Published:Updated:

`ஆடு மேய்த்தலுக்கு அணுகவும்!' - வைரலான போஸ்டர்; காரணம் சொல்லும் ஆடு மேய்க்கும் தொழிலாளி

போஸ்டரில் ஒரு கையில் ஆடு மேய்க்கும் கம்பையும், இன்னொரு கையில் ஆட்டையும் பிடித்து நிற்பதுபோன்ற அழகர்சாமியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது இந்த போஸ்டர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள கிருஷ்ணம நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக ஆடுகள் கிடையாது. ஆடுகள் வைத்திருப்பவர்களின் தோட்டத்தில் தங்கியிருந்து ஆடு மேய்த்து, அதில் கிடைக்கும் கூலியை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் அலை கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் ஆடு மேய்க்கும் தொழில் பெரிய அளவில் இல்லாததால் கிடைக்கிற வேலைகளைச் செய்து வந்தார்.

ஆட்டுடன் அழகர்சாமி
ஆட்டுடன் அழகர்சாமி

இந்த நிலையில், கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாலும், ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாலும் மீண்டும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடலாம் என்ற முடிவில் ஆடு மேய்க்கும் தொழில் தேடி அலைந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில், ``ஆடு மேய்த்தலுக்கு அணுகவும்” என்ற தலைப்பில்,

`ஆடுமேய்த்தல்: உள்ளூர் சம்பளம் ரூ.600,

வெளியூர் சம்பளம் ரூ.700,

வெளியூர் பயணம் செல்ல சம்பளம் ரூ.1,000’ எனத் தனக்கான கூலித்தொகை, தொடர்புகொள்ள தனது செல்போன் எண்ணைக் குறிப்பிட்டு அதனுடன் மூன்று வேளை சைவச்சாப்பாடு எனவும் குறிப்பிட்டு ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளார்.

அதே போஸ்டரில் ஒரு கையில் ஆடு மேய்க்கும் கம்பையும், இன்னொரு கையில் ஆட்டையும் பிடித்து நிற்பதுபோன்ற அழகர்சாமியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது இந்த போஸ்டர். இதுகுறித்து அழகர்சாமியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``எனக்குச் சொந்த ஊரே கிருஷ்ணம நாயக்கன்பட்டி கிராமம்தான். நான் பள்ளிக்கூடத்துக்கே போனதில்ல. எங்க அப்பா மானாவாரியா சிறுதானிய வகைகள், பருத்தி, மக்காச்சோளத்தை சாகுபடி செஞ்சாங்க. எங்களைப் போல உள்ள விவசாயிகளுக்கு மழைதான் கடவுளு. மழை பெய்ஞ்சாத்தான் மகசூலை எடுக்க முடியும்.

போஸ்டருடன் அழகர்சாமி
போஸ்டருடன் அழகர்சாமி

மழை பெய்யலேன்னா அந்த வருஷம் ஒண்ணும் கிடையாது. அதனால, வீட்டுக்கு வீடு ஆடுகளை வளர்ப்போம். அப்பாவுடன் ஆடு மேய்க்கவும் போக ஆரம்பிச்சேன். காலையில விடிஞ்சா ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிட்டுப் போயிட்டு பொழுது சாய்ஞ்ச பிறகுதான் வீட்டுக்குப் பத்திக்கிட்டு வருவோம். இதுக்கு இடையில விவசாய வேலைக்கும் போய்க்கிட்டு இருந்தேன். என்னோட முதல் மனைவி உடல்நிலை சரியில்லாம இறந்துபோயிட்டா. ரெண்டாவது மனைவி என்னை விட்டுப் பிரிஞ்சு போயிட்டா. என்னோட ஒரே மகளை கல்யாணம் செஞ்சு கொடுத்திட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போ நான் ஒண்டிக்கட்டையாத்தான் இருக்கேன். நான் சொந்தமா 100 ஆடுக்கு மேல வச்சுருந்தேன். வீட்டுச்செலவு, பொண்ணு கல்யாணம், சீர்சணத்தின்னு எல்லாத்தையும் வித்துட்டேன். அதுக்குப் பிறகு ஆடு வச்சிருக்குறவங்க தோட்டத்துல தங்கியிருந்து ஆடுகளை மேய்ச்சலுக்கு பத்திக்கிட்டு வருவேன். வாய்ப்பிருந்தா அந்தத் தோட்டத்துலயே தங்குவேன். இல்லேன்னா காலையில போயிட்டு, சாயங்காலம் பட்டியில (கொட்டகை) அடைச்சுட்டு ராத்திரி வீட்டுக்கு வந்துருவேன். போன வருஷம் கொரோனா வந்ததுல இருந்தது ஆடு மேய்க்குற தொழில் சரியா இல்லாமப் போச்சு. சாப்பாட்டுக்கும் கஷ்டமாப் போச்சு.

ஆட்டுடன் அழகர்சாமி
ஆட்டுடன் அழகர்சாமி

அதனால, திரும்பவும் ஆடு மேய்க்கலாம்ன்னு முடிவு செஞ்சுருக்கேன். ஆடு மேய்க்குற தொழில் இருந்தா சொல்லுங்கன்னு நிறைய பேருகிட்டச் சொன்னேன். ``வேலைக்கு ஆட்கள் தேவை, வெளியூர் வேலைக்கு ஆட்கள் தேவை, வெளிநாட்டுக்கு ஆள் தேவை, உணவு, தங்குமிடம் இலவசம்”னு எல்லா இடத்துலயும் கண்ணுல படுற மாதிரி நோட்டீஸை சுத்திச்சுத்தி ஒட்டி வச்சிருக்காங்க. அந்த நோட்டீஸைப் படிச்சு அதுல போட்டுருக்குற போன் நம்பருக்கு போன் செஞ்சு என்ன வேலை, எம்புட்டு சம்பளம்னு அந்த நோட்டீஸ் முன்னால நின்னே நிறைய பேரு போன்ல பேசுறதைப் பார்த்திருக்கேன்.

அதனால, ஒவ்வொருத்தருகிட்டயா போன் நம்பர், கூலி விவரங்களைச் சொல்லிச் சொல்லி எனக்கும் வாய் வலிச்சுப் போச்சு. அதனால, பேசாம நம்மளும் ஆடு மேய்க்க ஆள் தேவைப்பட்டா என்னைக் கூப்பிடுற மாதிரி நோட்டீஸ் ஒட்டலாமான்னு எனக்கும் யோசனை வந்துச்சு. நோட்டீஸ்ல என்ன வாசகம் போடணும்னுலாம் எனக்குத் தெரியாது. அதைப் பத்தியும் நான் யோசிக்கல. அதனால, உள்ளூர் சம்பளம், வெளியூர் சம்பளம், சாப்பாடு இது மட்டும்தான நமக்குத் தேவைன்னு அதை மட்டும்தான் போடச் சொன்னேன். சிலரு ஆளை நேர்ல பார்க்காம எப்படி வேலை தர்றதுன்னு கேள்வி கேட்பாங்க. அதனால, ஆட்டைப் பிடிச்சுக்கிட்டு ஆடு மேய்குற கம்போட நின்னு ஏற்கெனவே எடுத்த போட்டோவயும் போட்டேன்.

அந்த போஸ்டர்
அந்த போஸ்டர்
``தினமும் 10,000 ஆடு மாடுங்க வரை இங்க வரும்!" - 50 ஆண்டுகளாக கால்நடைகளின் தாகம் தணிக்கும் விவசாயி

சிலர் அந்த நோட்டீஸை போட்டோ எடுத்து, ஏதோ வாட்ஸ்அப்னு சொல்றாங்க. அதுலயும் போட்டு விட்டுருக்கேன்னு சொன்னாங்க. நோட்டீஸ் ஒட்டுன அடுத்த நாளே நாலஞ்சு போன் வந்துச்சு. எல்லாமே வெளி மாவட்டங்களா இருக்கு. இன்னும் சிலர் போன் செஞ்சு, ``யாரு அழகர்சாமி ஐயாவா... நாங்களும் நல்லா ஆடு மேய்ப்போம். ஆட்டுக்கிடை போடுவோம். எங்களுக்கு ஏதாச்சும் வேலை இருக்காய்யா”ன்னு கிண்டலா கேட்குறாங்க. நானே வேலை கேட்டுதான் நோட்டீஸ் ஒட்டிருக்கேன். இந்த நிலைமையில எங்கிட்டயே வேலை கேட்குறாங்க. என்னத்த சொல்ல.

இன்னும் சிலர், ``என்னய்யா ஆடு மேய்க்க வெளியூருக்கு ஒரு நாளைக்கு ரூ.700-ம், ஆடுகளை மேய்ச்சு பயணமா வெளியூருக்கு பத்திக்கிட்டுப் போகுறதுக்கு ஆயிரம் ரூபாயா சம்பளம்?”னு கேள்வி கேட்டாங்க. ``ஆடு மேய்க்கிறது சாதாரண விஷயமாய்யா... ஒண்ணா, ரெண்டா... நூத்துக் கணக்குல ஆடுகளை ஒண்ணு போல மேய்ச்சலுக்குப் பத்திக்கிட்டுப் போகணும். புல்லு இல்லேன்னா மரத்துல இருந்து கொப்பு, கொலை ஒடிச்சுப் போடணும். தண்ணி இருக்குற இடமாப் பார்த்து தண்ணி காட்டணும். ரெண்டு மணி நேரத்துக்கு ஒருதடவை உருப்படிகளை (ஆடு) எண்ணிப் பார்த்து எண்ணிக்கையைச் சரி பார்க்கணும்.

போஸ்டருடன் அழகர்சாமி
போஸ்டருடன் அழகர்சாமி
``என் முதல் சம்பளம் ஆடு, மாடு மேய்ச்சதுல கிடைச்சதுதான்!" - Singer வேல்முருகன் | Nanayam Vikatan

சாயங்காலம், எல்லாத்தையும் ஒருங்கிணைச்சு பத்திக்கிட்டு வந்து உருப்படி ஒண்ணு குறையாம கொட்டகைக்குள்ள அடைக்கணும். இம்புட்டு வேலை இருக்கு. பள்ளிக்கூடத்துல பயலுவ ஒழுங்கா படிக்கலேன்னா ஆடு, மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லி திட்டுறதப் பார்த்திருக்கேன். பாடத்தைக்கூடப் படிச்சுப் புடலாம். ஆடு, மாடு மேய்க்குறது லேசு பட்ட காரியமில்ல. என் சம்பளம் இதுதான். இஷ்டம் இருந்தா வேலை கொடுங்க. கஷ்டம்னா விட்டுருங்க”ன்னு பட்டுன்னு சொல்லிட்டேன். நம்மளை நம்பி வேலை கொடுக்குறவங்களுக்கு உண்மையா இருக்கணும், நேர்மையா இருக்கணும். அதே நேரத்துல கூலியைக் குறைச்சுகக் கூடாது இதுதான் நம்ம பாலிசி. என்ன நான் சொல்லுறது சரிதானய்யா?” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு