Published:Updated:

`விவசாயத்தை மீட்டெடுக்க இதுதான் வழியின்னு இறங்கிட்டோம்!'- அசரவைத்த கிராமம்

குலமங்கலம் கிராமத்தினர்
குலமங்கலம் கிராமத்தினர்

ஒரத்தநாடு அருகே ஒரே நேரத்தில் ஏரியையும் இளைஞர்களையும் காக்கும் வகையில் செயல்பட்டு வரும் கிராமத்தினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை தங்களது சொந்தச் செலவில் தூர் வாரும் பணியைத் தொடங்கி செய்து வருகின்றனர் ஒரு கிராமத்தினர். ஊர் பொது இடத்தில் மது குடித்தால் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்தப் பணமும் ஏரி பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் ஏரியையும் இளைஞர்களையும் காப்பதற்கே இதைச் செய்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிராம மக்கள்
கிராம மக்கள்

ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட ஏரி உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்ததாலும், ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் தூர்வாராமல் கிடந்ததாலும் ஏரி வெடித்து வறண்டு கிடந்தது. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தப் பலனும் இல்லை. தற்போது இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தங்களது சொந்தச் செலவில் தூர்வாரும் பணியைத் தொடங்கி செய்து வருகின்றனர்.

இதற்காக ஊர் நல கூட்டமைப்பு என்ற ஒரு கமிட்டியை உருவாக்கி செயல்பட்டு வருவதுடன் முதற்கட்டமாக ஏரியின் நான்கு கரைகளும் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பலபடுத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் இல்லாமல் இருந்தால் மண் தனக்கான வளத்தை இழக்கும். அதேபோல் மது குடிப்பதால் வளத்தையும், உடல் பலத்தையும் இழந்து நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் இளைஞர்கள் சீரழிந்து கொண்டு இருக்கின்றனர். ஒரே நேரத்தில் மண்ணையும், மக்களையும் காக்கின்ற வகையில் செயல்பட்டு வருவதாக குலமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏரி தூர்வாரும் பணி
ஏரி தூர்வாரும் பணி

இது குறித்து வைரமுத்து என்ற இளைஞரிடம் பேசினோம். ``எங்க ஊரில் 2,000 வீடுகளுக்கு மேல் உள்ளன. விவசாயம்தான் எங்களுக்கு முக்கியமான தொழில். முப்போகம் விளைஞ்ச மண்ணு இன்றைக்கு ஒண்ணும் இல்லாமல் கிடக்கு என எங்க ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் புலம்புவார்கள். மேலும் விவசாயம் பொய்த்துப் போய் வருவதால் எங்க ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பிழைத்து வருகிறார்கள். நானும் சிங்கப்பூர் சென்று வேலை பார்த்தவன். வெளியூரில் இருந்தால் தான் உள்ளூரோட அருமை தெரியும். பொன் விளையும் பூமியை விட்டுட்டு பிழைப்புக்காக இளைஞர்கள் இப்படி ஊர் ஊராக அலைகிறார்கள் எனச் சொந்தங்கள் கவலை கொள்வார்கள்.

விவசாயத்திற்கு ஆதாரமே தண்ணீர்தான். அவை போதுமானதாக இல்லை. மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் ஆழ்குழாய்களிலும் சரியாக தண்ணீர் வருவதில்லை. விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் முதலில் எங்க ஊரில் உள்ள ஏரியை தூர்வார வேண்டும் என முடிவு செய்தோம். இதற்காக கடந்த இரண்டு வருடமாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஏரி தூர்வாரும் பணி
ஏரி தூர்வாரும் பணி

பின்னர் ஊர்மக்கள் அனைவரும் உட்கார்ந்து பேசியதுடன் நாங்களே முயற்சி எடுத்து நிதி திரட்டி ஏரியைத் தூர் வார முடிவு செய்தோம். இதற்காக பல விதிமுறைகள் வகுக்கப்பட்டன. குறிப்பாக ஊர் பொது இடங்களில் யாரும் மது அருந்தக் கூடாது, மது குடித்துவிட்டு சத்தம் போட்டாலோ அல்லது சண்டை போட்டாலோ ரூபாய் 3,000 முதல் 5,000 வரை அபராதம் வசூலிக்கப்படும். அந்தப் பணமும் ஏரி தூர்வாருவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. எதிர்கால சக்திகளாகப் பார்க்கப்படுகிறவர்கள் இளைஞர்கள். அவர்கள் குடிக்காமல் இருப்பதற்கும் ஒரே நேரத்தில் மண்ணையும் மனிதனையும் காக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்த விதி செயல்படுத்தப்பட்டது.

மேலும் 250 ஏக்கர் கொண்ட ஏரியில் 80 ஏக்கர் வரை ஆக்கிரமிப்பில் இருந்தது. அதில் பலர் விவசாயம் செய்து கொண்டிருந்தனர். அதை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினோம். இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்ததுடன் ஏரி நிலத்தை 250க்கும் மேற்பட்ட தென்னை மரங்களுடன் அப்படியே ஒப்படைத்தனர். பின்னர் முதலில் ஏரிக்கு ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் குலமங்கலம் நம்பர் ஒன் வாய்க்காலைத் தூர் வாரினோம். அதன் பிறகு ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளி நாடுகளில் வேலை செய்பவர்கள் தங்களால் முடிந்த நிதியைத் தந்தனர். பின்னர் பொது இடங்களில் மது குடித்தவர்களிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதில் மொத்தம் ரூ.80,000 கிடைத்தன. இவற்றைக் கொண்டு ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரைக்கும் ரூ.8 லட்சம் வரை செலவாகியிருக்கிறது.

ஏரி தூர்வாரும் பணி
ஏரி தூர்வாரும் பணி

இன்னும் பல லட்சங்கள் இருந்தால்தான் ஏரி பணி முழுமையடையும். எங்க ஏரியில் தண்ணீர் நிறைந்தால் சுற்றுப்பட்டில் உள்ள பல கிராமங்கள் பயன்பெறும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். இரவு பகலாக வீட்டு விஷேசத்திற்கு உழைப்பது போல் பலர் இதற்கு உழைத்து வருகின்றனர். இதற்கு யாரும் உதவ நினைத்தாலும் உதவலாம். அவை இந்த மண்ணில்தான் மூலதனமாகப் போடப்படும். அரசு இதற்கு நிதி உதவி செய்தால் இன்னும் எளிதாக சீக்கிரமே தூர் வாரி முடித்து விடுவோம். ஏரி தண்ணீரால் நிறைகின்ற நாள்தான் எங்களுக்கு திருவிழா அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு