Published:Updated:

400 ஏக்கருக்கும் மேல் பாழான கல்யாண பூசணி விளைச்சல்; விவசாயிகளுக்கு உதவுமா அரசு?

ஆயுத பூஜை அன்று விற்பனைக்குக் கொண்டு வருவதற்காகப் பயிரிடப்பட்ட கல்யாண பூசணி வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, விளைச்சல் கேள்விக்குறியாகி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நம் வாழ்வியலுக்கு உதவியாக இருக்கும் கருவிகளையும், ஆயுதங்களையும் போற்றி வழிபடும் தினம், ஆயுத பூஜை. அன்றைய தினத்தில் பெருவாரியான மக்கள் தங்களின் நம்பிக்கைக்காகக் கல்யாண பூசணிக்காயில் தீபமேற்றி சுற்றி உடைப்பர். அன்றைய தினங்களில் கல்யாண பூசணிக்காயின் தேவை அதிகம் இருக்கும் என்பதால் ஆயுத பூஜைக்கு 100 தினங்களுக்கு முன்பிருந்தே விவசாயிகள் அதற்கான பணியில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள்.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் விவசாயிகள் பலர் இந்த கல்யாண பூசணிக்காயை விவசாயம் செய்துள்ளனர். இந்நிலையில், திடீரென ஒரு விதமான வைரஸ் தாக்குதலால் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் மனு அளித்துள்ளார்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விளைச்சல்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விளைச்சல்.
`தட்கல் திட்டத்தால் எங்களுக்கு பாதிப்புதான்!’ - இலவச மின் இணைப்பு பற்றி விவசாயிகள் வருத்தம்

இதுதொடர்பாக கலிவரதனிடம் பேசினோம். ``ஆயுத பூஜையை மையப்படுத்தி, ஒவ்வோர் ஆண்டும் ஆயுத பூஜை வருவதற்கு 90 நாள்களுக்கு முன்பிருந்தே கல்யாண பூசணிக்காயை விளைவிக்கத் தொடங்கிவிடுவோம். அதே போல இந்த வருடமும் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 400 ஏக்கருக்கு மேல் இந்தக் கல்யாண பூசணிக்காய் விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட ஒரு விதமான வைரஸ் தாக்குதலால் பூக்கள் பிஞ்சுகள் அழுகிவிடுகின்றன. திடமான பிஞ்சுகளும் வெடித்து வருவதோடு, மஞ்சள் பூத்தாற்போல பாதிப்படைந்து வருகின்றன. முகையூர், கோலியனூர், கண்டமங்கலம், மரக்காணம், ஒலக்கூர், வானூர், செஞ்சி ஆகிய ஒன்றியங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒன்றியங்களிலும் 20 முதல் 25 இடங்களில் இந்தப் பூசணி பயிர் செய்யப்பட்டுள்ளது. சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதன்மூலம் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை தோட்டத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கையோ, சேதத்துக்கான காரணம் அறிவதற்கோ எவ்விதமான ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தப் பயிர் மிகவும் மென்மையானது. ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு 7 முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ 15 ரூபாய் வரை விலை போனால், சராசரியாக ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், இந்த முறை பாதி மகசூலுக்குக்கூட வழியில்லை.

கலிவரதன்
கலிவரதன்

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இதைச் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டனர். உரிய கவனம் செலுத்தியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். `துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு பேசுகிறேன்' என்று கூறியுள்ளார்" என்றார்.

மேலும், வைரஸ் தாக்குதலால் கல்யாண பூசணி விளைச்சல் பாதிக்கப்பட்ட கண்டமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த முருகையன் என்ற விவசாயிடம் பேசினோம். ``தொடர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் நான் கல்யாண பூசணிக்காயைப் பயிரிடுவேன். இந்த முறையும் 1.5 ஏக்கர் வரை பயிரிட்டுள்ளேன். திடீரென ஒரு விதமான வைரஸ் தாக்குதலால் பயிர் முழுக்க பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.

இதனால் இலைகள் படரவே இல்லை. புட்டை பிடித்தாற்போல இருக்கு. அதனால் புற்களும் மூண்டு கொண்டது. பூக்களும் பிஞ்சுகளும் ஆரம்பத்திலேயே கருகிப் போகுதுங்க. விளைவிச்ச பயிரை இந்த நிலையில பார்க்கும்போது, மனசு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழக்கமா 4 மருந்து அடிப்போம். இந்த முறை பூசணிக்கொடி எல்லாம் இப்படிப் பாதிக்கப்பட்டு இருந்ததால மனசு கேட்காம 9 முறை மறந்து அடிச்சு 15,000-க்கு மேல செலவு பண்ணிட்டோம். ஆனா, எந்த மாற்றமும் இல்லைங்க. இதற்கு முன்பாகப் பயிரிடும்போது, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்ப்பார்கள். நாங்களும் சென்று ஆலோசனை பெறுவோம்.

முருகையன்
முருகையன்

ஆனால், இந்த முறை யாரும் ஆலோசனைகூட தரவில்லை. தேர்தல் நேரம் என்பதால் அதிகாரிகளை அலுவலகத்தில் பார்க்கவே முடிவதில்லை. இப்போ நான் அறுவடை பண்ண வேண்டிய நேரம். வழக்கமாக ஏக்கருக்கு 10 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். ஆனா, இந்த முறை 1 டன் வருமா என்பதே சந்தேகம்தான். இது எங்களுக்கு பெரும் இழப்பு" என்றார் வருத்தத்துடன்.

இது தொடர்பாக விழுப்புரம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இந்திராவிடம் பேசினோம். ``நேற்றைய தினமே நேரில் சென்று தோட்டங்களை பார்வையிட்டுவிட்டு வந்தோம். திண்டிவனம் ஆராய்ச்சி நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம். நாளைய தினம் ஆராய்ச்சியாளர்கள் நேரில் வந்து சோதனை செய்து கூறிய பின்னர், அடுத்ததாக என்ன செய்யலாம் என முடிவு எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு