Published:Updated:

தேனி: 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறப்பு... மகிழ்ச்சியில் உசிலம்பட்டி மக்கள்!

58 கிராம பாசனக் கால்வாய்.
58 கிராம பாசனக் கால்வாய்.

வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து இன்று காலை 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையில் நீர் மட்டம், 68.03 அடியாக இருந்தது. இந்நிலையில், வைகை அணையிலிருந்து 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என உசிலம்பட்டி பகுதி விவசாயிகளும் மக்களும் கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையில், இன்று காலை வைகை அணையின் வலது கரையில் உள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். தேனி எம்.பி ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ, ஜக்கையன், மாவட்ட கலெக்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

வைகை அணையில் உள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகு.
வைகை அணையில் உள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில் 1996-ம் ஆண்டு வைகை அணையிலிருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், கிடப்பில் போடப்பட்ட திட்டப் பணிகள், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வேகமெடுத்து, 2018-ம் ஆண்டு முடிவடைந்தது. வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியைக் கடந்த பின்னர், 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவதே இத்திட்டம். அதன்படி, பணிகள் முடிக்கப்பட்ட 2018-ம் ஆண்டே, கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Vikatan

அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இரண்டு சோதனை ஓட்டத்திலும், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. கால்வாய் சீரமைக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், இன்று கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி, வினாடிக்கு 150 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது. 40 கிலோமீட்டர் நீளம் கொண்ட 58 கிராம கால்வாய் மூலம், 33 கண்மாய்கள் தண்ணீர் பெற்று, சுமார் 2,285 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் உசிலம்பட்டி பகுதி விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

58 கிராம பாசனக் கால்வாய்.
58 கிராம பாசனக் கால்வாய்.

இதுபற்றி உசிலம்பட்டி பகுதி விவசாய சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது, "58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 58 கிராம பாசனக் கால்வாய் திட்டத்துக்கென இதுவரை நிரந்தர அரசாணை இல்லை. இப்போதுவரை சோதனை ஓட்டம் என்ற பெயரில்தான் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணை 67 அடியை எட்டினால்தான் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என்ற நிலையை மாற்றி, 60 அடியை எட்டினாலே கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என அரசாணை வெளியிட வேண்டும்” என்றனர்.

எலி, காட்டுப்பன்றியால் 58 கிராம பாசனக் கால்வாயில் உடைப்பு!'- அமைச்சர் உதயகுமார் சர்ச்சை
அடுத்த கட்டுரைக்கு