Published:Updated:

தண்ணீர் கேன், குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம்! - நீரைச் சேமிக்கும் புதிய முயற்சி

தண்ணீர் கேன் பாசனத்துடன் சக்திகுமார்
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் கேன் பாசனத்துடன் சக்திகுமார்

தொழில்நுட்பம்

தண்ணீர் கேன், குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம்! - நீரைச் சேமிக்கும் புதிய முயற்சி

தொழில்நுட்பம்

Published:Updated:
தண்ணீர் கேன் பாசனத்துடன் சக்திகுமார்
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் கேன் பாசனத்துடன் சக்திகுமார்

வாய்க்கால் பாசனத்தில் நிலத்தைச் சென்றடையும் முன்பே வாய்க்காலில் தண்ணீர் விரயமாகிறது. இதைத் தவிர்க்கவே நேரடியாகப் பயிரின் வேருக்கு அருகே பாசனம் செய்ய சொட்டுநீர்ப் பாசனம் அறிமுகமானது. இதனால், குறைந்த தண்ணீரில் பாசனம் செய்துவருகிறார்கள் விவசாயிகள்.

சொட்டுநீர்க் குழாயுடன் இணைப்பு
சொட்டுநீர்க் குழாயுடன் இணைப்பு

ஆனால், நாளுக்கு நாள் குறைந்து கொண்டேபோகும் நிலத்தடி நீர், வறட்சி காரணமாகச் சொட்டுநீர்ப் பாசனத்துக்கே பல இடங்களில் தண்ணீர் இல்லை. இந்த நிலையில் சில விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனம் முறையில் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தி வருகிறார்கள். 20 லிட்டர் தண்ணீர் கேனை மண்ணிற்குள் புதைத்து அதிலிருந்து வெளியேறும் நீரை, மரத்தின் வேருக்கே நேரடியாக வழங்கும் ‘தண்ணீர் கேன் துளைப் பாசன முறை’யைக் கண்டுபிடித்து, சோதனை முயற்சியிலேயே நல்ல பலன் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் தூத்துக்குடி விவசாயி சக்திகுமார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சக்திகுமார். இவர் பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். ஜீரோ பட்ஜெட் முறையில் பப்பாளி, வாழை, கொய்யா ஆகியவற்றைச் சாகுபடி செய்துவருகிறார். தண்ணீர் கேன் துளைப் பாசனம் குறித்து சக்திகுமாரிடம் பேசியபோது,

“தற்போதைய சூழலில் விவசாயத்திற்குத் தண்ணீர்தான் பெரும் பிரச்னையாக இருக்கிறது. கிடைக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்வதும் சவாலாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண்ணிற்குள் தண்ணீர் கேன் பதிப்பு
மண்ணிற்குள் தண்ணீர் கேன் பதிப்பு

இந்தப் பகுதி முழுவதும் மணற்பாங்கான செம்மண். இதில் நீர்ப்பிடிப்புத் தன்மை குறைவு. எவ்வளவு தண்ணீர் கொடுத்தாலும் உறிஞ்சிக்கொள்ளும். இது 4 ஏக்கர் நிலம். இதில் 2 ஏக்கரில் கொய்யாவும், 2 ஏக்கரில் நேந்திரன் வாழையும் சாகுபடி செய்யறேன். சொட்டுநீர்ப் பாசனத்தில்தான் தண்ணீர்ப் பாய்ச்சி வர்றேன். இந்த முறையில் மண்ணின் மேற்பகுதியில்தான் தண்ணீர் கிடைக்கிறது. அதனால், தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்தேன். 20 லிட்டர் தண்ணீர் கேனை இரண்டு மரங்களுக்கு இடையில் குழி எடுத்துப் பதித்துச் சொட்டுவானிலிருந்து கேனுக்குள் தண்ணீர் விழச் செய்வோம். அந்தத் தண்ணீர் கேனில் போடப்பட்டிருக்கும் துளைகள் வழியாக மரத்தின் வேர்ப்பகுதிக்கே செல்லும்படி அமைத்துள்ளேன். இதனால், வழக்கமாகக் கொடுக்கும் தண்ணீர், கூடுதலாகச் சில மணிநேரம் தொடர்ச்சியாக வேருக்குக் கிடைக்கிறது” என்றவர், தண்ணீர் கேன் பாசன அமைப்புமுறை குறித்து விளக்கினார்.

“20 லிட்டர் தண்ணீர் கேனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் தூர்ப் பகுதியிலிருந்து அரை இன்ச் உயரத்தில், 6 மி.மீ அளவில் நான்கு புறமும் துளை போட்டுக்கொள்ள வேண்டும். இரும்புக் கம்பியைத் தீயில் காட்டி சூடாக்கித் துளை போடலாம். இரண்டு கன்றுகளுக்கு இடையில், உதாரணமாகக் கன்றுக்குக் கன்று இடைவெளி 16 அடி என்றால், 8 அடி தூரத்தில் ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுத்து அதில் கேனை வைத்து மணலால் மூட வேண்டும்.

சொட்டுநீர்க் குழாயில் உள்ள சொட்டுவானை கேனின் வாய்ப்பகுதிக்குள் நேரடியாக உள்ளே விட வேண்டும். இதில் சிரமம் இருக்கலாம். அதனால், சொட்டுவானில் மைக்ரோ டியூபை இணைத்துக் கேனுக்குள் விட வேண்டும். இதிலிருந்து வரும் தண்ணீர், கேனில் நிரம்பியதும் தூர்ப்பகுதியில் உள்ள துளை மூலமாக வேர்ப்பகுதிக்கே நேரடியாகச் செல்லும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தண்ணீர் கேன் பாசனத்துடன் சக்திகுமார்
தண்ணீர் கேன் பாசனத்துடன் சக்திகுமார்

வழக்கமாகச் சொட்டுநீர் மூலம் ஒரு மணிநேரம் பாயும் தண்ணீரை, கேனிற்குள் விட்டால், கூடுதலாக 5 முதல் 7 மணி நேரம் வரை மெது மெதுவாகச் செல்கிறது. தண்ணீர் மட்டுமில்லாமல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் போன்ற கரைசல்களைக்கூட வடிகட்டி கேனுக்குள் ஊற்றிவிடலாம்.

இதுபோன்ற இடுபொருள்களைச் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் கொடுக்கும்போது, வெஞ்சுரி (உறிஞ்சுவான்) மூலம் உறிஞ்சப்பட்டு, அதன்பின் பயிருக்குக் கிடைக்கும்போது இடுபொருள்களின் தன்மை நீர்த்துப்போகிறது. கேனிற்குள் இடுபொருள் கரைசல்களை ஊற்றுவதால் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது.

இந்தமுறை பாசனத்தால் களைகள் முளைக்காது. நீர் ஆவியாதலும் தடுக்கப்படுகிறது. மண்ணிற்குள் வேர்பரவி, நல்ல மகசூலும் கிடைக்கும். மண்ணிற்குள் புதைக்கப்பட்ட கேனைச் சுற்றி அரையடி ஆழம், அரையடி சுற்றளவில் குழி எடுத்து அதில், தக்காளி, கத்திரி, வெண்டை மற்றும் தரையில் படரும் கொடி வகைகளான பாகல், பீர்க்கன், வெள்ளரி, வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, தர்ப்பூசணி ஆகியவற்றையும் சாகுபடி செய்யலாம். இவை, முளைப்பதற்கு மட்டும்தான் முதலில் தண்ணீர் தேவைப்படும். முளைத்துவிட்டால் மண்ணிற்குள் வேர் ஊடுருவி ஈரப்பதத்தில், வேகமாக வளர ஆரம்பிக்கும். இதன்மூலம் உபரி வருமானமும் கிடைக்கும். நான் சோதனை அடிப்படையில், 50 சென்ட் பரப்பளவில் கொய்யா மரங்களுக்கு இடையில் வைத்துள்ளேன். கடந்த மூன்று மாதமாகக் கவனித்து வருகிறேன் நல்ல பலன் தெரிகிறது. ஒரு ஏக்கருக்கே அதிகபட்சமாக 350 கேன்கள்தான் தேவைப்படும். புதிய கேன்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. பழையகேன்கள் 10 முதல் 20 ரூபாய்க்குக் கிடைக்கும். கேனின் வாய்ப்பகுதியில் கீறல், மேல் பகுதியில் கீறப்பட்ட கேன்களைத் தண்ணீர் கேன் கம்பெனிகளில் வாங்கிக் கொள்ளலாம்” என்றார்.

தொடர்புக்கு, சக்திகுமார், செல்போன்: 94443 36353

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம்!

ஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள நெம்மேலி கிராம இளைஞர்கள் மரம் வளர்க்க, குளுக்கோஸ் பாட்டில் பாசன முறையைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருவதுடன் அதற்குச் சொட்டுநீர் முறையில் தண்ணீர் ஊற்றி வளர்த்துவருகின்றனர். இதனால், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து சோலைவனமாகக் காட்சியளிக்கிறது.

தண்ணீர் கேன், குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம்! - நீரைச் சேமிக்கும் புதிய முயற்சி

இது சம்பந்தமாகப் பேசிய நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், “எங்க ஊர்ல விவசாயம்தான் பிரதான தொழில். விவசாயத்திற்குத் தண்ணீர்தான் ஆதாரம். ஆனா, பல வருஷமா போதுமான மழை இல்லை. இதனால, நிலத்தடி நீர்மட்டம் குறைஞ்சிடுச்சு. இப்படியே வறட்சியா இருந்தால் எதிர்காலத்துல விவசாயம் செய்யமுடியாத நிலை உருவாகிவிடும். அதோடு குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுடும். மரங்கள் இருந்தால்தான் மழை வரும், நிலத்தடி நீரும் உயரும்னு யோசிச்சோம்.

தண்ணீர் கேன், குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம்! - நீரைச் சேமிக்கும் புதிய முயற்சி

அதனால, ஒவ்வொரு வருஷமும் ஊரில் இருக்கிற ஏதாவது ஒரு பொது இடத்துல இருநூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதை 5 வருஷமா வழக்கமா வெச்சிருக்கோம். 5 அடி உயரத்துல நட்ட மரக்கன்று இப்ப 15 அடிக்கு மேல மரமாக வளர்ந்து நிக்குது. போன கோடையில கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுடுச்சு. மரங்கள் கருக தொடங்கியதைப் பார்த்துப் பதறிபோயிட்டோம். அதன் பிறகு மரமும் வளரணும், தண்ணியையும் சேமிக்கணும்னு யோசிச்சு, சொட்டுநீர் முறையில மரங்களை வளர்க்க ஆரம்பிச்சோம்.

இதற்காக மருத்துவமனைகள்ல பயன்படுத்தப்பட்ட தேவையில்லாத குளுக்கோஸ் பாட்டில்களைச் சேகரிச்சோம். பாட்டிலோட அடிப்பகுதியை, தண்ணி ஊத்துறதுக்கு ஏத்தமாதிரி வெட்டி எடுத்துட்டு, மரக்கன்றுக்கு பக்கத்துல ஒரு கம்பு நட்டு, கன்றுகளுக்கு மேல் பகுதியில பாட்டில் இருக்குற மாதிரிக் கட்டி வெச்சோம். பாட்டில்ல இருக்குற டியூப், மரக்கன்றோட வேர்ப்பகுதியில இருக்குற மாதிரி வெச்சோம். குளுக்கோஸ் பாட்டில்ல தண்ணியை ஊத்துனா, அது சொட்டு சொட்டா வேர் பகுதியில இறங்கும். இதனால குறைஞ்ச தண்ணிதான் செலவாகுது. தண்ணி ஊத்துறதும் எளிமையா இருக்குது. நூறு நாள் வேலை பாக்குற பெண்கள் தொடர்ச்சியாகத் தண்ணி ஊத்தி பராமரிச்சுட்டு வர்றாங்க. மாதம் ஒருமுறை இளைஞர்கள் திரண்டு பராமரிப்புப் பணிகளைச் செய்றோம். ஊர்கூடி தேர் இழுப்போம்னு சொல்வாங்க. நாங்கள் மரங்களை உருவாக்கிட்டு வர்றோம்’’ என்றார்.

சதீஷ்குமார், மோகன்
சதீஷ்குமார், மோகன்

அவரைத் தொடர்ந்து பேசிய மோகன், ‘‘நாங்க நட்டு ஆளாக்கிய மரங்கள், அதிகமான மரங்கள் கஜா புயல்ல சாய்ஞ்சிடுச்சு. அதனால, இந்த வருஷம் மரக்கன்றுகளை அதிகமா நடவு செய்ய ஆரம்பிச்சிட்டோம்.

எங்க ஊரைச் சேர்ந்தவங்க, வெளிநாட்டுல வேலை செய்றவங்கனு பலபேர்கிட்ட நிதி திரட்டி, மரக்கன்றுகளை நட்டு பராமரிச்சுட்டு வர்றோம். வேம்பு, புங்கன், அரசு, ஆல், அலங்கார கொன்றை, குமிழ் தேக்கு, நாவல், பலா, மா, மகிழம்னு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பர்ய மரக்கன்றுகளை நட்டுருக்கோம்.

குறிப்பா வேம்பு, புங்கன் மாதிரியான மரங்கள் மனிதர்கள் சுவாசிப்பதற்கான சுத்தமான காற்றைக் கொடுக்குது. மரம் என்பது மண்ணுக்கானது மட்டுமல்ல, மனிதனுக்கானதும்கூட. பாரம்பர்ய மரங்கள் இருந்தால் இயற்கையாகவே நன்றாக மழை பெய்யும். இதனால, தண்ணீர்ப் பிரச்னையே ஏற்படாது. நாம் மறைந்தாலும் நம்மால் வளர்க்கப்படும் மரங்கள் நம்ம பேரைச் சொல்லும்’’ என்றார் மகிழ்ச்சிப் பொங்க.

தொடர்புக்கு, சதீஷ்குமார், செல்போன்: 97866 93456

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism