Published:Updated:

குறுவையை இழக்கும் விவசாயிகள்... சம்பாவும் கேள்விக்குறிதான்..!

குறுவை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுவை

பிரச்னை

மேட்டூர் அணையில் தற்போது 64 அடிதான் தண்ணீர் உள்ளது.

போதியளவு தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்டங்களின் குறுவைப் பாசனத்திற்கு மிகவும் குறைவான அளவுதான் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் குறுவைச் சாகுபடி கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக, இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். குறுவைச் சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் தீவிரமானார்கள். குறிப்பாகச் சிறு, குறு விவசாயிகள், போர்வெல் வைத்திருப்பவர்களிடம் தண்ணீர் வாங்கி, கடும் உழைப்பைக் கொடுத்து, நாற்றுகளை உற்பத்தி செய்தார்கள். ஆனால் வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், நாற்றுகளை நடவு செய்ய முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

குறுவையை இழக்கும் விவசாயிகள்... சம்பாவும் கேள்விக்குறிதான்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாகப் பேசிய திருவாரூர் மாவட்டம் அரித்துவாராமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி மேகநாதன், “மூணு ஏக்கர்ல குறுவை நெல் சாகுபடி செய்றதுக்காக, நாற்று உற்பத்தி செஞ்சேன். எனக்குப் போர்வெல் கிடையாது. விலைக்குத் தண்ணீர் வாங்கிதான் நாற்றங்காலுக்குப் பாசனம் செஞ்சேன். இந்த நாற்றுகளை 30 நாள்ல நடவு செஞ்சிருக்கணும். இப்ப 45 நாளுக்கு மேலாகியும்கூட, எங்க ஊர் வாய்க்கால்ல தண்ணீர் வரலை. காரணம், எங்க பகுதியில பாயக்கூடிய வெண்ணாறுல, வெறும் ஆயிரம் கன அடிதான் தண்ணீர் திறக்குறாங்க. இது எப்படி வாய்க்காலுக்குப் பாயும். நடவு செய்யத் தண்ணீர் கிடைக்காததால, குறுவையைக் கைவிடுற இக்கட்டான நிலையில இருக்குறோம். நாற்று உற்பத்தி செய்ய 10,000 ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருக்கேன். இந்த நாற்றுகளை வெச்சிருக்குறதால, எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்றார் வேதனையுடன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அரித்துவாரமங்கம் மட்டுமல்லாமல், அவிலியநல்லூர், குமாரமங்கலம், பெருங்குடி, ரகுநாதபுரம் உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களிலும் இதே நிலைதான். இங்குதான் இப்படியென்றால், தலைமடை பகுதியான தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார கிராமங்களிலும் இதே நிலைதான்.

குறுவையை இழக்கும் விவசாயிகள்... சம்பாவும் கேள்விக்குறிதான்..!

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “குறுவை நடவுப்பணிகளே இன்னும் முழுமையாக நிறைவு பெறாத நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதே விகிதத்தில் குறைந்துவந்தால், குறுவைச் சாகுபடியைக் காப்பாற்ற முடியாது. சம்பாவும் சாத்தியம் இல்லாமல் போகும். ஜூன், ஜூலை மாதங்களுக்குக் கர்நாடகம், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்கு, தமிழ்நாடு அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஜூன் மாதம் 9.23 டி.எம்.சி-யும், ஜூலை முதல் வாரத்தில் 7.84 டி.எம்.சி-யும், இரண்டாவது வாரத்தில் 7.84 டி.எம்.சி. என மொத்தம் 24.91 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திலிருந்த மேட்டூருக்கு வந்திருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேகநாதன்
மேகநாதன்

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்தான், இந்த ஆண்டு, மேட்டூர் அணையில் ஜூன் மாதம் 100 அடி தண்ணீர் தேங்கியிருந்தது. மேட்டூர் அணையின் நீரை மரபுப்படி ஜூன் 12-ம் தேதி, முதல்வரே வந்து திறந்துவிட்டார். அதில் காட்டிய பேரார்வத்திற்குப் பிறகு, ஜூன், ஜூலைக்குரிய தண்ணீரைப் பெறுவதில் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. கடந்த 11.06.2020 அன்று காணொலிக்காட்சி வழி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் முடிவில், ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு ஆணையிட்டிருப்பதாக ஆணையத் தலைவர் ஆர்.கே. ஜெயின் கூறினார். ஆனால் அதைக் கர்நாடகம் செயல்படுத்தவில்லை. முந்தைய ஆண்டில் கர்நாடகம் மிகையாகத் திறந்துவிட்ட வெள்ள நீரை, அதற்கு அடுத்த ஆண்டுத் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீர்க் கணக்கில் சேர்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது ஆணையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையையும் குறுவைச் சாகுபடியையும் நினைவில் வைத்திருக்கிறாரா? என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழக முதல்வர் உடனடியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்திடமும், கர்நாடக அரசிடமும் தொடர்புகொண்டு, சட்டப்படி ஜூன், ஜூலைக்குத் திறக்கவேண்டிய தண்ணீரைப் பெற்று குறுவைச் சாகுபடியைக் காப்பாற்ற வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.