Published:Updated:

கருகும் நாற்றுகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்; டெல்டாவில் சீராக நடக்குமா குறுவை சாகுபடி?

குறுவை நெல் நாற்றுகள்

``ஒரு சொட்டு தண்ணீர்கூட வரலை. திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி இந்த இரண்டு பகுதிகள்ல மட்டுமே, சுமார் 20,000 ஏக்கர் குறுவை நெல் சாகுபடியைக் கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டிருக்காங்க."

கருகும் நாற்றுகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்; டெல்டாவில் சீராக நடக்குமா குறுவை சாகுபடி?

``ஒரு சொட்டு தண்ணீர்கூட வரலை. திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி இந்த இரண்டு பகுதிகள்ல மட்டுமே, சுமார் 20,000 ஏக்கர் குறுவை நெல் சாகுபடியைக் கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டிருக்காங்க."

Published:Updated:
குறுவை நெல் நாற்றுகள்

தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில் குறுவை நெல் சாகுபடிக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள். குறிப்பாக, இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனம் அளிக்கக்கூடிய குடமுருட்டி ஆற்றில் குறைவான அளவு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவதால், நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாத இக்கட்டான நிலைக்கு இப்பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

குடமுருட்டியில் திறக்கப்படும் காவிரிநீரை நம்பி, திருவையாறு, பாசாறு, மேலத்திருப்பந்துருத்தி, கீழத்திருப்பந்துருத்தி, திருவளாம்பொழில், காட்டுக்கோட்டை, கண்டியூர், நடுக்காவேரி உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், குறுவை சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், இவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆற்றுநீரை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், கண்டிப்பாகக் குறுவை நெல் சாகுபடிக்குத் தண்ணீர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், போர்வெல் வைத்துள்ள அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் தண்ணீர் பெற்று, நாற்றுகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள்.

குறுவை நெல் நாற்றுகள்
குறுவை நெல் நாற்றுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இதை நடவு செய்ய தண்ணீர் கிடைக்கவில்லை. ஏராளமாக பணம் செலவு செய்யப்பட்டு உற்பத்தி செய்த நாற்றுகள் கருகிக்கொண்டிருக்கின்றன. நாற்றுகளை நடவு செய்துவிட்ட விவசாயிகளின் நிலையோ மேலும் பரிதாபமாக உள்ளது. நடவு செய்ததிலிருந்தே தண்ணீர் கிடைக்காததால், இளம் பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி விவசாயி சுகுமாறன், ``குடமுருட்டி ஆற்றில் 2,100 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்தால்தான் இந்தப் பகுதிகள்ல உள்ள வாய்க்கால்களுக்குத் தண்ணீர் ஏறும். ஆனால், இந்த ஆண்டு ஆரம்பத்துல இருந்தே, வெறும் 750 கன அடிதான் தண்ணீர் திறக்குறாங்க. இதனால், ஆற்றுல போகக்கூடிய தண்ணீர் வாய்க்கால்ல ஏற மாட்டேங்குது. ஒரு சில பகுதிகள்ல வாய்க்கால்ல ஏறினாலும் வயல்களுக்குப் பாய மாட்டேங்குது. இதனால் இந்த விவசாயிகள் கடுமையான மனஉளைச்சல்ல இருக்காங்க. வேளாண்மைத்துறையின் கவனத்துக்கும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் இதை நாங்க பலமுறை கொண்டு போயும்கூட, எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்குறாங்க. பொதுப்பணித்துறை அதிகாரிகள்கிட்டயும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டோம். அவங்களும் இதைப் பொருட்படுத்தவே இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்லணையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்துல உள்ள இந்தப் பகுதிகளுக்கே ஒழுங்கா தண்ணீர் வரலைன்னா, கடைமடைப் பகுதிகளுக்கு எப்படி தண்ணீர் போயி சேர்ந்திருக்கும்? அந்த விவசாயிகளோட நிலைமை நினைச்சிருப்பாருங்க. அங்க இன்னும் மோசம். இந்த வருஷம் குறுவை சாகுபடி கண்டிப்பாக வெற்றிகரமாக அமையும்னு விவசாயிகள் ரொம்பவே நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், அதுக்கு வாய்ப்பே இல்லைங்கறது உறுதியாயிடுச்சு. ஆனால், வேளாண்மைத்துறை அதிகாரிகள், மிகப்பெரிய ஒரு பொய்யை சொல்லிக்கிட்டு இருக்காங்க. கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்துல 1,05,000 ஏக்கர் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிச்சோம். ஆனால், 1,25,000 ஏக்கர் குறுவை சாகுபடி நடந்துச்சு. இந்த ஆண்டு 1,45,000 ஏக்கர்ல குறுவை சாகுபடி நடந்திருக்குறதா, வேளாண்மைத்துறை அதிகாரிகள் சொல்றாங்க. இது உண்மையில்லை. திருவையாறு வேளாண் உட்கோட்டத்துல 17,000 ஏக்கர் சாகுபடி பரப்பு. ஆனால், ஆற்றில் தண்ணீர் வராததால், இந்த ஆண்டு வெறும் 8,000 ஏக்கர்ல குறுவை சாகுபடி நடந்திருக்கு. இதுக்கும் ஒரு சொட்டு தண்ணீர்கூட வரலை. திருக்காட்டுப்பள்ளி பகுதிகள்லயும் நிறைய விவசாயிகள், நாற்றுகளை உற்பத்தி செஞ்சிட்டு நட முடியாமல் தவிக்குறாங்க.

குறுவை நெல் நாற்றுகள்
குறுவை நெல் நாற்றுகள்

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி இந்த இரண்டு பகுதிகள்ல மட்டுமே சுமார் 20,000 ஏக்கர் குறுவை நெல் சாகுபடியைக் கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்காங்க. தஞ்சை மாவட்டம் முழுக்க பல பகுதிகள்ல இதே நிலைமைதான். 60,000 - 70,000 ஏக்கர்ல குறுவை சாகுபடி ஒழுங்கா நடந்தாலே பெரிய ஆச்சர்யம்தான். இந்தப் பகுதிகள்ல தண்ணீர் பற்றாக்குறையால், குறுவை நடவுப்பணிகளை விவசாயிகள் செய்ய முடியாததால், தமிழக அரசு அறிவிச்ச, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் இந்தப் பகுதி விவசாயிகள் கிடைக்கலை.

கடந்த ஆண்டு சம்பாவுல நிவர், புரெவி புயல்களாலும் பருவம் தவறிப் பெய்த மார்கழி மழையாலும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இதுவரைக்கும் பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீடு கொடுக்கப்படவே இல்லை. இந்த ஆண்டு குறுவை இன்ஷூரன்ஸுக்கு இன்னும் அறிவிப்பே வெளியாகலை. ஸ்டாலின் வரப்போறார்... விடியல் தரப்போறாருனு விவசாயிகள் நம்பினோம். ஆனால், இவர் தமிழ்நாட்டோட முதலமைச்சராகியும் விவசாயிகளோட வாழ்க்கை இருண்டுதான் கிடக்கு’’ என ஆதங்கப்பட்டார்.