இந்த தேங்காய் நார்க்கழிவுடன் சம பங்கு மண்புழு எரு, மாட்டு சாண எரு அல்லது வீட்டுக் குப்பைகள் மட்கிய பிறகு கிடைக்கும் உரம் (சில மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மட்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவற்றை உரமாக மாற்றி மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்). இவற்றில் ஏதாவது ஒன்றை சம அளவு கலந்து கொள்ள வேண்டும். இத்துடன் இரண்டு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கை கலந்து வைக்க வேண்டும். ‌இத்துடன் இரண்டு கிலோ செம்மண் கிடைத்தால் சேர்க்கலாம். இக்கலவையை மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். இப்போது கொத்தமல்லி வளர்க்க க்ரோயிங் மீடியம் எனப்படும் ஊடகம் தயார்.

நாம் எந்தப் பாத்திரத்தில் கொத்தமல்லி வளர்க்கப் போகிறோமோ அதில் முக்கால் பங்குக்கு க்ரோயிங் மீடியத்தை நிரப்பவும். அதன் மேல் தேவையான அளவு நீர் தெளித்துக் கொள்ளவும்.

அதன் மேல் கொத்தமல்லி விதைகளை ஒரே சீராகத் தூவவும். அதன் மீது மீதமுள்ள கலவையை அரை இன்ச் கனத்துக்குப் போட்டு மூடவும். பிறகு அதை ஒரு செய்தித்தாள் கொண்டு மூடி அதன்மேல் மெதுவாக தண்ணீர் தெளிக்கவும். செய்தித்தாள் ஊறி அதன் வழியே தண்ணீர் கீழே இறங்கும்படியாக மென்மையாக ஊற்ற வேண்டும். இதை தினப்படி செய்து வரவும். ஐந்தாவது நாள் செய்தித்தாளை நீக்கிவிடவும். ஆறு அல்லது ஏழாம் நாளில் முளைவிட்டிருக்கும். இப்போது தண்ணீரை ஸ்பிரேயர் வழியாக மண் அலுங்காமல் கொடுக்கவும்.

தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடித்தால் கொத்தமல்லி செடிகளின் மெல்லிய தண்டுகள் உடைந்து வீணாகிவிடும். சரியாக முப்பது நாளில் நாம் அறுவடை செய்துகொள்ளலாம். மிகுந்த மணமுடைய ஆர்கானிக் கொத்தமல்லிக் கீரை இப்போது நம் கையில்.

வீட்டுத்தோட்டத்தில் கொத்துக்கொத்தாக கொத்தமல்லி வளர்க்கலாம்!

கொத்தமல்லியை உடைக்கும் விதம்!

மிளகாயுடன் அரைப் பதற்காக கடைகளில் நாம் வாங்கும் கொத்தமல்லியையே விதைகளாகப் பயன் படுத்தலாம். ஆனால், தரமான கொத்த மல்லியாக இருப்பது முக்கியம். கொத்த மல்லியை விதைப்பதாக இருந்தால், அந்த விதைகளை இரண்டாக உடைத்து விதைப்பது நல்லது.

இதற்காக கொத்தமல்லி விதைகளைத் தரை யில் இட்டு வெறும் கால்களினால் லேசாகத் தேய்த்து உடைப்பது வழக்கம். கால்களுக்குப் பதிலாக நம் விருப்பப்படி எடை குறைந்த மரக் கட்டையையோ, பூரிக்கட்டையோ அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளாலோ லேசாகத் தேய்த்தால் எளிதாக இரண்டு இரண்டாகப் பிளந்துவிடும்.

கனமான பொருளால் அழுத்தித் தேய்த்தால் முனைகள் உடைந்து வீணாகிவிடும். முளைப்பு நன்றாக வராது. இதை மட்டும் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் விதைக்க வேண்டும்!

நேரடியாக முழு கொத்தமல்லியாக விதைப்பதை விட அதை இரண்டாக உடைத்து விதைப்பது நல்லது. சிலர் அப்படியே முழு கொத்தமல்லி யையும் விதைப்பர். ஒரு விதை விழும் இடத்தில் இரண்டு விதைகள் விழுந்து முளைத்தால் பார்ப்பதற்கு முழு விதையாகப் போட்டால் அடர்த்தியாக வருவதுபோல தோற்றமளிக்கும். ஆனால், விதையின் அளவு அதிகரித்து செடிகள் வெறும் ஈர்க்கு ஈர்க்காக வளரும். அதனால் இரண்டாக உடைத்துப் போடுவதே சிறப்பு.