Published:Updated:

“உங்கள் கையில்தான் உள்ளாட்சி...” கிராமப்புற மக்களுக்கு வழிகாட்டும் தன்னாட்சி!

விழிப்புணர்வுக் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விழிப்புணர்வுக் கூட்டம்

விழிப்புணர்வு

“உங்கள் கையில்தான் உள்ளாட்சி...” கிராமப்புற மக்களுக்கு வழிகாட்டும் தன்னாட்சி!

விழிப்புணர்வு

Published:Updated:
விழிப்புணர்வுக் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விழிப்புணர்வுக் கூட்டம்

ங்கள் கிராமத்தைப் பல வகைகளில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அண்மைக்காலமாக கிராமப்புற மக்களிடம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, இளைஞர்களும் பெண்களும் மிகுந்த அர்ப்பணிப்போடு தங்கள் ஊரிலுள்ள நீர்நிலைகளை மீட்டெடுப்பது, பாரம்பர்ய விவசாயத்தை வளர்த்தெடுப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

“உங்கள் கையில்தான் உள்ளாட்சி...” கிராமப்புற மக்களுக்கு வழிகாட்டும் தன்னாட்சி!

அரசை மட்டுமே நம்பியிருக்காமல், சொந்த முயற்சியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது. அதே நேரம், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும், பல்வேறு நிதியுதவிகளையும் இதற்குப் பயன்படுத்தினால் மேலும் பல வளர்ச்சிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளலாம். ஊராட்சி, கிராமசபை உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் இவற்றுக்குப் பாலமாக விளங்குகின்றன. ஆனால் இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்கள் வளர்ச்சியடையாமலேயே இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகச் செயல்பாடுகள், நிதி ஆதாரங்கள், உரிமைகள், வரவு-செலவு கணக்குகள், அதிகாரங்கள் குறித்து கிராமப்புற மக்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டால்தான் மக்கள் பிரநிதிகளிடமும், அதிகாரிகளிடமும் இது தொடர்பாக வலியுறுத்த முடியும்; சமூக அக்கறையுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்படவும் உதவியாக இருக்கும். இது தொடர்பாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது `தன்னாட்சி’ என்ற தன்னார்வ அமைப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிராம மக்களுக்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டம்
கிராம மக்களுக்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டம்

கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், இரும்பை சாலையில் அமைந்திருக்கும் ஆரோவில் கிராமச் செயல்வழிக் குழு (Auroville Village Action Group-AVAG) வளாகத்தில், பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் கிராம சபை குறித்த அறிமுகப் பயிற்சி வகுப்புகளை தன்னாட்சி அமைப்பினர் நடத்தினார்கள். இதில் தைலாபுரம், கொடுவூர், விலவநத்தம், நைனார் பாளையம், வானூர், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விழிப்புணர்வுக் கூட்டம்
விழிப்புணர்வுக் கூட்டம்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார், ‘‘கிராம சபை என்பது ஒரு வலுவான அமைப்பு. இதுல 18 வயது பூர்த்தியான எல்லாரும் கலந்துக்க முடியும். தங்கள் ஊருக்கு என்னென்ன திட்டங்கள் வேணும், அவற்றை எப்படியெல்லாம் செயல்படுத்தலாம், அவற்றுக்கான நிதி ஆதாரங்களை எப்படிப் பெறலாம்னு ஊர் மக்களே முடிவெடுக்க முடியும். ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளையும் இதுல விவாதிக்கலாம். இவங்க ஒப்புதல் கொடுத்தால்தான் அந்த வரவு-செலவு கணக்கு அதிகாரபூர்வமாகச் செல்லுபடியாகும். ஊராட்சியையும் கிராம சபையையும் ஊர் மக்கள் முறையாக, முழுமையாகப் பயன்படுத்தினாலே போதும், நீர்நிலைகள் மேம்பாடு, கால்நடை வளர்ப்பு, மரபு சாரா எரிசக்தி, மரம் வளர்ப்பு, வேளாண் வளர்ச்சித் திட்டங்கள், கல்வி, மருத்துவம், குடிநீர்னு எல்லாவிதங்கள்லயும் ஊரை மேம்படுத்திவிட முடியும். ஆனா, இங்கே போதிய விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகள்ல பதவி வகிக்கும் மக்கள் பிரதிநிகளுக்கேகூட, தங்களின் முழுமையான அதிகாரங்கள், நிதி ஆதாரங்கள், மத்திய அரசுத் திட்டங்கள் பற்றித் தெரியலை. இவற்றைப் பற்றிய முழுமையான புரிதல் இருந்தால், அந்த கிராமம் தன்னிறைவு அடைஞ்சிடும். கேரளாவுல இருக்கும் கிராமப்புற மக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்காங்க. அங்கே வெள்ளம் வந்தப்போ, மீட்புப் பணிகளையும், சீரமைப்புப் பணிகளையும் விரைவாகச் செயல்படுத்தினாங்க. எங்கள் தன்னாட்சி அமைப்பு கடந்த இரண்டு வருஷமா தமிழக கிராமங்கள்ல உள்ளாட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு. தன்னாட்சி மூலமா வளர்ச்சித் திட்டங்களுக்கான பயிற்சிகளையும் கொடுக்கிறோம்” என்றார்.

நந்தகுமார்
நந்தகுமார்

தொடர்ந்து பேசிய தன்னாட்சி அமைப்பின் தலைவர் சரவணன், ‘‘உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிறைய சாதிக்கலாம். இதுக்கு தமிழ்நாட்லயே சில உதாரணங்களைச் சொல்ல முடியும். கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கும் ஓடந்துறையில சண்முகம்கிறவர் ஊராட்சித் தலைவரா இருந்தப்போ, இந்தியாவிலேயே முதன்முறையா காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செஞ்சு ஊர் மக்களுக்கு கொடுத்ததோடு, மீதமிருந்த மின்சாரத்தை மின்சார வாரியத்துக்கு விற்பனை செஞ்சார்.

ராமநாதபுரத்துல மைக்கேல்பட்டியில ஊராட்சித் தலைவராக இருந்த ஜேசுமேரி மழைநீர்ச் சேகரிப்புல சிறப்பாகச் செயல்பட்டு, ஊர் மக்களுக்குக் குடிநீர் கொடுத்தார். அதோடு நிலத்தடி நீர்ல இருந்த உப்புத் தன்மையையும் மாற்றினார். உள்ளாட்சி அமைப்புகளின் முழுமையான அதிகாரங்கள், நிதி ஆதாரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துறதும் இதுல வெளிப்படைத் தன்மையை உருவாக்குறதும்தான் எங்களின் முதன்மையான நோக்கம். ‘உள்ளாட்சியில் நல்லாட்சி! உள்ளூரில் வளங்குன்றா வளர்ச்சி’ங்கிற முழக்கத்தோடு மக்களை வலுப்படுத்துவோம்” என்றார்.

விழுப்புரம், வானூர் ஒன்றியத்தில் இவர்கள் நடத்திய பயிற்சி வகுப்பில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சரவணன், ‘‘இதுல கலந்துகிட்ட பெண்கள், தன்னம்பிக்கையோடு பேசினாங்க. `பஞ்சாயத்து நிர்வாகத்துல இவ்வளவு விஷயம் இருக்குனு தெரியாது. மகளிர் சுய உதவிக்குழுல இருந்தாலும், கிராம சபையில நாங்க கேள்வி கேட்க முடியும், வரவு செலவு கணக்குப் பார்க்க முடியும்’னு இப்பதான் தெரியுது’னு சொன்னாங்க.

சரவணன்
சரவணன்

‘நான் இரண்டாவதுதான் படிச்சிருக்கேன். ஏதாவது பிரச்னைன்னாக்கூட ஊர்ல பேசுறதுக்கு பயப்படுவேன். நான் கிராம சபையில கேள்வி கேட்க முடியுமா சார்’னு ஒரு பெண் ஆச்சர்யப்பட்டு கேட்டாங்க. ‘வீட்டு வரி கட்டுறதுக்கு பஞ்சாயத்து ஆபீசுக்குள்ள நுழையும்போதே உடம்பு நடுங்கும். கிளர்க்கைப் பார்த்தா பேசறதுக்கு பயப்படுவேன். `வேலையை முடிச்சுட்டு எப்படா வெளியில வருவோம்’னு இருக்கும். ஆனா, நீங்க பேசின விஷயங்களைக் கேட்கும்போது கொஞ்சம் தைரியம் வருது.

‘‘ஊராட்சியையும் கிராம சபையையும் ஊர் மக்கள் முறையாக, முழுமையாகப் பயன்படுத்தினாலே போதும், நீர்நிலைகள் மேம்பாடு, கால்நடை வளர்ப்பு, குடிநீர்னு எல்லா விதங்கள்லயும் ஊரை மேம்படுத்திவிட முடியும்.’’

அடுத்த முறை பஞ்சாயத்து ஆபிஸுக்கு பயப்படாம போவேன்னு நினைக்கிறேன்’னு இன்னொரு பெண் சொன்னாங்க. கிராம சபையில் தங்கள் அதிகாரங்களைப் புரிஞ்சிகிட்ட பெண்கள், இரு குழுக்களாகப் பிரிஞ்சு மாதிரி கிராம சபையைச் சிறப்பாக நடத்திக் காட்டினாங்க.

மக்கள் ஒத்துழைப்போடு சாதிச்ச ஊராட்சிகளின் காணொளியையும் ஒளிபரப்பி நம்பிக்கையை ஏற்படுத்தினோம்” என்றார். உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. தங்கள் பகுதிக்கு நன்மை செய்யும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, ஊராட்சிச் செயல்பாடுகளில் பங்கேற்பது வரை உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்தால், உங்கள் கிராமமும் சிறந்த கிராமமாக மாறும்!

தொடர்புக்கு, சரவணன், செல்போன்: 97512 37734 , நந்தகுமார், செல்போன்: 90032 32058