மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் மேலாண்மை இயக்கம், நாடு முழுவதும் நீர் சேமிப்பில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பினர், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு விருது வழங்குகிறது. 2019-ம் ஆண்டுக்கான விருது, செப்டம்பர் 25-ம் தேதி புதுடெல்லி, விஞ்ஞான் பவனில் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் நீர் மேலாண்மை யில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகத் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்படும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் தேர்வுசெய்யப்பட்டார். இவர் வயல்வெளி சோதனையின்மூலம் 3,600 ஹெக்டேர் விவசாய நிலங்களில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கக் காரணமாக இருந்தார். இதனால் 40 சதவிகிதம் நீர் மற்றும் வேலையாள்கள் சேமிப்பு, 32 சதவிகிதம் மின்சாரச் சேமிப்பு போன்றவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளார்.

இதற்கான ‘சிறந்த விஞ்ஞானி’ விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவருக்கு விருதினை வழங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.பாலசந்திரனுடன், அந்த விருதைப் பெற்றுக்கொண்டார் செந்தூர்குமரன்.
