Published:Updated:

தமிழகப் பருத்தி விற்பனையின் தாயகம் விருதுநகர்!

விருதுநகர் பருத்தி மண்டி
பிரீமியம் ஸ்டோரி
விருதுநகர் பருத்தி மண்டி

சந்தை

தமிழகப் பருத்தி விற்பனையின் தாயகம் விருதுநகர்!

சந்தை

Published:Updated:
விருதுநகர் பருத்தி மண்டி
பிரீமியம் ஸ்டோரி
விருதுநகர் பருத்தி மண்டி

விருதுநகர் என்றாலே சந்தையையும், வியாபாரிகளையும்தான் அடையாளமாகச் சொல்வார்கள். விவசாயிகள் விற்பனை செய்யும் பொருளுக்குச் சரியான எடையும் அதற்கான பணமும் பாக்கி இல்லாமல் உடனடியாகக் கொடுக்கும் நாணயமும்தான் அதற்குக் காரணம். மிளகாய் வத்தல், மல்லி, நவதானியம், எண்ணெய், பருத்தி ஆகியவற்றிற்கு விருதுநகர் முக்கியச் சந்தையாகத் திகழ்ந்தாலும், விருதுநகர் சந்தை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது ’பருத்தி’தான் என்கிறார்கள் இங்குள்ள மூன்று தலைமுறை தாண்டிய வியாபாரிகள்.

விருதுநகர் பஞ்சு மற்றும் பருத்தி வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ராமதாஸை நேரில் சந்தித்துப் பேசினோம், ‘‘விருதுநகரைச் சுற்றியும் கரிசல் பூமிதான். மானாவாரி விவசாயம் தான். இறவை பாசனத்தைப் பத்தி நினைச்சுக்கூடப் பார்க்க முடியாத நிலைமை. ஒரு மழை பெய்ஞ்சாலும் ரெண்டடி, மூணடி ஆழம் வரைக்கும் ஈரப்பதம் இருக்கும். இதனாலேயே மானாவாரி விவசாயத்தில கணிசமான மகசூல் கிடைச்சது. அப்படிப்பட்ட மண்வளம் நிறைஞ்சது இந்தக் கரிசல் பூமி. சுமார் 50 வருஷத்துக்கு முன்னெல்லாம் திரும்புற திசையெல்லாம் பருத்தி விவசாயம்தான் நடந்துச்சு.

விருதுநகர் பருத்தி மண்டி
விருதுநகர் பருத்தி மண்டி

ஊருல இருக்க விவசாயிக எல்லாம் ஒரே நாள்ல தான் உழுவாங்க, விதைப்பாங்க...களை எடுத்து...இடுபொருள் தெளிப்பாங்க. இதைப் பார்க்கவே விவசாயத் திருவிழா மாதிரி இருக்கும். ஆனா, அறுவடை மட்டும் வேலையாளுக கிடைக்கிறது, தேவைக்கு ஏத்த மாதிரி அவங்கவங்க விருப்பத்துக்கு ஏத்தபடி செய்வாங்க. பருத்தி விவசாயத்துல பெரும்பாலும் நஷ்டம் வராது. அதனால இதை ‘ராஜ மகசூல் பயிர்’ ன்னுச் சொல்லுவாங்க. விருதுநகர்ல முதல்ல சந்தை கூடினதே பருத்திக்காகத்தான். அதுக்குப் பிறகுதான் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பயறு வகைகள், சிறுதானியங்கள்னு சந்தை பெருசாச்சு.

சந்தை அமையக் காரணமான ரயில்பாதை

தென் மாவட்டத்தில முதல் ரயில்வே பாதை மதுரை, விருதுநகர், சாத்தூர், கடம்பூர், மணியாச்சி வழியாகத் தூத்துக்குடி வரைக்கும் தான் அமைக்கப்பட்டது. அதுக்குப் பிறகு சில வருஷம் கழிச்சுதான் கோயமுத்தூர் பக்கம் ரயில்பாதை போட்டாங்க. தெக்க(தென் மாவட்டங்களுக்கு) போட்ட ரயில்பாதை, பொது மக்கள் போக்குவரத்துக்காக ஆரம்பிக்கல. பருத்தி, பஞ்சு ஏற்றுமதிக்காகச் சரக்கு ரயில்தான் முதல்ல ஆரம்பிக்கப்பட்டது. விருதுநகர்ல ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்தி, பஞ்சு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலமா இங்கிலாந்துக்கு அதிகளவுல ஏற்றுமதியாச்சு. ஆரம்பத்தில கைமரம் மூலமாத்தான் பருத்தியிலிருந்து பஞ்சு பிரிக்கப்பட்டது.

விருதுநகர் பருத்தி மண்டி
விருதுநகர் பருத்தி மண்டி

பிறகு, பருத்தியிலிருந்து பஞ்சு பிரிச்செடுக்க 1904-ம் வருஷம் ‘மதுராகோட்ஸ்’, 1905-ம் வருஷம் ‘ராலிஸ் இன்டியா’, 1906-ம் வருஷம் ‘ஜப்பான் காட்டன் கம்பெனி’னு ஜின்னிங் கம்பெனிகளை விருதுநகர்ல ஆரம்பிச்சாங்க. சரக்கு ரயில் ஒவ்வொரு ஜின்னிங் பேக்டரிக்கு உள்ள வந்து, பஞ்சு மூட்டைகளை ஏத்துற மாதிரி ரயில்பாதை அமைச்சாங்க. இந்த 3 கம்பெனிகள்லயும் அந்தக் காலத்திலயே 3,000 பேர் வேலை பார்த்ததா எங்க அப்பா சொன்ன ஞாபகம் இருக்கு. இன்னிக்கும் அந்த ரயில் பாதைகளைச் சில கம்பெனிகள்ல பார்க்கலாம்.

விற்பனை வரிக்கு வித்திட்ட விருதுநகர்

‘கருங்கண்ணி’ நாட்டு ரகப் பருத்தியைத் தான் விவசாயிக சாகுபடி செஞ்சாங்க. இந்தப் பருத்திக்கு வியர்வையை வேகமாக உரியுற தன்மை உண்டு. அதோட வறட்சியைத் தாங்கி வளரும். அதனாலதான் அதைப் பரவலாச் சாகுபடி செஞ்சாங்க. ஆரம்பத்துல மாட்டுவண்டியிலதான் பருத்தியை கொண்டு வந்து, விருதுநகர் பொட்டல்ல (சந்தை நடந்த இடம்) கொண்டு போடுவாங்க. பெரும்பாலும் வண்டிக்காரங்கதான் பஞ்சு மூட்டையைக் கொண்டு வருவாங்க. வியாபாரிகள் வண்டிகாரங்ககிட்ட தான் வாய்மொழியா விலையைச் சொல்லுவாங்க. அதோட வண்டிச்சக்கரத்தில ஏதாவது ஒரு இடத்துல அடுப்புக் கரித்துண்டால விலையை எழுதுவாங்க. உதாரணமாக, 10 கிலோ பருத்தி விற்பனைக்கு வந்தா, அதுல ஒரு கைப்பிடி எடுத்து தனி ஓலைப்பெட்டியில போட்ட பிறகுதான் எடை போடுவாங்க.

விருதுநகர் பருத்தி மண்டி
விருதுநகர் பருத்தி மண்டி

அதேபோல ஒவ்வொரு வண்டியில வர்ற பருத்தியில இருந்து எடுக்குற ஒரு கை பருத்தியை மொத்தமா சேர்ப்பாங்க. அது மூலமா கிடைக்குற பணத்தை ‘மகமை’ கணக்குன்னு எடுத்து வெச்சுக்குவாங்க. 1865-ம் வருஷம், ’சிவன் கோயில் மகமை’, ’வெயிலுகந்தம்மன் கோயில் மகமை’னு ரெண்டு மகமை உருவாச்சு. ’சிவன் கோயில் மகமை’ ங்கிறது பிற சமூகத்தைச் சேர்ந்த பருத்தி வியாபாரிகள் சங்கம், ’வெயிலுகந்தம்மன் கோயில் மகமை’ ங்கிறது நாடார் சமூகத்தைச் சேர்ந்த பருத்தி வியாபாரிகள் சங்கம். மகமையின் வளர்ச்சிக்காகத் தனியே எடுத்து வைக்குற பருத்தியைப் பார்த்துதான் ராஜாஜி, ’விற்பனை வரி’யை அறிமுகப்படுத்தினதா சொல்றாங்க. 5 வருஷம், 3 வருஷம், 2 வருஷம்னு வருஷக்கணக்கான விலையில மாற்றம் இல்லாம ஒரே விலையா இருந்திருக்கு. கடந்த 30 வருஷமாத்தான் விலையில ஏற்ற இறக்கம் அதிகமா இருக்கு.. 2000 முதல் 2005 வருஷம் வரையும் ஒவ்வொரு மாசமும் 5-ம் தேதி பருத்திக்கு விலை நிர்ணயம் செய்வாங்க.

எஸ்.டி.டி போனால் மாறிய மார்க்கெட்

‘ட்ரங்கால்’ இருந்தப்பக்கூட ஒரு கிலோவுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரைதான் விலை வித்தியாசம் இருந்தது. ஆனா, 1980-கள்ல ‘எஸ்.டி.டி போன்’ வந்த பிறகு வியாபாரத்தில பெரிய மாற்றம் ஏற்பட்டுச்சு. முன்னெல்லாம் ‘மார்க்கெட்’ மாறுதல் தெரியவே ரெண்டு நாள் ஆகும். ‘எஸ்.டி.டி’ வந்த பிறகு அன்னிக்கே விலை தெரிய ஆரம்பிச்சது. அதனால, சந்தை போக்கும் மாறிச்சு. அதிலும் செல்போன் வந்த பிறகு எந்த ஊர்ச் சந்தையில விற்பனை செய்யணும்ங்கிறதை விவசாயிகளே முடிவு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.

பாரம்பர்ய ரகத்தை மறந்த விவசாயிகள்

1930-கள்ல ஒரு ஏக்கர் கருங்கண்ணி நாட்டுப்பருத்தி சாகுபடியில 4 குவிண்டால் மகசூல் கிடைச்சது. 1950-க்குப் பிறகு, ’லெட்சுமி காட்டன்’ ரகத்தில ஏக்கருக்கு 7 குவிண்டால் கிடைச்சது. ‘எல்.ஆர்.ஏ’ ரகத்தில ஏக்கருக்கு 9 குவிண்டால் வரைக்கும் கிடைச்சது. இப்ப வீரிய ரகங்கள்ல 16 முதல் 18 குவிண்டால் வரைக்கும் மகசூல் கிடைக்கிது. ஆனா, நாட்டுப்பருத்தியில இருந்த தரம் வீரிய ரகத்தில குறைவு. ஆனாலும், விவசாயிக அதிக மகசூலுக்காக வீரிய ரகங்களைத் தான் விரும்புறாங்க. அதனால பாரம்பர்ய ரகம் குறைஞ்சுகிட்டு இருக்கு.

ஒரு குவிண்டால் ரூ.10,000

ஆடி -ஆவணி, கார்த்திகை-மார்கழினு பருத்தி சாகுபடிக்கு வருஷத்துல ரெண்டு பட்டம் இருக்கு. இப்ப ஒரு குவிண்டால் பருத்தி 10,000 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. மானாவாரியில மட்டுமில்லாம இறவையிலும் பருத்தியை சாகுபடி செய்றாங்க. பராமரிப்புக் குறைவு, நல்ல விலை கிடைக்கிது அதனால கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகள்ல நெல் சாகுபடியைக் குறைச்சுட்டு பருத்தி சாகுபடிக்கு மாறிட்டாங்க விவசாயிகள். பெட்ரோல் விலையைப் போல இனி பருத்தியின் விலையும் வருஷ வருஷம் கூடிகிட்டேதான் இருக்கும்.

ராமதாஸ்
ராமதாஸ்

இப்பவும் அதே ரெண்டு மகமை பஞ்சுப்பேட்டையும் செயல்பாட்டுல இருக்கு. வருஷத்துக்கு 50,000 முதல் 60,000 குவிண்டால் வரை பருத்தி விற்பனையாகுது. தமிழகம் முழுக்க எல்லாப் பகுதியில இருந்தும் இங்க பருத்தி வரும். ஆனா, இப்ப விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடியில இருந்து மட்டும் தான் வருது. விருதுநகர்ல பருத்தி விற்பனை செய்ய வர்ற பெரும்பாலான விவசாயிகள்கிட்ட துண்டுப் போட்டு விரல் பிடிச்சே வியாபாரிகள் விலை பேசுறாங்க. துண்டு போட்டு விலை பேசத் தெரியாத இளம் தலைமுறையினர்கிட்ட துண்டுச்சீட்டுல விலை எழுதிக் கொடுக்குறாங்க.

அங்கங்க பருத்தி சந்தைங்க இருக்குறதால, விவசாயிகள் இங்க அதிகம் வர்றதில்ல. முன்னயெல்லாம் வியாபாரியைத் தேடி விவசாயி வந்தாங்க. இப்ப, விவசாயியைத் தேடி அவங்க நிலத்துக்கே வியாபாரிக போற அளவுக்குச் சந்தையில பருத்திக்கான தேவை அதிகமாகிடுச்சு’’ என்று சொல்லிமுடித்தார், ராமதாஸ்.

- பெருகும்

விருதுநகர் பருத்தி மண்டி
விருதுநகர் பருத்தி மண்டி

விவசாயத்துக்குக் கொடுக்கப்பட்ட கடன்

விவசாயத்திற்கு வியாபாரிகள் கடன் கொடுப்பது குறித்துப் பேசிய ராமதாஸ், ‘‘ஒவ்வொரு ஊர்லயும் பருத்தியை கொள்முதல் செய்ய உள்ளூர் வியாபாரி ஒருத்தர் இருப்பார். அவரை ‘புள்ளிக்காரன்’னு சொல்லுவாங்க. அந்த ஊர்ல பருத்தி சாகுபடி செய்யுற விவசாயிககிட்ட சாகுபடிச் செலவுக்காகக் கைவசம் பணமில்லைன்னா உழவு, விதை, விதைப்பு, இடுபொருள், களை எடுப்பு வரை ஓவ்வொன்னுக்கும் புள்ளிக்காரர் பணம் கொடுத்து அதைக் குறிச்சு வெச்சுக்குவார். அவர் சொல்லுற தேதியில அறுவடை பண்ணனும். கிடைக்குற மகசூலுக்குச் சந்தை விலை கணக்குப் போட்டு, சாகுபடிக்காக வாங்குன தொகையைக் கழிச்சுட்டு மீதித்தொகையை விவசாயிகிட்ட கொடுப்பார். இப்படிக் கடன் கொடுத்தும் விவசாயிகளைச் சாகுபடி செய்ய வெச்சிருக்காங்க. விவசாயத்துக்கு மட்டுமில்லாம தீபாவளி, பொங்கல், மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்தும் அந்த விவசாயி, அடுத்த வியாபாரிகிட்ட போகாம அந்த ’புள்ளிக்காரர்’ பார்த்துக்குவார். 20 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இந்தக் கடன் விவசாயம் பரவலா இருந்துச்சு. அந்தப் புள்ளிக்காரர் பெரிய வியாபாரிககிட்ட கூடுதல் விலைக்கு விற்பார்” என்றார்.