Published:Updated:

75 சென்ட்... ரூ.30,000 லாபம்... ஆற்காடு கிச்சிலிச் சம்பா!

நெல்லுடன் விவசாயி குமார்
பிரீமியம் ஸ்டோரி
நெல்லுடன் விவசாயி குமார்

மகசூல்

75 சென்ட்... ரூ.30,000 லாபம்... ஆற்காடு கிச்சிலிச் சம்பா!

மகசூல்

Published:Updated:
நெல்லுடன் விவசாயி குமார்
பிரீமியம் ஸ்டோரி
நெல்லுடன் விவசாயி குமார்

‘‘நஞ்சில்லாத ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்யணும்ங்கற ஒரே நோக்கத்துலதான், இயற்கை விவசாயத்துல இறங்கி, பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். யதார்த்தத்தைச் சொல்லணும்னா, வருமானத்தைப் பத்தியெல்லாம் நான் பெருசா கவலைப்படவே இல்லை. ஆனா, இன்ப அதிர்ச்சியா, இதுல நிறைவான லாபம் கிடைச்சுக்கிட்டு இருக்கு.’’

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே உள்ள வேம்பி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்து வரும் விவசாயி குமாரின் நெகிழ்ச்சியான வார்த்தைகள்தான் மேலிருப்பவை. இந்த ஆண்டு கோடைக்காலத்தில் இவர் முக்கால் ஏக்கரில் ஆற்காடு கிச்சலிச் சம்பா சாகுபடி செய்து, 1,125 கிலோ மகசூல் எடுத்துள்ளார். இதை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம், தனக்கு நிறைவான வருமானம் கிடைக்கும் என மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.

நடவு பணியில்
நடவு பணியில்

இவரைச் சந்திப்பதற்காக, ஒரு காலைப் பொழுதில் வேம்பி கிராமத்துக்குப் பயணம் மேற்கொண்டோம். சில்லென்ற காற்றும், பறவைகளின் கீச்சிடும் ஓசையும் நம்மை உற்சாகப்படுத்தியது. மாடுகளுக்குத் தீவனம் கொடுத்துக்கொண்டிருந்த குமார், புன்னகையோடு நம்மை வரவேற்று, ஆற்காடு கிச்சலிச் சம்பா நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

‘‘முக்கால் ஏக்கர்லதான் இதைச் சாகுபடி செஞ்சிருந்தேன். 75 கிலோ எடை கொண்ட 15 மூட்டை நெல் மகசூல் கிடைச்சிருக்கு. இது நானே எதிர்பார்க்காத மகசூல். வழக்கமா இதைச் சம்பா பட்டத்துலதான் சாகுபடி செய்வாங்க. ஆனா, எனக்கு இப்ப சன்னரகம் தேவைப்பட்டுச்சு. குறிப்பா, என்னோட வாடிக்கையாளர்கள் ஆற்காடு கிச்சலிச் சம்பா அரிசி வேணும்னு கேட்டிருந் தாங்க. இதனாலதான், குறைவான மகசூல் கிடைச்சாலும் பரவாயில்லைனு இதைக் கோடைப் பட்டத்துலயே சாகுபடி செஞ்சேன். ஆனா, நானே எதிர்பார்க்காத அளவுக்கு 1,125 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு’’ என்றவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

“நாங்க விவசாயக் குடும்பம். பி.யு.சி வரைக்கும் படிச்சிருக்கேன். எங்களுக்குனு சொந்தமா 12 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 7 ஏக்கர் ஆற்றுப்பாசனம், 5 ஏக்கர் வானம் பார்த்த பூமி. என் அப்பா, அரசாங்க அதிகாரியா இருந்ததால... விவசாயத்தைக் கவனிக்க நேரமில்லை. அதனால நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருந்தாங்க. கடையிலதான் அரிசி வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம்.

மாடுகளுடன்
மாடுகளுடன்

எனக்கு விவரம் தெரிஞ்சதுக்கு அப்புறமா தான், ‘நம்ம நிலத்துல நாம விவசாயம் பண்ணணும்னு முடிவெடுத்து, 1986-ம் வருஷத்துல இருந்து விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன். 6 ஏக்கர்ல மா மரங்கள், மீதி 6 ஏக்கர்ல ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி எல்லாம் பயன்படுத்தி, செயற்கை முறையில தான் விவசாயம் பண்ணிகிட்டு வந்தேன்.

என்னோட மகன் மென்பொருள் நிறுவனத்துல வேலை பார்க்குறாரு. அவருக்கு, இயற்கை விவசாயத்துல ஆர்வம் வந்து ஆறு வருஷத்துக்கு முன்னாடி எங்க கிட்ட சொன்னாரு. இதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு எனக்கும் ஆசை வந்துச்சு. விழுப்புரத்துல பாண்டியன்ங்கற இயற்கை விவசாயி நடத்தின விதைத் திருவிழாவை பார்க்குறதுக்கு நாங்க குடும்பத்தோட போனோம். அங்க நிறைய பாரம்பர்ய விதைகளைப் பார்வைக்கு வச்சிருந்தாங்க. இயற்கை விவசாயம் பத்தி அங்க நடந்த கருத்தரங்குல, நம்மாழ்வார் ஐயாவைப் பத்தியும் அவர் வழிகாட்டின இயற்கை விவசாயத்தைப் பத்தியும் தெரிஞ்சுகிட்டோம். அந்தக் கருத்தரங்கத்துல பலரும் உச்சரிச்ச ‘நஞ்சில்லா உணவுங்கற’ அந்த வார்த்தை என் மனசுல ஆணி அடிச்சது மாதிரி பதிஞ்சது. உடனடியா இயற்கை விவசாயத் துல இறங்கணுங்கற முடிவுக்கு வந்தேன். ரெண்டரை ஏக்கரை இயற்கை விவசாயத் துக்குனு ஒதுக்கினேன்.

மண்ணை வளப்படுத்திய புளிச்சக்கீரை

பொதுவாவே, எங்க நிலத்தோட மண்ணுல வளம் இருக்காது. அப்படிப்பட்ட நிலையில தொடர்ச்சியா பல வருஷமா அளவுக்கதிகமா ரசாயன உரங்கள் போட்டதுனால, மண்ணு இறுகிப்போயி கட்டாந்தரை மாதிரி மாறியிருந்துச்சு. அதனால செயற்கை முறையில நவீன ரக நெல் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தப்ப ஏக்கருக்கு 15-17 மூட்டை (75 கிலோ) தான் மகசூல் கிடைச்சது.

இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு முடிவெடுத்ததுமே, மண்ணை வளப்படுத்த, புளிச்சக்கீரையை விதையைத் தெளிச்சு, 40-50 நாள்கள்ல அது நல்லா தளதளன்னு வளர்ந்ததும் மடக்கி உழுதேன். நாற்று நடவு செஞ்ச பிறகு ஜீவாமிர்தம், தேமோர் கரைசல், கடலைப்புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் கொடுத்தேன்.

தோட்டத்தில்
தோட்டத்தில்

இயற்கை விவசாயத்துக்கு மாறின முதல் வருஷம்ங்கறதுனால, குறைவான மகசூல் தான் கிடைச்சது. அப்ப பயிர் பண்ணினது பொன்னி ரக நெல். ஏக்கருக்கு 10 மூட்டை தான் கிடைச்சது. சரியான விளைச்சல் இல்லாததைப் பார்த்துட்டு, ஊர்ல பலபேர் என்னைப் பரிகாசம் பண்ணி பேசினாங்க. இயற்கை விவசாயத்தையும் கிண்டல் அடிச்சாங்க. அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்படவே இல்லை. ஆனா இதுல சாதிச்சிக் காட்டணும்ங்கறதுல உறுதியா இருந்தேன்.

அடுத்தடுத்த வருஷங்கள்லயும் புளிச்சக்கீரை விதைப்பு செஞ்சி மடக்கி உழுதுக்கிட்டே இருந்தேன். இதுல தழைச்சத்து அதிகம். மண்ணுல உள்ள உப்புத்தன்மையை மாத்தி, சீக்கிரத்துலயே நிலத்தை வளப்படுத்திடும்னு விழுப்புரம் இயற்கை விவசாயி பாண்டியன் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பார். அவர் சொன்ன மாதிரியே அடுத்த ரெண்டே வருஷத்துல மண்ணு நல்லா பொளபொளப்பா மாற ஆரம்பிச்சிது.

நிலம் முழுக்கப் பரவலா மண்புழுக்கள் தென்பட்டுச்சி. இதுக்கிடையில பசுந்தாள் உரத்துக்காகச் சணப்பு, தக்கைப்பூண்டு விதைச்சும் மடக்கி உழுதுருக்கேன், அடியுரமா ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ஏக்கருக்கு 5 டன் வீதம் மாட்டு எரு போட்டுக்கிட்டு இருக்கேன். படிப்படியா மகசூல் அதிகரிச்சு, பாரம்பர்ய நெல் ரகங்கள்ல ஏக்கருக்கு 15 - 20 மூட்டை நெல் மகசூல் கிடைச்சிக்கிட்டு இருக்கு. மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, கறுப்புக் கவுனி, குள்ளக்கார்னு பலவிதமான பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சிருக்கேன். பெரும்பாலும் அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். சந்தை வாய்ப்பை பொறுத்தவரைக்கும் இதுல எனக்கு எந்த விதமான சிரமும் ஏற்பட்டதில்லை. சொந்தக் காரங்க, நண்பருங்கனு நிறைய பேர் என்கிட்ட ரொம்ப ஆர்வமா பாரம்பர்ய அரிசி வாங்கிக்கிட்டு இருக்காங்க. இன்னும் சொல்லப்போனா, இதுக்கான தேவை அதிகமாதான் இருக்கு’’ என்று சொன்னவர், இந்த ஆண்டு கோடைக்காலத்தில் முக்கால் ஏக்கரில் ஆற்காடு கிச்சலிச் சம்பா சாகுபடி செய்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

நான் உற்பத்திச் செய்யக்கூடிய பாரம்பர்ய ரக அரிசியை, விழுப்புரத்துல நடக்குற விதைத் திருவிழாவுலயும் விற்பனை செய்வேன்.


வருமானம்

“முக்கால் ஏக்கர்ல ஆற்காடு கிச்சலிச் சம்பா சாகுபடி செஞ்சதுல 1,125 மகசூல் கிடைச்சிருக்கு. இதை அரிசியா அரைச்சோம்னா 675 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ 80 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 54,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். தவிடு, குருணை யோட விலைமதிப்பு 5,000 ரூபாய். வைக்கோலோட விலைமதிப்பு 5,000 ரூபாய். ஆக மொத்தம் இந்த முக்கால் ஏக்கர் ஆற்காடு கிச்சலிச் சம்பா நெல் சாகுபடி மூலமா 64,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதுல சாகுபடி செலவு, நெல் அரவைக்கூலி உட்பட எல்லாச் செலவும் போக, 30,000 ரூபாய் நிகரலாபமா கிடைக்கும். இது எனக்கு நிறைவான லாபம்’’ என மகிழ்ச்சி பொங்க சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, குமார்,

செல்போன்: 94869 35934

இப்படித்தான் சாகுபடி

முக்கால் ஏக்கரில் ஆற்காடு கிச்சலிச் சம்பா நெல் சாகுபடி செய்முறை குறித்து, குமார் சொல்லியவை பாடமாக இடம் பெறுகிறது.

நெல்லுடன்
நெல்லுடன்


நாற்று உற்பத்தி

2 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். வேம்பு, எருக்கு, நொச்சி, ஆடாதொடை உள்ளிட்ட பலவிதமான இலைதழைகள் 50 கிலோ போட்டு, நன்கு சேத்துழவு செய்து, நாற்றங்காலை நன்கு சமப்படுத்தி, 10 கிலோ நெல்லை பரவலாகத் தூவ வேண்டும். 12-ம் நாள் 1 கிலோ கடலைப் பிண்ணாக்கை நன்கு தூளாக்கி 2 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து, பாசனநீரில் கலந்து விட வேண்டும். 22-25 நாள்களில் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும்.

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில், மண்ணை லேசாக ஈரப்படுத்தி 8 கிலோ புளிச்சக்கீரை விதையைத் தெளிக்க வேண்டும். இதைச் செழிப்பாக வளர்த்தெடுக்க, தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 40-50 நாள்களில் புளிச்சக்கீரை நன்கு தளதளவென வளர்ந்த நிலையில் இருக்கும்போது தண்ணீர் பாய்ச்சி சேத்துழவு செய்ய வேண்டும். இது நன்கு மட்கியதும், அடியுரமாக 3 டன் மாட்டு எரு இட்டு, மீண்டும் நன்கு உழவு ஓட்டி, மண்ணைச் சமப்படுத்தி, ஒற்றை நாற்று முறையில் தலா 1 அடி இடைவெளியில் நாற்று நடவு செய்ய வேண்டும். பத்து நாள்களுக்கு ஒரு முறை பாசனநீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 12-ம் நாள் தலா 25 கிலோ கடலைப்பிண்ணாக்கு, வேப்பம்பிண்ணாக்கு, மாட்டு எரு... இவற்றை ஒன்றாகக் கலந்து, நிலம் முழுக்கப் பரவலாகத் தூவ வேண்டும். 15, 25, 45-ம் நாள்களில் கோனோவீடர் மூலம் களைகளை மண்ணுக்குள் புதைக்க வேண்டும். பூச்சித்தாக்குதல் தென்பட்டால், 100 லிட்டர் தண்ணீரில், 3 லிட்டர் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 45-50 நாள்களில் 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். கதிர்களில் மணி பிடிக்கத் தொடங்கும்போது 50 கிலோ எருவுடன் 10 கிலோ சாம்பல் கலந்து தூவ வேண்டும். ஆற்காடு கிச்சலிச் சம்பாவின் மொத்த வயது 135 நாள்கள். நாற்று நடவு செய்த 110-115 நாள்களில் கதிர்கள் நன்கு முற்றி, பயிர் அறுவடைக்கு வரும்.

தோட்டத்தில்
தோட்டத்தில்

வீட்டுத்தோட்டத்தில் காய்கறித் தோட்டம்

‘‘எங்க வீட்டுக்கு பின்னாடி 20 சென்ட்ல தோட்டம் அமைச்சிருக்கேன். அதுல அவரை, கொத்தவரை, வெண்டை, சுண்டைக்காய், கத்திரி, முள்ளங்கி, அகத்திக்கீரை, மரவள்ளி, வாழைனு பலவிதமான பயிர்கள் சாகுபடி செய்றேன். எங்களோட வீட்டுத் தேவைக்குப் போக மீதம் இருக்குறதை விற்பனை பண்ணிடுவேன்” என்கிறார் குமார்.விதைத் திருவிழாவில் அரிசி விற்பனை

‘‘நான் உற்பத்திச் செய்யக்கூடிய பாரம்பர்ய அரிசியை, நண்பர்கள், சொந்தக்காரங்ககிட்ட விற்பனை செய்றதோடு மட்டுமல்லாம, ஒவ்வொரு வருஷமும் விழுப்புரத்துல நடக்குற விதைத் திருவிழாவுலயும் விற்பனை செய்வேன்’’ என்கிறார் குமார்.

மகசூலை அதிகரிக்கும் புளிச்சக்கீரை

புளிச்சக்கீரை மிகச் சிறந்த தழைச்சத்து என விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்து வரும் விழுப்புரம் இயற்கை விவசாயி பாண்டியனிடம் பேசினோம். “தழைச்சத்துக்காக, என்னோட நிலத்துல புளிச்சக்கீரையை விதைப்பு செஞ்சு, இது எந்தளவுக்குக் கைகொடுக்குதுனு கிட்டத்தட்ட ஏழு வருஷம் சோதிச்சு பார்த்த பிறகு, மற்ற விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்ய ஆரம்பிச்சேன். மண்ணையும் பொலபொலப்பா மாத்துது. இதைப் பசுந்தாள் உரமா விதைப்பு செய்றதுனால, நிலம் சீக்கிரத்துல வளமாகி, பயிர் செழிப்பா வளரும். நெல் சாகுபடியைத் தொடங்குறதுக்கு 50 - 60 நாள்களுக்கு முன்னாடியே, ஏக்கருக்கு 8 கிலோ வீதம் புளிச்சக்கீரை விதையை விதைச்சிடலாம். அடுத்த 40-50 நாள்கள்ல மடக்கி உழுதுடலாம். இதனால் பயிரோட வளர்ச்சி அதிகமாகுறதோடு, அதிக எண்ணிக்கையில தூர்கள் உருவாகும். நெல்மணிகளும் திரட்சியாகக் கிடைக்கும்’’ என்றார்.