நாட்டு நடப்பு
Published:Updated:

ஒரு ஏக்கர்.. ரூ.1,84,000… மானாவாரியிலும் மகத்தான வருமானம் தரும் ‘பூனைக்காலி!’

அறுவடையான பூனைக்காலியுடன் விவசாயி கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
அறுவடையான பூனைக்காலியுடன் விவசாயி கண்ணன்

மகசூல்

பூனைக்காலி... இந்தப் பயிரைப் பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க வாய்ப்புக் குறைவு. இது மொச்சைக்காய் (அவரைக்காய்) போன்ற ஒரு கொடி வகைப் பயிர். இதில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந் துள்ளன. குறைவான பராமரிப்பில் இதை எளிதாகச் சாகுபடி செய்யலாம். இதன் விதை களை நாட்டு மருந்துக்கடைக்காரர்களும் சித்த மருத்துவர்களும் வாங்கிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு சில விவசாயிகள் மானாவாரி நிலங்களில் இதைச் சாகுபடி செய்து நிறைவான லாபம் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணன், ஒரு ஏக்கர் பரப்பில் பூனைக்காலியை சாகுபடி செய்து அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறார்.

இவர் பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். 25.10.2017-ம் தேதியிட்ட இதழில் ‘கைகொடுத்த கறுப்பு கானம்!’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் கறுப்பு எள் சாகுபடி குறித்த தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். தற்போது இவர் சாகுபடி செய்திருக்கும் பூனைக்காலி குறித்து அறிந்துகொள்வதற்காக மீண்டும் இவரைச் சந்தித்தோம்.

அறுவடையான பூனைக்காலியுடன் விவசாயி கண்ணன்
அறுவடையான பூனைக்காலியுடன் விவசாயி கண்ணன்

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி யிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள பாஞ்சான் கிராமத்தில் அமைந்துள்ளது விவசாயி கண்ணனின் தோட்டம். ஒரு பகல்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட அத்தருணத்தில் மழை தூறலிட, மண் வாசனை காற்றில் வியாபித்து, நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

பூனைக்காலி கொடிகளைப் பார்வை யிட்டுக்கொண்டிருந்த கண்ணன், மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்றார். ‘‘என் கிட்ட மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. இது கரிசல்மண் பூமி. இப்ப ஒரு ஏக்கர்ல பூனைக்காலி பூக்குற பருவத்துல இருக்கு. தலா ரெண்டு ஏக்கர்ல மக்காச்சோளமும் பருத்தியும் சாகுபடி செய்றதுக்காக நிலத்தைத் தயார்படுத்தி வச்சிருக்கேன். பூனைக்காலி சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் கடந்த ரெண்டு வருஷமா வெற்றிகரமா மகசூல் எடுத்து நிறைவான லாபம் பார்த்திருக்கேன். இப்ப மூணாவது முறையா ஒரு ஏக்கர்ல இதைப் பயிர் செஞ்சிருக்கேன். இது என்ன புதுப் பயிரா இருக்குனு பலரும் ஆச்சர்யப் படுறாங்க’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

பூனைக்காலி
பூனைக்காலி

‘‘எங்க குடும்பத்தோட பூர்வீகத் தொழில் விவசாயம். இங்க ஆற்றுப்பாசனத்துக்கு வாய்ப்பு இல்லை. மழையை நம்பியிருக்குற மானாவாரி பூமி இது. எங்க அப்பாதான் விவசாயத்தைக் கவனிச்சிக்கிட்டு இருந்தார். நான் பி.ஏ பட்டப்படிப்பு படிச்சிட்டுச் சொந்தமா சில தொழில்கள் செஞ்சிக்கிட்டு இருந்தேன். சில காரணங்களால, அதுல விரக்தியும் சலிப்பும் ஏற்பட்டதுனால, அதைக் கைவிட்டுட்டு, 2009-ம் வருஷம் விவசாயத்துல இறங்குனேன். ரசாயன இடுபொருள்கள் பயன்படுத்திக் கொத்தமல்லி, மக்காச்சோளம், பருத்தி, உளுந்துனு இன்னும் சில விதமான பயிர்கள சாகுபடி சேஞ்சேன். என்னோட அப்பா ஏற்கெனவே பல வருஷங்களா அதிக அளவு ரசாயன உரங்கள் பயன்படுத்தி விவசாயம் செஞ்ச நிலம்... என்னோட பங்குக்கு நானும் எக்குதப்பா ரசாயன உரங்கள் பயன்படுத்தினதுனால மண் இறுக ஆரம்பிச்சிடுச்சு. உயிர்ச்சத்துக்களே இல்லாததுனால, மகசூலும் குறைய ஆரம்பிச்சது.

இந்தச் சூழ்நிலையிலதான் கோயம்புத்தூர் மாவட்டத்துல உள்ள திருமங்கலத்தைச் சேர்ந்த என்னோட நண்பர் தாமோதரன், யதார்த்தமா என்னைச் சந்திக்க இங்க வந்திருந்தார். என்னோட நிலத்துல மண் இறுகிப் போனதுனாலயும், உயிர்ச்சத்துக்கள் இல்லாததுனாலயும் மகசூல் குறைய ஆரம்பிச்ச விஷயத்தை அவர்கிட்ட சொன்னேன்.

பூனைக்காலி விதைகளுடன்
பூனைக்காலி விதைகளுடன்

அவர்தான் இயற்கை முறை விவசாயத்தைப் பத்தி என்கிட்ட விரிவா எடுத்துச் சொன்னார். இதோட பசுமை விகடனையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அதுல இருந்து தொடர்ந்து பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்சேன். இது மூலமா இயற்கை விவசாயத் தொழிநுட்பங்களைத் தெரிஞ்சு கிட்டேன். எனக்கு ஏற்படுற சில சந்தேகங்களை, அந்த விவசாயிகளுக்கு போன் செஞ்சு தெளிவுபடுத்திக்கிட்டே இருந்தேன். இயற்கை விவசாயத்து மேல முழுமையான நம்பிக்கை ஏற்பட்டதுனால, 2012-ம் வருஷம் என்னோட நிலத்துல நிறைய வண்டல் மண்ணும் எருவும் போட்டு இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். வருஷத்துக்கு ஒரு தடவை பல தானிய விதைப்பு செஞ்சு, நிலத்தை வளப்படுத் துறதையும் வழக்கமா வச்சுக்கிட்டேன். மக்காச்சோளம், பருத்தி, சாமை, உளுந்து, இருங்குசோளம், கறுப்பு எள் உள்பட எல்லாப் பயிர்கள்லயும் நல்ல மகசூல் கிடைச்சது. ரசாயன இடுபொருள்களுக்கான செலவுகள் தவிர்க்கப்பட்டதுனால கணிசமான லாபம் பார்க்க முடிஞ்சது’’ என்று சொன்னவர், பூனைக்காலி சாகுபடி அனுபவம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

அறுவடையான பூனைக்காலியுடன் விவசாயி கண்ணன்
அறுவடையான பூனைக்காலியுடன் விவசாயி கண்ணன்

‘‘மூலிகைகள் சார்ந்த பாரம்பர்ய மருத்துவ முறைகள்ல எனக்கு இயல்பாகவே ஈடுபாடு அதிகம். பூனைக்காலி விதைகளுக்கு நாட்டுமருந்துக் கடைகள்ல அதிக தேவை இருக்கு. ஒரு கிலோவுக்கு 350 ரூபாய்ல யிருந்து 700 ரூபாய் வரைக்கும் வரை விலை கிடைக்குறதுனால, இதைச் சாகுபடி செஞ்சா, மற்ற பயிர்களை எல்லாம் விட இதுல அதிக லாபம் பார்க்கலாம்னு எனக்கு நல்லாவே தெரியும்.

ஆனா, மானாவாரியில இதைச் சாகுபடி செஞ்சு வெற்றிகரமா மகசூல் எடுக்க முடியுமானு எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு. அதனால, சோதனை முயற்சியா 25 சென்ட்ல மட்டும் பூனைக்காலி பயிர் செஞ்சு பார்த்தேன். 120 - 125 நாள்கள்ல நெத்துகள் முத்தி, அறுவடைக்கு வந்துடுச்சு. அதை வெயில்ல காய வச்சு, விதைகளைப் பிரிச்சு எடுத்தேன். இந்த 25 சென்ட் பரப்புல 110 கிலோ விதைகள் மகசூல் கிடைச்சது. நாட்டு மருந்துகடைகள்ல விற்பனை செஞ்சேன். ஒரு கிலோவுக்கு 400 ரூபாய் வீதம் 44,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதைத் தொடர்ந்து போன முறை ஒரு ஏக்கர்ல பூனைக்காலி சாகுபடி செஞ்சேன். அதுல 460 கிலோ விதைகள் மகசூல் கிடைச்சது. ஒரு கிலோ 400 ரூபாய் வீதம் மொத்தம் 1,84,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல, உழவு முதல் அறுவடை வரைக்குமான செலவுகள் 34,000 ரூபாய் போக, 1,50,000 ரூபாய் லாபமா கிடைச்சது. மதுரை, விருதுநகர்ல உள்ள நாட்டு மருந்துக் கடைகள், சித்த மருந்துகள் தயாரிக்குற சித்த மருத்துவர்கள், மூலிகை வியாபாரிகளும் இதை வாங்கிக்குறங்க. இதைச் சாகுபடி செய்றதும் ரொம்ப எளிது’’ என்று சொல்லி முடித்தார்.

வரவு/செலவு அட்டவணை
வரவு/செலவு அட்டவணை


தொடர்புக்கு, கண்ணன்,

செல்போன்: 76959 11685

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

மானாவாரியில் ஒரு ஏக்கர் பரப்பில் பூனைக்காலி சாகுபடி செய்ய விவசாயி கண்ணன் சொல்லும் செயல்முறைகள்... இங்கு பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பூனைக்காலி சாகுபடிக்கு எனப் பிரத்யேகமான பட்டம் கிடையாது. மழைப் பொழிவை கணித்து, எந்தப் பட்டத்திலும் சாகுபடி செய்யலாம். 10 நாள்கள் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவின்போது 3 டன் எரு போட்டு உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 3 அடி, செடிக்குச் செடி 3 அடி இடைவெளியில் ஒரு இன்ச் ஆழத்தில் குழி எடுத்து, 3 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். ஒரு ஏக்கரில் பூனைக்காலி சாகுபடி செய்ய 12 - 15 கிலோ விதைகள் தேவைப்படும். 5 - 7 வது நாளில் முளைப்பு தெரியும். 20 மற்றும் 40 ஆகிய நாள்களில் களை எடுக்க வேண்டும்.

பூனைக்காலி சாகுபடி வயல்
பூனைக்காலி சாகுபடி வயல்

20-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதம் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 40-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதம் இ.எம் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல் 20 நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் இந்தக் கரைசல்களைத் தெளிக்க வேண்டும். 45 - 50 நாள்களில் கொடி வேகமாகப் படரத் தொடங்கும். அந்தத் தருணத்தில் சாறு உறிஞ்சும் புழுக்களின் தாக்குதலால் கொடிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதம் மூலிகைக்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மி.லி வீதம் இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல் கலந்து தெளிக்கலாம்.

55 - 60 நாள்களில் பூப் பூக்கத் தொடங்கும். 70 நாள்களுக்கு மேல் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். 80 - 90 நாள்களில் காய்கள் பரவலாகத் தென்படும். 100 - 105 நாள்களில் காய்கள் முற்றி நெத்துகளாக மாறத் தொடங்கும். 110 - 120 நாள்களுக்குள் அறுவடை செய்யலாம். அதிகபட்சம் 125 நாள்களுக்கு அறுவடை செய்துவிட வேண்டும். அதற்கு மேலும் தாமதித்தால் நெத்துகள் தானாக வெடித்து விதைகள் சிதறும்.

பூனைக்காலி
பூனைக்காலி

சரியான தருணத்தில் அறுவடை செய்த நெத்துகளை வெயிலில் காய வைத்தால், அவை தானாக வெடித்து விதைகள் உதிர்ந்துவிடும். அவற்றைச் சுத்தப்படுத்தி விற்பனை செய்யலாம். அறுவடை செய்த நெத்துகளைச் சாக்கில் கட்டி வைத்து இரண்டு ஆண்டுகள் வரை இருப்பு வைக்கலாம். அதிக விலை கிடைக்கும்போது, நெத்துகளை வெயில் காய வைத்து விதைகளைப் பிரித்தெடுத்து விற்பனை செய்யலாம்.

மூலிகைக் கரைசல் தயாரிப்பு முறை

ஆடாதொடை, ஆடுதிண்ணாப் பாலை, ஊமத்தை, எருக்கு, வேம்பு, நொச்சி, துளசி, பிரண்டை இவற்றில் ஏதாவது 5 மூலிகைகளைத் தலா 500 கிராம் எடுத்து உரலில் இடித்து, இவற்றோடு 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு வாரம் வரை ஊற வைத்திருந்து வடிகட்டினால், மூலிகைக்கரைசல் தயார்.

மைக்கேல் செயராசு
மைக்கேல் செயராசு

ஆண்மைக் குறைபாடு குணமாகும்

பூனைக்காலி விதையின் மருத்துவக் குணம் பற்றித் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சித்தமருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் கேட்டபோது “பூனைக்காலியின் பூ, விதை, வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் உடையவை. இதன் விதைகளைத்தான் சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த விதை, ஆண்மையைப் பெருக்கும் குணம் உடையது. பூனைக்காலி விதையை நன்றாக உலர வைத்துப் பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து, காய்ச்சின பசும்பாலில் கலந்து காலை, மாலை இரண்டு வேளை அருந்தி வந்தால் ஆண்மைக் குறைபாடு சரியாகும். கை, கால் நடுக்கம் போன்ற பிரச்னைகளுக்கும் இந்த விதை ஒரு நல்ல மருந்து” என்றார்.