Published:Updated:

உடையும் தறுவாயில் தடுப்பணை: `அதிகமாக மணல் அள்ளப்பட்டதே காரணம்!' - விவசாயிகள் வேதனை

உடையும் நிலையில் எல்லீஸ் தடுப்பணை
News
உடையும் நிலையில் எல்லீஸ் தடுப்பணை ( தே.சிலம்பரசன் )

தளவானூர் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு இதுவரை சரி செய்யப்படாமல் உள்ள நிலையில், இந்த அணைக்கு முன்பாகவே அமைந்துள்ள எல்லீஸ் சத்திரம் தடுப்பணையின் ஒரு பகுதியிலும் தரைத்தளம் உள்ளிறங்கி, தடுப்பு கட்டைகள் உடைந்து நீர் வெளியேறி வருகிறது.

விழுப்புரம் - கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25.37 கோடி ரூபாயில் கட்டப்பட்டது தளவானூர் தடுப்பணை. இந்த அணை, சில மாதங்களிலேயே இடிந்து விழுந்து வெள்ளம் பெருக்கெடுத்த காட்சி அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியிருந்தது. அந்தக் காட்சிகளை ஊடகம் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் கண்டு தமிழகமே அதிர்ந்தது. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அன்றைய தினமே போராட்டக் களத்தில் குதித்திருந்தார் தற்போதைய தி.மு.க அமைச்சர் பொன்முடி. ஆனால், இப்போது நிலையே வேறு.

``தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பின்னர், இதுவரை இங்கு ஒருநாள் கூட பொன்முடி எட்டிப்பார்க்கவில்லை" என்று 2 மாதங்களுக்கு முன்பு தங்களின் வருத்தங்களை தெரிவித்திருந்தனர் அப்பகுதி மக்கள். மேலும், ``60 நாள்களுக்குள்ளாக இந்த அணையை சரிசெய்து தந்தால்தான் இந்த வருடத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றும் கோரிக்கையை வைத்திருந்தனர். ஆனால், இன்றுவரை அந்தத் தடுப்பணை சரி செய்யப்படாமல் உள்ளது.

உடைந்த தளவானூர் தடுப்பணை மற்றும் எல்லீஸ் தடுப்பணை
உடைந்த தளவானூர் தடுப்பணை மற்றும் எல்லீஸ் தடுப்பணை
தே.சிலம்பரசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தளவானூர் தடுப்பணைதான் இப்படியானது என்றால்... இந்த அணைக்கு முன்பாகவே தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள எல்லீஸ் சத்திரம் அணையில், ஒரு பகுதியும் உடைந்துவிழும் நிலையை எட்டியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் ஊராட்சி பகுதியில்தான் எல்லீஸ் தடுப்பணை அமைந்துள்ளது. 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்தத் தடுப்பணை. இது சுமார் 12,481சதுர கி.மீ நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்ட தடுப்பணை ஆகும். இந்த அணைக்கட்டு வழியே, அருகிலுள்ள ஏரிகளுக்குத் தண்ணீர் செல்லும் கண்டம்பாக்கம், மரகதபுரம், ஆழங்கால், ஏரளூர், ரெட்டி ஆகிய வாய்க்கால்கள் உள்ளன. இந்தத் தடுப்பணை மூலம் 1446 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. கடந்த சில வாரங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் நல்ல மழை பொழிந்து வருகிறது. அதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதுமட்டுமன்றி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பெய்த மழையால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகமானது. அணையின் கொள்ளளவு சுமார் 97 அடியை எட்டியபோது அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 1,450 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகமானது. இதனிடையே, எல்லீஸ் சத்திரம் அணையின் அடித்தளம் வழியே நீர்க்கசிவு ஏற்பட்டது. இதை அண்மையில் (23.10.2021) நேரில் சென்று பார்வையிட்டிருந்தார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன். அணையின் விவரங்களைக் கேட்டறிந்த அவர், தடுப்பணையின் பழுதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று அணையின் அடித்தளம் வழியே பெருமளவிலான நீர் பெருக்கெடுத்தது.

அடித்தளம் வழியே நீர் பெருக்கெடுத்த காட்சி - எல்லீஸ் தடுப்பணை.
அடித்தளம் வழியே நீர் பெருக்கெடுத்த காட்சி - எல்லீஸ் தடுப்பணை.

``சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மணல் அள்ளப்பட்டு வந்தது. அரசு அனுமதித்த அளவைவிட அதிகப்படியான மணல் அள்ளப்பட்டதே தற்போது இந்தப் பாதிப்பு ஏற்பட காரணம்" என்ற புகாரும் தற்போது எழுந்துள்ளது. தடுப்பணை அடித்தளம் வழியே நீர் வெளியேறி வருவது அப்பகுதி மக்களையும் விவசாயிகளையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, தடுப்பணையில் மறுபுறத்தில் அமைந்துள்ள மணற்போக்கிகள் வழியாக வரும் நீர், அப்படியே திருப்பிவிடும் முயற்சிகளும் பொதுப்பணித் துறையினால் மேற்கொள்ளப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும் தொடர்ச்சியாக நீர் வெளியேறி வந்த நிலையில், தற்போது அணைக்கட்டின் ஒரு பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டு அடித்தளம் கீழே இறங்கி, சரிந்துள்ளது. அணையின் தடுப்புக் கட்டைகளும் உடைந்துள்ளன. இவ்வாறே நீர் தொடர்ந்து வெளியேறி வந்தால், அடித்தளம் கீழிறங்கிய பகுதி முழுவதும் இடிந்துவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கலிவரதனிடம் பேசினோம். ``இந்த அணைக்கு உட்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், சுமார் 4 வருடங்களுக்கு முன்பு வரை அளவுக்கு அதிகமாகவே மணல் அள்ளப்பட்டுவிட்டது. அதன் விளைவாகத்தான் தற்போது அணைக்கட்டின் அடித்தளம் வழியே நீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு தண்ணீர் வெளியேறுவதற்கு `புறைவாரி வாங்குவது' என்று பெயர். இதே நிலை நீடித்து வந்தால் தடுப்பணை உடைவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது. இந்தத் தடுப்பணை கட்டப்பட்டு சுமார் 71 வருடங்கள் ஆகின்றன. இதுவரை இப்படி நடந்ததில்லை, இதுதான் முதன்முறை. இந்தத் தடுப்பணையைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து சரி பண்ணியிருக்கணும். ஆனால், அவர்கள் அதைப் பண்ணவில்லை.

கலிவரதன்
கலிவரதன்

இந்தத் தடுப்பணையைக் கடந்து செல்லும் நீரானது தளவானூர் அணைக்குத்தான் செல்கிறது. தளவானூர் அணையும் சரி செய்யப்படாமல் இருப்பதால் அங்கும் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி மணற்போக்கிகள் வழியே தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எல்லீஸ் அணையை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்த்துவிட்டு, `சரிசெய்யப்படும்' என்று கூறிச் சென்றுள்ளார். எனவே, அரசு துரிதமாகச் செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் தடுப்பணைகளைச் சரிசெய்து தரணும்" என்றார்.

மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரனிடம் பேசினோம்.

``இந்த எல்லீஸ் தடுப்பணை 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 71 வருடம் ஆகிவிட்டது. 1967-68-ல் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி, இந்த அணையானது செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது. இது 70 வருடம் உழைத்ததே பெரிய விஷயம்.

எல்லீஸ் சத்திரம் தடுப்பணை
எல்லீஸ் சத்திரம் தடுப்பணை

கிருஷ்ணகிரி அணையில் உடைப்பு ஏற்பட்ட சமயத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த அணையில் அரிப்பு ஏற்பட்டது. இப்போது சேதம் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, திட்ட மதிப்பீடு செய்து, அரசின் கவனத்துக்கு அனுப்பியுள்ளோம். அதன் பின்னர், தொடர்ச்சியாக மழை பொழிந்ததால் சுமார் 32 மீட்டர் வரை தடுப்பணையின் அடித்தளம் கீழே இறங்கியுள்ளது, அவ்வளவுதான். அரசாணை வந்ததும், தடுப்பணை பாதுகாப்பாக உள்ளதா என உறுதி செய்துவிட்டு, இதுவரை பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் முழுவதையும் புனரமைப்பு செய்ய உள்ளோம்" என்றார்.