Published:Updated:

பார்க்குமிடமெல்லாம் பசுமை... திசையெங்கும் திருக்குறள்!மருத்துவக்கல்லூரியில் மாற்றம்!

மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் கல்லூரி வளாகத்தில்

பசுமை

பார்க்குமிடமெல்லாம் பசுமை... திசையெங்கும் திருக்குறள்!மருத்துவக்கல்லூரியில் மாற்றம்!

பசுமை

Published:Updated:
மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக் கல்லூரி வளாகத்தில்

உலக வெப்பமயமாதலிலிருந்து தப்பிக்க, ‘கோ கிரீன்’, நெகிழி ஒழிப்பு, மரம் நடுதல் எனப் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அந்தவகையில், உள்ளூர் வெப்பத்தைக் குறைக்க விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியைப் பசுமையாக்கி, இலக்கியம் சார்ந்த சிந்தனையைச் செயல்படுத்தி வருகின்றனர் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள்.

அது என்ன இலக்கியம் சார்ந்த சிந்தனை? பசுமைக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகளுடன்‌ விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிக்குச் சென்றோம். 2022-ம் கல்வியாண்டிலிருந்து செயல்பட ஆரம்பித்திருக்கும் இக்கல்லூரியில், முதல் ‘பேட்ஜ்’ மாணவர்களாக 150 பேர் மருத்துவம் பயில்கிறார்கள். 60 பேராசிரியர்கள் பணி புரிகிறார்கள். சுமார் 22.4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி வளாகமே பசுமை போர்த்திக் கிடக்கிறது.

சாலைகளுக்கு நடுவில் வளரும் மரக்கன்றுகள்
சாலைகளுக்கு நடுவில் வளரும் மரக்கன்றுகள்

கல்லூரியைச் சுற்றிலும் தனியார் பங்களிப்புடன் சுமார் 5,000 மரக் கன்றுகள் நட்டுப் பராமரிப்பதுடன், இலக்கியச் சிந்தனைக்காகக் கல்லூரி நுழைவு வாயிலில் திருவள்ளுவர் சிலையும், மரக்கன்றுகளிடையே சீரான இடைவெளியில் திருக்குறள்களைத் தாங்கிய ‘போர்டு’களும் வைக்கப் பட்டுள்ளன. இந்தப் புது முயற்சி குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணியிடம் பேசினோம்.

“22.4 ஏக்கர் பரப்பளவில் உள்ள விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி பெரும் முயற்சியின் பேரில் பசுமை வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது 10 ஏக்கர் பரப்பில் 5,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளோம். மாணவர்களுக்குக் கல்வியோடு சேர்த்து திருக்குறள் சிந்தனைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கு அருகிலும் திருக்குறள் தாங்கிய போர்டுகளை ஊன்றி வைத்துள்ளோம். இங்கு கல்வி பயில வரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு திருக்குறள் புத்தகத்தை வழங்கியுள்ளோம்.

மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
மருத்துவக் கல்லூரி வளாகத்தில்

மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ‘வள்ளுவர் தோட்டம்’ எனும் பெயரில் தனிப் பசுமைத் தோட்டம் உருவாக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு வைத்துப் பராமரித்து வருகிறோம். நீண்டகால அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு நிழல் தரும் மரங்களாகவும், ஆக்ஸிஜனை அதிகம் தரும் மரங்களாகவும் தேர்வு செய்து பராமரிக்கிறோம். ஆல், அத்தி, அரசமரம், புங்கை, வேம்பு உள்ளிட்டவையே பிரதானம். இது வாய்ச்சொல்லோடு நிற்கக் கூடாது என்பதற்காக மாணவர்களையே 5 குழுக்களாகப் பிரித்து மரக்கன்றுகளைப் பராமரிப்பதற்கு அறிவுறுத்தி யுள்ளோம். அவர்களும் மன மகிழ்ச்சியோடு மரக்கன்றுகளைப் பராமரித்து வருகின்றனர். இந்தச் செயல் அவர்களுக்குப் புத்துணர்ச்சியை அளிப்பதுடன் நாள்தோறும் அவர்களுக்குள் ஏற்படும் சிறுசிறு மன அழுத்தம் மற்றும் வருத்தங்களைக் களையச் செய்கிறது” என்றார்.

மாணவர்கள் உற்சாகமாக
மாணவர்கள் உற்சாகமாக

மாணவர்களை ஒருங்கிணைக்கும் பேராசிரியை திவ்யாவிடம் பேசினோம், “பொதுவா, பசுமையான தோட்டத்துல நல்ல நேர்மறை எண்ணங்களை விதைக்கிற சக்திகள் நிறைஞ்சு இருக்கும். அந்த இடத்துக் குள்ள மாணவர்கள் நுழையும்போது, அவங்களுக்குள்ள இருக்குற எதிர்மறையான எண்ணங்கள் மறைஞ்சு, புதுசா உத்வேகம் கொடுக்குற ‘எனர்ஜி’ உள்ளுக்குள்ள மாற்றம் செய்யப்படும்னு நம்புறோம். வருடாவருடம் நடக்கும் கல்லூரி விழாவில், தோட்டத்தைச் சிறப்பா பராமரிக்குற குழுவுக்குச் சுழற்கோப்பை கொடுத்து உத்வேகப்படுத்துற திட்டம் இருக்கு. இது இந்த வருட மாணவர்களோட மட்டுமல்லாம தொடர்ந்து வர்ற மற்ற மாணவர்களும் கடைப்பிடிக்கணும்” என்றார்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்


மாணவர்கள் அருணா அசோக் மற்றும் பரத் ஆகியோரிடம் பேசினோம், “நாங்க காலேஜுக்கு முதன்முதலா வரும்போது ‘கேம்பஸ்’ சுற்றிலும் கல்லும் மண்ணும் நிறைஞ்சு கிடந்துச்சு. ரொம்ப வெப்பமாவும் இருந்துச்சு. அதனால எப்படி 4 வருஷ படிப்ப இங்க கழிக்கப் போறோம்னு நினைச்சோம். எங்க வளாகத்தைக் ‘கிரீன் வேலி’யா மாத்தணும்னு நிறைய முயற்சி பண்ணி, தனியார் பங்களிப்போடு 5,000 மரக்கன்றுகள் கொண்டு வந்து எங்க மருத்துவக் கல்லூரியில நட்டு வச்சு வளர்த்தோம். ஆரம்பத்துல ஒரு முன்னேற்றமும் இல்லாம இருந்துச்சு. ஆனா, இப்போ நாங்க வச்ச மரக்கன்றுகள் நல்ல வளர்ந்து வர்றத பார்க்கும்போது ரொம்பவும் சந்தோஷமா இருக்குது.

தினமும் சாயந்திரம் 5 மணியிலிருந்து இரவு 7.30 வரைக்கும் கூட இந்தத் தோட்டத் துல இருப்போம். நடுநடுவே இருக்கிற திருக்குறள்கள் தினமும் புதுசா ஏதோ சேதி சொல்ற மாதிரி இருக்கும்.

மரக்கன்றுகளைப் பராமரிக்கும் பணியில்
மரக்கன்றுகளைப் பராமரிக்கும் பணியில்


‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்ற யவை’ என்பதைப்போல வாழ்க்கையில் இயற்கையோடு இயைந்து நாங்கள் கற்கும் இந்தக் கல்விய எங்களோட மிகப்பெரிய பெருமையா நினைக்கிறோம்.

சங்குமணி, திவ்யா, பரத், அருணா அசோக்
சங்குமணி, திவ்யா, பரத், அருணா அசோக்


தோட்டத்தைப் பராமரிக்க ஸ்டூடன்ஸ் நாங்க 150 பேரும் 5 குழுக்களா இருக்கோம். ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு பேரு வச்சிருக்கோம். அதன்படி, வள்ளுவர் தோட்டம், அகத்தியர் சோலை, ‘றகர’ச் சோலை, தேரையர் பூங்கா, சைந்தவ வளம்னு பேரு வச்சிருக்கோம். இது மூலமா திருவள்ளுவர் மட்டுமல்ல தமிழ் இலக்கணத் துல சொல்லப்பட்டிருக்குற மற்ற புலவர் களையும், சித்தர்களையும் நாங்க மறந்திடலனு புரிஞ்சிக்கலாம். தமிழ் மீதும், திருக்குறள் மேலேயும் எங்க எல்லாருக்கும் மிகப்பெரிய காதல் இருக்குது. அதை, எங்க கல்லூரி நுழைவாயில்ல திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டிருக்கிறதைப் பார்த்துத் தெரிஞ்சிக்கலாம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism