Published:Updated:

ரொம்ப அலையவிட்றாங்க..! - வாரச் சந்தைக்கு வருடக் கணக்கில் காத்திருக்கும் ஏம்பல் கிராமம் #MyVikatan

அரசாங்கத்திடமிருந்து வாரச் சந்தைக்கு அனுமதி கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன் வருடக் கணக்கில் காத்திருக்கின்றனர் ஏம்பல் கிராம சுற்றுவட்டாரப் பொதுமக்கள்.

திலகர் திடல்
திலகர் திடல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலுக்கு அருகில் உள்ளது ஏம்பல் கிராமம். இதைச் சுற்றி இச்சிக்கோட்டை, குருங்களூர், ஏனங்கம், வயலாங்குடி, ஆண்டாகோட்டை, செப்பாவயல், மதகம், தில்லைவயல், திராபிடுங்கி, தாணிக்காடு, அரசூர், இரும்பாநாடு, வெள்ளாளவயல், தாணிக்காடு, கொடிக்குளம், கரம்பவயல் இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு மிகமுக்கியமான ஊராக ஏம்பல்தான் இருந்து வருகிறது. வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், காவல்நிலையம் என அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் பொதுமக்கள் ஏம்பலைத் தேடித்தான் வரவேண்டி இருக்கிறது.

ஏம்பல்
ஏம்பல்

இங்கு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஏம்பல் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள திலகர் திடலில் வாரச் சந்தை சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், காலப்போக்கில் போதுமான பராமரிப்பும் அடிப்படை வசதிகளும் இல்லாமல் இரண்டு மூன்று கடைகள் மட்டுமே வாரச்சந்தையில் இடம்பெற்றுவருகின்றன. எனவே, அரசின் ஒப்புதலுடன் வாரச்சந்தையை மீண்டும் சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி அளிக்கக்கோரி ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கமும், பொதுமக்களும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக மனுமேல் மனு கொடுத்து வருகின்றனர். ஏம்பல் ஊராட்சியிலும் இதுதொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநில சுகாதாரத்துறை, காவல்துறை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-புதுக்கோட்டை மண்டலம் ஆகியோர் தடை இல்லாச் சான்று வழங்கி விட்டனர். ஆனால், சந்தை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரியான மாவட்டக் கிராமப் பஞ்சாயத்துகள் –உதவி இயக்குநரோ வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தடை இல்லாச் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே வாரச்சந்தையை நடத்த முடியும் எனத் தெரிவிப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை கிராமப் பஞ்சாயத்துகள் –உதவி இயக்குநரின் ஒப்புதல் உத்தரவு இல்லாமல் சந்தையை நடத்த முடியாத சூழலில் உள்ளனர்.

உஸ்மான்
உஸ்மான்

“ கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள எல்லாக் கிராமங்களுக்கும் ஏம்பல்தான் ஒரு சென்டர் பாயின்ட். இங்கே தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்துபோய்க்கிட்டு இருக்காங்க. இந்தப் பகுதியில் உள்ளவங்க எல்லோருமே விவசாயிகளும் அன்றாட உடல் உழைப்பாளிகளும்தான். வாரச் சந்தை ஏராளமான கடைகளுடன் சிறப்பாக நடைபெற்றால் ஒருவாரத்துக்குத் தேவையான காய்கறிகளை எல்லாம் ரொம்ப குறைவான விலையிலே வாங்க முடியும்.

1996 வரைக்கும் ஏம்பல் சந்தைக்குப் பெரிய கூட்டம் வந்துபோகும். ஆனா அது படிப்படியா போதுமான அடிபப்படை வசதிகளும் அரசாங்கத்தின் அனுமதியும் இல்லாம நலிவடைஞ்சுபோச்சு. அதுக்கு மறுபடியும் புத்துயிர் கொடுக்கணும். அதேமாதிரி ஏம்பல் பேருந்துகள் வந்து செல்லும் இடத்தில் எப்போதும் ஏராளமான மக்கள் கூடுறாங்க. ஆனால் அங்கே ஒரு கழிவறைகூட இல்லாம எல்லோரும் ரொம்ப அவஸ்தைப்படுறாங்க. குறிப்பாக பெண்களும், சிறுமிகளும் அவசர இயற்கை உபாதைக்கு இடம் தேடி அலையுறது ரொம்ப வருத்தமா இருக்கு. அதுக்கு மொதல்லே இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்..” என்கிறார் ஏம்பலில் கம்ப்யூட்டர் கடை நடத்திவரும் உஸ்மான்.

``வாரந்தோறும் சந்தை கூடுவதால் இப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகளே நேரடியாக இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்ய முடியும். தரமான பொருள்களை பொதுமக்களால் குறைந்த விலைக்கு வாங்க முடியும். இதனால் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் பலனடைவார்கள். தற்போது காய்கறிகள் மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக காரைக்குடி அல்லது அறந்தாங்கி சந்தைகளுக்குச் சென்றுதான் ஏம்பல் சுற்று வட்டாரப் பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

பெரியதம்பி
பெரியதம்பி
அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர்

ஏம்பலில் வாரச் சந்தை நடைபெற்றால் பொதுமக்களின் வீண் அலைச்சல் தவிர்க்கப்படும். அவர்களின் போக்குவரத்து செலவும், கால விரயமும் குறையும். பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன் கருதி ஏம்பல் திலகர் திடலில் மீண்டும் இச்சந்தை நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக புதுக்கோட்டை மாவட்டக் கிராமப் பஞ்சாயத்துகள், உதவி இயக்குநர் அலுவலகம் உடனடியாக ஒப்புதல் ஆணை வழங்கி வாரச்சந்தை நடைபெற வழிவகை செய்யவேண்டும்.

வாரச் சந்தை நடத்துவதற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரியின் தடை இல்லாச் சான்று அவசியம்தானா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அப்படி இருந்தால் வட்டாரப்போக்குவரத்து அலுவலகமும் தாமதமில்லாமல் தடை இல்லாச் சான்று வழங்கி உதவ வேண்டும். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர்தான் நேரடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு உடனடித் தீர்வு காணவேண்டும். இதுவே இப்பகுதி மக்களின் வருடக் கணக்கிலான பெரும் எதிர்பார்ப்பு. எங்களுடைய நீண்டகால கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும் அரசும் விரைவில் செய்து கொடுக்கவேண்டும்..” என்கிறார் இந்தப் பிரச்னைக்காக தொடர்ந்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வரும் ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பெரியதம்பி.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/