Published:Updated:

ரூ.3,90,000 நெல், நிலக்கடலை... இயற்கை விவசாயத்தில் அசத்தும் அனிமேஷன் இளைஞர்!

நெல் வயலில் சீத்தாராமன்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் சீத்தாராமன்

அனுபவம்

ரூ.3,90,000 நெல், நிலக்கடலை... இயற்கை விவசாயத்தில் அசத்தும் அனிமேஷன் இளைஞர்!

அனுபவம்

Published:Updated:
நெல் வயலில் சீத்தாராமன்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயலில் சீத்தாராமன்

இளைஞர்கள் பலரும் இன்றைக்கு இயற்கை விவசாயத்தை ஆர்வமாக முன்னெடுத்துச் செய்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ‘அனிமேஷன்’ படித்த இளைஞர் சீத்தாராமன் என்பவர், 15 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து அசத்தி வருகிறார். ஆர்வமுடன் வரும் விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயம் குறித்துப் பயிற்சியும் அளித்து வருகிறார்.

ஒருநாள் காலைப் பொழுதில் அவரைச் சந்திப்பதற்காகப் பயணமானோம். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள தேவிகுளம் கிராமத்தில் வயல் சூழ்ந்த இடத்துக்கு நடுவே தனியாக அமைந்திருந்தது சீத்தாராமனின் அழகிய வீடு. வாத்துக்களுக்குத் தீவனமிட்டுக் கொண்டிருந்தவர் நம்மை இன்முகத்தோடு வரவேற்றார். நம்மை அறிமுகம் செய்துகொண்டதும், மகிழ்ச்சி யானவர், விளைநிலங்களைச் சுற்றிக் காட்டியபடியே பேசத் தொடங்கினார்.

நெல் வயலில் சீத்தாராமன்
நெல் வயலில் சீத்தாராமன்

“எனக்கு சொந்த ஊரு இங்கிருந்து 2 கி.மீ தூரத்துல இருக்கிற வண்டிப்பாளையம்தான். வீடு தொலைவா இருக்கிறதால, குடும்பத்தோட கழனியிலேயே தங்கி விவசாயம் பார்த்துக் கிட்டு வர்றோம். நான் படிக்குற காலத்தில, அப்பா கூட காலையிலும், சாயந்திரத்திலும் விவசாய வேலை செய்வேன். முதல்ல பி.ஏ தமிழ் முடிச்சேன். அப்புறமா, ‘மாஸ்டர் இன் மல்டிமீடியா’வுல அனிமேஷன் படிச்சு முடிச்சிட்டு... சொந்தமா ‘டிஜிட்டல் பேனர் டிசைனிங்’ பண்ணிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். அதுல கணிசமான லாபம் வந்துச்சு. அதனால, சொந்தமா ‘பிரின்டிங் மெஷின்’ வாங்குறதுக்கு அப்பாகிட்ட 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டேன். ‘லட்சக்கணக்குல எப்படிக் கொடுக்கிறது. நஷ்டம் ஆயிடுச்சுன்னா என்ன பண்ண... நமக்குனு இருக்கிற இடத்துல விவசாயம் பண்ணிதான் மூணு பொம்பள பிள்ளைங்கல நல்லபடியா கல்யாணம் கட்டிக் கொடுத்தேன். எதுக்காகவும் நீ வெளியில போயி சம்பாதிக்க வேண்டிய அவசியமில்ல. நம்ம வயல்ல விவசாயம் பண்ணுனா போதும்’னு அப்பா சொல்லிட்டாரு. அதுவரைக்கும் விவசாயத்தைப் பத்தி சிந்திச்சுக் கூட பார்க்காத நான், அப்பா சொல்லுறதும் சரிதான் அப்படின்னு 2011-ம் வருஷமே எங்களுக்குச் சொந்தமான நிலத்துல விவசாயம் பண்ணலாம்னு இறங்கிட்டேன்.

மாடுகளுடன்
மாடுகளுடன்

குலத்தொழிலே விவசாயம்தான் அப்படிங்கிறதால, நான் விவசாயம் பண்ண தொடங்கினப்போ எந்தப் பிரச்னையும் இல்ல. 2014-ல எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. கையில இருந்த காசு, மனைவியோட நகைகள் எல்லாத்தையும் அடகு வச்சு இறால் பண்ணை சொந்தமா வச்சேன், முழுக்க நஷ்டம் ஆகிடுச்சு. அடுத்த ஒரு வருஷ இடைவெளியில அப்பாவுக்குக் கண் ‘ஆபரேஷன்’ நடந்துச்சு. அதனால, நான் மட்டுமே தனியா விவசாயம் பண்ண வேண்டிய நிலைமை வந்துச்சு. விளைச்சல்ல ஏதாவது பிரச்னைனு அப்பாகிட்ட போய்க் கேட்டா... அவர் கலர்கலரா மருந்து டப்பா வச்சி இருப்பாரு. ‘இந்த பிரச்னைக்கு இந்த கலர் டப்பா பூச்சிக்கொல்லி வாங்கி அடி’ அப்படின்னு சொல்லி அனுப்புவாரு.

மருந்துக் கடைக்கு நாம ஒரு மருந்து வாங்க போனா, அவங்க கூடுதலா நாலு மருந்து தருவாங்க. இந்த உரச்செலவையும், பூச்சிக்கொல்லி செலவையும் குறைக்கணும்னு தோணுச்சு. அப்போதான் நம்மாழ்வார் ஐயாவுடைய வீடியோக்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். அவருடைய கட்டுரைகளை எல்லாம் தேடித் தேடி படிச்சேன். அதுல, இயற்கை உரங்களைப் பத்தி எளிமையா சொல்லியிருந்தாங்க.

மாட்டுடன்
மாட்டுடன்

கூடவே, பெரும்பாலான ‘ஹைபிரீட்’ ரகம் வறட்சியைத் தாங்காது. பூச்சித் தாக்கமும் அதிகமாக இருக்கும். ஆனா, நாட்டு ரகம் அதிக வறட்சியைத் தாங்கும் அப்படிங்குறதையும் உணர்ந்தேன். அதனால, எனக்கு நாட்டுரக விதை மேம்பட்டதாகத் தெரிஞ்சது. இயற்கை விவசாயம் பண்ணலாம்னு முடிவு பண்ணி, முன்னோடி விவசாயி செஞ்சி பத்மநாபன் என்பவர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘ஒரேடியா ரசாயனம் பயன் பாட்டைக் குறைக்காதப்பா... முதல்ல கொஞ்ச நிலப் பரப்புல இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கு. அப்புறம் படிப்படியா இயற்கை விவசாயத்தை விரிவு படுத்திடலாம்’னு சொன்னாரு.

நேரம் கிடைக்கும்போது அவருடனே இருந்து இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். நான் இயற்கை விவசாயம்தான் பண்ண போறேன்னு தெரிஞ்சதும் ஆரம்பத்துல அப்பா யோசிச்சாரு. அவ்வளவு சீக்கிரம் அவரு இயற்கை விவசாயத்த ஏத்துக்கல. ஏன்னா, முதல் தடவை, ஒரு ஏக்கர்ல வெள்ளைப்பொன்னி போட்டபோது, 10 மூட்டை தான் மகசூல் கிடைச்சது. ரொம்பவும் குறைவான மகசூல் கிடைச்சதால, ‘நம்மள நடுத்தெருவுல கொண்டு வந்து விட்டுவிடுவானோ...’ அப்படின்னு வீட்டுல பயந்தாங்க. அதை எல்லாத்தையும் உள்வாங்கி வச்சுக்கிட்டு, இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாகக் கொண்டு போகணும் அப்படின்னு விடாம உழைக்க ஆரம்பிச்சேன்’’ என்றவர், அடுத்தகட்ட நகர்வைப் பற்றிப் பேசினார்.

தென்னை
தென்னை

‘‘ஒருநாள் அப்பா கூட உட்கார்ந்து பேசினேன். ‘அப்பா, நீங்க விவசாயம் செய்யும்போது உரச் செலவு அதிகமா இருந்துச்சு. இப்போ அதெல்லாம் இல்ல. இயற்கை இடுபொருள் தயாரிக்கவும் செலவு குறைவாத்தான் ஆகுது’ அப்படின்னு எடுத்துச் சொல்லி அவருக்குப் புரியவச்சேன். அப்பாவும் மனசு மாறி இயற்கை விவசாயத்தை ஏத்துக்க ஆரம்பிச்சாரு. அதன் தொடர்ச்சியா, நான் செய்யுற இயற்கை விவசாய முறைகளையெல்லாம் சமூக வலைதளத்துல பதிவிடத் தொடங்கினேன். அந்தப் பதிவுகளை, மாவட்ட தோட்டக்கலை, வேளாண்துறை அதிகாரிங்க பார்த்துட்டு, நேர்ல வந்து என்னை ஊக்கப்படுத்துனாங்க.

மகாராஷ்டிரா, குஜராத்னு பல இடங்களுக்கு அழைச்சுகிட்டு போயி, அங்குள்ள இயற்கை விவசாயம் பற்றிப் பயிற்சி கொடுத்தாங்க. ஒரு தடவை, தோட்டக்கலைத்துறையில, என்னை அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அனுப்பி வச்சாங்க. நாங்க போன இடம், ரசாயனம் தடைசெய்யப்பட்ட பகுதி. அங்க, 10 நாள்கள் நடந்த இயற்கை விவசாயம் பயிற்சியில கலந்துகிட்டு நிறைய தெரிஞ்சுக் கிட்டேன். கூடவே, விவசாயிங்க நட்பு வட்டாரமும் வளர ஆரம்பிச்சது. அதுக்கப்புறமா எங்க ஊர்ல அரசுமூலம் வழங்கப்படும் விவசாயத் திட்டங்களை எல்லாம் செயல்படுத்த ஆரம்பிச்சேன்.

கூஸ் வாத்துகளுடன்
கூஸ் வாத்துகளுடன்

நான், எப்படி வெளி மாநிலம் போயி இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சுகிட்டேனோ, அதே மாதிரி இப்போ என்னுடைய வயலுக்கும் நிறைய பேர் வந்து பார்க்குறாங்க. தமிழக முதல்வர் நடத்துன வேளாண்மை பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்துல, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தோட்டக்கலைத் துறை மூலமா நான் கலந்துக்கிற வாய்ப்பு கிடைச்சது. அந்தக் கூட்டத்துக்குப் போறதுக்கு முன்னாடி, மாவட்டத்தில இருக்கக்கூடிய முன்னோடி விவசாயி களைச் சந்திச்சு ஆலோசனை கேட்டுட்டுப் போனேன். ஒருமுறை சத்தீஸ்கர் முதல்வரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைச்சது. இது எல்லாமே ஒரு விவசாயியாக மறக்க முடியாது.

எங்க ஊரைச் சுத்தியிருக்கிற இடத்துல 50,000 பனை விதைகளும், 1,000-க்கு மேல் மரக்கன்னுகளும் நட்டிருக்கேன். இயற்கை விவசாயத்த தொடர்ச்சியா பண்ணிகிட்டு வர்றதால, அங்ககச் சான்று கேட்டுக் கோயம்புத்தூர்ல விண்ணப்பம் கொடுத்திருக்கேன்” என்றவர், இயற்கை விவசாய முறைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

நெல் வயலில் சீத்தாராமன்
நெல் வயலில் சீத்தாராமன்

“போன வருஷம் வரைக்கும் 7 ஏக்கர்ல மட்டும் இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்த நான், இப்ப, 15 ஏக்கர்லயும் இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச் சுட்டேன். முதல்ல நிலத்தைப் பண்படுத்துறதுக்கு... பலதானிய விதைப்பு, மாட்டுச்சாணம், தொழுவுரம் பயன்படுத்துவேன். முக்கியமா களை மேலாண்மை ரொம்பவே முக்கியம். விதை விதைக் கிறதுக்கு முன்னாடி, மொத மழை பெய்ஞ்சதுமே ஒருமுறை ஏரோட்டி விட்டுட்டா களை முளைச்சிடும். அப்புறம் நாம மறுபடியும் ஏர் ஓட்டி, விவசாயம் பண்ணும்போது களை தொல்லை அதிகமாக இருக்காது. கழனியில, பயிர் விளைச்சல்ல இருக்கும்போது பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், இ.எம் கரைசல், பூச்சிவிரட்டி, மீன் அமிலம், தேமோர் கரைசல் மாதிரி இயற்கை இடுபொருள்களைத் தேவைக்கு ஏத்தமாதிரி பயன் படுத்துவேன். ஏன்னா, அப்போதான் பயிர் நல்லா செழிச்சி வளரும். பூச்சித் தாக்கம் அதிகமா இருக்கிற மாதிரி இருந்துச்சுன்னா... விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி இதெல்லாம் பயன்படுத்துவேன்.

இயற்கை விவசாயம் பண்ணணும்னு ஆர்வமா வர்றவங்களுக்கு நான் தயாரிச்ச இயற்கை இடுபொருளைக் கொடுத்தனுப்பி அவங்க தோட்டத்துல சோதிச்சுப்பாக்க சொல்லி அனுப்புறேன். அதுமட்டுமல்லாம, களஞ்சியம் இயற்கை உழவர் உற்பத்தியாளர் சங்கத்துடைய தலைவராகவும் இருக்கேன். அந்தச் சங்கத்தில 500 விவசாயிகள்வரை இருக்காங்க. அதுல 141 பேர் இப்போ இயற்கை விவசாயம் செய்யுறதுக்கு முன் வந்திருக்காங்க” என்று கூறி நெகிழ்ந்தவர், தனக்குக் கிடைத்த மகசூல் பற்றி விளக்கினார்.

இயற்கை இடுபொருள்
இயற்கை இடுபொருள்

“இது மொத்தம் 15 ஏக்கர். அதுல 7 ஏக்கர் வெள்ளைப்பொன்னியும், 7 ஏக்கர்ல நிலக்கடலையும், 50 சென்ட்ல கறுப்புக் கவுனியும், இன்னொரு 50 சென்ட்ல மரவள்ளி, மிளகாயும் போட்டேன். வெள்ளைப்பொன்னி, கறுப்புக் கவுனியை சமீபத்துலதான் அறுவடை பண்ணி முடிச்சேன். 5 ஏக்கர்ல, சொட்டுநீரை பயன்படுத்திதான் நிலக்கடலை போட்டேன். 2 ஏக்கர் மட்டும் தென்னை மரம் வச்ச நிலத்துல ஊடுபயிரா போட்டிருந்தேன். அது மட்டும்தான் இப்போ அறுவடை முடிஞ்சிருக்கு. மீதி 5 ஏக்கர்ல இருக்கிற நிலக்கடலை இப்போ தான் பூ, பிஞ்சு வெச்சிருக்கு.

வெள்ளைப்பொன்னி, ஏக்கருக்கு 24 மூட்டை (75 கிலோ மூட்டை) மகசூல் வந்துச்சு. இது போன தடவை கிடைச்ச மகசூலை விட ஏக்கருக்கு 9 மூட்டை அதிகம். 7 ஏக்கருக்கும் சேர்த்து மொத்தம் 168 மூட்டை. போனமுறை ‘வாட்ஸ் அப்’ல இருக்கக்கூடிய நண்பர்கள் வட்டாரத்துல நெல்லாகவே விற்பனை பண்ணிட்டேன். இந்த முறை எனக்கு உடனடி தேவை இருந்ததால, புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில ஓரளவுக்கு நல்ல விலை கிடைச்சதால அங்கேயே கொடுத்துட்டேன். விதை, சாப்பாட்டுக்குனு 7 மூட்டை எடுத்து வச்சுகிட்டேன். அதுபோக, மீதி 161 மூட்டை. 1 மூட்டைக்கு (75 கிலோ) 1,450 ரூபாய்னு கொடுத்ததுல மொத்தம் 2,33,450 ரூபாய் கிடைச்சது. இதுல, விதை முதல் வைக்கோல் கட்டுனது வரைக்கும்... செலவு 1,29,000 ரூபாய் போக 1,04,450 ரூபாய் கையில நின்னுச்சு.

அட்டவணை
அட்டவணை


கறுப்புக் கவுனியை மாநில மகசூல் போட்டியில பதிவு பண்ணி வச்சிருந்தேன். நல்ல மகசூலும் கிடைச்சது. ஆனா, இந்தத் தடவை ஜெயிக்க முடியல. 50 சென்ட்ல, மொத்தம் 1,450 கிலோ மகசூல் வந்துச்சு. 450 கிலோ எனக்காக எடுத்து வச்சதுக்குப் போக, 1,000 கிலோ நெல்லை கிலோ 100 ரூபாய்னு விதையாவே விற்பனை பண்ணலாம்னு இருக்கேன். செலவு போக, அது மூலமா 90,000 ரூபாய் கிடைக்கும்.

2 ஏக்கர் நிலக்கடலை எடுத்ததுல 56 மூட்டை (40 கிலோ) கிடைச்சது. அதை முழுவதும் விதைக்காகக் கொடுக்கிறேன். ஒரு மூட்டை 3,300 ரூபாய். அந்த வகையில 1,84,800 ரூபாய் கிடைக்கும். அதுல விதை, இடுபொருள், களை, டீசல்னு 18,500 ரூபாய் செலவு. அதுபோக 1,66,300 ரூபாய் லாபம்.

வருஷத்துக்கு ஒரு தடவை 50 நாட்டுக் கோழிக் குஞ்சுகளை (35 பெட்டை குஞ்சுகள், 15 சேவல் குஞ்சுகள்) இறக்கி 5 மாசம் வளர்ப்பேன். மேய்ச்சல் எல்லாம் எங்க தோட்டத்துலதான். நெல் வயல்ல அசோலா வளர்த்துக் கோழிகளுக்குக் கொடுக்கிறேன். முட்டை, இறைச்சி விற்பனை மூலமா செலவெல்லாம் போக 30,000 ரூபாய் வரைக்கும் கையில நிக்கும். இன்னும் சில நாள்கள்ல கோழி குஞ்சுகள் வளர்ப்புல இறங்கிடுவேன். இயற்கையை நாம நம்பினா, இயற்கை நம்மல கைவிடாது. இயற்கை விவசாயம் செய்யுறதால மகிழ்ச்சியாக இருக்கேன்” என்றார் நம்பிக்கை மிகுந்த குரலில்.


தொடர்புக்கு, சீத்தாராமன்,

செல்போன்: 79049 93635

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism